ஆய்வு: : வள்ளுவர் வகுத்த வணிகவியலும் நிதிமேலாண்மைக் கொள்கையும்

 பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -உலகமொழிகள் எல்லாம், வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருந்த பொழுது நம் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே உருவாக்கி செழிப்புற்றிருந்தது. அதில், குறிப்பாக உலகப்பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறள் எல்லா துறைகள் பற்றிய உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் உலகநாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெற்றிக்குரிய தொழிலாக போற்றப்படும் வணிகம், வர்த்தகம், நிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றின் அடிப்படைக்கொள்கைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.        

வணிகம் அல்லது தொழில் தொடங்கும் முறை
எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் தொடங்குவது பயனற்றதாகும். அதிலும் வர்த்தகம் செய்ய விரும்பினால் மிகுந்த கவனத்தோடு கள ஆய்வுப்பணி செய்து தான் தொடங்க வேண்டும். ஏனெனில், நாம் எதை வணிகம் செய்யப் போகிறோம், எப்படிச் செய்யப் போகிறோம், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம், வரவு செலவு எவ்வாறு அமையும் என்பது பற்றிய தீர்மானத்திற்குப் பிறகு தான் வணிகம் செய்ய தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனையே,

“அழிவதுவும் ஆவதுவும் ஆகி வழிபயக்கும்
ஊழியமும் சூழ்ந்து செயல்”             ( குறள் : 461 )

என்ற குறட்பாவில் எடுத்துரைக்கிறார். மேலும், எந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கும் பொழுது அதற்கு முதலில் ஏற்படும் செலவையும், செலவுக்குப் பின் உண்டாகும் வரவையும், எதிர்காலத்தில் அத்தொழில் கொடுக்கும் இலாபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந்து ஏற்புடையதாக இருந்தால் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிதி மேலாண்மையின் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இக்குறளின் கருத்தாகும்.

வணிகம் செய்வதற்குரிய தகுதிகள்
தான் செய்யும் வணிகத்தின் தன்மையினையும், அத்தன்மைக்கு ஏற்றார் போல் தான் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது பற்றிய சிந்தனையும், தன்னுடைய போட்டியாளர்கள் எத்தன்மையில் செயல்படுகிறார்கள்  என்பது பற்றியும் நாள்தோறும் ஆராய்பவனே வணிகம் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனையே,

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கி செயல்”        ( குறள் : 471 )

என்னும் குறளில் எடுத்துரைக்கிறார். மேலும், தனிநபர் திறமையை விடவும் குழுவின் திறமையே சிறந்தது என்றும் கூறுகிறார். எனவே தான் வணிகம் செய்பவர்களுக்கு துணையாக இருப்பவர்களின் வலிமையையும் ஆராய வேண்டும் என்கிறார்.

வணிகத்தின் நோக்கம்
வள்ளுவன் வகுத்த வணிகம் செய்யும் தகுதியாளன் என்பவன் மேற்கண்ட திறன்களை உடையவனாக இருந்தால் மட்டும் போதாது, இலாபம் ஒன்றையே முதற்பொருளாகக் கொண்டு செயல்படாமல், தன்னிடம் வரும் வாடிக்கையாளர் எந்த நோக்கத்திற்காக தன்னிடம் பொருள் வணிகம் செய்கிறார்களோ அதனையே தானும் முதன்மை நோக்கமாகக் கொண்டு வணிகம் செய்பவரே சிறந்த வணிகர் என்கிறார். இதனையே,

“வாணிகம் செய்பவருக்கு வாணிகம் பேணி
பிறவும் தம்போல் செயின்”            ( குறள் : 120 )

என்ற வள்ளுவர் வகுத்த குறளின் மூலம் அறியலாம்.

வணிக அறம்
பெரும்பாலான வல்லுநர்கள் வணிகம் செய்யும் வலிமையையும் திறமையையும் மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அறம் என்பது வணிகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், வள்ளுவப் பெருந்தகையார் வணிகத்திலும் அறத்தைப் பின்பற்றினால் தான் அச்செல்வம் நிலைக்கும், இல்லையெனில் வந்தவழியே சென்றுவிடும் என்கிறார். மேலும், வணிகர் பலர் தன் பேச்சாற்றல் மூலம் தரமற்ற பொருளைக்கூட தரமென்று உயர்த்திப் பேசி வணிகம் செய்கின்றனர். இவ்வாறு சேர்த்த செல்வம் சுடாத பச்சை மண்ணால் செய்த மண்சட்டியில் நீர் ஊற்றுவது போல அழிந்துவிடும் என்கிறார். இதனையே,       

“சலத்தால் பொருள்செய்தோம் ஆர்த்தல் பசுமண்           
கலத்துள்நீர் பெய்து இரிஇயற்று”        ( குறள் : 660 )

என்கிறார். மேலும், தற்காலத்தில் வணிகத்தின் தேவை எந்தளவிற்கு மேம்பட்டுள்ளதோ அந்தளவிற்கு நம்பகத்தன்மையும், தரமும் குறைந்திருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

நிதி ஆதாரமும் வரவு செலவும்
முதலிட்டு தொழில் செய்வது என்பதைவிட தொடங்கிய தொழில் சிறப்பாக நடைபெற நிதி ஆதாரம் அவசியமாகும். அந்த நிதி ஆதாரத்தை தகுந்த முறையில் கைக்கொள்ளாவிடில் எந்த வணிகமும் சிறப்பாக இயங்காது. எனவே, நிதி ஆதாரத்தை மேம்படுத்துகிற வழிகளை ஆராய்ந்து, தன் நிறுவனத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்தி, இதுபோன்ற செயல்களினால் ஏற்படுகின்ற இடையூறுகளைக் களைவதும் மிக அவசியமென்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதனையே,   

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை                   
ஆராய்வான் செய்க வினை”             ( குறள் : 512 )

என்ற குறளின் மூலம் அறியமுடிகின்றது. எனவே, தொழில் முனைவோருக்கு வணிகத்தின் முதலே அடிப்படை ஆதாரமாகும். முதல்பொருள் இல்லாத வணிகருக்கு அதனால் பெருமளவில் பயனேதும் இல்லை என்றே கூறலாம். மேலும், தொழிலில் நிலைத்து நிற்பதற்குத் தனக்குச் சார்புடையவர்கள் வேண்டும். இதனை வள்ளுவர் ‘பெரியாரைத் துணைகோடல்’ என்னும் அதிகாரத்தில்,

“முதலில்லார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை”            ( குறள் : 449 )

என்று கூறுகிறார். எனவே, முதலீடு செய்து வணிகம் செய்பவர்கள் இட்ட முதலைப் பெற முதலில் வணிக அறத்தோடு உழைக்கவேண்டும். பின்னரே ஊதியப்பலன் கருதவேண்டும். வரவினை எண்ணி  முதலை இழக்கக்கூடாது எனக்கூறும் வள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில்,

“ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்”    ( குறள் : 463 ) எனக்கூறுகிறார்.

நிதி மேலாண்மை
‘நிதி மேலாண்மை’ என்பது நிதியை எவ்வழி மேம்படுத்துவது என்பதைத் திட்டமிட்டுச் செயலாற்றுதலாகும். நிதியைச் பயன்படுத்தாமல் தக்கவைத்திருந்தலால் எந்தப் பயனுமில்லை. உலக இன்பங்களைத் துய்ப்பதற்குப் பொருள் வேண்டும். இம்மையில் மட்டுமில்லாமல் மறுமைக்குத் தேவையான அறத்தைச் செய்வதற்கும் பொருள் வேண்டும். எனவே, பொருளைப் பொருளால் தான் ஈட்ட வேண்டும்.  பொருளால் தனக்கு வேண்டியதைச் செய்து கொள்ளாமல் இருப்பது வீணற்றதாகும் என்னும் உயரிய சிந்தனையை ‘குற்றம் கடிதல்’என்னும் அதிகாரத்தில் வள்ளுவர்,

“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்”            ( குறள் : 437 )

எனக் குறிப்பிடுகிறார். எனவே, மேலும் மேலும் பொருள் வரும் வழிமுறைகளை ஆராய்ந்து நிதியை செலவிடுதல் வேண்டும். அவ்வழி வந்த பொருளை சேர்த்து வைத்தல், சேர்த்த பொருளைப் பாதுகாத்தல், காத்தவற்றை அறம் பொருள் இன்பங்களின் பயனை அனுபவிப்பதற்காகச் செலவிடுதல் ஆகியன நிதி மேலாண்மை அரசின் முக்கியக் கடமையென்கிறார் வள்ளுவர். இதனை ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரத்தில்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”            ( குறள் : 385 )

எனக் குறிப்பிடுகிறார். மேலும், தற்காலச் சூழலில் இன்றைய அரசும் இதனையே செயல்படுத்திவருவதும் குறிப்பிடத்தக்கதாகும். அரசின் பல்வேறு செலவுகளுக்குத் தேவையான பொருளை ஈட்டும் வழிமுறைகளையும் வள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். வழித்தோன்றல் இன்றியும் ‘வாரிசு’ உறவுகள் இல்லாத சூழலிலும் அவரது சொத்துக்களும், புதையலாகக் கிடைக்கும் சொத்துக்களும் அரசாங்கத்திற்கே சொந்தமானதாகும். இவ்வாறு தானாக கிடைக்கின்ற பொருளும், பகைவர்களை வென்று திறையாகப் பெறக்கூடிய பொருளும் அரசாங்கத்திற்கே உரிமையுடையதாகும் என்பதனை ‘பொருள் செயல்வகை’ என்னும் அதிகாரத்தில்,

“உறுபொருளும்  உல்கு பொருளுந் தன்ஒன்னார்த்
தெருபொருளும் வேந்தன் பொருள்”        ( குறள் எண் : 756)

என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிமக்களிடம் அன்பும் அருளும் காட்டி வரிவிதிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் நிதி மேலாண்மைக் கொள்கையின் முக்கியமென கூறும் வள்ளுவர்,

“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாகும்
புல்லார் புரள விடல்”         ( குறள் : 755 ) எனக் கூறுகிறார்.

நிதி மேலாளார்க்கான தகுதிகள்
நிதியை மேலாண்மை செய்யும் அல்லது பராமரிக்கும் நிதிமேலாளருக்கு சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும். இன்றைய சூழலில் நிதி மேலாளருக்கென்று பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், நிதி மேலாளர் சோம்பல் இல்லாதவராக இருத்தல் வேண்டும் என ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தில்,

“ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி”            ( குறள் : 371 )

என மனிதனுக்கு ஊழால் ஏற்படும் சோம்பல் என்பதைவிட, சோம்பலால் பொருள் அழிவு ஏற்படும் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வள்ளுவர் அறிவுநுட்பமாகக் கூறியுள்ளார். மேலும், செல்வத்தை ஈட்டலும் காத்தலும் பயன்கொள்ளுதலும் அறிவுடையோர் செயல் இயக்கமாகும். ஆதலால், கற்றோரே செல்வத்திற்கு உரியவர். செல்வத்தை ஈட்டும் முயற்சி அறிவிலார்க்கு இல்லை. அவர் வறுமைக்குரியவர் என்பதை வள்ளுவர் ;கல்லாமை’ என்னும் அதிகாரத்தில் வலியுறுத்துகின்றார். செல்வமானது கல்லாரைக் கெடுப்பதைப் போல, வறுமை நல்லோரைக் கெடுப்பதில்லை. ஆதலால் வறுமையை விடவும் செல்வம் இன்னாதது என பரிமேழலகர் தம் உரையில் விளக்குகின்றார். எனவே, நிதியைக் கையாளக் கற்றவரே பொருத்தமான நிர்வாகியென,

“நல்லோர்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு”                 ( குறள் : 408 )

என வள்ளுவர் குறிப்பிடுகிறார். மேலும், கல்வியென்பது பரந்துபட்ட பொருளைக் கொண்டதாகும். நிதியை முறையாகப் பயன்படுத்துபவர் சிறந்த மேலாளர் ஆகலாம். நிதி மேலாளர் தம் நிலைமையினும் மிகுதியான முயற்சி வேண்டி நிற்பவை பயன் அளிக்காததோடு பெருந்துயர் விளைவிக்கும் செயலைச் செய்யக்கூடாது. இதற்கு மாறானவற்றை நிதிமேலாளர் செய்யலாம் என ‘வினைத்தூய்மை’ என்னும் அதிகாரத்தில்,

“செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்”            ( குறள் : 466 )

என்று வள்ளுவர் பொருளை ஈட்டுவதில் செயல் தூய்மை வேண்டும் என்கிறார். மேலும், பிறரைத் துன்புறுத்திப் பெற்ற பொருள்கள் தான் துன்புற இழக்கும்படி நேரிடும். நன்முறையில் பெற்ற பொருளே நன்மையை வளைவிக்கும் என,

“அழக்கொண்ட வெல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கு நற் பாலனவை”                ( குறள் : 360)

எனும் இக்குறள் நிதிமேலாளருக்கு சிறந்த அறிவுரையாகும். மேலும், நிதி மேலாளர் சொல்வன்மை கொண்டிருத்தல் வேண்டும். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் ஆகிய பண்புகளும் நிதிமேலாளருக்கு முக்கியமானதாகும்.

தொழில் இடர்பாடுகளைக் களைதல்
மானிடர் யாவரும் எத்தொழிலைச் செய்யும் போதும் அத்தொழிலுக்கான முயற்சி, இடையூறு, பயன் என்ற இம்மூன்றையும் சீர்தூக்கிப் பார்த்து, அம்முயற்சி மற்றும் இடர்பாடுகளின் அளவைவிடப் பயனள்ளதாக இருந்தால் மட்டுமே அத்தொழிலைச் செய்ய வேண்டும் என வள்ளுவர் ‘வினை செயல்வகை’ என்னும் அதிகாரத்தில்,
“முடிவும் இடையூறும் முயற்றியாங் கெய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்”            ( குறள் : 676 )

என்கிறார். தொழிலின் இடர்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்துவிடாது. ஓவ்வொரு செயலிலும் இடர்ப்பாடு மறைந்துதான் காணப்படும். அது தன்னிலை மறந்து இருள்தரும் மயக்கத்தைப் போன்றது. தொழில் முனைவோர் இதனை நீக்கி மயக்கமின்றி செயல்பட வேண்டும். தொழில் செய்யுமிடத்தில் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனும் எண்ணிப்பார்த்து மயக்கம் இல்லாமல் செயலாற்ற வேண்டுமென வள்ளுவர்,       

“பொருள் கருவி காலம் வினையிடனொடைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்”    ( குறள் : 675 )  எனக் கூறுகிறார்.

முடிவுரை
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்னும் கூற்றினை காலந்தோறும் மீண்டும் மீண்டும் மெய்பிக்கும் வகையில், தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட இந்நூற்றாண்டுனர் மட்டுமின்றி வருங்காலமும் எண்ணி வியக்குமளவிற்கு  உலகப்பொதுமறையான திருக்குறளில் வணிகவியல் உள்பட எத்துறைக்கும் தேவையான அடிப்படை ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. வணிகம் அல்லது தொழில் தொடங்கும் முறை, வணிகம் செய்வதற்குரிய தகுதிகள், நிதி ஆதாரமும் வரவு செலவும், வணிகஅறம், வணிகத்தின் நோக்கம், நிதிமேலாண்மை, நிதி மேலாளார்க்கான தகுதிகள், தொழில் இடர்பாடுகளைக் களைதல் போன்ற வணிகவியல் மற்றும் நிதிமேலாண்மைக் கொள்கைக்கான பல்வேறு செய்திகள் திருக்குறளில் இடம்பெற்றுள்ளன என்பதனை இக்கட்டுரையின் வாயிலாக உணர்த்தப் பட்டுள்ளது.

உசாத்துணை நூல்: திருக்குறள்


cmkm.muthukani@gmail.com

கட்டுரையாளர்: – பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08