இசை : தமிழ் மரபு

ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்

- வெங்கட் சாமிநாதன் -இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்கல் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் மொழிபெயர்த்து பாதியாக சுருக்கி வெளியிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதியைத் தான் குறிப்பிட்டேன் கிடைக்கவில்லை.  பின் வருடங்களில் ஜே. ஸ்ரீராமன் என்னும் பத்திரிகையாளருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. நான் என்ன எழுதினாலும் அவர் தான் துணை ஆசிரியராக இருக்கும் அருணா ஆஸ்ஃப் அலி தொடங்கி நடத்தி வந்த Patriot என்னும் தினப் பத்திரிகையில் ஞாயிறு பதிப்பில் நடுப்பக்கத்து கட்டுரையாகப் பிரசுரித்து விடுவார். அவரைச் சந்திக்கும் போது அங்கு Arts சம்பந்தப்பட்டவற்றைக் கவனிப்பவருடன்  (பெயர் மறந்துவிட்டது) பழக்கமேற்பட்டது. அவர் ஆசிரியத்வம் ஏற்றிருந்த LINK வாரப் பத்திரிகையில் சாமிநாதன் என்ன எழுதினாலும் போடலாம். வாங்கிவா? என்று அங்கு ரிப்போர்ட்டராக இருந்த நண்பர் வெங்கட் ராமனிடம் சொல்லி அனுப்பி, நிஜமாகவே நான் என்ன எழுதினாலும் அதில் பிரசுரமாயிற்று.( யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையின் முன்னுரையிலும் இதை எழுதியிருக்கிறேன். எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சொன்னால் நல்லது. தப்பில்லை) சரி இவ்வளவு நடக்கிறதே என்று Music – the Tamil Tradition என்று ஆஜ்கல் பத்திரிகைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் கொடுத்தேன். அது பிரசுரமாயிற்று. கடைசி மூன்றில் ஒரு பகுதி மாத்திரம். அது இன்றைய நிலையைச் சொல்வது. இரண்டு பகுதிகளாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில். (Patriot, Sunday 8.5.88 /15.5.88) என்னதான் சாமிநாதனைப் பிடித்திருந்தாலும் ஒரு தினசரி எவ்வளவு தான் இடம் கொடுக்க முடியும்? எனக்குத் தெரிந்து சென்னை ஹிந்து பத்திரிகை தான் கிருஷ்ணமேனன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் கஷ்மீர் பற்றிய தீர்மானம் குறித்த நேரத்தில் பாஸாகாமல் தடுக்க மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தார். அந்த பேச்சு முழுதையும் மூன்று/நான்கு பக்கங்களுக்கோ என்னவோ ஹிந்துவில் பிரசுரமாயிற்று.  அப்போது கின்னஸ் வொர்ல்டு ரிகார்டெல்லாம் இருந்ததோ என்னவோ. இருந்திருந்தால் இதுவரை மீறப்படாத சாதனையாக அது இருந்திருக்கும். அதன் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அந்த கட்டுரை அது எழுதப்பட்ட முழுமையில், ஆங்கிலத்தில் இருந்தது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ( உஷா வைத்தியநாதனின் தயவினாலும் பொறுமையினாலும்) பிரசுரமாகிறது.

தமிழில் சங்கீத விமர்சனம் பற்றிப் பேசும்போது சுப்புடுவின் முகம் தான் முதலில் தரிசனம் தருகிறது. பார பட்சமில்லாமல் தைரியமாக தன் மனதுக்குப் பட்டதை எழுதுபவர். விஷய ஞானமும் உள்ளவர். திண்ணை வம்பு பாஷையில் இருக்கும். எத்தகைய தைரியம், எவ்வளவு தைரியம்! ஒரு உதாரணம் சொல்லலாமா? பத்மா சுப்ரமண்யம் தில்லி மாளவியா ஹாலில் ஜய ஜய சங்கரா வா அது? ஆடிய நிகழ்ச்சி. நான் பார்க்க வில்லை. ’அவன் ஒருவன் தான் ’ என்று கை உயர்த்தி கை மடக்கி சுட்டு விரலை மேலே நீட்டினாராம். சுப்புடு எழுதினது, “இது என்ன முத்திரை? புதுசா இருக்கு. மூணாம் க்ளாஸ் பையன் எழுந்து நின்று கை தூக்கி விரலை நீட்டி,”சார், ஒண்ணுக்கு “ என்று கேட்பது போல இருக்கு.” என்று எழுதினார். அவர் ஒருத்தர் தான் இப்படி எழுத முடியும்.

அப்படி வேண்டாம். ஆனால் அந்த தைரியமும் விமர்சன மரபும் இங்கு இருந்தால் நன்றாக இருக்கும். அது நடப்பதில்லை. “உன் காரியத்தைப் பாத்துண்டு போயேண்டா, ஊர் வம்பெல்லாம் உனக்கு எதுக்கு,? என்று பாட்டி சின்ன வயசில் திட்டியது கீத வாக்கியம் என்றோ, இல்லை, இது ஏதோ ஐ.பி,சி பிரிவில் தண்டனைக்கு உரியதோ என்னவோ என்ற பயமோ எல்லா தமிழர்களுக்கும் அவர்கள் DNA லேயே படிந்திருக்கும் நல்ல பிள்ளையாக ஆகும் குணம்.

எனக்கு இதில் இன்று முப்பது வருடங்களுக்குப் பின் சொல்ல சில உண்டு.

உஷா வைத்திய நாதனிடமிருந்தும் கிரிதரன் அவர்களிடமிருந்தும் சில அபிப்ராயங்கள் வந்துள்ளன. பிரசுரத்துக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. ஆனால் அது இக்கட்டுரை முடிந்ததும் கொஞ்சம் இந்த “நமக்கென்னத்துக்கு வம்பு” மரபை உடைத்துக் கொண்டு மனதில் பட்டதை யாரும் எழுதினாலத்தோடு அவையும் வரவேண்டும் என்று நான் விரும்புவேன். அதற்கு நானும் அவர்கள் சுட்டிய குறைகளுக்கு எனக்குத் தெரிந்த சமாதானத்தைச் சொல்வேன். அதில் என் குறைகளும் தெரியும். நம்மில் சகஜமாக உரையாடும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் சூழலும் பண்பும் கலாசாரமும் தோன்றி வளர வேண்டும் என்பது என் விருப்பம்.

என்னுடைய அனேக ஆரம்ப கால புத்தகங்களைப் பார்த்தீர் களானால், எனக்கு எதிரான கருத்துக்களை மனச்சாய்வைக் கொண்டவரகளிடம்  புத்தகத்தைக் கொடுத்து அவரகள் கருத்தை எழுதச் சொல்லி அதை பிரசுரத்துக்கு நேரே அவர்களை அனுப்பச் சொல்வேன். அப்படியே நடந்தும் வந்தது.

எழுதக் கேட்டவர்கள் சந்தோஷமாகச் செய்தார்களே தவிர, அதனால் தமிழ் கருத்துலகில் எந்த மாற்றமும் நிகழ வில்லை.  வாதங்கள் விவாதங்கள் புத்தகத்திலும் மூன்றோ நான்கோ அன்பர்கள் “பய புள்ளே தானே வந்து வலையிலெ விழறான்யா” என்று உவகையுடன்  புகுந்து விளையாடியிருப்பதைக் காணலாம். எப்படியாவது அவரகள் ஆத்திரம் அடங்கினால் சரி. ஆனால் தமிழ் நாட்டில் யாரும் என்னைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளவில்லை. புத்தி சாலிகள். பலரின் பகைமையை இப்படித் தான் நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.  [தொடரும்]

vswaminathan.venkat@gmail.com