இணையத்தள அறிமுகம் (பூ வனம்) : நினைவு நதியில் வண்ணதாசன்

எழுத்தாளர் வண்ணதாசன்[எழுத்தாளர் ஜீவி தனது வலைப்பதிவான ‘பூ வனத்தில்’ எழுதிய கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. இந்த மீள்பதிவின் மூலம் ஜீவியின் ‘பூ மனம்’ வலைப்பதிவினைப் ‘பதிவுகள்’ தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது.  http://jeeveesblog.blogspot.ca/ – ‘பதிவுகள்’] நெருங்கிய வட்டத்தில் கல்யாணியாகிறவர், கவிதைகள் எழுதும் பொழுது, கல்யாண்ஜி ஆவார். சொந்தப் பெயர் கல்யாணசுந்தரம் வேலை பார்த்த பாரத ஸ்டேட் வங்கியோடு சரி போலிருக்கு. சகோதரர் வல்லிதாசனிடமிருந்து எடுத்துக் கொண்ட வண்ணதாசன் கதைகளுக்காகவும், கல்லூரி நண்பர் அழைத்த கல்யாண்ஜி கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனைத் தெரிந்த அளவுக்கு ரொம்ப பேருக்கு கல்யாண்ஜியைத் தெரியாது; அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது. வண்ணதாசனும் எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக் காட்டிக் கொண்டதில்லை. எழுத்திலும் அப்படித்தான். எல்லாமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.

 வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். கதையை எங்கு ஆரம்பிப்பது என்பது தான் அவருக்கு யோசிக்க வேண்டிய விஷயமாய் இருக்கும் என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொண்டு விடலாம். சொல்ல வேண்டிய கதையின் அடிநாதத்தை கறாராகத் தீர்மானித்து விடுவார் போல. மற்ற விஷயங்கள் எல்லாம் அது அது அதுபாட்டுக்க வந்து போகும். ஒரு மையப்புள்ளியில் காம்பஸின் ஒரு ஊசி முனையை ஊன்றிக் கொண்டு, பென்ஸில் செருகிய இன்னொரு முனையை அகட்டி வட்டமடிப்பது போல, எழுதுகையில் அதுபாட்டுக்க வந்து விழும் ஒவ்வொரு விவரணையும் அது தொடர்பான நிறைய ஜோடனைகளைச் சுற்றிக் கொண்டு பம்மென்று திரட்சியாக இருக்கும். இது வேண்டாம் அல்லது இது இதற்கு சம்பந்தமில்லாதது என்று ஒன்றைக் கூடச் சொல்லி விடமுடியாது. சொல்ல எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் பாந்தமாக இருக்கும். ஒவ்வொன்றும் நுணுகி நுணுகிப் பார்த்து தேர்ந்த பொற்கொல்லர் மாதிரி அவரே சேகரித்து சேர்த்த அழகு சமாச்சாரங்கள். அத்தனையிலும் அத்தனை நகாசு படிந்திருக்கும்.

வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தாம் அவரது கதைகள். அவரைத் தேடிவந்த முதல் வாசகர் நம்பிராஜனும், அவரது முதல் கதைத் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகளை’ வெளியிட்ட சேலம் ‘அஃக்’ பரந்தாமனும் இன்றும் அவரது ஞாபக அடுக்குகளில் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். சிறு வயதில் காது வைத்தியதிற்காக வைத்தியரின் கிளினிக்குப் போகும் வழியில் பார்த்த சிவப்பாக நின்ற ஆளுயர தபால் பெட்டி கூட பின்னும் நினைவில் நின்று எழுத்தில் ஏதோ ஒரு கணத்தில் பதிவாகியிருக்கிறது. இந்த நினைவாற்றல் தான் வண்ணதாசன் பெற்ற வரப்பிரசாதம். அவருள் படிந்துள்ள அவரது அபார நினைவாற்றல் கிளைபிரிந்து கிளைபிரிந்து வெவ்வேறு தரிசனங்களின் நினைவுகளை இழுத்து வந்து எடுத்துக் கொண்ட பொருளுடன் சேர்க்கும் ஆற்றல் கதைப் பின்னலாகின்றன. அதை இப்படிக் கூடச் சொல்லலாம்: அவரது ரசனை அலாதியானது. அந்த ரசனை அவரது வாழ்க்கை அனுபவங்களின் விளைவு. அந்த அலாதியான அவரது ரசனையுடன், காணும் காட்சிகள் கலந்து அவருள் வினைபுரிகையில் அவை கதைகளாகின்றன. இதனாலேயே அவரது ரசனைகளே ஸ்தூலமாக அவரது கதைகளை நடத்திச் செல்வதற்கும் பொறுப்பேற்கின்றன.

வண்ணதாசனின் தளம் சிறுகதைகள் தாம். சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது அவருக்குப் பிடிப்பதில்லை. இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பதைப் போல முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும் அப்ரப்ட்டாக முடித்து விடுவார். அப்படி அவர் முடித்ததும் கனக்கச்சிதமாக இருக்கும். பலநேரங்களில் அந்த கடைசி வரி கூட மேற்கொண்டான கதையை வாசகனே தன் யோசனையில் நீட்டித்து முடித்துக் கொள்கிற மாதிரி வசதி வேறு பண்ணிக் கொடுத்திருப்பார்.

அன்பு தான் ஆரம்பம்; இருந்தாலும் எல்லோராலுமே அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது என்பது தான் சூட்சுமம். அன்பு செலுத்துதல் கூட சிலருக்குத் தான் சாத்தியப்பட்டச் செயலாக இருப்பது தான் விநோதம். சிலபேருக்கு சிலரிடம் அது ஆழ்ந்து விகசிக்கும் பொழுது காதலாக மலர்கிறது. ஞானப்பனுக்கு சற்றே காலைச் சாய்த்து சாய்த்து நடக்கும் தனுவிடம் ஏற்பட்டதும் அதுதான். சொல்லப்போனால், டெஸ்சி டீச்சருக்கும் அதே மாதிரியான ஒன்று தான் ஞானப்பன் மேலும். ஆனால் தனலெட்சுமியின் பால் ஞானப்பன் கொள்வதற்கும், ஞானப்பனின் மீது டெஸ்சி கொள்வதற்கும் மென்மையான வித்தியாசத்தை படிப்பவருக்குப் புலப்படுத்துவார் வண்ணதாசன். இந்த நுண்மையைப் புரிந்து கொண்டோருக்கு அவரின் ‘தனுமை’ அற்புதமான சிறுகதை. மருத்துவமனையும் ஒரு உலகம் இல்லாவிட்டாலும், ஒரு சிற்றூர் தான். வகை வகையான நோய்களுக்கேற்றவாறு வகை வகையான மனிதர்கள். மனிதர்க்கு மனிதர் கொள்ளும் உறவுகளும், சில நாட்களுக்காயினும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் கொள்ளும் அக்கரையும், இயல்பாகப் படியும் அன்பு விசாரிப்புகளும், உதவிகளும் ‘கடைசியாய் தெரிந்தவர்’ கதையில் அழகாகப் பதியப்பட்டிருக்கும். காதலித்தவளைக் கரம் பிடிக்க முடியாமல் போகிறது அண்ணனுக்கு. வேறோர் இடத்தில் அவளுக்குத் திருமணமாகி, கைக்குழந்தையுடனான அவளை– தம்பி தன் நண்பனுடன் எதேச்சையாக வழியில் சந்திக்கும் கதை, ‘ரதவீதி’. அந்தக் குட்டியூண்டு கதைக்குள் கோடானுகோடி உணர்வுகளைப் பதித்துத் தருவார் வண்ணதாசன். ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ மனசைக் குடையும். அந்த மாதிரி கிருஷ்ண பொம்மை பதிக்கப்பட்ட ஒரு வீட்டைப் பார்த்த அனுபவம், வேறொரு நிகழ்ச்சியின் அதிர்ச்சியை இங்கு கொண்டு வந்து சேர்த்து கதையாகியிருப்பதாகத் தோன்றுகிறது.

‘பாம்பின் கால்’ கதையே சரசரவென்று ஆரம்பிக்கும். தலைப்பில் தான் பாம்பே தவிர, பாம்பு பற்றி எதுவும் கதையில் இல்லை. ‘அதுபோல’ என்பதற்காக வைத்த தலைப்பு அது. திறப்பதற்குக் கொஞ்சம் நேரமாகிப் போய்விட்ட அன்று, சலூனைத் திறந்ததிலிருந்து பொழுது போய்க்கொண்டிருக்கிறதே தவிர, ‘முதல் போணி’ பண்ண யாரும் வருவதாக இல்லை. பெரும்பாலும் அடைத்தே கிடக்கும் எலெக்டிரிக் கிடங்கு வாசலில் மரத்தடியில் புதிதாய் கடை போட்டிருக்கும் பையனுக்கும் இதே நிலை தான். முதல் போணிக்காக காத்திருந்து காத்திருந்து இனிப் பொறுக்க முடியாது என்கிற நிலை வந்த பொழுது, அந்தப் பையனிடம் பேரம் பேசாமல் அழுங்குக் கூடை ஒன்று வாங்கி போணி பண்ணி, அந்தப் பையனைக் கூப்பிட்டு நாற்காலியில் உட்காரவைத்து பையனுக்கு முடிவெட்ட ஆயத்தமாகிறான் அவன். இப்படியாக அவனுக்கும் அன்றைய முதல்போணி முடிவதற்கு வழியேற்படுகிறது.. இதற்கிடையே அமைந்து போய்விட்டத் தொழிலின் மீதான நேசத்தையும், இதன் தொடக்கத்திற்குப் பின் தான் மற்ற உதிரி வேலைகளெல்லாம் என்கிற மாதிரி அவன் மனத்தில் கோர்க்கும் நினைவுகளை சேகரமாய்க் காட்டுவார். இவரது கதைகளில் பாம்பு பல இடங்களில் தலைகாட்டும். ஏன்?.. ஒரு கதைத் தொகுப்புக்காக எழுதிய முன்னுரையில் கூட பாம்பு வரும் நேர்த்தி வியக்க வைக்கும். “பிராடனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில் பழக்கமற்ற தரையோரங்களில் சரசரத்து ஓடி முட்டி முட்டி முடைதேடுகிற நிஜம் அது.. எல்லா இடத்திலும் இருக்கவும், எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்கவும் விரும்புகிறது என்பதும் எல்லா இடத்திலும் வாழ முடியாது தவிக்கிறது என்பதும் நிஜம்’ என்று வண்ணதாசன் உணர்வதைச் சொல்வதற்காக வந்த காட்சி நேர்த்தி இது!

ஆமாம், பிறந்து வளர்ந்து வாழ்ந்த திருநெல்வேலிப் பகுதியை அவரால் மறக்கவே முடியாததினால் தான் அந்த சுலோச்சனா முதலியார் பாலமும், குறுக்குத் துறையும், கல்மண்டபமும், நெல்லையப்பர் கோயிலும், கொக்கிர குளமும், வாகையடி அம்மன் கோயிலும், சந்திப்பிள்ளையார் முக்கும், பாளையங்கோட்டை வாய்க்கால் பாலமும் அவர் எழுத்தில் அங்கங்கே தலைகாட்டிக் கொண்டே இருக்கும். அதே போல விறகுக் கடையில் விறகைப் பிளக்கும் சம்மட்டி அடி, ஈர விறகின் ஒரு புளிப்பான பச்சை வாசனை, திரும்பச் சங்கடப்பட்டிருக்கும் என்று உணர்த்திய கடையிலிருந்து ரோடு வரை மடங்கி மடங்கி கிடந்த லாரித்தடம், வேப்ப மரத்தின் அடர்த்திக்குள் ஒளியும் பளீர் வெயில், பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழும் அணில், தாம்புக் கயிறு மாதிரி ஜடை பின்னிக்கொண்டிரு க்கும் போகன் வில்லா என்று என்னன்னவோவான அனுபவித்த ரசனை ஜாலங்கள் அங்கங்கே பளிச்சிட்டு சித்திரமாய் நெஞ்சில் பசக்கென்று ஒட்டிக் கொள்ளும்.

எழுதிக் கொண்டு வரும் பொழுதே ஒன்று தெரிகிறது.. வண்ணதாசனின் சிறுகதைகளுக்கு இது இப்படியான கதை என்று குறிப்பு கொடுப்பது ஒருவிதத்தில் அவர் எழுத்தின் அழகை குறைத்து மதிப்பிட வழிகோலும் என்று தோன்றுகிறது. அவர் கதைகளை நேரிடையாக வாசித்து அவருடன் பரிச்சயம் கொள்வதே சரி. அவருடைய ‘சின்னு முதல் சின்னு வரை’ குறுநாவலை நினைத்தால் அப்படித்தான் முடிவுக்கு வரத் தோன்றுகிறது. அப்பொழுது தான் எடுத்துக் கொண்ட கதையின் போக்கினூடேயே நுணுகி நுணுகி ஒவ்வொன்றையும் நெருக்கத்தில் அணுகி படிப்போருக்கு அவற்றை எப்படிப் பழக்கப்படுத்துகிறார் என்பது புரிபடும். ‘பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை’ என்பன போன்ற மென்மையான உணர்வுகள், ஒரு கதையைப் படித்தால் கதையின் அவுட்லைனை மட்டும் மேம்போக்காகப் பார்த்துவிட்டு நகரும் மனங்களால் உணர முடியாதவை.

கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பு அன்னம் வெளியிட்ட ‘புலரி’. மறக்கவே முடியாத அந்த ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ பற்றி வேறொரு இடத்தில் நிறையச் சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. அதே மாதிரி தான் ஆனந்தவிகடனில் எழுதிய ‘அகம்-புறம்’ கட்டுரைத் தொடரும். ஒரு காலத்தில், கண்ணதாசன், தீபம், நடை, மீட்சி, கணையாழி, உயிரெழுத்து என்று நிறைய இதழ்களில் காணக்கிடைத்தார். ‘கண்ணதாசனி’ல் வண்ணதாசனைப் பார்த்தது, அந்த அச்சு நேர்த்தியிலும் அமுதோன் வரைதலிலும் அந்தக் கால அதி அனுபவம்.

இவ்வளவு சொல்லி விட்டு கல்யாண்ஜியின் கவிதைகள் பற்றி கோடி கூட காட்டவில்லை என்றால் அது பெருத்த குறையாகிப் போகும். பொத்தி வைத்த மன உணர்வுகளைப் பையப்பைய வெளிக்காட்டி நம் நெஞ்சில் நெகிழ்ச்சியுடன் உலாவிடுவார். பகிர்தலுக்காக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளில் ஒன்று:

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில் தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்
தலை கீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்

நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

எனக்கு வண்ணதாசனின் அப்பாதான் பழக்கம். கலை இலக்கியப் பெருமன்றம், தாமரை என்று தொடர்ந்து வந்த பழக்கம் அது. சிற்றிதழ்க்காரர்களுக்கு சொந்தக் காரர் அவர். வீட்டுக் கல்யாணத்திற்கு சொந்த பந்தங்களுக்குப் பத்திரிகை அனுப்புகிற மாதிரி, தமிழகத்தில் எவரேனும் சிற்றிதழ் ஆரம்பித்தால் தவறாமல், தி.க.சி.க்கு ஒரு பிரதி அனுப்பி வைப்பது பழக்கமாகிப் போன ஒரு வழக்கம்.. அனுப்பி வைத்த ஒரு வாரகாலத்திற்குள் ஒரு தபால் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதிய கையெழுத்தில் அந்த இதழ் பற்றி தாம் உணர்வதை அவரும் எழுதி அனுப்பி வைத்து விடுவார். ஆரம்பித்த சிற்றிதழுக்கு ஆசி கிடைத்த சந்தோஷத்தில், அடுத்த இதழில் ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில் அவரது அந்த கடிதத்தைப் பிரசுரித்து விடுவார்கள். தி.க.சி.யின் பதில் கடிதத்தைப் படித்துப் பார்ப்பதில் அத்தனை சந்தோஷமும் பெருமையும் அந்தக்கால சிற்றிதழ் வட்டாரத்தில்!.. நானும் நான் நடத்திய இரு இதழ்களுக்கு பெரியவரிடமிருந்து கடிதம் வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன்.

அதே மாதிரி தான், ’77-வாக்கில் வெளிவந்த ‘கமலி காத்திருக்கிறாள்’ என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பை வண்ணதாசனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். தந்தையைப் போலவே தனயனும் உடனே பதில் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இவர் தபால் கார்டில் இல்லை; ஒரு இன்லாண்ட் லெட்டரில். அந்த வெளிர்நீலக் கடிதத்தை அசகாய சாமர்த்தியத்தோடு உள்ளடக்கம் கிழிந்து விடாமல் பிரித்துப் பார்த்தால்.. பேனாவால் ஒரு ஓட்டு வீடு, வாதாமரம் மாதிரியான ஒரு மரம் என்று படமெல்லாம் வரைந்து நடுவில், ஓட்டுச் சார்புகளில் ஓடிவிளையாடும் அணில்கள் பற்றியும், மரத்தின் இடுக்குகளில் பளபளக்கும் சூரியனின் அதியற்புத ஒளிக்கீற்றைப் பற்றியும், திண்ணையைத் தொட்டுவிடத் துடிக்கும் நிழலின் நீட்சி பற்றியும் கவிதை மாதிரியான வரிகளில் எழுதி, வந்து சேர்ந்த கதைத்தொகுப்பு பற்றி பொதுவாகக் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். உண்மையில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததே போன்ற சந்தோஷம் தான் அப்போது..

அவரது ‘உப்பு கரிக்கிற சிறகு’கள் கதையின் நடுவே, ‘ஊஞ்சல் அசையும் போதா, அசையாத போதா, எப்போது ரொம்ப அழகு?’ என்கிற கேள்வியுடன் ஒரு வரி வரும். அதைப் படித்த பொழுது ‘ஊஞ்சல் உறவுகள்’ என்று தலைப்பிட்ட எனது பிற்கால சிறுகதைத் தொகுப்பொன்றின் முன்னுரையில் நான் எழுதியிருந்த, ‘உண்மைதான். நிலையாக ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ஊஞ்சல் இல்லை. மேலே உந்தித் தள்ளிய பலகை கீழே வர வேண்டும்; கீழே வந்தது மேலே போக வேண்டும். அப்பொழுது தான் அது ஊஞ்சல்; இல்லையென்றால் வெறும் தொங்கு பலகை தான்’ என்கிற வரிகள் நினைவுக்கு வந்தன…

வண்ணதாசன், சார்! இப்பொழுது சொல்லுங்கள்: “ஊஞ்சல் அசையும் போதா, அசையாத போதா, எப்போ ரொம்ப அழகு?’

வண்ணதாசனின் பல நூல்களை சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அவர்கள் தொலைபேசி: 24896979 அலைபேசி: 9841191397

நன்றி: http://jeeveesblog.blogspot.ca/2011/06/blog-post.html