மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுவது என்பது எல்லோராலும் செய்யக் கூடிய காரியமன்னு. அதற்கு பாரியதொரு அறிவு இருக்க வேண்டும். அந்த வகையில் துணிச்சலாக இந்த நிலம் எனது என்ற காத்திரமானதொரு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியை கெக்கிறாவயிலிருந்து திருமதி. ஸுலைஹா அவர்கள் வெளியீடு செய்திருக்கிறார். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசியரான கெக்கிறாவ ஸுலைஹா தற்போது மரதன்கடவல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றுகிறார். ஆங்கிலத்தைத் தேடிப் படிப்பதில் தணியாத தாகம் கொண்டவர். இவர் ஏற்கனவே 2009 இல் பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் – மொழி பெயர்ப்புக் கவிதைகள் (2009 சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது), 2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு – மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் (2010 இல் இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழ்), 2012 வானம்பாடியும் ரோஜாவும் – மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் ஆகிய மொழிபெயர்ப்புத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். பெண் படைப்பாளியான கெக்கிறாவ ஸஹானாவின் சகோதரியே இந்த நூலாசிரியர்.
ஜீவநதியின் 14 ஆவது வெளியீடாக மொத்தம் 79 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுதி வேடிக்கையும் விநோதமும், அழகும் ஆர்ப்பரிப்பும், வாழ்வும் கனவும், காதலும் தவிப்பும், போரும் பிரிவும், மரணமும் தனிமையின் வலியும் ஆகிய 06 தலைப்புக்களில் 51 கவிதைகளை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்லாமல் கலீல் ஜிப்ரான், நொபேட் புரொஸ்ட், எமிலி டிகின்ஸன், ஜோன் டொன், வில்லியம் பிளேக், ஆதர் வலேய், ஜேம்ஸ் ஸ்டீபன், கமலா தாஸ், ஜேம்ஸ் கிர்கப் போன்ற சர்வதேசக் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் சேர்க்கப்பட்டிருப்பது தொகுதியின் காத்திரத் தன்மையை மென்மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
நூலாசியர் இந்த நூலை பிரபல எழுத்தாளர் திக்வல்லை கமாலுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
ஒருவகையில் தனிமனித உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை. சுதந்திரத்தின் மீதான தீவிர வேட்கை, எதிலும் உண்மையைத் தேடல், இயற்கையின் அழகில் தரிசிக்கும் உயிருள்ள நம்பிக்கை, தாய்மையினது மென்னுணர்ச்சி, கரையற்ற காதலின் வாஞ்சை, கனவுகளின் சுகந்தம், கண்ணீர் குலைத்த வாழ்வின் அமைதி, விடியலை வேண்டும் பிரார்த்திப்புகள். மரணத்தின் எவரும் மறுக்க முடியா ஆற்றல், மனித வாழ்வை வாட்டும் பிணிகள், இன்ன பிறவெல்லாம் மொழிவேறாயினும் நமக்குப் போலவேதான் மற்றவர்க்கும் என்பதனை, இந்தக் கவிதைகளைப் படித்துணர்ந்து தெரிந்து கொண்டுள்ளேன். மன ஆழத்தே எழுதியவர் அனுபவித்த உணர்வை வாசிக்க வாசிக்க அவர் மீதான மதிப்பும், மரியாதையும் பல்கிப் பெருகி, அவை நெஞ்சில் ஒலித்துக் கொண்டேயிருக்க, அவர்தம் எழுத்துக்கு கௌரவம் கொடுக்க விரும்பினேன் என்று நூலாசிரியர் தனதுரையில் மனந்திறக்கிறார்.
ஆங்கிலத்தை அதிகம் படிக்கிறேன் என்று கர்வக் கிரீடம் சூட்டித் தற்செருக்கு காட்டுகிறேன் என்பதெல்லாம் இல்லை சத்தியமாக என்கிற நூலாசிரியரின் தன்னடக்கத்தை மெச்சி கவிதைகளுக்குள் நுழையலாம் என்று நினைக்கிறேன்.
கலாச்சாரம் நாளுக்கு நாள் மாறுபடுகின்றது. நாகரீகம் வளருவதாய் எண்ணிக்கொண்டு கலாச்சாரம் சீரழிந்து போகிறது. இது மேற்கத்தைய உலகில் படுவேகமாக பரவி வரும் ஒரு விடயம். அந்தக் கலாச்சாரம் பற்றி அதே சமூகத்தின் கவிஞனொருவனே கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பது வரவேற்கக்கூடிய விடயமே.
வளர்ச்சி என்ற கவிதை (பக்கம் 01)
எலிசபெத் ஆன் வளர்கிறாள் உயரமாக.. தனது உயரத்தை அவள் அளக்கிறாள் தோட்டத்துச் சுவரினிலே.. சென்ற வாரம் அவள் ரோஜாச் செடியினது அளவை அடைந்திருந்தாள்.. இப்போதோ இரு செங்கல்கள் அளவு உயர்ந்திருப்பதாய் அவள் சொல்கிறாள். என்றாலும் வியப்பாய் இருக்கிறது சொல்லுவதற்கு.. அவள் ஆடைகள் எல்லாமும் உயருவதற்குப் பதிலாய்க் குட்டையாகியே வளர்கிறது.
சின்ன மழைத்துளிகள் (பக்கம் 07) என்ற கவிதை சின்ன மழைத்துளியுடன் விளையாட ஆசைப்படும் சுட்டிப் பையனொருவனின் ஆதங்கத்தைப் பேசுவதாய் அமைந்துவிடுகிறது. அவனை வெளியே விடுகிறார்களில்லை. பந்தைத் தருகிறார்களில்லை. ஏனெனில் விளையாட்டுச் சாமான்களை அவன் உடத்துவிடுகிறான். அந்த கவலைகளை சிறுவன் மழையிடம் பகிர்ந்துகொள்கிறான்.
காதலும் தவிப்பும் என்ற தலைப்புக்குள் வரும் நீ தன்னந்தனியே இருந்தால், இனிமையான நேஸமே உனைவிட்டுப் போகேன் ஆகிய கவிதைகள் மிகவும் ரசிக்கத்தக்கன.
காதலிப்பவர்களின் வார்த்தைகள் உருக்கமானவை. அன்பு கொப்பளிப்பவை. அவர்கள் சொல்வதெல்லாம் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதே. அந்தப்பாணியிலான தன்னந்தனியே இருந்தால் (பக்கம் 51) என்ற கவிதையின் சில வரிகள் கீழே..
நீ களைப்புற்றுச் சோர்ந்து தன்னந் தனியே இருந்தால் உனதண்டை நான் வருவேன். ஆறுதலாய்ப் பேசியபடியிருக்க உனக்கு எவறேனும் தேவைப்பட்டால் அங்கே நான் உனதருகே வந்திடுவேன். நண்பர் கூட்டம் உனைக் கைவிட்டு விட்டால் உன் பக்கத்தே நான் வந்திருப்பேன். எங்கேயேனும் போய்வர உன்னிதயம் ஏங்கிற்றென்றால் என் வாசற் கதவு அகலத் திறந்திருக்கும் உனக்காய். குளிர்கொண்டு நீ நடுங்கினாயானால் ஓடியே வந்து உன்னருகே கதகதப்பூட்டும் சுவாலை மூட்டுவேன். துயருற்றுச் சோர்ந்து நீ துவண்டு போவாயானால் உன்னை மேலுயர்த்தித் தூக்கி நிறுத்திட ஓடோடி நான் வருவேன்..
இனிமையான நேஸமே உனைவிட்டுப் போகேன் (பக்கம் 56) என்ற கவிதை துணையை விட்டுப்பிரிந்த ஆத்மாவின் ராகமாகும். வெறுத்தோ, கோபத்திலோ உன்னை விட்டுப் போகவில்லை என்று ஒலிக்கும் குரலில் அதீத அன்பு இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. என்றேனும் உனக்கு முதல் நான் மரணித்தால் அதை நீ தாங்க வேண்டும். அதற்கான பயிற்சியிது என்று பின்வருமாறு சொல்லப்படுகின்றது.
இனிமையான நேஸமே உனதான நேஸத்தில் சலிப்புற்றோ, உன்னைவிடச் சிறந்ததொரு நேஸம் வாய்க்குமென நம்பியோ நான் உனைவிட்டுப் போகவில்லை. என்றேனும் ஒரு நாள் நான் உனைவிட்டு மரணித்துப் போகலாம். அந்த நிரந்தரப் பிரிவை தாங்கிடும் வல்லமையை முன்கூட்டியே எனக்கு தந்திடக் கருதி, இந்தத் தற்காலிக மரணத்தை உனக்கு வழங்கிட எண்ணினேன்.
இப்படிப் பல கவிதைகளையும் நாமும் ரசிக்கக் கூடியதாக மொழி பெயர்த்துத் தந்திருக்கும் ஸுலைஹா அவர்கள் பாராட்டுக்குரியவர். இந்தக் கவிதைகளைப் படித்து பயன்பெற வேண்டியது எங்கள் அனைவரினதும் கடமை. இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களை நூலாசிரியரிமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை நூலாசிரியரின் சுய படைப்புக்களையும் வெளிக்கொணர வேண்டும் என அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்!!!
நூலின் பெயர் – இந்த நிலம் எனது
நூலின் வகை – மொழி பெயர்ப்புக் கவிதைகள்
வெளியீடு – ஜீவநதி வெளியீடு
நூலாசிரியர் – கெக்கிறாவ ஸுலைஹா
தொலைபேசி – 0724494485
மின்னஞ்சல் – kekirawasulaiha@gmail.com
விலை – 220/=