இன்றல்ல நேற்றல்ல….

இன்றல்ல நேற்றல்ல....’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.

”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு

இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.

’நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று 

பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு 

அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.

‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’ 

என விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு, ஊர்ப்பெண்களையெல்லாம்,

பிள்ளைத்தாய்ச்சிப் உட்பட,
பேர்பேராய்ப் பரிகசித்துப் பாடிய பாட்டு
பிரபலமோ பிரபலம் –

இளவட்டங்களிடையே மட்டுமல்ல.

’கங்கா காவிரி ரம்பா ஊர்வசி அரசி கிளியோபாட்ரா
ஆப்பக்கடை அன்னம்மா
அத்தைமகள் ரத்தினமா, அடுத்தவீட்டு மாக்டலீனா
ரீனா மீனா தேவசேனா… 

காதரீனா செந்தேனா என்பேனா
ஆ… மானே மச்சகன்னித் தேனே ….. 

மெல்லக் கடி, பெண் பேனே….’

அட, சினிமாவில் பெண்ணென்றாலே 

சதைமொந்தை தானே.

பெயர்பெயராய்ச் சொல்லிச்சொல்லிப்
பெண்ணைப் பண்டமாய்த் துண்டாடிக்கொண்டாடும்
பேராண்மையாளர்களுக்கெல்லாம்
மேடைக்குத் தகுந்தபடி மாறுவாள் ஆண்டாள்
தாயாகவும் தாசியாகவும்.

தேவ’ ‘சேர்ப்பதால் ஆவதென்ன?

வெறும் Euphemistic terms-இல்பெறக்கிடைப்பதா மரியாதை?

உம்ராவ்ஜானின் அழகியவிழிகளில் என்றுமாய் ததும்பியிருந்த
கண்ணீர் சொல்லும் பலகதை.

இல்லை, *Pretty Woman நாயகியிடம் கேட்டால்
பளிச்சென்று சொல்வாள் பதிலை!

(*Julia Roberts நடித்த படம். தெருவில் வாடிக்கையாளர்களுக்காக வலைவிரிக்கும் மலிவுப் பாலியல்தொழிலாளியாக இருப்பவள் நல்லவனான செல்வந்தன் நாயகனோடு ஒரு வாரம் இருக்க நேர்ந்ததில், அவளுக்கு சமூகத்தாரிடம் நேரும் அவமானங்கள்; பின், நிரந்தர உறவில் நம்பிக்கையில்லாதவனான நாயகன் சகல வளங்களோடும் அவளைத் தன்னோடு இருக்கச்சொல்லி அழைக்கும்போது ஏற்க மறுத்து கௌரவமான வாழ்க்கைத்துணை யாக்கிக்கொள்ள முடியுமானால் வருகிறேன் என்று சொல்லும் பெண்பாத்திரம்).

ramakrishnanlatha@yahoo.com