இருந்து …..இறந்தோம் !

கவிதை வாசிப்போமா?

வெளுத்துப்  பெய்யும்  மழையின்  குரல்
இருட்டில்  என் கனவை  விழுங்கிற்று
அகலும்  அறிகுறியில்லை
போன பொழுதில்  பெய்தபோது
அம்மா அலுப்பின்றி  கிடந்தாள்
அருவமாகிப்  போன  அவளை
பெருமழைதான்  தின்று போட்டது
எங்களுக்கிடையேயிருந்த  காலம்
வலியைத்  துடைக்கத்  தவறியது
சலசலத்துப்  பொங்கிச்  சீரும்  நீர்
வாசலில்  பூதம் போல்  பெருகியது
என்  கண்ணீரையும்  வறுமையையும்  போக்கி
என்  அரவணைப்புக்குள்  இருந்த  உரிமை !
வெள்ளத்தின் பேரலைக்குள் நழுவும்
அவள்  இறுதி  உயிர்மூச்சு
மெல்லிய  அவள்  குரல்
தேக்கு மரக்கதவோரம்  பனித்துளிபோல் 
அடங்கி  முடங்கிற்று

மழையின்  பேராவல்
மழையின்  சுழற்சி
மழையின்  திட்பம்
அவளை அணு அணுவாய்
கரைத்துப்போட்டது  நீரோட்டம்
ஊரைக் காவு கொண்ட
வெள்ளத்தில் தொலைந்து போனவர்கள் …
எண்ணற்ற  சடலங்களின்  அணிவகுப்பில்
என்  பெயரும்  இருந்தது .

chandramanoharan.n@gmail.com