இலண்டனில் ‘இமைப்பொழுது’

இலண்டனில் 'இமைப்பொழுது'

எத்தகைய குளிர் என்பதைக் கூடச் சிந்திக்காமல் நவம்பர் 11 ஆம் திகதி சனிக்கிழமையன்று கூடிய கூட்டம்  லண்டன் ஈலிங் அம்மன் கோவில் அவையை நிறைத்திருந்தது. காரணம் திருமதி மாதவி சிவலீலன்  அவர்களின் `இமைப்பொழுது` கவிதைநூல் வெளியீடாகும். யாழ் பல்கலைக்கழக முதுமானிப் பட்டதாரியான திருமதி மாதவி சிவலீலன், தற்போது லண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் உப அதிபராகவும்  வெம்பிளி தொழில்நுட்பப் பாடசாலையின் போதனாசிரியாராகவும் இலக்கிய விமர்சகராகவும் லண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைத்தலைவராகவும் திகழ்ந்து வருகிறார். இது இவரது இரண்டாவது நூலாகும்.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வை திருமதி இந்திராவதி சுந்தரம்பிள்ளை மற்றும்  திருமதி பாலாம்பிகை  இராசநாயகம், திருமதி கௌசல்யா சத்தியலிங்கம் ஆகியோர் மங்கல விளக்கு ஏற்றிவைக்க, லண்டன் தமிழ் நிலைய ஆசிரியை திருமதி ஜெயந்தி சுரேஷ் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, மண்ணுக்காக தம்முயிர் ஈந்த மறவர்களிற்கும் மக்களுக்குமாக மௌன அஞ்சலியுடன் அன்றைய நிகழ்வு ஆரம்பமானது. கவிஞர் சு. திருப்பரங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார்.  அன்றைய நிகழ்வானது இரண்டு சிறப்பம்சங்களைக் கொண்டது. காலஞ்சென்ற அமரர் கலாநிதி காரை  செ. சுந்தரம்பிள்ளையின் நினைவேந்தலையும் அவரது இளைய மகளான திருமதி மாதவி சிவலீலனின் கவிதை வெளியீட்டையும் கொண்ட அந்நிகழ்வை, முன்னைய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு மு நித்தியானந்தன் தலைமையேற்று முன்னின்று நடாத்திச் செல்ல இனிதே நகர்ந்தது பொழுது.

தலைமையுரையை மூத்த இலக்கிய ஆய்வாளர் திரு மு நித்தியானந்தன் ஆற்றும் போது தனக்கும் காலஞ்சென்ற கலாநிதி கவிஞர் காரை செ சுந்தரம்பிள்ளைக்குமான தொடர்பையும் மாதவியின் நூலை வெளியிடுவது குறித்த மகிழ்வையும் ஆழமாக முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆசியுரை வழங்கிய லண்டன் தமிழ் நிலைய ஓய்வுபெற்ற அதிபர் கலாநிதி  இ நித்தியானந்தன் தமிழ்ப்பாடசாலையில் மாதவியின் சேவை பற்றித் தன் புளகாங்கிதத்தைத் தெரிவித்தார். லண்டன் தமிழ்நிலைய அதிபர் Dr அனந்தசயனன் மாதவிக்காக ஒரு கவிதை புனைந்துவந்து வாசித்ததோடு, மாதவி இளைய சமுதாயத்து மாணவர்களை ஆசிரியராக்கும் தன் முயற்சிக்கு மிகுந்த ஆர்வத்துடன் கைகொடுப்பவராக இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு  வாழ்த்துரையை வழங்கினார்.

இலண்டனில் 'இமைப்பொழுது'

அடுத்து வாழ்த்துரையை ஈலிங் அம்மன் கோவில் கனகதுர்க்கை அம்மனின் அறங்காவல் தலைவர், திரு தா யோகநாதன் வழங்கினார். அதைத்தொடர்ந்து ஆரம்பமான முதலமர்வான காரை செ சுந்தரம்பிள்ளை நினைவேந்தல் பேருரையாற்றிய நூலகவியலாளர் திரு ந செல்வராஜா காரை செ சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்ச்சேவைகள் குறித்தும், ஆய்வுகள் பற்றியும், அவரது கவிதைகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். வெளியீட்டுரையை வழங்கிய எழுத்தாளர் விமல் குழந்தைவேல் தனக்கும் மாதவிக்கும் உள்ள இலக்கியம் சம்பந்தமான தொடர்பு பற்றியும் தனது பல நூல்களுக்கு மாதவி விமர்சனம் செய்துள்ளமை பற்றியும் குறிப்பிட்டார்.

வெளியீட்டுரையைத் தொடர்ந்து முதற்பிரதியை திருமதி இந்திராவதி சுந்தரம்பிள்ளை வழங்க திரு பத்மாநாப ஐயா பெற்றுச் சிறப்பித்தார். சிறப்புப் பிரதியை திருமதி வாஷினி ரட்ணதீபன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பலரும் பிரதிகளை அன்புடன் பெற்றுக் கொண்டு அடுத்த நிகழ்வான ஆய்வுரையில் ஆழ்ந்து போனது அவை. ஆதவன் தொலைக்காட்சியில் பணிப்பாளர்களில் ஒருவரான எஸ் கே குணா, தன் ஆய்வுரையில் மாதவியை தனக்கு ஊரில் இருக்கும் காலம் முதல் அறிமுகம் உண்டெனவும் ஏற்கெனவே இவரது ஆக்கங்கள் பலவும் வெளிவந்திருக்க வேண்டுமென்ற ஆதங்கத்தைத் தெரிவித்ததோடு, ஆக்கதாரரின் பல கவிதைகளை அவையினர்க்கு வாசித்தளித்து தனது மனமகிழ்வை வெளிப்படுத்தினார்.

ஊடகவியலாளர் திருமதி ரஜித்தா சாம் தன் ஆய்வுரையில் பலவிதமான விமர்சனங்களை அழகாக எடுத்து வைத்தார். இமைப்பொழுது` நூலில் பெண்களின் அவலத்துக்கான குரலை  எழுத்தாளர் கையாண்டவிதம் பற்றியும் மண்ணின் மணத்தை மனக்கண்முன்னே கொணர்ந்த அழகையும் இன்னும் பலவற்றையும் லாவகமாக எடுத்தியம்பினார். வாழ்த்துரை வழங்கிய லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் தலைவியும் எழுத்தாளரும் கவிஞருமான நிலா `நட்பு` என்ற கவிதை தனக்கே எழுதிய கவிதை போல் தான் உணர்வதாகவும் மாதவியின் இமைப்பொழுதும் சோராதிருக்கும் தன்மை பற்றியும் லண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பில் துணைத்தலைவராக அவர் ஆற்றும் பணிபற்றியும் சுருக்கமாக எடுத்தியம்பினார்.
இலண்டனில் 'இமைப்பொழுது'

தற்போது ஆதவன் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா கவிதை சிலவற்றை வாசித்துக்காண்பித்தாலும் அவையைக்கவரும் விதமாக நகைச்சுவை கலந்த அவரது பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டது. மேலும் மாதவியின் பற்பல ஆக்கங்கள் வெளிவர வேண்டுமெனவும்,  உள்ள ஆற்றலுக்கு அவர் இன்னும் சிறப்பான ஆக்கங்களை இவரால் தரமுடியும் என்பது அவரது கருத்தாக அமைந்தது. இந்நூலானது மகப்பேற்றின் போது உயிரிழந்த தன் தோழி விமலலோஜினிக்காக மாதவி சமர்ப்பணம் செய்திருந்தமை பலரையும் நெகிழ்ச்சியுற வைத்திருந்தது.

ஏற்புரை வழங்கிய விழாவின் கதாநாயகி மாதவி தன் கவிதைகள் குறித்த எண்ணப்பாடுகள் வாசிப்பவரின் தன்மைக்கேற்பவே அமையும் எனப்புன்னகையுடன் கூறிய அதே வேளை தன் இலக்கியப்பயணத்தில் கைகொடுக்கும் தன் கணவர் சிவலீலனின் பங்கையும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தி விழாவிற்காக கரங்கொடுத்த அனைவர்க்கும் தன் நன்றிகளையும் தெரிவித்து நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் பொன்னாடை போர்த்து மலர்க்கூடை வழங்கி அவரை கௌரவித்தனர். அவரது வேம்படி மகளிர் பழைய சக மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பூச்செண்டோடு வாழ்த்தைப்பரிமாற இராப்போசனத்துடன் அன்றைய நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

இலண்டனில் 'இமைப்பொழுது'

nilaaa2001@gmail.com