தொழில்நுட்பம் பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி நாம் பிறந்து வளர்ந்த நாடுகளிலும் அசாதாரண செயல்கள் இடம்பெறுவது கவலை தருகின்ற விடயமாகும். தமது சூழலுக்கேற்ற நடத்தை நியமங்களினின்றும் தவறி ஒருவர் நடந்துகொள்வாரானால் அவரது நடத்தை அசாதாரணமானது என்று நினைக்கத் தோன்றுகின்றது. புலம்பெயர்ந்து வசதிபடைத்த, கல்வி வளங்கள் சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினரிடமும், தமது வாழ்க்கையை வெற்றிகரமாக எடுத்துச் செல்லமுடியாது மனம் சோர்வதை அவதானிக்க முடிகின்றது. மனம் பதட்டமடைந்து மற்றவர்களுடன் தமது உள்ளார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. எமது சமூகத்திடையே இடம்பெறும் இவ்வகையான கவலையான செயல்களை ஆராய்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை எம்மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் லண்டனில் வாழும் கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால் மன அழுத்தம் பற்றிய கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. மன்றத்தின் தலைவி சிவா றூபி, செயலாளர் துர்கா சிவான்தன், பொருளாளர் அனன்னியா ஐங்கரன் ஆகியோரின் முயற்சியில் லண்டன் ஹரோ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
‘மனித உணர்வுகள் என்பது அவன் தோன்றிய காலத்தில் இருந்து மாற்றம் இல்லாதது. காலமும் கலாச்சாரமும்தான் உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் விதத்தை நிர்ணயிக்கின்றன. அதைத் திறம்பட எழுத்தில் கொண்டு வந்தது எழுத்தாளர்களின் தனிச்சிறப்பு. புலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டு கலாச்சாரங்களுக்கிடையில் எமது மக்கள் சிக்கித் தவிப்பதும், இயந்திரமான வாழ்க்கையோட்டத்தில் ஏற்படும் தனிமையும் அவர்களின் மன அழுத்தத்தின் முக்கிய காரணமாகிவிடுகினறன. எதிலும் ஆசையோ, நாட்டமோ இல்லாமல் போய்விடுகிறது. சிலர் அதிகம் தூங்குவதும், சிலர் தூக்கமில்லாது அவதிப்படுவதையும், சிலர் அதிகமாகச் சாப்பிடுவதையும், சிலர் சாப்பாட்டை வெறுப்பதையும், சிலர் சிறு விடயங்களுக்கெல்லாம் அழுவதையும், எளிதாக எரிச்சல், கோபம் கொள்வதையும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளைக் கொண்டுவருவதையும், இந்நோயின் அறிகுறிகளாகப் பார்க்கமுடியும்’ என்று கொழும்பு ராமநாதன் கல்லூரியின் பழைய மாணவியான ஷர்மிளா ஜெகன்மோகன் தனது கருத்துரையில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பேசுகையில்:
‘மனஅழுத்தம் ஏற்பட்டவர்கள் சிலர் அதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கே விளங்காது தான் மன அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறேன் என்பது. முதலில் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின் அதைக் குணமாக்க முற்படவேண்டும். உடல்நோய் போலத்தான் அதுவும் ஒரு நோய். மருத்துவருடன் கலந்தாலோசித்து வேண்டியதைச் செய்வதோடு, சுற்றியிருப்பவர்களின் அன்பும் உதவியும் அர்களுக்குத்தேவை’ என்று ஷர்மிளா தனதுரையில் தெரிவித்திருந்தார்.
லண்டனில் கவுன்சிலராக தொழில் புரியும் நிலா புஸ்பராஜா பேசும்போது ‘லண்டனில் பல தமிழ் குடும்பங்களில் குடும்ப வன்முறைகளின் தாக்கத்தால் பிள்கைள் பல்வேறு விதங்களில் மனவழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். குடும்ப வன்முறை என்னும்போது கணவன் மனைவியர்களுக்கிடையில் தனித்து கைகளினால் அடித்துத் துன்புறுத்துவது மட்டுமன்றி, கெட்ட வார்த்தைகளைப் பேசுவது, பொருட்களை உடைத்தல், துப்புதல், பலமாக சத்தமிட்டு வாக்குவாதப்படுதல் போன்றனவும் அடங்குகின்றன. பல பெற்றோர்கள் பிள்ளைகள் பார்த்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு முன்னிலையில் இவ்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகளோடு சம்பந்தப்பட்டவர்களோடு தான் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கியதையும் குறிப்பிட்ட நிலா புஸ்பராஜா இதன் தாக்கத்தினால் பிறக்கும் பிள்ளைகளுக்கு பேச்சுத்தடங்கல், தாமதமான உளவளர்ச்சி, எதற்கும் பதட்டப்படுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர் வீட்டில் சண்டை பிடிப்பதனால் பாடசாலையில் கற்கும் மாணவர்களோ கல்வியில் கவனம் செலுத்தமுடியாது தீய வழிகளில் மாறுவதையும் பார்க்க முடிகின்றது. சில பிள்ளைகள் இத்தகைய வன்முறைகள் நமது சமூகத்தில் சாதாரணமானவை என்று எண்ணி தாமும் அதனை முன்னெடுக்க முற்படுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் இத்தகைய செயல்களினால் அவர்களின் வாழ்வே பாதிக்கப்படுகின்றது. எனவே இவற்றை முடிந்தவரை தவிர்த்து நல்ல பிரைஜைகளாக வாழவேண்டும். நாம் சந்தோஷமான சூழலை ஏற்படுத்தி கலந்துரையாட வேண்டும்’ என்றும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
முதற் தடவையாக இக்கல்லூரி முன்னெடுத்த இம்முயற்சிக்கு ஹரோ கவுன்சிலர்களான லண்டன் பாபா என அன்பாக அழைக்கப்படும் சுரேஷ் கிருஷ்ணா அவர்களும், சசிகலா சுரேஷ் கிருஷ்ணா, கொழும்பு ராமநாதன் பழைய மாணவிகள், மற்றும் பலரும் வருகை தந்திருந்து ஊக்கம் கொடுத்திருந்தனர். தத்தமது ஆரோக்கியமான கருதுக்களையும் தெரிவித்திருந்தனர். லண்டன் இயந்திர வாழ்வின் வேகத்துள் தமிழ் சமூகத்திடையே விழிப்புணர்வை அளிக்கும் கருத்துக்களோடு கலந்துரையாடிய பொழுதாக அமைந்தமை மிக மகிழ்ச்சியை அளித்தது.
ngiri2704@rogers.com