ஒரு வீட்டினுள் நுழைகிறீர்கள். கழிவறை போல நாற்றம் விரட்ட முனைகிறது. உங்களையறியாது கை மூக்கைப் பொத்துகிறது. ‘ஐயாவிற்கு (அல்லது அம்மாவிற்கு) பாத்ரூம் போவதற்கிடையில் சிந்திவிடுகிறது. கொன்ரோல் இல்லை’ என்கிறார் வீட்டுக்காரர் மிகுந்த சங்கோசத்துடன். அவமானம் மட்டுமல்ல சுகாதரக் கேடும் கூட. இதற்கான தீர்வு சிறுநீர் அகற்றும் குழாய்தான் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தெளிவாகப் புரிந்து, சரியாகப் பயன்படுத்தி மற்றவர் மதிக்கும் வண்ணம் உயர் தொழிலைத் தொடரும் வெற்றியாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆம்! சிறுநீர் அகற்றும் குழாய் இன்று பல முதியவர்களுக்கு இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. அவர்களின் உற்ற துணையாக வாழ்வின் பங்காளியாகி விட்டது.
இரண்டு உதாரணங்கள்.
நான் வேலையாக இருந்தபோது திடீரெனக் கழிவறை நாற்றம் பொறுக்க முடியாதளவு வீச ஆரம்பித்தது. மருத்துமனையின் பின்புறத்தில்தான் கழிவறை. எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பார்கள். இன்று ஏன் இத்தனை நாற்றம் என எண்ணிக் கொண்டிருக்கையில் ‘நிறுத்து உன் சிந்தனையை’ எனச் சொல்வது போல நுழைந்தார் அந்த முதியவர். நாற்றம் அவரது ஆடைகளிலிருந்துதான் அபரித விளைச்சல் கொண்டிருந்தது. அவரால் சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மருந்துகள் கொடுத்தும் முடியவில்லை. உடைகள், படுக்கை, உற்காரும் நாற்காலி யாவும் புனித நீராபிசேகம் பெற்றதால் சிறுநீர் அகற்றும் குழாய் போட வேண்டியதாயிற்று.
மற்றவரும் முதியவர்தான். ‘மூத்திரம் சரியாகப் போகுதில்லை’ என்ற இவர் சொன்ன பிரச்சனையைச் சரியாகப் புரியாத சுதேச மருத்துவர் தனது கல்வி சாராத மருந்தைக் கொடுத்த போது பிரச்சனை மோசமாகியது சிறுநீரை அதிகம் உற்பத்தி செய்யும் (Lasix) மருந்து அது. உள்ளே உள்ளதே வெளியேற முடியாதிருக்கையில் மேலும் சிறுநீரை உற்பத்தியாக்கும் மருந்தைக் குடித்ததால் வயிறு முட்டி வேதனை மோசமடைந்தது. எந்நேரமும் சிறுநீர்கழிக்க வேண்டும் போன்ற உணர்வு. ஆனால் சிறுநீர் ஒரு சில சொட்டுகள் தவிர முழுமையாக வெளியேற மறுத்தது.
பரிசோதனைக்காகப் படுக்கையில் போடு முன்னரே அவரது அறிகுறிகளிருந்து அவருக்குள்ளது புரஸ்ரேட் பிரச்சனை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவருக்கும் சிறுநீர் அகற்றும் குழாய் ஒன்றே தீர்வாயிற்று.
இது சிறுநீர்த் துவராம் ஊடாகச் செலுத்தப்படும் ஒரு குழாயாகும். அதன் ஒரு முனை சிறு நீர்ப்பையினுள் செலுத்தப்பட்டு இருக்கும். வெளியே உள்ள முனை ஒரு பிளாஸ்டிக் பையுடன் இணைந்திருக்கும். சலப்பையினுள் உள்ள சிறுநீரை தொடர்ச்சியாக அகற்றி, வெளியிலுள்ள அப் பையினுள் சேர வைக்கிறது. சேரும் சிறுநீரை நிறைந்ததும் அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பையின் மறுமுனையில் உள்ள மூடியைத் திறந்து அகற்ற வேண்டும். குழாயைக் கதீட்டர் (Catheter) என்பார்கள். தொடர்ந்து அணிந்திருப்பதால் உள்ளுறையும் Indwelling Catheter என்பர்.
சிறுநீர் அகற்றும் குழாய் போடுவதற்கான காரணங்கள் அவை இரண்டும்தான்.
• கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறல்
• சிறுநீர் தானாக வெளியேற முடியாமல் தடைப்படுதல்
இவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைதான். அத்தகைய நோயாளிகள் வீட்டிலேயே இருக்க நேர்வதால் அதனைச் சரியான முறையில் கையாள வீட்டில் உள்ளவர்களுக்கு தெளிவு தேவை. நடமாடக் கூடிய நோயாளர்கள் எனில் நோயாளிகளே அக்கறை எடுக்க வேண்டும்.
• குழாய் சரியான முறையில் செற்;பட்டு சிறுநீர் ஒழுங்காக வெனியேறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
• அந்தக் குழாயும் அதனைச் சுற்றியுள்ள சருமமும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் குழாய் ஊடாக கிருமிகள் சிறுநீர்ப்பைக்குள் சென்றுவிடக் கூடிய ஆபத்து உண்டு. அத்துடன் சருமத்தில் அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.
குழாய் பராபரிப்பு
குழாய் எப்பொழும் உங்கள் இடுப்புப் பகுதிக்கு கீழே இருப்பதை உறுதிப்படுத்துங்கள். உயரத்திலிருந்து பதிவான இடத்தை நோக்கி சிறுநீர் இலகுவாக வெளியேறும். குழாயில் மடிப்புகள் சுருக்கங்கள் இல்லாதிருப்பதும் சிறுநீர் சுலபமாக வெளியேறுவதை உறுதி செய்யும். போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியம்.
வெளியேறும் சிறுநீரில் படிவுகள் இருக்கிறதா, இரத்தம் கலந்திருக்கிறதா, அதன் மணம் மற்றும் நிறத்தில் மாற்றம் இருக்கிறதா போன்றவற்றை அவதானிக்க வேண்டும்.
சருமத்தை சுத்தம் செய்தல்
சிறுநீர்க் குழாயை அண்டியுள்ள சருமம் சுத்தமாக இருக்க வேண்டும். அதைச் சுத்தப்படுத்துவதற்கு முதல் உங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் கையிலுள்ள கிருமி அங்கு பரவிவிடும். முதலில் உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். முக்கியமாக விரல் இடுக்கள், நகக் கண்கள் ஆகியவற்றை அக்கறை எடுத்து நன்கு கழுவவேண்டும். நகக்கண் சூடுள்ள நீர் நல்லது.
சுத்தமான துணியை எடுத்து நீரில் நனைத்து அதில் சோப்பை போடுங்கள். குழாய் உங்கள் சிறுநீர்த் துவாரத்திற்குள் புகும் இடத்தை சுற்றிவர அத்துணியால் துடையுங்கள். ஆண்கள் ஆண்குறி நுனியிலிருந்து பின்புறமாகத் துடைக்க வேண்டும். பெண்கள் சலவாயில் பக்கமாக ஆரம்பித்து பிற்புறமாகத் மலவாயிலை நோக்கித் துடைக்க வேண்டும்.
அடுத்து துணியில் உள்ள சோப்பை நிறைய நீரினால் கழுவி சோப்பை அகற்றுங்கள். மீண்டும் புதிதாகச் சோப் இட்டு உங்கள் தொடைகளையும் குண்டிப் பகுதியையும் அதனால் சுத்தப்படுத்துங்கள். மீண்டும் துணியில் உள்ள சோப்பை நன்கு கழுவி அகற்றிய பின் அதனைப் பிழிந்து நீரையும் அகற்றுங்கள். அத்துணியால் ஈரங்களை ஒற்றி எடுங்கள். குழாயைச் சுற்றியுள்ள இடத்திற்கு கிறீம், பவுடர், ஸ்பிரோ போன்றவற்றைப் பாவிப்பது நல்லதல்ல. இவ்வாறு தினமும் ஒரு தடவையாவது செய்ய வேண்டும். தேவை ஏற்படின் திரும்பவும் செய்யலாம்.
குழாயைச் சுத்தம் செய்தல்
சருமத்தைப் பேணுவது போல அல்லது அதைவிட அதிக கவனத்துடன் இதனைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே தினமும் இரண்டு தடவைகளாவது இதனைச் சுத்தம் செய்வது நல்லது. முதலில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
வேறொரு துணியை எடுத்து அதை வெந்நீரில் நனைத்து சோப் போடுங்கள். உங்கள் சிறுநீர்த் துவாரத்தை அண்டிய பகுதியிலிருந்து கீழ் நோக்கி சிறுநீர் அகற்றும் குழாயை இத் துணியால் சுத்தப்படுத்துங்கள். அவசரப்பட்டு வேகமாக குழாயை இழுப்பது போலச் சுத்தம் செய்யலாகாது. உங்கள் சிறுநீர்த் துவாரத்தையோ அல்லது சிறுநீர்ப் பையையோ உறுத்தாதவாறு மென்மையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒருபோதும் கீழிருந்து மேலாக அதாவது சிறுநீர்த் துவாரத்தை நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. மற்றொரு துணியால் குழாயின் மேல் படர்ந்துள்ள ஈரத்தை துடைத்துவிடுவதுடன் இப்பணி நிறைவு பெறும்.
வேறு ஆலோசனைகள்
புதிதாகக் குழாய் போட்டால் அல்லது பழையதை அகற்றிப் புதுக் குழாய் பொருத்தினால் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதை 10 நாட்களுக்காவது தவிருங்கள். சற்றுக் கூடுதலாக நீர் அருந்துவது குழாய் தடையின்றி நன்கு செயற்பட உதவும். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீராவது அருந்துவது நல்லது. குழாய் உங்கள் உறுப்பில் பொருந்தும் இடத்தில் வலி ஏற்பட்டால், அல்லது குழாயிலிருந்து அல்லது உறுப்பிலிருந்து சிறுநீர் சிந்தினால், அல்லது சிறுநீர் சரியான முறையில் குழாயூடாக வெளியேறவில்லை என்றால் மருத்துவரை நாடுவது அவசியம். வெளியேறும் சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தாலும் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். பெரும்பாலும் குழாய் பொருத்திய ஆரம்ப நாட்களில் இது நேரலாம்.
சிறுநீரின் நிறம் மங்கலாதல், படிவுகள் ஏற்படல், சிறுநீர் கடுமையாக மணத்தல் போன்றவை சிறுநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம். குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டாலும் அதே காரணமாயிருக்கலாம். கட்டாயம் மருத்துவ ஆலோசனை அவசியம். இவற்றைக் கவனம் எடுத்தால் சிறுநீர்த் தடை மற்றும் கட்டுப்பாடின்றிக் கழிதல் ஆகியவற்றால் நோயாளி தனக்கும் மற்றவர்களுக்கும் இடைஞ்சலின்றி வாழ முடியும். பிரச்சனைகளைக் கண்டு மனம் சோராமல் அவற்றை உறுதியோடு வெற்றி கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி என்றும் அவர் பக்கமே.
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html