ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர். விடுதலைப் புலிகளின் அமைப்பு உருவான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர்களிலொருவர். இவற்றின் காரணமாக இலங்கைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகியவர். பின்னர் அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வந்த சமயத்திலும் பதிப்புத் துறை, இலக்கிய அமர்வுகளை நடாத்துவதிலும் தன் கவனத்தைத் திருப்பினார். தனது ஆசியான் பதிப்பகம் மூலம் ஈழத்துக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, ‘யாழ்ப்பாண வைபவமாலை’, ‘புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு’, ‘எமர்ஜென்சி 58’ மற்றும் தராகியின் ‘Eluding Peace’ ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களிலொருவராகவும் இவர் கருதப்படுகின்றார்.
இவர் 1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாந்திகதி பாரிசின் புறநகர்ப் பகுதியிலுள்ள இவரது வீட்டில் வைத்து, குடும்பத்தவர்களின் முன்னால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளே இப்படுகொலையினைச் செய்ததாக மாற்று அரசியல் கருத்துள்ளவர்கள் குற்றஞ் சாட்டுகின்றார்கள். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு இதுவரையில் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
சபாலிங்கம் போல் மனித உரிமைப் போராளிகள், விடுதலைப் போராளிகள், இலக்கியவாதிகள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் காணாமல் போயிருக்கின்றார்கள்; கடத்தப்பட்டிருக்கின்றார்கள்; படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக ராஜினி திரணகம, கவிஞர் செல்வி, ‘புதியதோர் உலகம்’ கேசவன், தராகி, சுந்தரம், சந்ததியார், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்… என்று கூறிக்கொண்டே போகலாம்.
இன்று ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு காலகட்டம் முடிவுக்கு வந்து, இன்னுமொரு கோணத்தில் போராட்டம் தொடர்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறானது முழுமையாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளும் பக்கச் சார்பின்றி மீளாய்வு செய்யப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களது சரி/ பிழைகளை ஏற்றுக்கொண்டு தங்கள் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதுவரையில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேறுபாடுகளை பகை முரண்களாகவே தொடரும் சாத்தியங்களிருப்பதால், அப்பிளவுகளை இலங்கை அரசுகள், பிராந்திய மற்றும் சர்வதேச அரசியற் சக்திகள் தத்தமது நலன்களுக்காகத் தொடர்ந்தும் பாவிக்க முனைவார்கள்; பாவிப்பார்கள்.
இன்று சிங்கள மக்கள் மத்தியில் பல முற்போக்குச் சக்திகள், ஊடகவியலாளர்கள் தமிழர் பிரச்சினையைப் பற்றி தங்களை சுயபரிசோதனை செய்கிறார்கள். அது வரவேற்கத்தக்க விடயம். அது போலவே ஈழத்தமிழர்களும் தங்களை மீளாய்வு செய்ய வேண்டும். சகல முற்போக்குச் சக்திகளுடனுமிணைந்து ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டமானது புதிய சூழல்களுக்கேற்ப தொடர வேண்டும். தொடர்வதற்கு இத்தகைய இதய சுத்தியுடன் கூடிய மீளாய்வு அவசியமாகும். இவ்விதமான மீளாய்வினொரு பகுதியாக சபாலிங்கம், செல்வி, ராஜினி திரணகம, தராகி போன்ற இதுவரை கால ஈழத்துப் போராட்ட வரலாறானது பலிகொண்ட அனைவரையும் நினைவு கூர வேண்டியதவசியம். ஈழத்துத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தம்மை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளை, அதன் காரணமாக உயிரிழந்த அனைத்துத் தமிழ் மக்களையும் பாரபடசமின்றி நினைவு கூர்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இவ்விதமாகத் தமது மனித உரிமைச் செயற்பாடுகளுக்காகப் பலியான அனைவரையும் நினைவு கூர்வதும். இவர்களெல்லாரும் தாம் நம்பிய கொள்கைகளுக்காக தம்முயிரைத் தந்தவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். அந்த வகையில் சபாலிங்கத்தையும் நினைவு கூர்வோம்.