ஈழத்தின் ஒப்பற்ற கலைஞன் ஏரம்பு சுப்பையா

erambu_suppaiahT.Sivapaluகலைஞர்கள் எமது சமுதாயத்தை இன்புற வைப்பவர்கள் என்னும் அடிப்படையில் பிறக்கும்போதே கலைமகளின் அருளைத் தமதாக்கிக்கொண்டு பிறக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக ஈழத்துக் கலைஞர்களும் திகழ்ந்துள்ளார்கள். சமுதாயத்தில் மிகப் பிரபலமானவர்களாகவும், மக்களால் மிகவம் மதிக்கப்பட்டவர்களாவும் அவர்கள் காணப்பட்டுள்ளனர். கலைரசிகர்களால் நன்கு காமுறப்பட்டவர்கள், பெருமைப் படுத்தப்பட்டவர்கள் நல்ல கலைஞர்கள். இசை, நடனக் கலை மரபில் ஈழத்தில் தலைசிறந்துவிளங்கிய கலைஞர்களுள் நடனக் கலை ஆசான் அமரர் ஏரம்பு சுப்பையா முக்கியமானவர். அவர் விடுத்துக் சென்ற கலை இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றது.

ஈழத்திருநாடு பன்நெடுங்காலமாக கலை இலக்கிய வளர்ச்சியில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பெற்றுவந்துள்ளது. பரதநாட்டியம், கிராமியக்கலைகள், நாட்டுக்கூத்துகள் என்பன தமிழரின் தனித்துவம் பேணப்பட்டுவந்துள்ளமையை வரலாறு எமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொலநறுவையில் உள்ள சிவன் ஆலயத்திலும், கந்தளாயில் இருந்து விஜயராஜ ஈஸ்வரத்திலும் தேவதாசியாட்டம் அல்லது சதுராட்டம் எனப்படும் நாட்டிய வகைகள் இறை பக்தர்கள் அல்லது தாசர்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பதனை ஈழத்திற்கு வருகை தந்திருந்த மொறோக்கோ நாட்டுப் பயணியாகிய இபன்பட்டுட்டா 1244ல் குறிப்பிட்ட  வரலாற்றுக்குறிப்பு, மற்றும் இங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் அறியமுடிகின்றது. இபன்பட்டுட்டாவின் குறிப்பில் 500க்கு மேற்பட்ட தேவரடியார்கள் இருந்துள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள இலக்கியங்களும் நடன, கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிட்டுள்ளன.

ஐரோப்பியர்களின் வருகையின்பின்னர் குறிப்பாக போர்த்துக்கீசர்காலத்தில் இந்து ஆலயங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில்களில் இடம்பெற்று ஆலயங்களால் வளர்க்கப்பட்டுவந்து கலைகள் கவனிப்பாரற்று அழிந்தொழிந்துபோகும் நிலை ஏற்பட்டது. புpன்னர் வந்த ஒல்லாந்தர் மற்றும் ஆங்கில அரசுகளின் காலத்தில் ஓரளவு மத சுதந்திரம் காணப்பட்டமையினால் ஆலங்கள் புத்துயிர் பெறத்தொடங்கின. இதனால் சதுராட்டம் எனப்படும் நடனங்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியது எனினும் நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து கலைஞர்களை தருவிக்கவேண்டிய நிலைப்பாடு காணப்பட்டது.

இந்தியாவிலும் எமது பாரம்பரியக் கலைகளை அழியவிடாது பாதுகாக்கவேண்டும் என்னும் உத்வேகம் முளைவிடத்தொடங்கிய காலத்தில் பரத கலைமாமணி ருக்மணிதேவி அருண்டேல், திரு. கிருஷ்ண ஐயர் போன்றோர் பரதக்கலையை உயிர்ப்பிக்கப் பிரயத்தனங்கள் செய்தனர். இதன்விளைவாக அண்ணாமலைச் செட்டியார் போன்றோர் சதுராட்டம் என்பதனை மாற்றியமைத்து “பரத நாட்டியம்” என்னும் பெயர் இடப்பட்டது. ஆங்கில ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளப்படாமலும் வேண்டுமென்றே இழித்துரைக்கப்பட்டு வந்ததுமான நடனக் கலை புத்தியிர் பெற்றகாலத்தில்தான் திரு. ஏரம்பு சுப்பiயா அவர்கள் நடனத்தைக் கற்றுக்கொள்ள அடியெடுத்துவைத்தார். தந்தையின் வழி நாட்டுக்கூத்துக்கலையில் ஈடுபட்டு  பெண்வேடம் தரித்து நடித்துவந்த இவரிடம் இயல்பாக கலைத்திறன் மிளிர்வதனை கலைப்புலவர் க. நவரத்தினம், மகேஸ்வரி அம்மாவும் நன்கு அவதானித்து அவரை ஊக்குவித்துவந்தனர். அவரிடம் குடிகொண்டுள்ள திறமையினைக் கண்ணுற்ற பெற்றோர் அவரை தமிழகத்திற்கு அனுப்பி  நடனக் கலையைக் கற்றுக்கொள்ள அனுமதியளித்தனர். 1940இல் தமிழகம்சென்ற அவர் காரைக்குடி இராமகான சபாவிலே ஒரு நடிகராகப் பயிற்சிபெற்றார். திரு. மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமும் பின்னர் சென்னைக்குச் சென்று அங்கு கலாநிதி கோபிநாத்தின் நடன நிகேதனில் கேரளத்திற்குரிய பாரம்பரிய நடனமாகிய கதகளியையும் கிராமிய நடனத்தையும் கற்றார். இதனால் தமிழ்த் திரையுலகில் ஜெமினி படத்தயாரிப்பு நிறுவனத்தின் ‘சந்திரலேகா’, ‘சக்கரதாரி” போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இக்காலத்தில் ஸ்டண்ட் சோமுவிடம் வாட்பயிற்சியினையும் அவர் பெற்றுக்கொண்டார். பல்திறன் மிக்கவராக மிளிர்ந்த அவர் தான் கற்ற கலையை மாணாக்கருக்கு மிக நேர்த்தியாகக் கற்பிக்கும் திறனையும் ஆர்வத்தையும் கொண்டிருந்தார். ஈழத்தின் வடபாலமைந்த இசைஞான பூமி என வர்ணிக்கப்படும் இணுவில் பதியில் பாரம்பரிய இசைக்குடும்பத்தில் 13.02.1922இல் பிறந்தவர் கதிர்காமார் ஏரம்பு சுப்பiயா அவர்கள்.

கலை
 திருமதி சாந்தினி சிவநேசன் யாழ்ப்பாணத்தில் நடனக்கலை ஆர்வலர் வி.ஆர். இராசநாயகம் அவர்கள் 1948ல் ஒரு நடனக்கல்லூரியை ஆரம்பித்தார். அதில் சுப்பையா அவர்கள் சிலகாலம் கலைப்பணியாற்றினார். இதன்  காரணமாக வட இலங்கை  சங்கீத சபை இவருடைய சிறந்த ஆற்றலையும், கலைப்பணியையும் பாராட்டிச் சான்றிதழை வழங்கிக் கௌரவித்தது. மீண்டும் இந்தியா சென்று கலை நுட்பங்களைக் கற்றுத்தேறி மீண்ட அவர் கொக்குவில் கந்தையா சின்னப்பிள்ளை ஆகியோரின் மகள் பூரணத்தை திருமணம் செய்து கொக்குவிலில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.

அயராத உழைப்பும் கலைக்காகவே வாழ்ந்து வந்த இவருக்கு ஈழத்துப் பிரபல கலை அபிமானிகள் ஆதரவுக் கரம் நீட்டினர். ஏன். புரம், கலையரசு சொர்ணலிங்கம், திருவாளர்கள். ஏ.பி. நடராஜா, டபிள்யு. என். குமாரசுவாமி, என். தம்பிரத்தினம், கலைப்புலவர் நவரத்தினம் திருமதி மகேஸ்வரிதேவி நவரத்தினம் என்போரைக் குறிப்பிடலாம்.  முதன் முதலில் அரசாங்கப் பாடசாலையின் கலை ஆசானாக நியமனம் பெற்றவர் ஏரம்பு சுப்பபையா என்றால் அவரின் கலை பிரபலமடைந்தமையே காரணமாககும். ‘கலாபவனம்’ எனப்பெயரிய நடன நிறுவனத்தை ஆரம்பித்து நடனக்கலையை பிரபலமடையச்செய்ததோடு பரதக்கலைபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஏரம்பு சுப்பையா அவர்கள். முதன்முதல் பரதக்கலை ஆசிரிய நியமனத்தை இலங்கையில் பெற்றுக்கொண்டவரும் அவரே. அவரது ஆற்றலையும் வித்துவத்தையும் பாராட்டி அவருக்கு “கலைச்செல்வன்” என்னும் பட்டத்தையும் “அபிநய அரசகேசரி” என்னும் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்றால் அவரிடம் குடிகொண்டிருந்த கலைத்திறன் எத்தகையது என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தனக்குப்பின்னர் தனது கலைவாரிசாகத் தனது மூத்தபுதல்வி சாந்தினி சிவநேசனை இந்தியாவிற்கு அனுப்பி அடையார் லஷ்மண ஐயரிடம் பரதக்கலையையும், கலாநிதி கோபிநாத்திடம் கதகளியையும் பயிற்றுவித்து அரங்கேற்றமும் காணவைத்தார். சாந்தினி இன்று ஆசிரிய கலாசாலையில் நடன விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். ஏனைய இரு புதல்விகளான நந்தினி கிரித்திகாயினி ஜெகதீஸ்வரன்,  குமுதினி ஸ்ரீகாந்தன் ஆகியோர் சாந்தினியால் நடனம் கற்பிக்கப்பட்டவர்கள் பின்னர் அடையார் லஷ்மண ஐயரிடமும் பயின்றவர்கள். தந்தை வழியில் கலையை வளர்க்கும் பணியில் கனடிய மண்ணில் தன்னடக்கத்தோடு செயற்பட்டுவரும் நடன ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுதந்திரத்தை முன்னிட்டு வருகைதந்திருந்த எலிசபெத் மகாராணியாரினதும் அன்றை தேசாதிபதியாக இருந்த கொத்தலாவலையின் முன்னிலையிலும் கலைநிகழ்ச்சியைச் செய்துகாட்டி பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்ட ஒரு உன்னத கலைஞராக அவர் விளங்கியவர். நடன ஆசிரியராக அரசாங்கப்பாடசாலையில் நியமனம் பெற்ற சுப்பையா அவர்கள் முதன்முதலில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரிய பணியை ஆரம்பித்தார். பின்னர் இராமநாதன் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் நடன ஆசிரியராகப் பணியாற்றி பல்வேறு இளங்கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இவரிடம் நடனத்தைப் பயின்றுகொண்டு மாணவர்கள் நடன ஆசிரியர்களாக அரசாங்கப்பாடசாலைகளில் நியமனம் பெற்றுக்கொண்டனர். இராமநாதன் கல்லூரியில் இராமாயண நாட்டிய நாடகத்தை மேடையெற்றுவதற்கான பணியின் போது மரணதேவதை அவரை அழைத்துவிட்டாள். எதிர்பாராத அவரது இழப்பு ஏரம்பு சுப்பையாவின் குடும்பத்தை நிலைகுலைய வைத்திருந்தது. மூன்று பெண்பிள்ளைகளில் சாந்தினியைவிட மற்றையவர்கள் இருவருமே குழந்தைப்பருவத்தில் இருந்தபோது தந்தையின் இழப்பு அவர்களை மிகவும் பாதித்திருந்தது. அதற்குமேலாக ஏரம்பு சுப்பையா அவர்களை நம்பியிருந்த கலையுலகிற்கு ஒரு பேரிடியாகவே அவரது மறைவு ஈடுசெய்யமுடியாததாக அமைந்துவிட்டது. இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டுசென்று மேடையேற்றிப் புகழ்பரப்பி வாழந்த ஒரு உன்னத கலைஞனின் இழப்பை முழு இலங்கையுமே நினைவுகூர்ந்து மௌனித்துக்கொண்டது.

கொக்குவிலில் அமைந்துள்ள கலாபவனம் 1956ல் ஆரம்பிக்கப்பட்டபோது கலையரசு கே.சொர்ணலிங்கம், தி.சம்பந்தன் போன்ற நண்பர்களின் உதவியும் ஏ.ஜி.ஐயாக்கண்ணு தேசிகர், த. ராஜலிங்கம், ஏ.எஸ். இராமநாதன், எஸ். சோமஸ்கந்தசர்மா, பி.எஸ். ஆறுமகம்பிள்ளை, ஆர் விஸ்வநாத ஐயர் முதலிய பிரபல கலைஞர்கள் பங்குபற்றினர். நுடனக் கலையின் சிறந்த ஒரு மையமாகவே இது மிளிர்ந்தது. பாடசாலை நேரங்கள் தவிர்ந்த நேரங்களி; அவரது பணி “கலாபவனத்தோடு” ஒன்றித்திருந்தது. நடனக் கலையை வளர்ப்பதற்காக அல்லும்பகலும் பாடுபட்டு உழைத்துவந்தார். அவரின் மறைவுக்குப்பினர் அவரின் புதல்வி திருமதி சாந்தினி சிவநேசன் அப்பணியைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் பயிற்றுவித்து மேற்கொண்ட நிகழ்ச்சிகளில் இவரது மாணவிகள் முதலிடத்தைத் தட்டிக்கொண்டு பரிசில்களை வாங்கி பெருமையைக் குவித்துவந்தனர். 1956ல் கொழும்பில் நடந்த நிகழ்ச்சியைப் பார்த்த உணவு அமைச்சின் செயலாளராகவிருந்த திரு.கே.ஆழ்வாப்பிள்ளை இவருக்கு ஒரு தங்கப்பதக்கத்தை வழங்கிக்கௌரவித்தார். 1958ல் யுனஸ்கோ நடத்திய கிராமிய நடனப் போட்டியில் கனகரத்தினம் மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடமட் பெற்றனர். 1959ல் டெல்கியில் இடம்பெற்ற விவசாய பொருட்காட்சி விழாவில் ஆந்திர கிராமிய நடனக்குழுவினருடன் நடனமாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரால் வடிவமைக்கப்பட்டு மேடையேற்றிய நிகழ்ச்சிகள் அநேகம் அவற்றுள் சதி, அல்யா, சுகன்யா, பாமா விஜயம், ஊர்வசி, குறிஞ்சிக்குமரன், தம்பியர் மூவர், திருவெம்பாவை, பஸ்மாசரமோகினி, காணிநிலம், காம தகனம், யேசுபிறந்தது, சூடாமணி, போன்றன குறிப்பிடத்க்க நாட்டிய நிகழ்ச்சிகளாக மக்கள் மத்தியல் பிரபலமடைந்;திருந்தன. நடனம், நாட்டுக்கூத்து என்பனவற்றில் கைதேர்ந்திருந்த அவர் கண்டிப்புமிக்க ஒரு நடன ஆசானாகத் திகழ்ந்ததோடு சமுதாயத்தில் கீழ்நிலையில் வைத்துக்கணிக்கப்பட்ட நடனத்தை உயர்நிலைக்குக் கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமை காரணமாக இலங்கையின் பிரபல பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினபதி முதலியன செய்திகளைப் பிரசுரித்ததோடு இவரது நேர்முக உரையாடல்களையுமம் கட்டுரைகளுக்கும் முக்கியம் கொடுத்துவந்துள்ளன. கலைத்துறையில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்திருந்த நடன ஆசான் ஏரம்பு சுப்பையா அவர்களின் பணி கலையுலகம் உள்ளளவும் நினைவிற்கொள்ளத்தக்கது.  

avan.siva55@gmail.com