256-பக்கங்களுடன் 2010 ஆகத்தில் வெளி வந்த இந்நூல், இதன் ஆசிரியை நிலா எனும் பரமலிங்கம் உதயகுமாரியால் ஒக்தோபர் 2012ல் எனக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன் நூலின் பின்னணியையும் நூலாசிரியையின் 30-சொச்சம் வருட கால உடம்பியல் இயலாமை, அவரின் பிரச்சனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் முதலியவற்றையும் முதலில் உற்று நோக்கிப் படித்தபின் அதன் உள்ளுடனை அங்கும் இங்குமாகத் தட்டிப் பார்த்துச் சுவைத்தேன். இப்பானையிலுள்ள பற்பல சோறுகளைப் பதம்பார்த்து ரசித்தபின் கீழ்வரும் கருத்துகளை எனக்கு மனமார்த்தமாக எழுந்து வந்த முறையில் பதிக்கிறேன். உண்மையில் ‘நிலாவின் இந்திய வைத்திய உலா’ என்றே தலையங்கம் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டிய நூல். ஏனெனில் அந்த அம்சமே இந்த நூலை நான் முதலில் படிக்க உந்திச் சென்றது.
இந்தியாவைப் பற்றியும் அதன் பூகோள விபரங்கள், இனப் பரவல், வரலாறு, கலாசாரம், பொருளாதாரம் முதலியவற்றை நான் ஓரளவு முன்னர் அறிவேன். மேலும், மற்றும் பலரின் உலாக் கட்டுரைகளையும் நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்லாண்டுகளாகப் படித்துப் பல விடயங்கள் மறைந்து போகாமல் என் மனதில் இன்றும் இருக்கின்றன. எனவே, நிலா எனும் புதுமைப் பெண்ணின் நூதனமான உலாவைப்பற்றிப் படிக்கவே என் ஆர்வம்பிறந்து, பலமணிகளாக நிலைத்ததே உண்மை. ஆனால் ‘இந்திய உலா, கடைசியில் தென்னிந்திய, தமிழ்நாட்டு உலாவாகப் பரிணமித்தது ஓர் அளவுக்கு எனக்குச் சிறு ஏமாற்றத்தைத் தந்ததும் உண்மை. ஆனால் இந்நூல் அழகான தமிழில், ஓர் தொடர்கதையைப் போல, மனதுக்கும் ஆத்மாவுக்கும் உருசியான முறையில் எழுதப்பட்டு, வடிவாக அச்சில் நிர்மாணிக்கப் பட்டு, எழுத்தச்சுப் பிழைகள் கண்ணில் புகுந்து என்வாசிப்பின் வேகத்தைக் குறைக்காதுவிட்டதும், அவை மேற்கூறிய குறைகளை மேவச் செய்ததும், இவைஎல்லாம் நான் மறைக்க முடியாத உண்மைகளே.
இந்நூல் 2003இலும் 2009இலும் முறையே மூன்றும் ஒன்பதும் மாதங்கள்போன்ற கால அளவுகளில் நடாத்தப்பட்ட உலாக்களின் வரலாற்று வர்ணனைகளே. ஆனால் வாசித்துக் கொண்டு செல்லும் போது எந்தச் சம்பவம் எந்த உலாப் பகுதியில் நடந்தது என்பதில் ஓரளவு குழப்பம் என் மனதில் எழுந்ததை முதலில் கவனித்தேன். அதன் பின் 150வது பக்கத்தில் ‘இதன்முன்னர் 2003, இனிமேல் 2009’ போல எழுதியிருந்ததையும் கண்டேன். தொடர்ந்து, ஆடு புல்மேய்வதைப் போலப் படிக்கப்படிக்க, ‘அதனால் என்ன? எது எப்போ நடந்தாலும் இவை எம் ஒரே நிலாவுக்கு நடந்தவைதானே? இவர் சந்தித்தோர் எல்லாரும் இவரின் கணினி நண்பர்கள் தானே? நான் சென்று அவர்களைச் சந்திக்கப் போகிறேனா? அவர்கள் இன்று எங்கிருந்து, என்ன செய்துகொண்டு என்ன வயதானால் என்ன?’ எனும் எண்ணங்கள் மேலோங்க, ஆசிரியை நிலா வர்ணித்துள்ள சம்பவங்களை, மனிதனின் பொதுவாழ்க்கையாயும் இந்திய உபகண்டத்தின் தென்பிரதேசத்தின் நடத்தை முறைகள் பழக்க வழக்கங்கள், தொடர்புமுறைகள், உதவி தேவைப்படுவோருக்கு மனமுவந்து தம் அசௌகரியங்களையும் உழைப்புப் பொறுப்புகளையும் மறந்துதுறந்து தம்ஒரேமொழியால் இனத்த அவருக்கு இயலுமான மட்டும் உதவவேண்டும் எனும் மிக உயர்ந்த மனிதேயத் தமிழ்ப்பண்பு முதலியவற்றையும் நான்விரும்பியும் சிலசந்தர்ப்பங்களில் கண்ணீர் கசிந்து முகைக்கவும், பூரணமான ஆனந்தத்துடன் அனுபவிக்கத் தொடங்கினேன். மகிழ்ந்தேன்.
இது நிலாவின் தினக் குறிப்பேடுகளில் இருந்து ஞாபகத்தை முடுக்கி எழுதிய நூல். இணையத்தள நண்பர்களுடன் அவர் நடாத்திய ஒரு நவீனமான தொடர்பு வரலாற்றை அன்பும்நன்றியும் நிழற்படங்களுமுடன் சித்தரிக்கும்; பல குட்டிக்கதைகளைக் கொண்டது.
முடிவில் இந்நூலில் உள்ள மூன்று கவிதைகளும் என்கண்களின்முன் முதல்நிமிடமே தோன்றி வசீகரித்து, ‘நிலாமுற்ற’ இணையத்தின் பிரியா, நடுநிலா இருவரும் உலகத்தரக் கவிஞர்களெனக் காட்டின. அவ்வினிய நினைவுடன் என்குறிப்பை முடிக்கிறேன். நன்றி.
அனுப்பியவர்: nilaaa2001@gmail.com