– சுயவசியம் பற்றி அ.ந.க.வின் இந்நூலைப் படிப்பதற்கு முன்னர் எனக்குத் தவறானதொரு எண்ணமிருந்தது. அது தவறானது. தவறான செயல்களுக்குப் பயன்படுவது. இவ்விதமான தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த எனக்கு அ.ந.க.வின் சுயவசியம் பற்றிய இந்த அத்தியாயம் சுயவசியம் என்றால் என்ன? அது பற்றிய உளவியல் அறிஞரும் , மருத்துவருமான எமில் கூ அவர்களின் கருத்துகள் எவை போன்ற விடங்களையெல்லாம் மிகவும் தர்க்கரீதியாக அறியத்தந்த அத்தியாயம் இந்த அத்தியாயம். இந்த அத்தியாயத்தைப்படித்ததுமே எனக்கு முதன் முதலில் சுயவசியம் என்னும் இத்தத்துவத்தை எவ்விதம் மானுடராகிய நாம் எம் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயனுள்ள வகையில் பாவிக்க முடியும் ? என்னும் விளக்கம் ஏற்ப்ட்டது. எவ்விதம் விளம்பரதாரர்கள், உணர்ச்சி வெறியினைத்தூண்டு சுய இலாபம் அடையும் அரசியல்வாதிகள், மத போதர்கள் மற்றும் முனிவர்கள் எல்லாரும் பாவிக்கின்றார்கள் என்பது பற்றிய அறிவு பூர்வமான புரிதல் ஏற்பட்டது. மானுடர் ஒருவர் எவ்விதம் சுயவசியம் என்னும் இக்கோட்பாட்டினை மிகவும் இலகுவாகக் காதல், கல்வி போன்ற விடயங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த முடியுமென்றெல்லாம் பற்றிய அறிவினை இந்த அத்தியாயம் புரிய வைத்தது.
இவ்விதமாக மிகவும் ஆரோக்கியமான சுயவசியமென்னும் இக்கோட்பாட்டினை எவ்விதம் பாவிக்கலாம்? அதற்குரிய விதிகளெவை? போன்ற விடயங்களையெல்லாம் மிகவும் எளிய, துள்ளு தமிழ் நடையில் அ.ந.க விபரித்திருக்கின்றார் அ.ந,க. இத்தத்துவத்தை அ.ந.க விளங்கப்படுத்தும் மொழி நடையே வாசிக்கும்போது ஒருவருக்கு இன்பத்தைத் தந்து விடுகின்றது. அவர் கூறுவதை இலகுவாக, தர்க்கரீதியாகப் புரிய வைத்து விடுகின்றது. தமிழில் மிகவும் எளிமையுடன் கூடிய ஆழத்துடன் சுயவசியம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரையாக அ.ந.க.வின் சுய வசியம் பற்றிய இக்கட்டுரையினைக் கூறுவதில் எனக்குத் தயக்கமேதுமில்லை. வாசித்துப் பயனடையுங்கள் நண்பர்களே! – வ.ந.கிரிதரன் –
சுயவசியம் செய்வதெப்படி?
நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும்
முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே?
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எமில் கூ வகுத்துத் தந்த மந்திரம்தான் மேற்கண்ட வசனம். இந்த வசனம் சோர்வைப் போக்கிச் சுறுசுறுப்பை அளிக்கும். நம்பிக்கையின்மையை ஒழித்துத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். பயத்தை ஒழித்து வீரத்தைத் தரும். மனக் குழப்பத்துக்குப் பதில் மன அமைதியை வளரச் செய்யும். தோல்விக்குப் பதில் வெற்றியையும், வெட்கத்துக்குப் பதில் ஆண்மையையும், வறுமைக்குப் பதில் செல்வத்தையும், நோய்க்குப் பதில் தேகாரோக்கியத்தையும், திறமை இன்மைக்குப் பதில் திறமையையும், அழகின்மைக்குப் பதில் அழகையும் தரும். ஆம், வாழ்க்கையில் ஒரு மனிதன் அடைய விரும்பும் எல்லாவற்றையும் தரவல்ல அதியற்புத மந்திரம் இது என்று சொன்னுல் அது மிகையாகாது. பகவான் புத்தர் “தம்ம பத’த்தில் பின்வருமாறு கூறினர்:-
“நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அந் நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.”
ஆகவே சரியான எண்ணங்கள் நமக்கு நல்ல வாழ்க்கையைத் தரும். பிழையான எண்ணங்கள் அதற்கேற்ற பலன்களையே தரும். “நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே? “என்ற வார்த்தைகளில் நாம் காண்பதென்ன? சுபிட்ச மான எதிர்காலத்தை நோக்கி என்னால் முன்னேற முடியும், முன்னேறிக் கொண்டிருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை அந்த வசனத்தை முற்றிலும் ஊடுருவி நிற்பதை நாம் காண்கிறோம். இதைத் திரும்பத் திரும்பச் சொல்பவன் மனதில் தன்னம்பிக்கை நிறைந்த அந்த எண்ணம் சிலை மேலெழுதிய எழுத்துப்போல் பதித்து விடுகிறது. பின்னர் அந்த எண்ணம் புத்தர் சொல்லியுள்ளதுபோல எம் வாழ்க்கையையே உருவாக்கி விடுகிறது.
சுயவசியம் செய்வதென்பது ஆக்கபூர்வமான கருத்துகளை எமது உள்மனதில் விதைப்பதுதான். இதற்கு நாம் அனுஷ்டிக்கும் முறை பழைய காலத்தில் மந்திரங்களை உச்சாடனம் செய்து மந்திர சக்தி பெற நமது முன்னேர்கள் அனுஷ்டித்த அதே முறையாகும். ஜபம், தவம், என்பனவே அவை, திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்-ஆயிரம் முறை, இரண்டாயிரம் முறை ஒரு மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் ஒரு குறித்த தெய்வத்தின் அருளைப் பெற்று மந்திர சக்திகளைத் தம் வசமாக்கிக் கொள்ள முடியும் என்று அக் காலத்தில் நம்பப்பட்டது. இவ்விதமாக மேற்கொள்ளப்படும் முயற்சிக்கே தவம் என்று பெயர். இவ்வித மந்திரோச்சாடனத்தையே உருவேற்றுதல் என்ற வார்த்தை யாலும் அழைத்தார்கள். ‘ எமில்கூவின் வசிய முறையும் உருவேற்றுதலை அடிப்படையாகக் கொண்டதுதான்.
“நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும்
முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே?”
இதுவே மந்திரம். இதை உச்சாடனம் செய். முழு நம்பிக்கையுடன், உணர்ச்சியோடு, உள்மனதில் அது இறங்கத்தக்க முறையில் உச்சாடனம் செய். அது உன் வாழ்க் கையை மாற்றும். சகல விதத்திலும் படிப்படியாக மலர்ந்து மணம் வீசும் நல்வாழ்வை நீ பெறுவாய் என்கிறார் கூ.
இந்நூலில் சுயவசியம், சுயமந்திரம் என்ற வார்த்தைகளை நான் Auto Suggestion என்ற சொல்லுக்காக இதுவரை உபயோகித்து வந்திருக்கிறேன். ஆயினும் உண்மையில் Suggestion என்ற வார்த்தைக்குச் சொல்லிக் கொடுத்தல், அதுவும் அதிக அழுத்தமின்றிச் சொல்லிக் கொடுத்தல், அதுவும் அதிக அழுத்தமின்றி இலேசான முறையில் சொல்”லிக் கொடுத்தல் என்றுதான் பொருள். குறிப்பாயுணர்த்தி ஏற்கும்படி செய்தல். காரண காரியங்களைத் தர்க்கரீதியாகக் காட்டிக்கொண்டு நிற்காமல் உணர்ச்சிமயமான ஒரு நிலையில், நனவு மனம் தன் சக்தியை ஒரளவு அல்லது முற்றாக இழந்து ஒரு கனவு நிலையில் சஞ்சரிக்கும் நிலையில் “ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்தல் என்பது தான் Suggestion என்ற வார்த்தையின் பொருள். இதை இவ்வாறு இங்கு விபரமாகக் கூறவேண்டியிருப்பதற்குக் காரணம் தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உள்ள காரணம். தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உள்ள சொல் வேற்றுமைகளேயாகும். ஒருமொழியிலுள்ள கருத்தை இன்னேர் மொழியில் எடுத்துக் சொல்ல முயலும்போது சில சமயங்களில் இவ்வித இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. உதாரணமாகத் தமிழில் ஊடல் என்ற வார்த்தை இருக்கிறதல்லவா? இதை ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லச் சரியான வார்த்தைகள் இல்லாததால் Love Quarrel, Temporary Variance என்ற வார்த்தைகளைத் திருக்குறளை மொழி பெயர்த்த ஜி. யு போப் போன்றவர்கள் உபயோகித்திருக்கிருர்கள். Suggestion என்ற ஆங்கில வார்த்தை இத்தகைய ஒரு இடர்ப்பாட்டையே தமிழில் ஏற்படுத்துகிறது. ஒரு சில அறிஞர் கருத்தேற்றம் என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனராயினும், Suggestion என்ற ஆங்கில வார்த்தைக்கு நான் கொடுத்திருக்கும் விளக்கத்திலுள்ள பொருளின் முழுமையில் ஒரு பங்கு தானும் அதில் இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் ஒருவர் உணர்ச்சி வசமாகி மயங்கி இருக்கும். நிலையில் அவர் மனதில் கருத்துகளை ஏற்றுதல் இலகுவான காரியம் என்பது தமிழ் மக்கள் அறிந்திருந்த ஒன்று தான். உதாரணமாக பஞ்சணை மெத்தையில் தன் மனைவி யோடு கொஞ்சிக் குலாவியிருக்கும் கணவன் அன்புக்கும், இன்பத்துக்கும் அடிமையாகிவிட்ட ஒருவன், அவ்வேளையில் அவன் மனம் தேனுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடக்கிறது. சாதுரியமான பெண் இச்சூழ்நிலையை நன்கு உபயோகித்துத் தனக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் அவனை ஏற்றுக் கொள்ளும்படி செய்து விடுகிறாள். இதனைத் தான் “தலையணை மந்திரம்’ என்ற வார்த்தையில் நாம் குறிக்கிறோம். அதாவது படுக்கை அறையில் கணவனின் மயக்க நிலையை உபயோகித்து அவனுக்குப் போதிக்கப்படும். புத்திமதிகள் இவ்வார்த்தையால் குறிக்கப்படுகின்றன.
மந்திரம் என்பது நனவு மனம் தளர்ச்சியடைந்து நனவிலி மனம் முழு மூச்சோடு இயங்கும் நேரத்தில் உச்சாடனம் செய்யப்படும் வசனமாகும். அவ்வித சூழ்நிலையில்தான் அது முழுப் பலனையும் தரும். சுயவசியமும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் பலன் தரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. நமது வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் நமது மனம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. நித்திரை செய்யும் நேரத்தில் நனவு மனம் முற்றாத் தூங்கி விடுகிறது. நித்திரையில் கூடப் பல தடவை:களில் நனவு மனத்தின் விழிப்பு நிலை உயர்வதும் குறைவது மாக இருக்கிறது. இலேசான நித்திரை, பிணம் போன்ற நித்திரை – இரண்டையும் நாம் ஒவ்வொரு இரவும், அனுபவிக்கிறோம். மத்தியான உணவுக்குப் பின் அனேகமானவர்களின் மனம் ஒரு மந்தநிலைக்கு வந்து விடுகிறது. பஸ்ஸில் போகும்போது பத்திரிகை வாசிப்பவர்கள் சிறிது” நேரத்தில் ஒரு மங்கிய நிலைக்கு வந்து விடுகிறர்கள். இப்படிப்பட்ட மயங்கிய நிலைகளில் எத்தனையோ கருத்துகள் நம் மனதில் நம்மை அறியாமலே புகுந்து விடு: கின்றன. இது நாம் பிறந்த நாள் தொட்டே நடந்து வரு. கிறது. வர்த்தகர்கள் தம் பொருட்களை விற்கவும், அரசியல்வாதிகள் எமது ஆதரவைப் பெறவும், மதப் பிரசாரகர்கள் மதத்திற்கு நமது ஆதரவைத் திரட்டவும் இம் மயக்க நிலைகளை நன்கு உபயோகிக்கிறார்கள். நாம் வீதியில் செல்லும் இடங்களில் எல்லாம் ‘சரசா சந்தன சோப்பே உலகில் மிகச் சிறந்தது’ என்று பெரிய எழுத்துக்களில் எழுதி ஒட்டி விடுகிறார்கள். நமது நனவு மனம் நல்ல விழிப்பாயிருக்கும் நேரத்தில் அதை நாம் பார்த்ததும் “சரிதான் எல்லாம் பிரசாரம்!” என்று சொல்லிச் சென்று விடுகிறோம். ஆனால் நான்முன்னே கூறிய மயங்கிய நிலைகளில் உதாரணமாக நாம் துயிலாமலும் பஸ் வண்டியின் ஜன்னலூடாக வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வெழுத்துக்கள் நம்மை அறியாமலே என் மனதில் அப்படியே பதிந்து விடுகின்றன. அதன் பலனக சீக்கிரமே சரசா சந்தன சோப்பை ஒழுங்காக உபயோகிக்கும் பெரிய பட்டாளத்தில் நாமும் ஒரு அங்கத்தினராகி விடுகிறோம். இதை நன்கு அறிந்திருப்பதனால்தான் வர்த்தக ஸ்தாபனங்கள் விளம்பரத்துக்கென்று பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுகிறார்கள்.
விளம்பரம் என்பது நனவிலி மனதில் தந்திரமாகக் கருத்துக்களைத் தூவும் ஒரு கலையேயன்றி வேறல்ல. ஒரு சிலர் விளம்பரத்துக்கும் பிரசாரத்துக்கும் நான் மசிவதில்லை என்று விராப்புப் பேசலாம். ஆனால் அவர்கள் தமது மனதையோ, மனித மனதின் தன்மையையோ அறியாததாலேயே அவ்வாறு பேசுகிறார்கள். ‘சரசா? சந்தன சோப் விளம்பரத்தையே நாம் இனளொரு தடவை பார்ப்போம். அவ்விளம்பரத்தில் ஒரு அரை நிர்வாண மோகினி சந்தன சோப்பைக் கையில் பிடித்துக்கொண்டு முல்லைச் சிரிப்பு உதிர்த்து நிற்கிறாள். அவள் கண்களின் காந்த சக்தியைச் சித்திரக் கலைஞன் சிறப்பாகத் தீட்டி விட்டிருக்கிறான். உண்மையில் எழுத்துகளை விட அவளது படமே எம்மை அதிகம் கவர்கிறது. நாம் மயங்கி விடுகிறோம். நெஞ்சில் ஒருவித போதை எம்மை -அறியாமலே உண்டாகி விடுகிறது. இந்த மயக்க நிலையில் அந்த எழுத்துகள் மெள்ள மெள்ள மனதுள் இறங்குகின்றன. ‘சரசா சந்தன சோப்பே உலகில் மிகச் சிறந்தது’ என்று நம் வாய் முணுமுணுக்கிறது. அவ்வளவுதான், நனவிலி மனம் அதை அப்படியே ஏற்று எழுதி வைத்துக் கொள்கிறது. வீராப்புப் பேசுபவர் உள்ளமும் இவற்றுக்கு விலக்கல்ல. அவர் மனமும் அவ்வாறுதான் செய்கிறது. வீராப்புப் பேசும் அதே நேரத்திலேயே, சரசா சோப்பை உலகில் சிறந்தது என்ற கருத்து அவர் உள்ளத்தில் கருங்கல்லில் செதுக்கிய எழுத்துக்கள்போல் பதிந்து விடுகிறது.
சோப் விளம்பரகாரர்கள் இனக் கவர்ச்சியை உபயோகித்து மயக்க நிலையை உண்டாக்கி அம்மயக்க நிலையில் தம் கருத்துகளை உங்கள் உள்ளத்தில் ஏற்றி அதன் மூலம் தமது காரியத்தைச் சாதிப்பதுபோல, அரசியல்வாதிகள் மொழி உணர்ச்சி, இன உணர்ச்சி, மத உணர்ச்சி பய உணர்ச்சி என்பவைகளை உண்டாக்கித் தமது கருத்துகளை மக்கள் உள்ளத்தில் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் ஏற்றிவிடுகிறார்கள். உதாரணமாக மேடை மீது ஏறி நின்று முழங்கும் அரசியல் வாதி பின் வருமாறு கதறுகிறான், ‘எம்மினம் பாராண்ட இனம்! சாம்ராஜ்யங் கண்ட இனம். நாகரீகம் இன்னதென்று உலகுக்கு உணர்த்திய இனம். ‘இவ்வார்த்தைகளைக் கேட்ட பொது மக்கள் உள்ளத்தில் ஒரு வித எக்களிப்பும் கர்வமும் நிறைகிறது. வாயைப் பிளந்து கொண்டு மேலும் கேட்கிறார்கள். ‘இப்படிப்பட்ட இனம் இன்று கீழ்நிலையுற்று விட்டது.’ எம் இன எதிரிகள் எம்மை நசுக்க முற்பட்டுவிட்டார்கள். சீக்கிரமே நாம் அழிந்து மண்ணுகிவிடுவோம். நாம் இதை, எதிர்க்காவிட்டால் நாசமாகி விடுவது நிச்சயம். அழிவு, அழிவு, அழிவு! அதுதான் நம்மை எதிர் நோக்கி நிற்கிறது. கண்ணிர், வறுமை, நோய், அடிமைத்தனம், சாவு, இது தான் நம்மையும், நம் குழந்தைகளையும் எதிர் நோக்கி நிற்கின்றன.” பிரசங்கி மேலும் பேசிச் செல்கிறான். இதைக் கேட்டதும் கர்வ உணர்ச்சி போய்ப் பய உணர்ச்சி உண்டாகிறது, மனம் உணர்ச்சிப் பெருக்கில் மெய்மறந்த மயக்க நிலையில் ஊசலாடுகிறது. இதுதான் சரியான தருணம் கருத்தேற்றத்தை இப்பொழுதுதான் செய்யவேண்டும்.
‘இந்நிலைக்குக் காரணம் யார்? நமது இனத்தின் துரோகிகளான செல்லத்துரையும் ராமசாமியுமல்லவா? அவர்கள் 1940 ல் நம்மைக் காட்டிக் கொடுத்தார்கள், 1950 ல் மீண்டும் விபீஷண வேலை செய்தார்கள். இன்றும். அதே வேலையைச் செய்கிறார்கள். இனிமேல் நாம் இதைப் பொறுக்க முடியாது. பொறுத்தது போதுமடா! பொங்கி எழடா தமிழா! துரோகக் கும்பலின் நெஞ்சை நொருக்கி அவர்களுக்கு அழிவு சூழுவோம்! நமது எதிரியைச் சின்ன. பின்னமாக்குவோம். கிளம்புங்கள்! இன்றே, இப்பொழுதே, கிளம்புவோம்!” கருத்தேற்றம் பூரணமாகிவிட்டது, சிறிது நேரத்தில் வீதி எல்லாம் கலகம், ஜன்னல்கள் தவிடுபொடி, எங்கும் தீக்குழம்பு!
மதப்பிரசாரகன் என்ன செய்கிறான்? நாம் அடுத்த. ஜன்மத்தைப் பற்றி எண்ணவேண்டாமா? நரகத்தீயிலிருந்து நம்மைக்காப்பாற்றிக் கொள்ளவேண்டாமா? தேவனின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டாமா? இதற்கென்ன வழி? அவன் தாள்களே சரண் என்று வீழ்ந்து கும்பிடுங்கள். அவன் நல்வழி காட்டு வான்! நம்மைக் காப்பாற்றுவான்’ என்று நமது பய உணர்ச்சியைத் தூண்டி, பயத்தால் மயங்கிய மனதில் தன் கருத்துக%ள ஏற்றுகிறான் அவன்.
மேலே கூறிய இந்த உதாரணங்கள் எமது மனதில் கருத்துகளைப் புகுத்துவதற்கு நாம் ஒருவிதமான மயக்க நிலையில் இருக்கவேண்டுமென்பதை நன்கு காட்டுகிறது. நனவிலி மனதில் நல்ல கருத்துகளையோ தீயகருத்துக் களையோ புகுத்துவதற்கு அப்படிப்பட்ட நிலைதான் ஏற்றது. இதனால்தான் அக்காலத்து முனிவர்கள் தமது மந்திரோச்சாடனங்களை கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும், காடுகளிலும், மலைச்சரிவுகளிலும் தனிமையாக இருந்து செய்தார்கள். இயற்கையின் நலன் யாவும் நிறைந்த இச்சூழ்நிலைகளில் மனம் ஒரு மயக்க நிலையை அடைகிறது. ஒருவித இன்ப போதை இதயத்தைச் சூழ்கிறது. உதாரணமாக உங்களில் பலர் தனிமையாகக் கடற்கரையில் வீற்றிருந்து மகிழ்ந்திருப்பீர்கள். கடற்கரையில் நிகழ்வதென்ன? மாலைச் சூரியன் மங்கி இருள் மண்டிவிட்டது. கடல் அலைகள் “செய்ய.” என்று பண்ணிசைத்து ஒன்றின் பின்னொன்றாகக் கரையில் வந்து புரளுகின்றன இவ்வோசை இயற்கைத் தாயின் தாலாட்டுப்போல் உங்கள் காதுகளை நிறைக்கிறது. இதுபோதாதென்று கடற் காற்று உங்கள் சடலத்தை ஒரு இளம் பெண் வருடுவதுபோல் வருடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக உங்கள் முகத் தையும், நெஞ்சையும் அது தழுவிச் செல்லும்போது ஆகா, நீங்கள் அடையும் இன்பம்! கண்ணை மூடிக்கொண்டிருக் கிறீர்கள். மூச்சு நிதானமாகவும், அவசரமின்றியும் வந்துபோய்க் கொண்டிருக்கிறது. உலகமே மறந்து விடுகிறது. கவலைகள் போய்விட்டன. உடலும் உள்ளமும் புதுமை பெற்று வருவதுபோல் ஒரு நினைவு. என்றும் அனுபவியாத தேகாரோக்கியம், மன ஆரோக்கியம் வந்தது போன்ற உணர்வு. இன்பம், இன்பம், உலக மெல்லாம் இன்பம், இதுவே இன்பம் என்ற இன்ப போதை! இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் நனவிலியின் உணர்ச்சி அனுபவந்தான் மேலோங்கி நிற்கிறது. நனவு மனம் தாழ்ந்துபோய் விட்டது. உணர்ச்சிவெள்ளத்தில் நனவுக்கப்பல் அமிழ்ந்துவிட்டது. ஆம் இதுவே தருணம், சுயவசியக் கருத்தேற்றத்திற்கு கடற்கரையில் மட்டுமல்ல, இசைபாடிச் செல்லும் அருவியின் கரையிலும், முகில் படிந்து தென்றல் தவழும் மலை முகட்டின் அமைதியிலும், பறவைகள் பண் மிழற்றும் நிழல் பரந்த காடுகளிலும் ஏற்படும் அனுபவமும் இதுதான். இயற்கையோடு ஒன்றுகின்ற ஒருவித இன்பம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏற்படுகிறது. அற்புதமான போதை. தூங்காமல் தூங்கிய நிலை இப்படிப்பட்ட சூழ்நிலை யொன்றை நாம் உண்டாக்கிக் கொண்டால்தான் சுயவசி யத்தின் முழு நன்மையையும் நாம் பெறலாம்.
எமது நனவிலி ஆராயும் சக்தி கொண்டதல்ல. எந்த ‘விஷயத்தையும் இலகுவில் நம்பிவிடும் தன்மை அதற்குண்டு. உதாரணமாக மத சம்பந்தமான விஷயங்களையும் ஜோதிடம் போன்ற நம்பிக்கைகளையும் எடுத்துக் கொள்வோம். இவை ஆராய்ச்சி ரீதியாக விஞ்ஞான உண்மைகள்போல் நிரூபிக்கப்பட்டவையல்ல. இருந்தும் மக்கள் அவற்றை நம்புகின்றனர். மக்கள் என்றால் படியாத பாமரர்கள் மட்டுமல்ல, மிகப் படித்த மேதைகளும் இவற்றை நம்புகிறார்கள். இவ்விஷயத்தை இங்கு நான் பிரஸ்தாபிப்பது இந்நம்பிக்கைகள் சரியா பிழையா என்பதை நிர்ணயிப்பதற்கல்ல. தகுந்த ஆதாரங்கள் இல்லாதவிடத்தும் சமுதாயம் பன்னிப்பன்னிக் கூறும் விஷயங்களை எப்படி நனவிலி ஏற்றுக்கொண்டு விடுகிறது என்பதை உணர்த்தவே இதை இங்கெடுத்துக்காட்டுகிறேன்.
இது சம்பந்தமாக நான் கேள்வியுற்ற ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணப் பகுதியில் ஒரு கிறிஸ்துவக் கல்லூரியில் ஜோசப் என்பவர் ஒரு மாணவர் விடுதி முகாமையாளராக இருந்து வந்தார். இவர் சிறுவயதில் இந்துக்களிடையே தமது காலத்தை அதிகம் செலவிட்டிருந்தார். இவர் மாணவர் விடுதி முகாமையாளராக இருந்த காலத்தில் சில சமயங்களில் மாலை நேரத்தில் மாணவர்களைக் காற்றுவாங்கக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கடற்கரைக்குப் போகும் வழியில் ஒரு அரசடிப்பிள்ளையார் கோவில். அதைக்கடந்து செல்லும்போது ஜோசப் மாஸ்டர்” யாராவது ஒரு இந்துப் பையனைக் கூப்பிட்டு இந்தா இந்த ஐந்து சதத்தையும் உண்டியலில் போட்டுவிடு *என்று சொல்வார். பையனும் அவ்வாறே செய்வான். இது நீண்டநாளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு சுட்டிப் பையன் ஆசிரியரிடம் என்ன மாஸ்டர். வகுப்பிலே நீங்கள் படிப்பிக்கும்போது பிள்ளையாரைக் கும்பிடுவது பிழை. அப்படி ஒரு தெய்வம் கிடையாது. தெய்வத்துக்கு மிருகமுகம் இருப்பது பொருந்தாத கற்பனை என்றெல்லாம் சொல்லுகிறீர்களே, பின்னர் ஏன் உண்டியலில் காசு போடுகிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டான். ஜோசப் மாஸ்டர் சிறிது நேரம் சிந்தித்துவிட்டுச் சொன்ன பதில் என்ன தெரியுமா? “உண்மைதான். பிள்ளையார் என்று ஒரு தெய்வமே கிடையாதுதான். அப்படித்தான் அறிவு சொல்லுகிறது. ஆனால் ஒரு வேளை அப்படி ஒரு. தெய்வம் இருந்து விட்டால்…?? இவ்வாறு பதிலளித்தார் ஜோசப் மாஸ்டர்.
நனவு மனம் எல்வளவுதான் பகுத்தறிவுக் கண் கொண்டு பார்த்தாலும் அவர் சிறுவயதில் இந்துக்களுடன் பழகியதால் கொண்ட அச்சத்தை அவரது நனவிலி மனம், சற்றும் இழக்கவில்லை. சமுதாயம் பன்னிப் பன்னிச் சொல்லாலும் செயலாலும் உணர்த்திய ஒரு விஷயம் அவரது உள்ளத்தில் உறைப்பாக ஏறி விட்டதே இதற்குக் காரணம்.
பன்னிப் பன்னிப் பக்குவமாய்ச் சொல்லும் எதையும் மனிதன் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவான்.
கருத்தேற்றத்தின் அடிப்படை நியதிகளில் இது ஒன்று. ஒரு விஷயத்தை ஒருவன நம்பவைப்பதற்கு ஆதாரமோ நிரூபணமோ அவசியமில்லை. திரும்பத் திரும்பச் சொன்னால் அதுவே போதும். இன்றைய வர்த்தக விளம்பரங்கள் எல்லாம் இந்த அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. “சரசா சோப்பைவிட உயர்ந்தது வேறில்லை” என்பதை வீதியில் விளம்பரப் பலகையில் காண்கிறோம். பத்திரிகைகளில் பார்க்கிறோம். வானெலி வர்த்தக ஒலிபரப்பில் கேட்கிறோம். சினிமாவில் பார்க்கிறோம்..
எடுத்த எடுப்பில் பார்த்தால் சரச சோப்பைவிட உயர்ந்தது வேறில்லை என்ற விளம்பரம் அவ்வளவு சிறந்த விளம்பரமாகக் கூட எமக்குத் தோன்றது. ஆனால் அது. ‘பன்னிப் பன்னிச் சொன்னல் பொய்யும் மெய்யாகும்” என்ற உண்மையை நாம் அறியாத வரையில் தான்.
இதுவே நாம் கருத்தில் இருத்த வேண்டிய முதல் நியதி. இரண்டாவது நியதி பின்வருமாறு:ட
“மனம் நெகிழ்ந்தும் கனிந்தும் சலனமற்றும் இருக்கும் நேரத்தில் கருத்துக்கள் இலகுவாக மனத்தில் ஏறி விடுகின்றன.”
இதனை ஓரளவு முன்னமே விளக்கி இருக்கிறோம். கடற்கரையிலும், ஆற்றங்கரையிலும், காட்டிலும், மலைச்சாரலிலும் மனம் நெகிழ்ந்து கனிந்து சலனமற்ற ஒரு நிலையை அடைவதனால்தான் பழங்காலத்து முனிவர்கள் அவ்விடங்களைத் தேர்ந்தெடுத்து தமது ஜெப்தபங்களைச் செய்தார்கள். முனிவர்களைப் பற்றிப் பேசும்போது ஜெபதபங்களெல்லாம் துறவிகளுக்கல்லவா வேண்டும், சுவயசியமும் அப்படித்தானா என்று சிலர் ஐயப்பாடடையலாம். உண்மையில் முனிவர்களைப் பற்றியும், ஜெபதபங்களைப்பற்றியும் எம்மிடையே நிலவும் அபிப்பிராயங்கள் இன்று முற்றிலும் தவறானவை. ஏனெனில் உண்மையில் முனிவர்கள் என்பவர்கள் சக்திகள் கைவரப் பெற்ற சூர மனிதர்களே அல்லாமல் துறவிகளல்ல. அவர்களில் பலர் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றவர்கள். சாதாரணமாக கெளதம முனிவர் அகலிகையின் கணவர். உலூப மாமுனிவரின் மகன் ரிஷ்ய சிருங்கர். இவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே மனத்தின் மாபெரும் சக்திகளை விருத்தி செய்து முனீந்திரர் என்று கொண்டாடப் பெற்றார்கள். மேலும் இவ்வித மந்திர சக்திகளை இராவணன், அர்ஜுனன் என்ற கடித்திரிய வீரர்களும் பெற்றிருந்தார்கள் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. இராவணன் தவத்தின் பலனாகப் பெற்ற மந்திர சக்தியால் மலையை அசைத்தானென்றும், அர்ஜுனன் தனது வலிமையால் கிடைத்தற்கரிய பாசுபதாஸ்திரத்தைப் பெற்றானென்றும் நூல்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் துறவிகளல்லர். இராவணன் இலங்கையரசன். அர்ஜுனன் அஸ்தினபுர இளவரசன். ஆகவே ஜெபதபங்கள் மனிதர் எல்லோருக்கும் பொதுவானது. தன் மனத்தின் சக்திகளை விருத்திசெய்து, அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றியை ஈட்ட விரும்பும் சகலர்க்கும் தேவையான சிறந்த பயிற்சிகளே அவை என்பது தெரியவரும்.
தனிமையான சூழ்நிலையில் இயற்கையின் மடியிலே மனம் அமைதியுற்றுக் கனிந்து நெகிழ்ந்துள்ள நேரத்தில் செய்யப்படும் சுயமந்திரம்தான் மிகவும் தீவிர பலனைத் தர வல்லது. .
மூன்றாவது நியதி பின்வருமாறு:
“ஒரு கருத்தை நாம் மனதில் ஏற்றிக் கொள்ள விரும்பினால் அதை அளவுக்கு அதிகம் இடித்துரைக் கக் கூடாது. அநாயாசமான முறையில் இலேசான தொனியில் செய்யும் சுயமந்திரமே இலகுவில் நன. விலியோடு இரண்டறக் கலக்கிறது.”
மனமும் உடலும் முற்றாக அமைதியுற்று ஒருவித பரவச நிலையில் இருக்கும் நேரத்தில் வெண்ணெய்க் கட்டியைக் கத்தி வெட்டிச் செல்வது போல் கருத்துகள் நனவிலி மனதை இலேசாக ஊடுருவிப் புகுந்துவிடுகின்றன. -மனத்தை அழுத்திப் பல்லைக் கடித்து வைராக்கியத்துடன் செய்யப்படும் சுயமந்திரம் சில சமயம் நனவிலியால் வெளியே வீசப்பட்டுவிடுகிறது. இது எமில்கூ போன்ற பரிசோதனையாளரால் அனுபவத்தில் காணப்பட்ட உண்மையாகும். “சங்கல்பத்துக்கும் கனவுணர்ச்சி கலந்த கற்பனைக்கும் நடக்கும் போரில் சங்கல்பம் தோற்கும். கற்பனையே வெல்லும்’ என்ற எமில்கூவின் கருத்தை நாம் மறக்கக் கூடாது. ஆகவே கனவில் பேசுவது போல மென்மையாக எமது சுயமந்திரங்களை நாம் உச்சரிக்க வேண்டும். குழந்தையுடன் பேசுவது போல குழைந்த குரலில் கூற வேண்டும்,
நான்காவது நியதி:-
“நித்திரை நேரத்தில் கருத்தேற்றம் செய்வது இலகுவானது. ஏனெனில் நனவிலி அப்பொழுது முழு மூச்சுடன் முன்னே நிற்க, நனவு மனம் தூங்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் நித்திரை நேரத்தில் சுயவசிய வார்த்தைகளை எம்மால் உச்சரிக்க முடியாது. ஆகவே நித்திரைக்கு முன்னால் படுக்கையில் உடலும் உளமும் தளர்ச்சியடைந்து ஒய்வுற்ற பின்னர் சுய மந்திர வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்கலாம். இவ்வாறு நாம் உச்சாடனம் செய்து கொண்டிருக்கும் போதே துயில் நமது கண்களைத் தழுவி விடும். அவ்வேளையில் நனவு மனத்தில் பயின்று கொண் டிருந்த வார்த்தைகள் அப்படியே நனவிலித் தட்டில் விழுந்துவிடுகின்றன. நனவிலி அவற்றை ஏற்றுக்கொண்டு உயிரோடு உயிராக ஒட்ட வைத்துவிடுகின்றது.”
ஆனால் நித்திரை நேரத்தில் சுவசிய வார்த்தைகளை எம்மால் உச்சரிக்க முடியாது. ஆகவே நித்திரைக்கு முன்னால் படுக்கையில் உடலும் உளமும் தளர்ச்சியடைந்து ஓய்வுற்ற பின்னர் சுய மந்திர வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்கலாம். இவ்வாறு நாம் உச்சாடனம் செய்து கொண்டிருக்கும்போதே துயில் நமது கண்களைத் தழுவி விடும். அவ்வேளையில் நனவு மனத்தில் பயின்று கொண்டிருந்த வார்த்தைகள் அப்படியே நனவிலித் தட்டில் விழுந்து விடுகின்றன. நனவிலி அவற்றை ஏற்றுக்கொண்டு உயிரோடு உயிராக ஒட்ட வைத்து விடுகின்றது
ஐந்தாவது நியதி பின்வருமாறு :-
“ஒரு கருத்து உள் மனதில் அழுத்தமாக ஏறுதற்கு நீண்ட நேரம் அதனை, திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. நம்பிக்கையோடு ஒரு நிமிஷ நேரத்திற்கு ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டால் போதும். அது நனவிலியில் சேர்ந்துவிடும்.”
ஒரே தடவையில் நீண்ட நேரம் உருவேற்றம் செய்ய முயன்றால் மனதில் ஒரு களைப்புத் தட்டும். அக்களைப்பை எதிர்க்க வேண்டுமானால் மனதில் தீவிர சங்கல்பம் ஒன்றை நாம் செய்யவேண்டி ஏற்படும். அவ்வித பிரயாசை தவிர்க்கப்படவேண்டும் என்றும், அது நனவு மனத்தைப் பலப்படுத்தி நனவிலியை பின்னே தள்ளிவிடுமென்றும் அவ்வித சூழ்நிலை சுய மந்திரத்துக்கு ஏற்றதல்ல என்றும் ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். ஆகவே களைப்பேற்படாமல் சிறிது நேரம் சுயமந்திரங்களை உச்சரித்தால் போதும். ஆனால் இதனை நாளொன்றுக்கு இரண்டு தடவையோ பல தடவைகளோ செய்யலாம். ஒவ்வொரு தடவையும் ஒரு நிமிஷ நேரம் செய்தாலே போதுமானது. எனினும் இதில் நாம் மிகக் கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் மனதில் ஒருவித உற்சாகம் தோன்றி பல நிமிஷ நேரம் செய்தாலும் களைப்புத் தோன்றாது. அவ்வித நேரங்களில் வெகு நீண்ட நேரம் செய்தாலும் தவறில்லை. இது அவரவர் அவ்வப்போதுள்ள நிலைகளுக்கு ஏற்பத் தாமே தீர்மானிக்க வேண்டிய விஷயம். என்றாலும் நீண்ட நேரம் தொடர்ந்து செய்தால்தான் பலனுண்டு என்பது போன்ற தவறன அபிப்பிராயங்களை நாம் கொண்டுவிடக் கூடாது என்பது முக்கியம்.
[தொடரும்]