‘இசை, பாடல், கதை, நடிப்பு, மேடை, ஓவியம், ஒப்பனை, மரபு போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தமிழர்களின் பாரம்பரிய கலையாக கூத்துத் திகழ்கின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பருத்தித்துறை மாதனை கிராம மைதானத்தில் விடிய விடிய இடம்பெற்ற நாட்டுக் கூத்துக்களைப் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாய் பதிந்துள்ளது. தச்சுத்தொழில் சார்ந்த சமூகத்தினர் இந்தக் கூத்து மரபை மிகுந்த செழுமையோடும்இ உற்சாகத்தோடும் பருத்தித்துறையில் நிகழ்த்தி வந்தனர். முழுக் கிராமமே ஒன்று திரண்டு இந்தக் கூத்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது கூத்து முழுச் சமூகம் சார்ந்த கலைமரபாகத் திகழ்ந்தது என்பதை காட்டுகிறது’ என்று ஓவியர் கே. கிருஷ்ணராஜா ‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ லண்டனில் ஒழுங்கு செய்திருந்த ‘கூத்து மீளுருவாக்கம்’ பற்றிய கருத்தரங்கில் தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
பருத்தித்துறையின் கலை மரபு : ‘கூத்துக்கள் நிறைவு பெற்றபின் நெல்லண்டை அம்மன் கோவிலில் நடைபெறும் நேர்த்திக்கடனுக்கான கோயில் வேள்வியில் சமய சடங்குகளோடு நிறைவுபெறும் இந்த கூத்து நிகழ்வுகள் பருத்தித்துறையின் கலை மரபிற்கு தனிமுத்திரை பதிப்பதாகும். பருத்தித்துறையிலிருந்து வல்லிபுரக்கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெல்லண்டை அம்மன் கோயில் இந்த சமய கலை மரபின் மையமாகத் திகழ்ந்தது. இந்தக் கூத்துக்களில் கிருஷ்ணன் வேடம் தாங்கி, தனது கம்பீரமான குரலால் மக்களை வசீகரப்படுத்தும் அழகிய தோற்றம்; கொண்ட சின்னமணியின் கூத்து அபிநயங்கள் இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது. அரசாங்க எழுதுவினைஞராக பணியாற்றிய சின்னமணி வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு மிக்க கலைஞராகத் திகழ்ந்தார். மே யூன், யூலை ஆகிய கோடை மாதங்கள் பருத்தித்துறையில் கூத்து நிகழ்வுக்கான விசேட மாதங்களாக அமைந்தன’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
‘கூத்து நிகழ்வுக்கப்பால் நாட்டுக்கூத்திற்கான பாவனைப் பொருட்களை வழங்குதல், சீன்களைத் தயாரித்தல், ஒப்பனைக்கான ஆடைகளைத் தயாரித்தல், கூத்து மாந்தருக்கான ஆபரணங்களை வடிவமைத்தல் போன்றன சார்ந்த நடவடிக்கைகளும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும். இந்த கூத்து நிகழ்விற்கான சகல சாதனங்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற செல்வநாயகம் கடை, சயிக்கிள் கடையாக இருந்தபோதும், கூத்து நிகழ்வின் அச்சாணியாகத் திகழ்ந்தது. இந்தக் கடையில் தாடிவைத்த அழகிய தோற்றம் கொண்ட கனகநாயகம் என்பவர், பழைய றெக்கோட் பாடல்களை போட்டுக்கேட்ட வண்ணம் கூத்து ஆபரணங்களைத் திருத்துவதிலும், பல்வேறுவகைப்பட்ட முடி அலங்காரங்களைச் செப்பனிடுவதிலும், நுண்ணிய ஜரிகைகள் கொண்ட ஒப்பனை ஆடைகளை சீரமைப்பதிலும் மிகுந்த கவனமாக ஈடுபாட்டுடன் செயற்படுவதை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். என் ஓவிய, நாடக ஆர்வத்துக்கான நாற்றங்கால் விதைகள் பருத்தித்துறை மண்ணின் கூத்துக் கலை மரபிலேயே தோற்றம் கண்டது’ என்று ஓவியர் கிருஷ்ணராஜா மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
“அந்தக் காலங்களில் கூத்துக்கள் முடிந்த பின்னரும், பாடசாலை சிறுவர்களும் சிறுமிகளும் சில மாதங்களுக்கு இந்தக் கூத்துப் பாடல்களை தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். பருத்தித்துறையைச் சார்ந்த அயற் கிராமங்களிலிருந்து பல நூற்றுக்கணக்கானோர் இந்த கூத்து நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக மாதனை கிராம மைதானத்தில் ஒன்றுகூடுவது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுவதாகும். பின்நாளில் இந்த நாட்டுக்கூத்து மரபுக்குள் தென்னிந்திய தாக்கங்கள் நுழைந்து, கூத்து ஒரு மலினப்படுத்தப்பட்ட நிலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது துரதிர்ஷ்டவசமானதாகும். இந்த சினிமாத் தாக்கத்துக்குட்பட்ட வகையில், மூவாயிரத்துக்கும் அதிகமான மேடையேற்றங்களைக் கண்ட ‘வடக்கும் தெற்கும்’ போன்ற சினிமாப்பாணி நாடகங்கள், வடமராட்சியின் சிறந்த கலைமரபு, சினிமாவின் தாக்கத்தால் மோசமான பாதிப்புக்குள்ளாகியதை பிரதிபலிக்கத் தொடங்கியது. இன்று கூத்துக்களை பாரம்பரியமாக நிகழ்த்துவோர் அருகிவரும் நிலையில், கூத்துக்களை மீளுருவாக்கம் செய்தல் இன்றைய காலத்தின் முக்கிய தேவையாகும்” என்று கே.கிருஷ்ணராஜா தனது தலைமையுரையில் மேலும் தெரிவித்தார்.
மரபுக் கலைகளின் மீளுருவாக்கம்: ஈழத்து கூத்து மீளுருவாக்கம்பற்றி கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் பாலசுகுமார் பேசும்போது, ‘இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின் உலக நாடுகள் அனைத்திலுமே மரபுக் கலைகளை மீளுருவாக்கம் செய்யும் போக்கு வளர்ச்சி பெறலாயிற்று’ என்று தெரிவித்தார்.
“ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றும் தொடர்ந்தும் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. கிரேக்க நாடகங்களும் ரஷ்ய கலைகளும் தொடர்ச்சியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஜப்பானிய பாரம்பரிய நடனங்களான ‘நோ’, ‘கிபுக்கி’ ஆகிய நாடகங்கள் இன்று நவீன தன்மையுடன் புதிதாக புனையப்பட்டு வருகின்றன. சீன நாடகங்களும் சமகால தேவைகளுக்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்குப்பின்னர், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் தத்தமது பாரம்பரிய கூத்து மரபுகளை மீளுருவாக்கம் செய்யும் போக்கு முனைப்புடன் செயற்படலாயிற்று. கர்நாடக மாநிலத்தில் பி.வி.கரந்த் போன்றோர் யக்ஷகானா கூத்து மரபினை வெற்றிகரமாக மீளுருவாக்கம் செய்தனர். கேரளத்தில் பழம்பெரு கூத்துமரபின் வழிவந்த ‘கதகளி’ குரு கோபிநாத் போன்ற கலைஞர்களால் புத்துருவாக்கம் செய்யப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஜாத்திரா நாடக மரபு புதுப் புனைவு பெற்றது. இலங்கையிலும் பேராசிரியர் சரத் சந்திர ஆசிய கூத்து வடிவங்களை நுணுகி ஆராய்ந்து சிங்கள கூத்து மரபினை மீளுருவாக்கம் செய்து சிங்கள கூத்து மரபிற்கு வளம் சேர்த்திருக்கிறார்” என்று பாலசுகுமார் மேலும் தெரிவித்தார்.
“கூத்து மீளுருவாக்கம் இக்காலத்தின் தேவைக்கேற்ப மூன்று அடிப்படைகளில் செயற்படுகிறது.
1.கூத்துக்கள் எவ்வாறு பாரம்பரியமாக நிகழ்த்தப்பட்டதோ அவ்வாறே அதனைப் பேணி வருதல்.
2.நவீன வடிவங்களுடன் அதற்குப் புதுமெருகேற்றுதல்.
3.பாரம்பரிய மரபினைச் செம்மைப்படுத்தி மீளுருவாக்கம் செய்தல்.
பாரம்பரியமாக கூத்து மரபினை அப்படியே பேணிவரவேண்டும் என்று கருதும் கூத்துக் கலைஞர்கள் அதனை அப்படியே பேணி வரும் போக்கிற்கும் கலையுலகில் இடமிருக்கிறது. ஜேர்மனிய நாடகக் கலைஞர் பிறெச்ட் தனது ‘அந்நியமாதல்’ கோட்பாட்டிற்கு கீழைநாட்டு மரபிலிருந்தே உந்தப்பெற்றிருக்கிறார். பீற்றர் புறூக் போன்ற கலைஞர்கள் பாரம்பரிய நாடகமான மகாபாரதத்தை வெற்றிகரமாக மீளுருவாக்கம் செய்துள்ளனர். புதிய வடிவங்களை உருவாக்கி, பாரம்பரிய மரபுகளை செம்மைப்படுத்தும் போக்கு இன்று பெருமளவில் அங்கீகாரம் பெற்றுக் காணப்படுகின்றது. பரதநாட்டியம் தேவதாசி மரபிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, கிருஷ்ண ஐயர், ஸ்ரீமதி ருக்மணி தேவி அருண்டேல் ஆகியோரின் முயற்சியில் புதிதாக மீளுருவாக்கம் செய்யப்பட்டது” என்று மேலும் பேசுகையில் பாலசுகுமார் தெரிவித்தார்.
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் பங்கு: “ஈழத் தமிழர்கள் என்னும்போது அவர்களுக்கே உரிய தனித்துவமான கலை மரபு எது? என்ற கேள்வி எழுகின்றது. பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் இந்திய கலைமரபிற்கு உரியவையாகும். அவற்றை ஈழத் தமிழர்கள் தமது தனித்துவமான கலை மரபாக உரிமை கொண்டாடுவதற்கில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள மக்களுக்குரிய கலை மரபை உருவாக்கும் முயற்சி அறுபதுகளிலேயே ஆரம்பமாகியது. பேராசிரியர் சரத் சந்திர, சித்திர சேனா, அமர தேவா போன்ற மகத்தான கலைஞர்கள் சிங்கள கூத்து மரபினையும் சிங்கள இசை மரபினையும் புதிதாக மீட்டெடுத்தனர். கண்டிய நடனமும் சப்ரகமுவ நடன மரபும் புதுப்புனைவு பெற்ற சிங்களக் கூத்துக்களாகும். அறுபதுகளில் ஈழத்தின் தமிழ் கூத்து மரபினை நவீனப்படுத்தி மீளுருவாக்கம் செய்ததில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும். ‘மனமே’ ‘சிங்கபாகு’ போன்ற சிங்கள நாடக மரபிற்கு இணையாக ‘ராவணேசன்’ ‘வாலிவதம்’ ‘நொண்டி நாடகம்’ போன்றன பல்கலைக்கழக மட்டத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்டன. பேராசிரியர் சி.மௌனகுரு போன்றோர் இக்கூத்துமரபின் மீளுருவாக்கத்தில் தொடர்ந்தும் செயல்பட்டுவரும் கலைஞராவார். இதேபோன்று ஈழத்தில் தமிழருக்கான தனித்துவமான இசை மரபை உருவாக்குவதில் கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று பாலசுகுமார் மேலும் தெரிவித்தார்.
சண்முகம் சிவலிங்கத்தின் தத்துவ தரிசனம்: இந்த அமர்வில் ‘எதுவரை?’ இணைய இதழின் ஆசிரியர் பௌசரின் தலைமையில் இடம்பெற்ற மறைந்த கலைஞர் சண்முகம் சிவலிங்கத்திற்கான அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் பேசும்போது, “கவிஞராக, சிறுகதை ஆசிரியராக, கட்டுரையாளராக, விமர்சகராக, சிறந்த விஞ்ஞான ஆசிரியராக பன்முக ஆளுமைகொண்ட சண்முகம் சிவலிங்கத்தின் மறைவு ஈழத்தின் இலக்கிய உலகில் பெரும் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளது” என்று குறிப்பிட்டார். “ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து கத்தோலிக்க – இந்து மத அடையாளச் சிக்கலில் சிக்கியிருக்கிறார். கத்தோலிக்கராக கத்தோலிக்க பாரம்பரியத்தில் வளர்ந்த தம்பிமுத்து பின்நாளில் இந்து மதப் பின்னணியில் தன்னை அடையாளம் காண முயற்சித்தார். ஆனால், ஸ்ரீபன் மாஸ்டர் என்று பாண்டிருப்பில் நன்கு அறியப்பட்ட இவர் சண்முகம் சிவலிங்கம் என்ற பெயரில் கவி உலகில் தன்னை ஸ்தாபித்துக் கொள்வதிலே எந்த அடையாளப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டிருக்கவில்லை. தமிழ் – முஸ்லிம் பிரச்சனைகள் தலைதூக்கியிருந்த காலங்களில் கூட, இரு சமூகங்களுக்கிடையில் மதிக்கத்தக்க கல்வியாளராக சண்முகம் சிவலிங்கம் திகழ்ந்தார்” என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார். “அவரது முள்முருக்கையும், சினை நண்டும் போன்ற கவிதைகள் நவீன ஈழத்துக் கவிதையில் தனித்துவம் வாய்ந்த கவிதைகளாக திகழ்கிறது. தோற்றம், ஸ்திதி, மறைவு ஆகிய பிரபஞ்சக் கூறுகளை நன்கு உள்வாங்கிக்கொண்ட சண்முகம் சிவலிங்கத்தின் தத்துவத் தரிசனத்தை ‘நீர்வளையங்கள்’, ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ ஆகிய அவரது கவிதைத் தொகுப்புகள் புலப்படுத்துகின்றன”| என்று மு. நித்தியானந்தன் மேலும் தெரிவித்தார்.
“சண்முகம் சிவலிங்கத்தின் சிறுகதைகள், நாவல், விமர்சனங்கள் ஆகியவற்றையும் தொகுத்து வெளியிட நான் எவ்வளவோ முயன்று பார்த்த போதிலும், அவரது தாமச குணமும் தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பும் அதனைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது. அவர்மீது கொண்டுள்ள அபிமானத்தாலும் அவரது ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்ற அவாவினாலும் நான் மேற்கொண்ட முயற்சிகள் ஆக இரண்டு கவிதைத் தொகுதிகளோடு முடிந்து போனது கவலைக்குரியதாகும்” என்று ‘தமிழியல்’ பதிப்பாசிரியர் இ. பத்மநாப ஐயர் தெரிவித்தார். தன்னை முன்னிலைப்படுத்தாத கவிஞர்: கவிஞரும் ஓவியருமான றஷ்மி பேசும்போது, ‘தன்னை முன்னிலைப்படுத்தாத ஒரு பெரும் கவிஞரை மாணவ நிலையிலிருந்து தான் அறிய நேர்ந்த அனுபவம் முக்கியமானது என்றும் அதிகம் பேசாத, அளந்து பேசுகின்ற, என்ன கூறினாலும், ‘அப்படியா?’ என்ற ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக்கொள்கின்ற அடக்கம் மிகுந்த கவிஞராக சண்முகம் சிவலிங்கம் திகழ்ந்தார்” என்றும் றஷ்மி தெரிவித்தார். “தனக்கு நேர்ந்த துயரமான சம்பவங்கள் றவூப், சசி ஆகியோரின் மரணங்கள் வெள்ளிக்கிழமைகளிலே நிகழ்ந்தது. ஆனால், உலகம் வெள்ளிக் கிழமைகளில் அழிந்து போகாது என்று என்பாட்டி என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாள்” என்று முடித்த அஞ்சலி உரை நெஞ்சைத் தொடுவதாக அமைந்தது.
திரு. நா. சபேசன் தலைமையில் இடம்பெற்ற அடுத்த அமர்வில் ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் ‘இலங்கையில் போருக்குப் பின்பான நவதாராளவாதப் பொருளாதாரம்’ பற்றி உரையாற்றும்போது “நவதாராளவாதப் பொருளாதாரத்தில் இருந்து அதிகாரப் பகிர்வு, ஜனநாயகமயப் படுத்தல் ஆகியவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைய அரசு நாட்டின் மோசமான நிதி நிலைமையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியாததால், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, வீழ்ச்சியடைந்துகொண்டு செல்லும் சம்பளங்கள் ஆகியவற்றை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் நிற்கிறது. யுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட படியால் மக்களைத் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழச்சொல்ல முடியாது” என்று தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு: “அதிகாரப் பகிர்வு என்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய யாப்பு ரீதியான மாற்றங்களைப் பற்றியதாக மட்டுமே இருக்கக் கூடாது. வர்க்கம், சாதி ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் அதிகாரப் பகிர்வு சம்பந்தமான சர்ச்சையில் இடம்பெறவேண்டும். தமிழர்கள், மலையக மக்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கும் இந்த உரிமைகளுக்குமிடையிலான உறவுகள் பற்றி கவனம் செலுத்தப்படவேண்டும். பிரதேச அடிப்படையில் உள்ளுர் மக்கள் நவதாராளவாதப் போக்குக்கு எதிராக தம்மைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரங்களை வழங்குவது பற்றியும் அதிகாரப் பகிர்வு பேசியாக வேண்டும். கொழும்பு அரசாங்கத்தின் மையப்படுத்தப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்த்து, நாட்டின் செல்வத்தை விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு எந்த வகையில் மறு பங்கீடு செய்யலாம் என்ற கேள்விகளும் முக்கியமாகின்றன. ராணுவ மயமாக்கம் நீக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? என்பதும் மக்களுக்கு எதிராக பொலிஸ் அட்டூழியங்கள் பிரயோகிக்கப்படுவதை இந்த அதிகாரப் பகிர்வு தடுக்;குமா என்பவை மிக முக்கியமான கேள்விகளாகும்” என்று அகிலன் கதிர்காமர் மேலும் தெரிவித்தார்.