என் எழுத்துலக அனுபவங்கள் பற்றிய நனவிடை தோய்தல்!

எழுத்தாளர் த.இந்திரலிங்கம்எழுத்தாளர் த.இந்திரலிங்கம் பற்றி..

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் த.இந்திரலிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. இவரது நகைச்சுவைப்புனைகதைகள் முக்கியமானவை. அவை தவிர அறிவியற் கட்டுரைகளும், சிறுகதைகளும் முக்கியமானவை. உண்மையில் எனக்கு இவரை எனது பால்யபருவத்திலிருந்து தெரியும். ஆனால் இவர்தான் எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான த.இந்திரலிங்கம் என்பது அண்மையில்தான் தெரிய வந்தது. இவரது படைப்புகள் இதுவரையில் நூலுருபெறாத காரணத்தால் பலருக்கு இவரது பிரமிக்கத்தக்க பங்களிப்பு தெரிவதில்லையென்று நினைக்கின்றேன். இவரது படைப்புகள் சிறுகதைகள், கட்டுரைகள், நகைச்சுவைப்புனைகதைகள் , அறிவியற் கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட வேண்டும். குறைந்தது மின்னூல்களாகவாவது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். சிந்தாமணியில் எழுபதுகளில் தொடராக வெளியான இவரின் ‘தம்பரின் செவ்வாய்ப்பயணம்’  சாவியின் ‘வாசிங்டனில் திருமணம்’ நாவலையொத்த படைப்பு. வெளியான காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்து வாசித்த அனுபவமுண்டு. அண்மையில் இவரிடமொரு நேர்காணலைச் செய்யும் ஆர்வத்தால் கேள்விகள் சிலவற்றை அனுப்பியிருந்தேன். அவற்றை உள்வாங்கிச் சுருக்கமாகத் தன் எழுத்துலக அனுபவங்களை இக்கட்டுரை வாயிலாகப் பகிர்கின்றார் த.இந்திரலிங்கம் அவர்கள். இக்கட்டுரை எழுத்தாளர் த.இந்திரலிங்கத்தைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை நமக்குத் தருகின்றது. அவ்வகையில் முக்கியமானதோர் ஆவணம். – வ.ந.கிரிதரன் –


எனது முதலாவது கட்டுரை ‘ஈழநாடு’ மாணவர் பக்கத்தில் 1965ஆம் ஆண்டு பிரசுரமானது. என்னுடைய பால்ய நண்பரும் , சமகால மணவருமான புருஷோத்தமனுடைய ‘ரோஜாவின் ராஜா நேரு’  என்ற கட்டுரை மாணவர் பக்கத்தில் பிரசுரமான காரணமே நான் எனது கட்டுரைரையை ‘ஈழநாட்டு’க்கு அனுப்புவதற்குக் காரணமாக அமைந்தது.  புருஷோத்தமன் பிறகு வேறொரு கட்டுரையும் எழுதவில்லை.  அவர் அந்தக் கட்டுரையை எழுதிய காரணமே என்னை எழுத்துலகுக்கு இழுத்து விடுவதற்காகத்தானோ என்று இப்போது நினைக்கிறேன்,

‘ஈழநாடு’ வாரமலரும் பின்னர் எனது கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தது.  வறட்டுக் கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு அதிக நாட்டம் இல்லை. என்பதை நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். 1966ம் ஆண்டு ‘வீரகேசரி’ வார வெளியீடு எனது கட்டுரையை வெளியிட்டு எனக்குச்  சன்மானப் பணமாக பத்து ரூபாவும் அனுப்பியிருந்தது. அதன் பின்னர்  இலக்கியக் கட்டுரைகளையும் ‘வீரகேசரி’யில்  எழுதினேன். பின்னர் தினகரனும் எனது கட்டுரைகளையும் , ‘சொர்க்கத்தின் கதவுகள்’ என்ற சிறுகதையையும் பிரசுரித்தது. ‘தினகரன்’ தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற தினங்களில் விசேட அனுபந்தம் பிரசுரிப்பதுண்டு. அதுவும் வர்ணத்தில் வரும். அந்த விசேட இதழ்களில் எனது நகைச்சுவை கலந்த நடைச்சித்திரங்கள் பிரசுரமாகின.

‘ வீரகேசரியின்’ சகோதர இதழ்களான ‘மித்திரன்’, ‘ஜோதி’ இதழ்களும் எனது படைப்புகளைப் பக்கம் பக்கமான வெளியிடும் . ‘கேரீஐ’, ‘இந்திரா’ என்ற புனைபெயர்களில் எழுதியதன் மூலம் ஒரே இதழில் எனது பல ஆக்கங்கள் பிரசுரமாவதை நான் ஒளித்ததுண்டு.  ‘ஜோதி’ ஆசிரியர் அன்னலட்சுமி இராஜதுரை எனது ‘கருவாட்டுத் தீவு’ என்ற தொடரை பிரசுரித்தார். அத்தொடர் எனக்கு நல்லதொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தியது.

பின்னர் ‘தினபதி’, ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகமும் ‘சிந்தாமணி’ ஆசிரியர் இராஜ அரியரத்தினமும்  எனது நகைச்சுவை  / நையாண்டி எழுத்துகளை வெளியிட்டு மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். ‘சிந்தாமணி’யில் தொடராக வெளியாகிய ‘தம்பரின் செவ்வாய்ப் பயணம்’ , ‘இலங்கேஸ்வரரின் இலங்கை விஜயம்’ போன்ற தொடர்கள் நாடளாவிய வாசகர் வட்டத்தை எனக்கு ஏற்படுத்தின.  மட்டக்களப்பு வாசகர் வட்டம் எனக்கு ஒரு பாராட்டுக் கடிதம் சிந்தாமணிக்கு அனுப்பியதாக ஞாபகம்.

அந்நாட்களில் நான் கொஞ்சம் வெட்கப்படுபவனாக இருந்தேன். இருந்தும் அமரர் குமார் தனபால் போன்ற நகைச்சுவை எழுத்தாளர்கள் பத்திரிகைகளிலிருந்து எனது விலாசத்தைத் தேடியெடுத்து என்னைத்தேடி வருவார்கள். அவர்களுடைய நட்பு தான் எனக்கு எனது நகைச்சுவை இரசனை பற்றி நம்பிக்கையூட்டியது.

அந்த நாட்களில் ‘ஈழநாடு’ எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுப்பதில்லை. எல்லாம் விஷய’தானம்’ தான்.

‘ஈழநாடு’ தினசரியிலும் நான் செய்தி சார்பான நகைச்சுவை வர்ணனைக் கட்டுரைகளை எழுதுவதுண்டு. ஒரு சமயம் வரவு செலவுத்திட்டத்தை அடுத்து நான் ‘ ஈழநாடு’ இதழில் எழுதிய நகைச்சுவைக் கட்டுரையை  வாசித்த ‘ஈழநாடு’ பிரதம ஆசிரியர் கே.பி.ஹரன் ‘ஆஹா, அற்புதமாக இருக்கிறது’ என்று வாய்விட்டுப் பாராட்டியதுடன்   அந்த நாள் தொடக்கம் எனது கட்டுரைகளுக்குப் பணம் வழங்கப்பட வேண்டும் என்று ‘ஈழநாடு’ நிர்வாகத்தைப் பணித்தார். அவருடைய அந்தப் பாராட்டு எனது நகைச்சுவை எழுத்துக்கு அங்கீகார முத்திரை குத்தியதாக நம்பினேன்.

நான் கே.பி.ஹரனை ஒருநாளும் நேரில் சந்தித்தது இல்லை. உண்மையான எழுத்து அதற்குரிய வாசகரை ஒரு நாள் சென்றடையும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

‘ஈழநாடு’ ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த அமரர்கள் கோபாலரத்தினம், சபாரத்தினம் (சசிபாரதி), கே.ஜி.மகாதேவா, எஸ்.பெருமாள் மற்றும் பாமா ராஜகோபால் ஆகியோர் எனது எழுத்தை  மிகுந்த அளவில் ஊக்குவித்தார்கள். ‘வீரகேசரி’ என்னை யாரென்று தெரியாமலே என் எழுத்தைப் பக்கம் பக்கமாகப் பிரசுரித்து ஊக்குவித்தது. தினபதி ஆசிரியர் ஆசிரிய பகுதியில் சேர்த்ததுடன் என் வாழ்க்கையில் குடும்ப நண்பராகவும் மாறினார். அவர் இறக்கும் வரையில் கொழும்புக்கு நான் சென்ற சமயங்களிலெல்லாம் அவருடைய பம்பலபிட்டி இல்லத்தில்தான் தங்கினேன். அவருடைய மகள் உதயநாயகம் அவருடைய பெற்றோர் என்னை ஒரு மகனாகவே கருதினார்கள் என்று அண்மையில் கூறினார். எழுத்தால் பிறந்த உறவு அது.

‘தினபதி’யில் எழுதிய  காலங்களில் எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் ஆர்வம் தலையெடுத்தது. WEEKEND வார இதழுக்குக் கட்டுரைகள் – நகைச்சுவை சேர்ந்தவை – அனுப்பத்தொடங்கினேன்.  ஒரு பதிலும் வரவில்லை. பிறகு திடீர் என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘வீக்கெண்ட்’ இதழில் Matchmakersச் பற்றிய எனது நகைச்சுவைக் கட்டுரை வெளியாகியது. அப்போது ரெக்ஸ் டி சில்வா சண்- வீக்கெண்ட் பிரதம ஆசிரியர். சிங்கா ரெட்ணதுங்கா (தற்போதைய SUNDAY TIMES) வீக்கெண்ட் ஆசிரியர். அதற்குப்பிறகு ஒவ்வொரு வாரமும் எனது SATIRE  கட்டுரைகள் வீக்கேண்டில் மார்க் ஜெரினின் காட்டூனுடன் பிரசுரமாகின.  இக்காலத்தில் பி.பி,சி உலக சேவை THE UGLY GEM என்ற ஆங்கிலச் சிறுகதையை ஒலிபரப்பியது. ‘சென்னை
என்ற ஆங்கிலச் சிறுகதையை ஒலிபரப்பியது. ‘ஆனந்தவிகடன்’ எனது ‘ஆழம்’ என்ற சிறுகதையைப் பிரசுரித்தது. ஆசிரியர் மணியன் தனது கையெழுத்துடன் எனக்கு 150 ரூபா சன்மானம் அனுப்பியிருந்தார். இந்திய எழுத்தாளர்கள் சாவி, ராம்ஸ்வாமி, கல்கி எனது நகைச்சுவை உணர்வுக்கு அடிப்படையானவர்கள்.  அந்த நாட்களில் கல்கி, விகடன், தினமணிக்கதிர் இதழ்களில் வரும் நகைச்சுவை எழுத்துகளைப்போல் மீண்டும் நான் கண்டதில்லை.

அந்த நாட்களில் நானும் என் நண்பர் புருஷோத்தமனும்  SCIENCE FICTION கதைகளில் ஆர்வமுள்ளவர்கள். ஆர்தர் சி.கிளார்க், ஐசக் அஸிமோவ் போன்றவர்கள் எமது விருப்பமான எழுத்தாளர்கள். எனது பி.பி.சி கதை ஒலிபரப்பைப்பற்றி  நான் ஆர்தர் சி.கிளார்க்குக் கடிதம் எழுதினேன்.  அவரிடமிருந்து நான் பதில் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் பதில் எழுதியதுடன், பிபிஸி கதை ஒலிபரப்பைப் பதிவு செய்து எனக்கு அனுப்பினார். (என்னிடம் ‘ரேடியோ’ இல்லையென்பதை அவர் ஊகித்து அறிந்திருக்கவேண்டும்.

பிறகு இன்னொரு தபாலில் அவருடைய ஐம்பது புத்தகங்கள் (Paperback Editions) என் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளன. இதைத்தொடர்ந்து கொழும்புக்குப் போகும்போது அவருடன் தேனீர் அருந்துவதும் வழமையாகியது.  எண்பதுகளில் இலங்கையின் முதலாவது டெலிவிஷன் ரிசீவர் அவருடைய வீட்டின் மாடியில் அமெரிக்கர்களால் நிறுவப்பட்டது. ஆர்தர் சி.கிளார்க்கின் மாடியில் இருந்த தொலைநோக்குக் கருவைகளினூடாகப் பிரபஞ்சத்தைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். அரியாலை என்ற சிறு கிராமத்தில் பிறந்த எனக்கு ஆர்தர் சி.கிளார்க்குடன் நட்பு கிடைத்தது எனது எழுத்துலக அனுபவத்தின் பிரகாசமான அங்கம்.

நான் இலங்கையில் எழுதும்போது என்னுடைய எழுத்துகள் ‘ஜனரஞ்சகமானவை’ என்ற குறைப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. எழுத்தாளர் டொமினிக் ஜீவா என்னைக் காணும்போதெல்லாம் ‘எங்கள் சஞ்சிகைக்கு எப்போது எழுதப்போகிறீர்’ என்று கேட்பார். என்ன எழுதினாலும் அது வாசிப்பதற்கு இலகுவாகவும், சுவாரசியமாகவும் இருக்க வேண்டுமென்பது என் கருத்து. அந்தக் காலத்தில் ‘தினகரன் வாரமஞ்சரி’ பண்டிதர்களால் எழுதப்படும் பல்லுடைக்கும் தமிழ்க் கட்டுரைகளைப் பிரசுரிப்பதுண்டு.  ஒருவரும் அவற்றை வாசிப்பதில்லை. சிறுகதைகள் பிரச்சாரப் பீரங்கிகளாக இருக்கக் கூடாது என்பது என்னுடைய இன்னோர் ஆசை.  இளம் வயதில் நான் ராஜாஜியின் தெளிந்த  தமிழ் எழுத்துகளை ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. அவர் ‘கல்கி’யில் ‘எடிட்டோரியல்; எழுதுவார்.  ஆங்கிலத்தில்கூட E.B.White , Graham Greene போன்றவர்களின் எளிமையான எழுத்துகளே எனக்கு மிகவும் பிடித்தவை.  ஆர்.கே.நாராயணனின் எழுத்துகள் பிரபல்யம் அடைந்தமைக்கு அவருடைய எளிமையான ஆங்கிலமே காரணம். வாசகர்கள் எமது எழுத்தை  வாசிக்க முடியாதென்றால் எமது எழுத்தின் நோக்கம் நிறைவடையாது என்பது என் எண்ணம்.

தற்போது நான் ஒரு நகைச்சுவை நாவலை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.  எப்போது நிறைவடையும் என்று கூற முடியாது. மேற்கு நாடுகளுக்கு எமது இலக்கிய முயற்சிகளைத் தாமதிக்கும் குணமுண்டு. அமைதியாக அமர்ந்து எழுத முயற்சி செய்வது இங்கு ஒரு LUXURY. ஆனால் எங்கள் எல்லோருக்குமந்த LUXURY ஐ அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை அடிக்கடி வருவதுண்டு.

thambitindral@aol.com


இவரைபற்றிய ஏனைய ஆக்கங்கள்:

1. (பதிவுகள்.காம்) பன்முகத்திறமை கொண்ட எழுத்தாளர்  த.இந்திரலிங்கம் – வ.ந.கிரிதரன் : https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4746;-303-&catid=28;2011-03-07-22-20-27&Itemid=54

2. (நூலகம் இணையத்தளம்) மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிச்சங்க வெளியீடான நுட்பம் (1975) சஞ்சிகையில் இவரது ‘தொலைவிலிருந்து வந்தவர்கள்’ என்னும் விஞ்ஞானப்புனைகதையினை வாசிக்கலாம்: http://noolaham.net/project/119/11840/11840.pdf

3. (பதிவுகள்.காம்) எழுத்தாளர் த.இந்திரலிங்கம் யார்? எங்கே? வினாக்களுக்கான விடைகள் கிடைத்தன – வ.ந.கிரிதரன் – https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4749;bbbbbbb&catid=28;2011-03-07-22-20-27&Itemid=54