என் அன்புக்குரிய பேரன் தமிழ்-காளையனே, வணக்கம்! உன் அழகுத் தேவதைத் தங்கை தேன்மொழியாள் சுகமா? உன் வீட்டில் பெரிசு சிறிசாகப் பதின் மூன்று நபர்கள் வாழ்வதாகவும், எனவே உனக்கு நிம்மதியாய் இருந்து படிக்கவும் நித்திரை கொள்ளவும் முடியாது இருப்பதாகவும், ஆதலால் பெற்றோர், பன்றிகள் போல் கண்-மண் தெரியாமல் பிள்ளைகள் பெறுவதை அரசினர் தடைசெய்ய வேண்டும்! என்றும் கோபித்து எழுதியிருந்தாய். எமது சமுதாய, வறுமை, அரசியல் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலமான காரணி சனத்தொகைப் பிரச்சினையே என சரியாகவே உணர்ந்துள்ளாய். எனவே இக்கட்டுரை உனக்கே வரைந்தது. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.
பேரா! எம் இவ்வுலகம் சூரியனிலிருந்து 457-கோடி வருடங்களின் முன் வெடித்துப் பிறந்தது என்றும், அதில் 77-கோடி ஆண்டுகளின் பின் சிற்றுயிர்கள் தோன்றி இருக்கலாம் என்றும், 200,000-150,000 ஆண்டுகளின் முன்னரே எம் மூதாதையர் ஆகிய, நிமிர்ந்து நடக்கும் மனிதரின் இனம் ஆபிரிக்காவின் குரங்குகளிலிருந்து இயற்கையால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்றும், தமது அணு-மரபு-வழி விஞ்ஞானப் பரிசோதனைகளால், இன்றைய சிம்பன்சிக் குரங்குக்கும் எம்மின மனிதருக்கும் இடையில் 98.4 வீதம் ஒப்புமை இருப்பதாகத் தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆபிரிக்காவில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்து தம்பாட்டில் விருத்தியடைய, மிச்சப் பகுதியினர் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா முதலிய கண்டங்களுக்குக் கூட்டாக 125000 தொடக்கம் 60000 ஆண்டுகளின் முன் சென்று தாமும் தம் போக்கில் விருத்தி அடைந்தே இன்றைய மனிதஇனம் உருவாகியது என்றும், சமூகவரலாற்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதுவே மனிதரின் பூர்வீகம். எனவே, நாம்எல்லோரும் இவ்வுலகில் ஒருவருக்கு ஒருவர் இனத்தவரே. ஒன்றாக ஒருமித்து வாழ வேண்டியவர்களே. அவ்வாறு கூட்டாக வாழ்ந்துவந்த மிருகங்களின் வாரிசுகள், நாங்கள். பல காரணங்களால், கூட்டாக வாழ்ந்தால் தான் நாம் அடை-மழைகள், பூகம்பங்கள், சூறாவளிகள், எரிமலைகள், நெருப்புகள், சுனாமி முதலிய இயற்கை அனர்த்தங்கள் முதலியவற்றில் இருந்தும் காட்டுமிருகங்களில் இருந்தும் எம்மைக்காப்பாற்றி வாழ்ந்து தரிப்பது கூடிய சாத்தியமாகியது. எனினும் ஒற்றுமையாக விட்டுக் கொடுத்து வாழ்ந்த உயிரினங்களில் ஓரினமே நாமும்.
அத்துடன் எம் மனிதஇனமே எல்லா உயிரினங்களிலும் கூடிய அபிவிருத்தியும் நாகரிகமும் அடைந்துள்ளோம். இது தற்பெருமையல்ல. தர்க்க ரீதி, விஞ்ஞானரீதி உண்மையும் கூட. நாம் இயற்கையை அண்டி, இயற்கையைக் கற்று-கையாண்டு-மாற்றி, இயற்கை அபிவிருத்தியையே துரிதப்படுத்தி எம்மனிதத் தேவைகளைப் பெற்றுப் பூர்த்தி ஆக்கி எமது கற்பனை, சிந்தனை, பேச்சுவன்மை, மொழிவன்மை, ஒழுங்குத்-திட்டப்- பிரயாசை முதலியவற்றால் இவ்வுலகைப் பெருமளவில் இன்று கட்டுப்படுத்தி ஆட்சிசெய்கிறோம். இதனால் எம் தனித்துவமும் பலமுற்றுள்ளது.
அதாவது, பேரா! எம் கூட்டு வல்லமைகளை மட்டுமல்ல, தனித் தனிச் சொந்த வல்லமைகளையுமே கூடிய அளவில் பெருக்கி, குடும்பங்களாக வாழும் அதே வேளை, நீ விரும்புவதைப் போல், நாளாந்தம் சில மணிகளுக்காவது தனித்து இன்புறும் பலத்தையும் விருப்பையும் பெற்று உள்ளோம். ஆக, உன் பிரச்சினைகள் எம் எல்லாருக்கும் பொதுவானதே. ஆனால் எம் தனிச் சுயநலங்கள், பொதுநலன்களுக்குப் பின்னரே வரவேண்டும்.
இன்றைய உலகில் (மிகக் கூடியதில் இருந்து குறைவான) சனத் தொகை கொண்ட நாடுகளாகிய சீனா (1400மி-361சதொசெ-5400டொ), இந்தியா (1200மி-933சதொசெ-1600டொ), அமெரிக்கா (310மி-83சதொசெ-47800டொ) ஆகிய மூன்றுடன், யப்பான் (128மி-873சதொசெ-46400டொ), பிரித்தானியா (62மி-656சதொசெ-38900டொ), சிறீலங்கா (20மி-805சதொசெ-2800டொ) சேர்ந்த ஆறு நாடுகளையும் இப்போ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இவற்றின் இன்றைய சனத் தொகை மில்லியன்கள் முதலாகவும், சதுரமைல்-விகித-சனத்தொகைச் செறிவு இரண்டாவதாகவும், ஓராண்டின் தனிநபர்-டொலர்-விகிதத் தேசிய வருமானம் மூன்றாவதாகவும் மேலே (வளை கோடுகளுள்) கொடுக்கப் பட்டு உள்ளன.
இவற்றை ஆராய்ந்தால், இந்தியாவே உலகின் மிகக் கூடிய, சதுரமைலுக்கு 933 சனத்தொகைச் செறிவுள்ள நாடு ஆகிறது. ஆனால், மிகக் குறைந்த, ஆளுக்கு ஆண்டு 1600 டொலர் தேசிய வருமானமுடைய நாடாகவும் இருக்கிறது. இந்தியாவிலும் பார்க்க 200 மில்லியன் சனத்தொகை கூடிய சீனா, இந்தியாவிலும் மிகக் கூடிய பரப்பளவும் உள்ளபடியால், அமெரிக்காவின் சதுரமைலுக்கு 83 பேர் சனத்தொகைச் செறிவுக்கு அடுத்தபடி மிகக்குறைந்த 361 சனத்தொகைச் செறிவுள்ள நாடாகவும் விளங்குகிறது. மேலும், ஆகக் குறைந்த 83 சனத்தொகைச் செறிவு உள்ள அமெரிக்காவே, ஆகக்கூடிய 47800 தனிநபர்-டொலர்-விகிதத் தேசிய வருமானமும் உள்ளது. 128உம் 62உம் மில்லியன் சனத் தொகையே உள்ள யப்பானும் பிரித்தானியாவும், அமெரிக்காவின் 47800 டொலருக்கு அடுத்தடுத்த, நபருக்கு ஆண்டு 46400 டொலரும் 38900 டொலரும் தேசிய வருமானத்தைப் பெறும் சுபீட்ச நாடுகளாகவும் விளங்குகின்றன.
மேலும் இந்தியாவிலும் அறுபது மடங்கு சிறிய சனத் தொகையையும் (1200:20) கிட்டத் தட்ட ஒரே சனத்தொகைச் செறிவையும் (933:805), பரப்பளவில் ஐம்பது மடங்கு (1269000:25300 சதுரமைல்கள்)) சிறியதுமாகிய எம் சிறீலங்காத்தீவின் தனிநபர்-டொலர்-விகிதத் தேசியவருமானம், ஓர் உக்கிரப்போர்முடிந்த ஏழாண்டு நிலையிலும், 75வீதம் கூடியிருப்பது (2800:1600டொ) எம் பெருமை அல்லவா?
அத்துடன், சீனா, யப்பான், இந்தியா, சிறீ லங்கா நான்கும், ஆசிய நாடுகள். பிரித்தானியா, ஐரோப்பிய நாடு. நாம் அமெரிக்கா என மேலே கூறியது, அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியை. நிலநடுக்கம், சுனாமி, முதலிய சில இயற்கை அனர்த்தங்களால் சதா ஆண்டாண்டு ஆதிக்கப்பட்டு வரும், இரண்டாம் மகாயுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆசிய நாடாகிய யப்பான், அமெரிக்காவுக்குச் சரிசமனாக, பிரித்தானிவையும் சில அம்சங்களில் மேவி, தொழில் நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் இன்று விளங்குவது, ஆசியர்களாகிய எமக்கு மனத்தென்பையும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தரும் ஒரு விடயம் அல்லவா?
யப்பானியரின் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் பிரயாசை, அஞ்சா நெஞ்சம், விஞ்ஞானத்-தொழில்நுட்ப மேதைமை, தேசிய ஒற்றுமை முதலியவற்றைப் பின்பற்றி நடந்தால் நாமும் முன்னேறலாம்.
முக்கியமாக, நாம் நினைத்தால், குறை காண்பதற்கு, என்றும், எங்கும் எதிலும் முடியும், என் பேரனே!
ஆனால் உலகின் எந்தப் பக்கத்திலும், எப் பகுதியின் நாட்டிலும் இயற்கை வளங்களும், நற்பேறுகளும், வேறு வேறு பிரச்சினைகளும், இருப்பதும் உண்மையே. அதனால், எமது வளங்களைப் பாவித்து, எம் சொந்த வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும், நாட்டின் ஒற்றுமையையும் கட்டி எழுப்புவதும், சனநெருக்கடி போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதும், உன் போன்ற இளைஞரினதும் யுவதிகளின் கைகளிலுமே தங்கியுள்ளது.
உன் நாட்டிலுள்ள எல்லா மொழி, மத இனத்தினரும், சாதிகள் எனப்படும் சமூகக் குழுவினரும், ஆண்பால்-பெண்பால் ஆகிய இரு பாலாரும் சமமெனச் சிந்தித்து விளிப்புடனும் பிரயாசை, விடாமுயற்சியுடனும் விட்டுக் கொடுத்துச் செயற்படுவாய்! நீ இவ்வாறு நடந்தால் கூடிய கெதியில் வாழ்க்கையில் வெற்றிபெற்று மனதிருப்தியுடன் வாழ்வாய் என்பது திண்ணம்.
என் முழு ஆசிகளுடன்…
உன் ஆசைத் தாத்தா,
கோபன்.
prof.kopanmahadeva@yahoo.co.uk