பகுதி ஒன்று
கனடாவில் ரொரொன்டோ நகரில் தேடகம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட “(சமரசம் செய்யாத) ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்ற என்.சண்முகதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல் அறிமுக விமர்சனக் கூட்டத்தில் கருத்துக்கூற என்னையும் அழைத்தமைக்கு தேடகத்திற்கும் சேனாவிற்கும் கோணேசுக்கும் நன்றிகள்.. இப் பதிவை மூன்று பிரிவுகளில் முன்வைக்கின்றேன்… முதலாவது இக் கட்சியினுடனான எனது உறவும் அனுபவமும் இரண்டாவது தத்துவமும் கோட்பாடும் மூன்றாவது நடைமுறை வேலைத்திட்டம்.
சண்முகதாசன் அவர்களின் கூட்டம் ஒன்று இலங்கையில் நடைபெறுமானால் இப்படி நடைபெறாது. எல்லாம் சிகப்பு மயமாக இருந்திருக்கும். 25 வருடங்களுக்கு முன்பு எனின் இன்றைய கூட்டத்திற்கு வருவதற்காக நானும் சிகப்பு உடை ஒன்றைத் தேடிப் போட்டிருப்பேன். பச்சை நீல நிற ஆடைகளை தவிர்த்திருப்பேன். ஏனெனில் அன்று இந்த நிறங்களுக்கெல்லாம் ஒரு கட்சி அடையாளம் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. ஐ.தே.க என்றால் பச்சை. சுத்திரக்கட்சி என்றால் நீலம். இக் கட்சிகளை சிறுவயதிலிருந்தே விரும்பவில்லை. வளர்ந்தபின் இக் கட்சிகள் எனக்கு உடன்பாடில்லாதவையாகவும் இருந்தன. இதனால் பாடசாலையில் சிகப்பு நிற விளையாட்டுக் குழுவிலையே என்னை இனைத்துக் கொண்டேன். ஆனால் நிறங்கள் தொடர்பான நமது மனப் பதிவுகளை காலம் மாற்றிச் செல்கின்றது. இன்று இந்த நிறங்கள் குறிப்பிட்ட கட்சி அடையாளங்களையும் கடந்து வேறு, உதாரணமாக சூழல் தொடர்பான, விடயங்களைக் குறிக்கின்றன. அந்தடிப்படையில்தான் இன்று நான் தேர்தெடுத்து உடுத்திருக்கும் இந்த உடையும் பல நிறங்களில் இருக்கின்றது. இப்படித்தான் நமது நம்பிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் காலத்திற்கு காலம் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன என நினைக்கின்றேன்.
சண்முகதாசன் அவர்கள் தான் அறிந்த, புரிந்த, மற்றும் உடன்பட்ட உடன்படாத கருத்துக்களையும் கோட்பாடுகளையும், தனது நடைமுறை செயற்பாடுகள் மற்றும் பயணங்கள் பற்றியும் மட்டுமல்ல தன்னைப்பற்றியும் இந்த வரலாற்று ஆவணத்தில் எழுதியிருக்கின்றார்… இது அவரது பார்வை…. இதேபோல் இவருடன் நெருக்கமாக இருந்த கட்சித் தோழர்களுக்கும்… இவர் தலைமைதாங்கிய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், அது பிளவுகள் பல கண்ட பின்பு தோழர்களுக்கும் இருந்த பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்… இவருக்கு சார்பானவையாகவும் அல்லது இவர் மீதான (நட்பு அல்லது எதிர்நிலை) விமர்சனமாகவும் இருந்திருக்கலாம்…. இதேபோல் தாய்க் கட்சியிலிருந்து (மாஸ்கோ சார்பு) பிளவுபட்டபின்னர் அக் கட்சியில் இருந்தவர்களுக்கும்…. பிற அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும்… தமிழ் மற்றும் சிங்கள தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் என ஒவ்வொருவருக்கும் இவர் தொடர்பாகவும் இவரது தத்துவம் நடைமுறை தொடர்பாகவும் பல பார்வை இருந்திருக்கும்… இதேபோல் எனது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அவர் தொடர்பான ஒரு பார்வை இரு(ந்திரு)க்கும்…. இவற்றின் பாதிப்புகள் எனக்கும் இருக்கலாம். ஆகவே இயன்றவு இவற்றுக்கு வெளியில் நின்று அதாவது புறவயமாக நின்று பார்ப்பதற்கு முயற்சிக்கின்றேன். அவ்வாறு பார்ப்பதுதான் சரியான பார்வை என்றும் உணர்கின்றேன்.
சண்முகதாசன் அவர்களுக்கு மாவோ மீது மதிப்பும் நம்பிக்கையும் இருந்திருக்கின்றது என்பதையும் அவரது வழியே சரியானது எனவும் நம்பியவர் இவர் என்பதும் இந்நூலை வாசிக்கும் எவருக்கும் புரியும். இதே போல் எனது தந்தை, கரவை கந்தசாமி, அவர்களும் மாவோவிற்குப் பின் விசுவாசமாக நம்பிய, பின்பற்றிய தலைவர் சண்முகதாசன் அவர்களே. இவரைப் பற்றி எந்தக் குறையும் யாரும் கூற முடியாது. அப்பாவும் சண்னைப் போல கல்வி கற்ற காலத்திலிருந்தும் மற்றும் கற்றபின் முழு நேர கட்சி அரசியலில் ஈடுபட்டவர். சண்முகதாசனை தனது தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதித்ததுடன், அவரது குடும்பத்தில் ஒரு அங்கத்தவராகவும் இருந்தவர் எனது தந்தை என கட்சிச் தோழர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்.
40 வருடங்களுக்கு முதல் கட்சிக்குள் ஏற்பட்ட பல முரண்பாடுகள் காரணமாக கட்சியை விட்டு விலகிய போதும், 20 வருடங்களுக்கு முன்பு 1993ம் ஆண்டு மாசி மாதத்தில் ஒரு நாள் இலன்டனில் இறந்த தனது தலைவர் சண்முகதாசன் அவர்களுக்கான முதலாவது அஞ்சலிக் கூட்டத்தை கொழும்பில் நடாத்த ஓழுங்கு செய்தார். 20 வருடங்களின் பின்பு இன்று அவரது தலைவர் சண்முகதாசன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் நான் கருத்துரைக்கின்றேன். இந்த நிகழ்வில் இவ்வாறு கருத்துக் கூறுவதற்கு எனக்குள்ள பொறுப்பானது, வெறுமனே என் தந்தைக்கு சண்முகதாசன் அவர்களுடன் இருந்து உறவு மட்டும் ஒரு காரணமில்லை. இதற்கு சமாந்தரமாக எனது சொந்த அரசியல் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் ஒரு காரணமாகும்.
சண்முகதாசன் அவர்கள் நம்புவதற்கு மாவோ என ஒரு தலைவர் இருந்தார். எனது அப்பா நம்புவதற்கு சண் என ஒரு தலைவர் இருந்தார். இதன் பின்பு வந்த தலைமுறையினர் நம்புவதற்கு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல தலைவர்கள் உருவானவர்கள். இவர்களைக் பலர் நம்பிப் பின்பற்றினர். ஈழத் தமிழ் தேசத்தின் இரண்டு தலைமுறைகள் பிரபாகரன் அவர்களை முழுமையாக நம்பி தம் உயிரையே கொடுத்தனர். எனக்கு எப்பொழுதும் ஒரு கேள்வியாகவும் ஆச்சரியமாகவும் இருந்த ஒன்று. எப்படி பிரபாகரன் அவர்களை இந்தளவுக்கு நம்புகின்றனர் என. ஆனால் மார்க்சிய வழிப்பட்ட இவர்களே இப்படி தலைவர்கைள நம்புவதை கண்டபோது, அறிகின்றபோது இவர்கள் இப்படி நம்பியதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் துரதிர்ஸ்டவசமா நான் இவ்வாறு நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் இன்றுவரையும் எனக்கு ஒரு தலைவர் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கின்றேன்…
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல நிகழ்வுகளுடன் குறிப்பாக 1966 களிலிருந்து 1976வரை எனது அம்மாவிற்கும் ஒரு கட்சி உறுப்பினரின் துணைவியாக பல தொடர்புகள் அனுபவங்கள் இருக்கின்றன. குறிப்பாக எந்தவிதமான குடும்ப சொத்துக்களும் இருவருக்கும் இல்லாமல் கட்சி வருமானத்தில் மட்டும் குடும்பத்தை நிர்வகித்தமை,1966ல் திருமணம் முடித்த சில மாதங்களிலும், பின் 70களில் ஆரம்பங்களிலும் அப்பா நீண்ட காலங்கள் சிறையிலிருந்த போது அம்மா தான் அனுபவித்த கஸ்டங்கள் பல எனக் கூறுவார். இது தொடர்பாக “அம்மாவுடன் ஒரு நேர்காணல்” என்கின்ற ஒரு பதிவை ஏற்கனவே முன்வைத்திருக்கின்றேன். இவருக்கும் சண்முகதாசன் அவர்கள் தொடர்பாகவும் அவரது கட்சி தொடர்பாகவும் பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை அவர் பகிர்வதற்கு விரும்புவதில்லை. இவ்வாறு கட்சியுடன் கட்சி அங்கத்தவராக இல்லாமலே பல அனுபவங்களைப் பெற்றவர் அம்மா. எனது அம்மாவிற்கு ஏற்பட்ட அனுபவம் போல் சண்முகதாசனின் துணைவியாருக்கும் அவரது மகளுக்கும் வேறு பல அனுபவங்கள் இருக்கலாம். குறிப்பாக இவ்வாறன பெண்களின் அனுபவங்கள் மற்றும் இவர்கள் நடைமுறை சார்ந்த பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொண்டர்கள் என்பதைப் பற்றிய பல தகவல்களை அவை கொண்டிருக்கும். ஆகவேதான் இவர்களின் அனுபவங்களை தொகுக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கின்றது. சில நண்பர்களும் இதில் அக்கறையாக இருக்கின்றார்கள். ஆனால் சண்முகதாசன் அவர்களின் வரலாற்றுப் பதிவில் இவரது துணைவியார் தொடர்பான குறிப்புகள் மட்டுப்படுத்தப்பட்டனவாகவே இருக்கின்றன. மேலும் இவரது துணைவியாருடனான உறவும் திருமணம் தொடர்பாகவும் அன்றிலிருந்து பல வாதப் பிரதிவாதங்கள் இருந்து வந்திருக்கின்றன. இவருக்கும் அவை தெரிந்திருக்கும். ஆனால் அவை தொடர்பாக இதில் எந்தக் குறிப்புகளும் இல்லாமல் இருப்பது கேள்விக்குறியதாக இருக்கின்றது. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பாக நிலவுகின்ற சந்தேகங்களை தலைவர்கள் நிவர்த்தி செய்வது அவர்களின் பொறுப்பு. இல்லையெனில் இவை தவறான நம்பிக்கைகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படவும் படலாம். அவ்வாறான எதிர்மறையான கருத்துக்களை அதுவும் அவரது கட்சியில் இருந்த தோழர்களிடமிருந்து இப்பொழுதும் வருகின்றமை முரண்நகையானது..
ஏற்கனவே குறிப்பிட்டபடி எனது பத்து வயது வரை அப்பா கட்சியின் முழுநேர உறுப்பினர். அதில் வந்த வருமானத்தில் மட்டுமே வாழ்ந்த குடும்பம். இதனால் என்போன்றவர்களை கட்சியின் குழந்தையாக வளர்ந்தவராகவே காண்கின்றேன். நாம் சிறுவராக இருக்கும் பொழுது மேதினங்களுக்கும் கட்சிப் பொதுக் கூட்டங்களுக்கும் அப்பா எம்மை அழைத்துச் செல்வார். இவ்வாறான நிகழ்வுகள்தான் எங்களுக்கான பொழுதுபோக்கும் சுற்றுலாவும். அது ஒரு உணர்ச்சிகரமான இடமாக இருக்கும். எங்கும் சிகப்பு நிறம் நிறைந்திருக்கும். கட்டியிருக்கும் சிகப்புக் கொடிகள் காற்றில் பட படவென அடிக்க மேடையில் பேச்சாளர்கள் தம் கைகளை உயர்த்தி வீர வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். எங்களுக்கு இவர்கள் பேசுவது ஒன்றும் விளங்காத வயது. நாம் ஏதாவது சாப்பிடுவதற்காக அம்மாவை நச்சரித்துக் கொண்டிருப்போம்.
1983ம் ஆண்டு யூலையில் நாம் அகதிகளாக யாழ்பாணத்திற்கு வந்திருந்தோம். அதே ஆண்டு டிசம்பரில் சாதாரண தர அதாவது பத்தாம் வகுப்பு பரிட்சை எடுப்பதற்காக மீண்டும் அட்டனுக்கு என்னைக் கூட்டிச் சென்றார் அப்பா. அப்பொழுது அட்டனிலுள்ள செங்கொடி சங்க அலுவலகத்தில் தான் பத்து நாட்களும் தங்கிப் பரிட்சைக்காப் படித்ததுடன் அங்கிருந்தே பரிட்சை எழுதவும் சென்றேன். அன்று இக் கட்சி அலுவலகத்திற்குப் பொறுப்பாக இருந்தவரை நாம் தட்ட சுப்பையா மாமா என அழைப்போம். இப்பொழுது அவரும் இறந்துவிட்டார். இதன் பின் ஒரு பரிட்சையின் வினாத்தாள்கள் வெளியானதால் பரிட்சை பத்து நாட்கள் பிற்போட்டார்கள். ஆகவே அப்பா தனது தோழரும் நண்பருமான சட்டத்தரணி சச்சிதானந்தன் அவர்களின் வீட்டில் என்னை விட்டு விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் சென்றார். பிற்போடப்பட்ட பரிட்சையை எழுதும் வரை அவரது வீட்டில் இருந்துதான் படித்தேன். அப்பாவின் கட்சித் தோழர்கள் எல்லாம் எங்களது மாமாக்களே.
1988ம் ஆண்டு நான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியது அப்பாவிற்கு மிகப் பெருமையாக இருந்தது. ஏனெனில் அப்பா அம்மாவின் குடும்பங்களிலும் உறவுகளிலும் இலங்கையில் கல்வி கற்று பல்கழைக்கத்திற்கு அனுமதி கிடைத்துச் சென்ற முதல் ஆள் நான்தான். (அப்பா இந்தியாவில் கல்வி கற்றவர்.) ஆகவே தான் அறிந்த அனைவருக்கும் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார். அப்பொழுது நேர்முகப்பரிட்சை ஒன்றுக்கு தோற்றுவதற்காக கொழும்பிற்கு வந்தபொழுது கொழுப்பிட்டியில் குடியிருந்த சண்முகதாசன் அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை அறிமுகப்படுத்தினார். அன்றுதான் எனக்கு நினைவு தெரிந்து அவரை முதன்முதலாக நேரில் கண்டேன். அன்று என்னைப் பொறுத்தவரை அவர் அப்பாவின் கட்சித் தலைவர். அவ்வளவுதான். அப்பா கட்சியை விட்டு விலகிய போதும் அவருக்கும் கட்சித் தோழர்களுக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. மேற்குறிப்பிட்டதுபோல் கொழும்பிற்கு செல்லும் காலங்களிலும் கொம்பனி வீதியில் இருந்த கட்சி அலுவலகத்தில் தான் தங்கியிருப்போம். இந்த அலுவலகம் மரத்தால் செய்யப்பட்ட ஒரு அடுக்குமாடிக் கட்டிம் ஒன்று. ஒவ்வொறு முறை செல்லும் பொழுதும் கட்சி அலுவலகப் படிக்கட்டுக்கள் ஆட்டம் போடுவது அதிகரித்தது காணப்படும். அதேவேளை காலத்திற்கு காலம் அலுவலத்தித்திற்குள் இருந்த வெளிச்சமும் குறைந்து சென்றதுடன் இருட்டு அதிகரித்து சென்றதை அவதானித்தேன். இம் முறை இலங்கை சென்றபோது கட்சி அலுவலகம் இருந்த இடம் எது என தேடவேண்டி இருந்தது.
இவற்றையெல்லாம் கேட்டும் சிலவற்றைப் பார்த்தும் வாசித்தும் அறிந்த எனக்கும் சண்முகதாசன் மற்றும் அவர் கட்சி தொடர்பாகவும் ஒரு பார்வை இருக்கின்றது.. இது ஒருபக்க சார்பான பார்வையாகவும் இருக்கலாம். ஆனால் இந்தப் பார்வைகள் எல்லாம் காலோட்டத்துடனும் அனுபவத்துடனும் அறிவூத் தேடலாலும் மாறிச் செல்பவை…. ஆரம்பத்தில் இருந்த புரிதலுக்கும் நிலைபாட்டிற்கும் முற்றிலும் எதிர் நிலையில் இப்பொழுது நாம் இருக்கலாம்… இந்தப் பார்வைகள் எல்லாம் சரி என்றோ பிழை என்றோ நான் வாதிடவில்லை… ஆனால் அவரவர் புரிதலிலுக்கும் அறிதலுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் தமது பார்வைகளை தமது பகுத்தறிவினுடாக நியாயப்படுத்துவதுவார்கள்.. அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு…. ஆகவே இந்தப் பார்வைகளை நியாயப்படுத்துவதல்ல எனது நோக்கம். மாறாக இந்தப் பார்வைகளை வெளியிலிருந்து ஒரு மூன்றாம் நபராகப் பார்த்து ஆராய்வதே இங்கு எனது அக்கறைக்குரிய விடயம்… இதுவே சரியான விஞ்ஞானபூர்வமான பார்வையாக இருக்கும் நம்புகின்றேன்.
நான் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட ஆரம்பித்த காலத்திலிருந்து அப்பாவின் அரசியலும் எனது அரசியல் நிலைப்பாடும் எப்பொழுதும் எதிர் எதிர் திசைகளிலையே இருந்திருக்கின்றன. ஆனால் அவர், நான் நீங்கள் மட்டுமல்ல சண்முகதாசன் என அனைவரும் ஒன்றுபடும் ஒரு புள்ளி உண்டு. அது நாம் வாழுகின்ற சமூகம் நியாமற்றது, நீதியற்றது. சம வாய்ப்புக்களை வழக்காத, சுரண்டல்களும் அடக்குமுறைகளும் நிகழ்கின்ற ஒரு சமூகம். இவ்வாறான ஒரு சமூகத்தை மாற்றி அனைவருக்கும் சம வாய்ப்புகளும் நீதியும் நியாயமும் கிடைக்கக் கூடிய அனைவரும் நலமாக ஆரோக்கியமாக வாழுகின்ற ஒரு சமூகமாக மாற்ற நாம் செயற்பட வேண்டும் என்பதே அது. இதில் நம் யாருக்கும் முரண்பாடுகள் கிடையாது. ஆனால் அதை எவ்வாறு அடையப்போகின்றோம் என்பது தொடர்பான விளக்கத்திலும் அதனடிப்படையிலான செயற்பாட்டிலும் அணுகுமுறைகளிலும் நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் எம்மை பிளவுபடவோ எதிர் எதிர் முகாம்களில் நிறுத்தவோ வழிவகுக்கக் கூடாது. அவ்வாறு நடைபெறுமாயின் அது ஆதிக்க சக்திகளுக்கும் வர்க்கங்களுக்கும் சாதகமானதாகவே இருக்கும். அவ்வாறுதான் கடந்த காலங்களில் நடந்து வந்திருக்கின்றது என்பது நாம் கண்ட ஒரு உண்மை. ஆனால் நாம் இதிலிருந்து இன்னும் பாடம் கற்கவில்லை என்பது துரதிர்ஸ்டமானது. ஆகவே கற்பதற்கு முயற்சிப்போம்…
பகுதி 2:
இன்றைய சூழலில் சண்முகதாசனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்கின்றோம் என்பதே முக்கியமானது…. இவரது கருத்துக்களும் செயற்பாடுகளும் அதாவது தத்துவமும் நடைமுறையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியும்… முரண்பட்டும் சென்றன…என்பதை அறிவது பயனுள்ளது. இதன் நேர் எதிர் மறை விளைவுகள் என்ன என்பதையும் குறிப்பாக இவரது கட்சியும், மக்களும், நாமும் இழந்தவை என்ன…. என்பதையும் ஆய்வு செய்வது அவசியமானது. இவ்வாறான அறிதலின் அடிப்படையில் நமது இன்றைய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் திட்டமிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம்… ஆகவே இவர் என்ன கூறுகின்றார் என்பதை அறிய முற்படுவோம்… அதேவேளை இவை தொடர்பாக சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. அவற்றையே இங்கு முன்வைக்கின்றேன்…
பல்கலைக்கழக இராக்கிங்… பகிடி வதை….
இவரது நூலில் எனது கவனத்தை ஈர்த்த பல விடயங்களில் பல்கலைக்கழ இராக்கிங் எனப்படும் பகிடிவதை ஒன்று. இராக்கிங் அக் காலத்திலிருந்து நமது காலத்தினுடாக இன்றைய காலம் வரை பாடசாலைகளில் சிறியளவிலும் பல்கலைக்கழங்களில் பெரியளவில் குறிப்பிடத்தக்க வகையில் தொடரும் ஒரு பிரச்சனை என்றால் மிகையல்ல… குறிப்பாக விடுதலைப் போரட்டம் முனைப்பு பெற்ற கால கட்டங்களில் மட்டுமல்ல மாபெரும் இனவழிப்பை அனுபவித்து அல்லது கண்ட பின்பும் கூட வடக்கு கிழக்கு பல்கலைக்கழங்களிலும் இது நடந்தேறுகின்றமை துரதிர்ஸ்டமானது…
மாணவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஒன்றை வெளிப்படுத்துகின்றது. அதாவது நமது தேசிய விடுதலைப் போராட்டம் குறிப்பாக ஆகக் குறைந்தது பல்கலைக்கழ மட்டத்தில்கூட நம்மை பண்பு ரீதியாகவோ கருத்தியல் ரீதியாகவோ வளர்க்கவில்லை என்பதே. நாம் இன்னும் வளரவில்லை என்பதற்கு இருக்கின்ற பல சான்றுகளில் இது ஒன்று என்றால் மிகையல்ல… ஆகவே நாம் இராக்கிங் செயற்பாடுகள் தொடர்பாக பன்முக ஆய்வு செய்வதன் மூலம் நமது சமூகத்தின் சிந்தனையோட்டத்தையும் உளவியலையும் அதனடிப்படையிலான செயற்பாடுகளையும் அறிவதற்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நமது சமூகங்களில் இருக்கின்ற அதிகாரத்துவப் பண்புகளையும் மனநிலைப் போக்குகளையும் கண்டறியலாம். இதன் எதிர்மறைத் தன்மைகளை எவ்வாறு நேர்மறைத் தன்மைகளாக மாற்றுவது என்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் நடைபெறப்போகின்ற போராட்டங்கள் சரியானதும் ஆரோக்கியமானதுமான வழிகளில் செல்வதற்கு பங்களிக்கும் என நம்புகின்றேன்.
இலங்கை (சீனக்) கம்யூனிஸ்ட் கட்சி…
சண்முகதாசனுக்கு அவர் தலைமை தாங்கிய சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இலங்கையில் வரலாற்றில் மட்டுமல்ல உலக கம்யூனிச வரலாற்றிலும் முக்கியமான ஒரு இடம் இருக்கின்றது எனக் கூறுகின்றனர். இவர் மார்க்சிய லெனினிய குறிப்பாக மவோ சிந்தனைகளை இலங்கைக்கும் தமிழுக்கும் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர் எனப் பலரும் கருதுகின்றனர். இதைவிட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி பற்றி மட்டுமல்ல முக்கியமாக ரொஸ்கியவாத லங்கா சம சமாஜா கட்சி மற்றும் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி போன்றவற்றின் சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலையும் அவர்களது வர்க்க குணாம்சங்களையும் மாவோவின் சிந்தனைகளின் துணையுடன் தெளிவாக விளக்குகின்றார் என பேராசிரியர் சண்முகரட்ணம் குறிப்பிடுகின்றார். இன்றைய சூழலில் இவற்றை நாம் மீளவும் அறிவது மிக முக்கியமானது.
இலங்கையின் பெரும்பான்மையான இடதுசாரிக் கட்சிகள் பேரினவாத கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்தது மட்டுமல்ல இனவாத சட்டங்களையும் உருவாக்கி பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்தனர். இவ்வாறன சூழலில் சிங்களத் தோழர்களும் இருந்த ஒரு இடதுசாரிக் கட்சிக்கு தமிழர் தலைமையாக இருந்தது முக்கியமானது. மேலும் ஒரு இடதுசாரி அல்லது மார்க்சியவாதி சமரசம் செய்யாது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் எனவும் கூறலாம். ஆகவே இடதுசாரிகள் அல்லது மார்க்சியவாதிகள் தவறு செய்துவிட்டார்கள் எனக் கூறுகின்றவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு தவறுவிட்டவர்கள் மார்க்சிய வாதிகளோ புரட்சிவாதிகளோ அல்ல. அவர்கள் அதிலிருந்து தடம்புறண்டு தம் வர்க்க தேசிய நலன்களை வெளிப்படுத்தியவர்களே என்றால் மிகையல்ல. ஆனால் விக்கிரமபாகுவின் என்எஸ்எஸ்பி மற்றும் விஜயடயஸ் ஆகியோரின் சிறிய கட்சிகள் ரொட்சிகியவாத கருத்தியலைக் கொண்டிருந்தபோதும் சண்முகதாசன் அவர்களுக்கு முதலே சுயநிர்ணைய உரிமையை அல்லது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்தவர்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். ஆகவேதான் சண்முகதாசன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆம்! இவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல.
சண்முகதாசன் அவர்கள் மேற்குறிப்பிட்ட இடதுசாரிகள் மார்க்சிய லெனினிய ரொஸ்கியவாதக் கருத்துக்களை கிளிப் பிள்ளைகள் போல மீள மீள குறிப்பிடுவதாக குற்றம் சாட்டுகின்றார். ஆனால் இவரும் மாவோ சிந்தனைகளை அவ்வாறுதான் பயன்படுத்துகின்றார் என்பதையும் பேராசிரியர் சண்முகரட்ணம் குறிப்பிடுகின்றார். இதை சண்முகதாசன் அவர்கள் எவ்வாறு கவனிக்கத் தவறினார்? இதனால்தான் மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் ரஸ்சியாவில் லெனின் உருவாக்கிய லெனினிய கோட்பாடுகளைப் போன்றோ, அல்லது சீனாவில் மாவோ உருவாக்கிய மாவோயிச கோட்பாடுகள் போன்றோ இலங்கைக்கான “சண்னிஸக்” கோட்பாடுகளை இவரால் உருவாக்க முடியாமல் போனது எனலாம். இதைவிட இவரே சுயவிமர்சனமாக குறிப்பிடுகின்ற சீர்திருத்தவாத தொழிற்சங்க செயற்பாடுகளும் மற்றும் அதிகளவிலான பயணங்களும் இவர் கோட்பாட்டு ரீதியாக பங்களிக்க முடியாது போனதற்கான காரணங்கள் என நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டமையும் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும். இதன் விளைவுகள் தான் குறிப்பான சுழல்களில் சரியான முடிவுகள் எடுக்க முடியாது கட்சி செயலிழந்து போனதும் காரணமாக இருக்கலாம். இப்பொழுதும் இவரது கோட்பாடு கொள்கைகளின் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளை வழிநடத்துபவர்கள் அதே தவறைத்தான் மீளவும் செய்கின்றர் என்பது துரதிர்ஸ்டமானது.
அரசு மற்றும் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாக…
மார்க்சியத்தின் நடைமுறை தொடர்பான முக்கியமான ஒரு கோட்பாடு ஸ்துலமான நிலைமைகளைக் கணக்கில் கொண்டு நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது… 1970ம் ஆண்டு இன முரண்பாடுகள் வெளித் தெரியும்வகையில் ஸ்துலமான நிலைமைகளாகவே இருந்தன. இக் காலத்தின் பின் சிறிலங்கா அரசு ஆளுகின்ற ஆதிக்க வர்க்கத்தை மட்டும் பிரதிநித்துவப்படுத்தவில்லை. சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் அரசியலமைப்பில் இணைத்தன் மூலம் அவற்றையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர் ஒரு காலத்தில் “ஒரு மொழி இரண்டு நாடு இரண்டு மொழி ஒரு நாடு” எனக் கூறிய கொல்வின் ஆர் டி சில்வா என்பதுதான் முரண்நகை. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசு என்பது வெறுமனே அதிகார வர்க்கங்களை மட்டும் பிரதிநித்துவப்படுத்துவபை அல்ல. இது வேண்டுமானால் மேற்குலகிற்கு பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அங்குகூட பொருத்தமானதல்ல. மாறாக இது ஒரு வர்க்க குறுக்கள் வாதமே. ஆகவே இது தென்னாசிய சமூகங்களைப் பொருத்தவரை பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் இந்த அரசுகள் ஆதிக்க அல்லது பெரும்பான்மை இனத்தையும் அதன் மொழியையும் மதத்தையும் கூடவே பிரதிநிதித்துப்படுத்துவதாகவே இருக்கின்றன.
இலங்கையை உதாரணத்திற்கு கொள்வோமாயின் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியல் என்பது ஒரு கருத்தியல் பொருளாக மாற்றமடைந்து செயற்படுகின்றது எனக் கூறலாம். இது சிங்கள தொழிலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை துரதிர்ஸ்டமானது. ஏனெனில் ஒரு புறம் தம்மை சுரண்டுகின்ற முதலாளித்துவ ஆளும் வர்க்க அரசு. இன்னுமொரு புறம் தம்மை இன மத ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இனத்துவ அரசு. இது ஆளும் வர்க்கத்தின் தந்திரோபாயமானபோதும் இங்கு அரசு என்பது வெறுமனே ஆளும் வர்க்கத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்த வில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அன்று புரட்சிகர கட்சியாக இருந்த சண்முகதாசன் அவர்களின் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அந்த சுழலில் இவ்வாறான ஸ்துலமான நிலைமைகளைக் கணக்கில் கொண்டு நிலைப்பாடுகள் எடுக்கவில்லை என்பது நாம் ஏற்கனவே அறிந்தது. இதற்கு காரணம் அல்லது தடையாக இருந்தது மார்க்சிய லெனினிய கோட்பாடுகளா? அல்லது அது தொடர்பான தவறான புரிதல்களா? அல்லது மத நம்பிக்கைகள் போல அதன் மீது வெறுமனே வைத்திருந்த நம்பிக்கையா? இது நாம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று.
இனம் மொழி சார்ந்த தேசிய விடுதலைப் போராட்டங்களை இடதுசாரிகள் முன்னெடுக்காமைக்கு காரணமாக இருந்தது மார்க்சிய லெனினிய கோட்பாடுகளிலில் இருந்த இறுக்கமான வரையறைகளே என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதுண்டு. அதேவேளை வடபகுதியில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததில் இவரது கட்சி குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றயிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலவேளை சாதிகள் தொடர்பாக மார்ச்சியத்தில் எதுவும் கூறியிருந்தால் சாதிய எதிர்ப்பு போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விதான்… ஏனெனில் அதற்கும் பின்வருமாறு ஒரு காரணத்தைக் கற்பித்திருக்கலாம்… இது ஆதிக்க சாதிகளிலிருக்கின்ற தொழிலாளர்களைப் பிரித்து பாட்டாளி வர்க்க புரட்சியை சாத்தியமில்லாத்தாக்கிவிடும் எனவும் சிந்தித்திருப்பதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கலாம் அல்லவா. இவ்வாறான வர்க்க குறுக்கல் வாதத்தால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு காரணங்களால் அடக்கப்படுகின்ற மக்களின் விடுதலையையும் அவர்களது உணர்வுகளையுமே இங்கு நாம் தவறவிடுகின்றோம்
ஆனால் இவரது கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்த ரோகண விஜயவீர குறிப்பான சூழலில் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் சிந்தனையையும் உணர்வினையும் புரிந்து கொண்டிருந்தார் என்கின்றனர். இதனடிப்படையில், தவறான இருந்தபோதும், புரட்சிக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். இவர்களது பலத்தினை முதலில் கருத்தில் எடுக்காத சண்முகதாசன் அவர்கள் பின்பு தவிர்க்க முடியாமல் அவரைக் கவனத்தில் கொள்ளவேண்டி இருந்தது என்கின்றார் பேராசரியர் சண்முகரட்ணம். இதன் பின்னர் தான் ஜேவிபியின் அடிப்படை தத்துவார்த்த கோட்பாட்டு தவறுகள் தொடர்பாக தெளிவானதொரு விளக்கத்தை சண்முகதாசன் அவர்கள் முன்வைத்தார் என்கின்றார். சண்முகதாசன் மார்க்சிய லெனினிய மாவோயிச கருத்துக்களை இருந்து விலகாமல் இருந்தார். ஆகவே அன்றைய சூழலில் ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்தபோதும் அதையும் முன்னெடுக்கவில்லை. சிங்கள பேரினவாத அரசின் தமிழ் தேசத்தின் மீதான அடக்குமுறையையும் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி எழுகின்றது.
இவரது கட்சியைச் சேர்ந்த ரோகண வீஜயவீர சிங்களப் (பேரினவாத) தேசிய வாதத்தை தனது கையில் எடுத்தது நடைமுறைப்படுத்தினார். ஆனால் இதுபோல் இவரது கட்சியைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற உறுப்பினர்கள் ஒருவரும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் முன்னெடுக்க வரவில்லை? இவர்களைத் தடுத்தது என்ன? காலம் சென்ற சண்முகலிங்கம் அவர்கள் ஒருதகவல் கூறினார். ரோகண விஜயவீரவும் கரவை கந்தசாமியும் இளைஞர் அணியின் இணைச் செயலாளர்களாக அப்பொழுது இருந்தவர்களாம். ரோகண வீஜயவீர மேற்குறிப்பிட்ட சிங்கள மக்களின் வழியால் சென்றபோது, கட்சிக்குள் இருந்த பலர் கரவை தமிழ் மக்களின் வழியில் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாம் என்றார். ஆனால் அவர் அவ்வாறு செல்லவில்லை. மாறாக மலைலயகத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளுடன் முடங்கியிருந்தார். இவ்வாறான கட்சிக்குள் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்தவர்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.
மாவோவின் கலாசாரப் புரட்சி
மாவோவின் கலாசாரப் புரட்சியின் அடிப்படை கோட்பாடு இன்றும் முக்கியமானது அவசியமானதுமாகும். சண்முகதாசன் அவர்கள் கலாசாரப் புரட்சியின் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாகவே இந்த நூலில் விளக்கிக் கூறுகின்றார். இதன் முக்கியத்துவம் மனிதர்களுக்குள்ளும் கட்சிக்குள்ளும் இருக்கின்ற முரண்பாடுகளின் போக்குகளை மாவோ சுட்டிக் காட்டுகின்றமையாகும் (306, 307, 309). பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிலைநாட்டினாலும் அந்த அரசில் உள்ளவர்கள் பழைய சமூகம் உருவாக்கிய மனிதர்களே (சண், 201). இவர்களது மனங்களின் ஆழங்களில் ஒடுவது அந்த சமூகம் உருவாக்கிய சிந்தனைகளே (201). ஆகவே நாம் புதிய அரசை உருவாக்கி இருந்தாலும் கட்சியிலிருக்கின்ற மனிதர்களின் சிந்தனைகள் மீளவும் பழையபடி அரசை முதலாளித்துவ பாதைக்கு மாற்றுவதற்கு முனையும். இதுதான் இறுதியில் சீனாவிலும் நடந்தது என்பது வேறுவிடயம். ஆகவேதான் மாவோ “பழைய கலாசாரம், சிந்தனை, பழக்கங்கள், வழக்கங்கள் என்பவற்றை அழித்து” (சண், 207) அதற்குப் பதிலாக புதிய கலாசராம், சிந்தனை, பழக்கங்கள், வழக்கங்கள் என்பவற்றை” (சண், 207) நிலைநாட்டுப்படி அறைகூவல் விட்டார். இந்தடிப்படைகளில் “ஆயிரம் பூக்கம் பூக்கட்டும் ஆயிரம் கருத்துக்கள் மலரட்டும்” (308) “தலமையை தகர்த்தெறியுங்கள்” (215, 302) போன்ற கோசங்களை முன்வைத்தார். இவை ஆரோக்கியமானவைதான். இது மனிதர் மற்றும் சமூகம் சார்ந்த சரியான மார்க்சிய அடிப்படையிலான இயங்கியல் பார்வையே எனக் கூறுகின்றனர்.
கலாசாரப் புரட்சியின் நோக்கமும் அதற்கான புரிதலும் சரியாக இருந்தது எனலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதம் முன்நோக்கிய பாதையை திசைதிருப்பிவிட்டது என்று கூறலாம். பழையதை அழிப்பது என்பதை மனிதர்களையே அழிப்பது என்பதாகவே கட்சித் தொண்டர்கள் கருதிவிட்டார்கள் என்றே கருதுகின்றேன். ஏனெனில் மாவோவே அவ்வாறான கருத்துப்பட “நச்சுக்களை பிடுங்கி எறியுங்கள்” என்றுதான் கூறியிருக்கின்றார். தவறு இங்கு தான் நடந்தாக கருதுகின்றேன். இது தொடர்பான பல ஆதாரங்களை போராசிரியர் சேரன் அவர்களும் கூட்டத்தில் முன்வைத்தார். ஆகவேதான் அது செயற்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன.
இப் புரட்சிக்கு எவ்வளவு நியாயத் தன்மையிருந்தபோதும் உண்மையிலையே நேர்மையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதலாம். ஏனெனில் ஒரு புறம் “ஆயிரம் பூக்கம் பூக்கட்டும் ஆயிரம் கருத்துக்கள் மலரட்டும்” என்ற கோசம். இதன் விளைவாக கட்சிக்குள்ளும் சமூகத்திலும் இருந்த மாறுபட்ட அல்லது பழைய சிந்தனை உள்ளவர்கள் தம் கருத்துக்களை முன்வைத்து வெளிவந்தனர். ஆனால் மறுபுறம் அவர்களை கட்சியின் இளம் தலைமுறை களை எடுத்தனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறைமையே எதிர்ப்புரட்சிகர சக்திகளை ஒன்றுபடுத்தி மீளவும் ஆதிக்கத்திற்கு கொண்டுவந்தது எனலாம். ஆனால் சண்முகதாசன் அவர்கள் இக் கேள்விகளை எதிர்கொள்ளாமல் “சில தவறுகள் நடந்தன” எனக் கூறிக் கொண்டு கொண்டு கடந்து செல்கின்றார். இது அடிப்படையில் நேர்மையற்ற பக்கச் சார்பான விசுவாசமான ஒரு பார்வையே என்றால் மிகையல்ல.
மாவோ நமது மூளையில் ஒற்றைச் சிந்தனை (பட்டாளிவர்க்க அல்லது முதலாளித்துவ சிந்தனை) மட்டுமே இருக்கவேண்டும் என்கின்றார் (213). இது அராஜகமான ஒரு பார்வையே என்றால் மிகையல்ல. மனித மூளை அல்லது மனம் என்பது ஒரு இயந்திரமல்ல. உடனடியாக கலட்டிப் பூட்டுவதற்கு. மனிதர்களுக்குள் இருக்கின்ற பழைய சிந்தனைகளை அகற்றுவதற்கு வன்முறையான பாதையோ அல்லது தண்டனைகள் வழங்குவதோ சரியான தெரிவல்ல. இதுவே காலம் காலமாக ஆதிக்க சக்திகளால் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒன்று. இதற்கு மாறாக மனித மனதில் ஆழமாக புதைந்திருக்கின்ற சிந்தனைகளை மாற்றுவது என்பது ஆரோக்கியமான திட்டங்களினுடான படிப்படியான வளர்ச்சியினுடாகவே சாத்தியம் என்பது எனது புரிதல்.
இதைப் பின்வருகின்ற உதாரணம் மூலமாகப் புரிந்துகொள்ளலாம். நான் ஒரு பெண்ணிலைவாதி. இருப்பினும் இந்த சமூகத்தில் வளர்ந்த ஒரு ஆண். இந்த சமூகத்தில் ஆதிக்கத்திலிருக்கின்ற ஆணாதிக்க சிந்தனைகளால் வளர்க்கப்படவன். அவைதான் என்னை ஆட்சி செய்து வழிநடாத்தின. இந்த சிந்தனைகள் தவறு என ஒரு நேரத்தில் புரிந்துகொண்டபோதும் அதிலிருந்து உடனடியாக விடுபட முடிந்ததில்லை. நான் பெண்ணிலைவாதியாக என்னை உணர்ந்து கொண்டபின்பும் என்னையறியாமலே பல சந்தர்ப்பங்களில் எனக்குள் இருந்த ஆணாதிக்க சிந்தனைகள் பிரக்கஞையின்மையாக வெளிப்படுகின்றன. இப்படியான ஒரு நிலையில் பெண்ணாதிக்க சமூகம் ஒன்று உருவாகும் பட்சத்தில் நான் அழிக்கப்படவேண்டுமா அல்லது மாற்றப்படவேண்டுமா? அவ்வாறு ஆணாதிக்க சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்கள் இருப்பவர்களை அழிப்பதாக இருந்தால் சகல ஆண்களை மட்டுமல்ல பெண்களையுமே அழிக்கவே வேண்டி வரும். ஏனெனில் பெண்களும் ஆணாதிக்க சிந்தனைக்கு உட்பட்டவர்களே. அகவே இது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல தவறான ஒரு பாதையுமேயாகும்.
நடைமுறை தொடர்பாக…..
நோக்கம் சரியாக இருந்தபோதும் வழி முறை தவறானால் நமது நோக்கத்தை இறுதியாக அடையா முடியாது. ஆகவே நாம் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இன்னுமொரு இடத்தில் (சண், 307) ஒரு மனிதருக்குள் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் இரண்டு போக்குகள் நிலவும் எனவும் இவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளினுடாகத்தான் வளர்ச்சி ஏற்படுகின்றது என மாவோ கூறியுள்ளார். இது சரியானதொரு பார்யையே. இதையே நிலாந்தன் அவர்கள் வாழ்க்கை என்பது கருப்பு வெள்ளையல்ல. அவை சாம்பலாகவே பெரும்பாலும் இருக்கும் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே நாம் எதை நோக்கி எவ்வாறு பயணிக்கின்றோம் என்பதில் நாம் பிரக்ஞையாக இருப்பதே முக்கியமானதாகும்.
இவ்வாறு பிரக்ஞையாக செயற்பட நாம் விரும்பியோ விரும்பாமலோ கீழைத்தேய சிந்தனைகளிடம் செல்லவேண்டும் என்றே கருதுகின்றேன். ஏனெனில் இதற்குப் பதில் மேலைத்தேய சிந்தனைகளில் தூரதிர்ஸ்டவசமாக இல்லை. மற்றும் நாம் இன்னுமொரு ஆதிக்க சமூகத்தை உருவாக்குவதற்காகவோ மனிதர்களை அழிப்பதற்காகவோ போராடவில்லை. மாறக ஒவ்வொரு மனிதர்களும், சக மனிதர்கள் யாரையும் அடக்கி ஒடுக்கமாமல் சுரண்டாமல், சகல உரிமைகளுடனும் வாய்ப்புகளுடன் அவர்களுக்கே உரிய தனித்துவங்களுடனும் ஆற்றல்களை வெளிப்படுத்தியும் ஆரோக்கியமாக வாழவேண்டும். இதுவே நமது இறுதி நோக்கம்.
சுயவிமர்சனம் தொடர்பாக…
சண்முகதாசன் அவர்கள் தனது சுய விமர்சனமாக சில தடவைகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். தான் “இதை அப்பொழுது உணரவில்லை…”… (உ.ம் 33ம் பக்). “பின்னர் தான் உணர்ந்தேன்” (பக்.55). இது மனிதர்களின் சதாரண இயல்புதான்… புரிந்து கொள்ளலாம்… ஆனால் மனிதர்களின் இவ்வாறன பண்புகளிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்வது… என்பதுதான் முக்கியமானது…. இன்று நமது விடுதலைப் போராட்டம் தோற்றபின் அல்லது முடக்கப்பட்டபின் பலர் இவ்வாறுதான் குறிப்பிடுகின்றனர்… இவ்வாறான போக்கு குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலில் மிகவும் ஆபத்தானது…. மக்களையே பலி கொடுக்கவேண்டி வரும்.. ஆனால் அதுதான் இறுதியாக நடந்தது…. ஆகவே இவ்வாறான தவறை மீளவும் செய்யாது அல்லது மிகவும் குறைந்தளவில் இவ்வாறான தவறுகள் இடம் பெறக்கூடியவகையில் எவ்வாறு செயற்படுவது என்பதில் அக்கறை கொள்ளவேண்டியது முக்கியமானது. அதேவேளை புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் பொழுது தவறுகள் தவிர்க்கப்பட முடியாதவைதான். ஆனால் அதற்குரிய பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமானது எனக் கருதுகின்றேன். அப்பொழுதுதான் தவறுகளை குறைக்கலாம் என நம்புகின்றேன். இவ்வாறு செயற்படுவதற்கான முயற்சி கூட ஒரு கலைத்துவமான செயற்பாடுதான். ஆனால் கடந்த காலங்களில் மட்டுமல்ல இப்பொழுதும் இவ்வாறான பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கின்றார்களா… செயற்பட்டிருக்கின்றோமா செயற்படுகின்றோமா… என்றால் அது கேள்விக்குறிதான்.
பகுதி 3:
ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து சோசலிச முன்னணி தொடர்பாக…
சண்முகதாசன் அவர்கள் ஜேவிபி தொடர்பான தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன் அடிப்படையில் இன்றைய சோசலிச முன்னணியினர் மற்றும் சம உரிமை இயக்கத்திடம் சில கேள்விகளை முன்வைக்கலாம். உண்மையிலையே ரோகண விஜயவீர செய்தது இலங்கையில் புரட்சி ஒன்று நடைபெறுவதற்கும் சண்முகதாசனுக்குமான “துரோகம்” எனக் கூறலாம். ஆகவே இன்றைய முன்னணியினர், அடக்கப்பட்ட மக்களின் சார்பாக செயற்படுகின்றவர்கள் எனின் முதலாவது ரோகண விஜயவீரவிற்கு துரோகம் செய்யவேண்டும். இதன் மூலம் ஆகக் குறைந்தது சண்முகதாசன் அவர்களின் இறுதிக்கால கருத்துக்களின் அடிப்படையிலாவது செயற்பட முன்வரவேண்டும். இரண்டாவது சிங்கள மக்களின் மனதுக்குள் புதைந்திருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தியலை களைவதற்கான செயற்பாட்டுகளுக்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். இதன் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசின் சிங்கள பௌத்த பிரதிநிதித்துவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் மீது ஈழத் தமிழர்களுக்கு ஒரளவாவது நம்பிக்கை ஏற்படும்.
இதன் பின் வேண்டுமானால் இவர்கள் தமிழ் மக்களிடம் வந்து அரசியல் வேலை செய்வதில் ஒரு நியாயம் இருக்கும். இவ்வாறு செய்யாமல் தொடர்ந்தும் ரோகண விஜயவீரவின் கருத்துக்களைத்தான் முன்னெடுத்து செல்வார்களெனின் இவர்களுடன் உரையாடல்களை மட்டுமே நடாத்தலாம். மற்றுபடி வெறுமனே இன்றைய அரசாங்க (அரசுக்கு எதிரானதல்ல) எதிர்ப்புக்கான கூட்டணி மட்டுமே அமைக்கத் தகுதியானவர்கள் இவர்கள். இன்றைய அரசாங்கத்தை விழுத்துவதற்கு இவ்வாறான கூட்டணி அவசியமானது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. இதற்கு மேல் இவர்களிடம் ஒன்றும் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் இன்றைய அரசாங்கத்தை விழுத்துவதன் மூலம் மாற்றம் ஏதுவும் ஏற்படப்போவதில்லை. குறிப்பாக இதனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மற்றது இவர்கள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு மாற்றாக எவ்வாறான அரசை முன்வைக்கின்றார்கள் என்பதில் தெளிவான நிலைப்பாடுகளில்லை. ஆகவே ஈழத் தமிழர்கள் இவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டியது அவசியமானது. மேலே “தூரோகம்” என்பதை அரசியல் அர்த்தத்திலையே பயன்டுத்துகின்றேன். மாறாக நமது சமூகத்தில் வழமையாக பயன்படுத்தப்பட்ட தூரோகி என்ற அர்த்தத்தில் அல்ல.
சிங்கள மக்களிடமிருக்கின்ற பயம் சந்தேகம் தொடர்பாக….
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் சிங்கள மக்களின் மனங்களில் ஆழமாகப் புதைந்திருக்கின்ற பயம் மற்றும் சந்தேகம் தொடர்பாக புரிந்துகொள்வதற்கான சில விடயங்கள் இருப்பதையும் சண்முகதாசன் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார் (131). இதைத்தான் சிங்கள பேரினவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது சிங்கள தேசத்தின் பிரச்சனையாக இருப்பினும் தமிழ் தேசத்தின் விடுதலைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றவையாகவும் இருக்கின்றன. ஆகவே கவனிக்கப்படவேண்டியவையே.
முதலாவது கடந்த காலங்களில் நடைபெற்ற தென்னிந்திய படையெடுப்புக்கள். இரண்டாவது பிரிந்தானிய ஆதிக்கத்திலிருந்த நேரம் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இன்றைய மலையக மக்கள். இன்றும் இவர்களை இந்திய விஸ்தரிப்பு வாத்தின் ஒரு பகுதியாகவே சிங்கள இனவாத சக்திகள் பரப்புரை செய்கின்றன. ஆனால் இந்திய அரசுக்கும் இவர்கள் வருகைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது கவனிக்கப்படுவதில்லை என எங்கோ வாசித்த ஞாபகம். மூன்றாவது மிசனரிகளினால் வடபகுதியில் உருவாக்கப்பட்ட கல்வி வசதிகளும் அதனால் அதிகமான அரச தொழிலில் தமிழர்கள் இருந்தமையும். நான்காவதாக இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தபோதும் தாம் பெரும்பான்மை என எண்ணுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற தமிழகம். இதனால் இலங்கையில் தாம் பெரும்பான்மையாக இருந்தபோதும் பிராந்தியளவில் சிறுபான்மை என உணர்கின்ற சிங்கள தேசம். இது தொடர்பாக அண்மையில் நிலாந்தன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஐந்தாவது தமிழ் மொழியின் பழைமை காரணமாக சிங்களவர்களுக்கு இருக்கின்ற தாழ்வுச் சிக்கல்.
தமிழகத் தமிழ் தேசிய உணர்வாளர்கள் தொடர்பாக…
சண்முகதாசன் அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பே மேற்குறிப்பிட்டவாறு இவ்வளவு தெளிவாக தனது கருத்துக்களை முன்வைத்தபோதும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது இதனைக் கருத்தில் எடுத்து தனது தந்திரோபாயங்களை வகிக்காமை தூர்ப்பாக்கியமானது. இந்தடிப்படையில் இன்றும் கூட தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக தமிழக சக்திகள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எதிர்மறைவான விளைவுகளையே ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தமிழக செயற்பாட்டாளர்கள் கவனிக்க தவறுகின்றார்கள். உதாரணமாக இலங்கையிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்திற்கு வருகை தருகின்ற சாதாரண சிங்கள மனிதர்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் மேற்குறிப்பிட்ட விடயங்களை அவர்களுக்கு உறுதி செய்கின்றன. இது இலங்கையில் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு தொடர்ந்தும் தடையை ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்பதை உணர்ச்சிகரமான தமிழகத் தலைமைகள் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை என்பது துரதிர்ஸ்டமானது.
ஆயுதப் போராட்டம் தொடர்பாக….
சமூக மாற்றத்திற்கான வழிமுறையாக சண்முகதாசன் அவர்கள் தலைமறைவான இயக்கத்தையும் ஆயுதப் போராட்டத்தையுமே முன்மொழிந்திருக்கின்றார். மார்க்சிய அடிப்படையிலும் பகுத்தறிவு ரீதியாகவும் அதை அணுகும் பொழுது இது சரியானதாகவே தோன்றும். ஏனெனில் ஆதிகார வர்க்கங்கள் ஆயுதம் மூலமும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் பொழுது அதை எதிர்ப்பதற்கு ஆயுதப் போராட்டமே சரியான வழிமுறை என நிறுவலாம். ஆனால் சில கேள்விகள் எழுகின்றன. முதலாவது இன்றும் இனிவரும் காலங்களிலும் தலைமறைவான இயக்கங்கள் சாத்தியமா என்பது ஒரு கேள்வி. ஏனெனில் இன்றைய அதிநவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எல்லாம் இன்றைய அரசுகளும் அதிகாரவர்க்கங்களும் தமக்கு சாதகமாகவும் புரட்சியாளர்களுக்கு எதிராகவுமே பயன்படுத்துகின்றன. மிக நல்ல உதாரணங்கள் அண்மையில் கொல்லப்பட்ட பின்லாடன் மற்றும் கடாபி ஆகியோர்.
இரண்டாவது ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை எங்கிருந்து வருகின்றது என்பது தொடர்பாகவும் ஆராய வேண்டிய தேவை உள்ளது. இது ஒரு ஆணாதிக்க சிந்தனையா? மேற்கத்தைய சிந்தனையா? என்பது அறியப்படவேண்டும். அதேவேளை அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது அவசியமாக ஆயுதப் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயுதப் போராட்டம் இல்லாமலே பெண்களின் விடுதலைப் போராட்டம் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உண்மையிலையே பெண்கள் தான் உலகதிலையே முதன் முதல் அடக்கப்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல இன்றும் கூட தம் உழைப்பிற்கு எந்த வருமானமும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு மனித இனம். இவர்கள் ஒவ்வொருவரும் தம் விடுதலைக்காக ஆயுதம் தூக்கினால் மனித வாழ்வுக்கு என்னாகும் என்பது பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
மூன்றாவது ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்காமைக்கும் அதனுடன் உடன்படாமைக்கு இன்னுமொரு காரணம் உண்டு. இன்றைய மனித வளர்ச்சி என்பது ஒரு வகையில் இயந்திரமயமான பிரக்ஞையின்மையான வளர்ச்சியே. இவ்வாறான மனிதர்கள் எவ்வளவுதான் கோட்பாட்டு ரீதியாக முன்னேறியிருந்தாலும் தம் கையில் ஆயுதம் ஏந்தியவுடன் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. பெரும்பாலும் எதிர்மறையாகவே இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த வரலாறு. ஆகவே நாம் இயந்திர மயமான வாழ்விலிருந்து விடுபட்டு பிரக்ஞைபூர்வமாக செயற்படுகின்றபோது வேண்டுமானால் ஆயுதம் தூக்குவது தொடர்பாக சிந்திக்கலாம். அதுவரை எனக்கு இந்த வழிமுறையில் உடன்பாடில்லை என்பதை இன்றைய புரிதலுக்கு ஏற்ப உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.
தலைவர்கள் சுயவிமர்சனம் செய்வது தொடர்பாக….
தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலங்களிலிருந்து செயற்படுகின்ற தலைவர்கள் பலர் இன்றிலில்லை… இருப்பவர்களிலும் செயற்படுகின்றவர்கள் மிகக் குறைவு… அந்தவகையில் நம் மத்தியில் இருக்கின்றவரும் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் செயற்படுகின்ற ஜான் மாஸ்டர் முக்கியமானவர்…. இது அவரது பொறுப்பை காட்டுகின்றது. அதேவேளை இவர் தனது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக சுயவிமர்சனத்தை முன்வைப்பதுடன் அல்லது பலரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் அவருக்கு உண்டு. ஏனெனில் பல முனைகளிலும் அவரை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவர் தன் மீதான சுயவிமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்கு சில தடைகளை இருக்கின்றன என்கின்றார்…
உதாரணமாக ஒரு கட்சிக்குள் மட்டுமே தான் சுயவிமர்சனத்தை முன்வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கூறுகின்றார். இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் கொண்டுள்ளதற்கு அடிப்படையாக இருக்கின்ற தத்துவ கோட்பாட்டு விளக்கம் என்ன என்பதை அவர் முன்வைக்கவேண்டும். நாம் என்னதான் தத்துவ கோட்பாட்டு விளக்கங்களை முன்வைத்தாலும் இன்றைய நிலைமையில் தமிழர்களிடம் புரட்சிகர தலைமை ஒன்று இல்லை. ஏன் மக்களின் பிரச்சனைகளைப் பேசுகின்ற அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உருப்படியான கட்சி கூட இல்லை. இந்த நிலைமையில் நாம் நமது பாதைகளை நிதானமாகவும் சரியாகவும் அமைக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இவ்வாறான ஒரு பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, 1970ம் ஆண்டு சண்முகதாசன் அவர்களுக்கு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கோட்பாடுகள் தடையாக இருந்ததைப் போல, இன்று நாம் நம்புகின்ற புரிந்து வைத்திருக்கின்ற கோட்பாடுகள் செயற்படுவதற்கு தடையாக இருக்கக் கூடாது. நாம் புதியவற்றை கண்டடைய பழையவற்றை கடக்கவோ உடைக்கவோ வேண்டியது தவிர்க்க முடியாதது. ஆகவே ஜான் மாஸ்டர் அவர்களும் எந்தக் கோட்பாடுகளுக்காக தனது சுயவிமர்னத்தை முன்வைக்க தவறுகின்றாரோ அதை கடந்து உடைத்தெறிந்து வரவேண்டும் என கேட்கின்றேன். இதுவே அவர் மீது தோழர்களுக்கு மீளவும் நம்பிக்கையை ஏற்படுத்தும். நாம் மீளவும் ஒரு குழுவாக கட்சியாக செயற்படுவதற்கான வழிகளைத் திறந்துவிடும். இது எனது புரிதல். அதேவேளை இவ்வாறான சுயவிமர்சனங்கள் என்பவை அரசியல் அகதியாக இருக்கும் எங்களுக்கு குறிப்பாக இவர் போன்றவர்களுக்கு பல நடைமுறை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதை நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். ஆனால் ஏதாவதொரு வழிகளில் கடந்தகாலம் தொடர்பான சுயவிமர்சனம் நேர்மையாக முன்வைக்கப்படும் எனின் இவர்கள் மீது மீளவும் நம்பிக்கை உருவாகலாம்.
சமூக மாற்றம் மற்றும் கூட்டுறவு வாழ்வு குறித்து….
இதை வாசிப்பவர்கள் மார்க்சிய சிந்தனைகளிலும் சமூகமாற்றங்களிலும் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் என ஒரு எடுகோளாக எடுத்துக் கொண்டு உங்கள் முன் ஒரு முன்மொழிதலை வைக்கின்றேன். ரொட்ஸ்சி அவர்கள் முன்வைத்த உலப் புரட்சி என்பதும் இன்றுரை கனவாகவே இருக்கின்றது. ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் மக்களையே ஒன்றினைக்க முடியாதபோது உலக மக்களை ஒன்றினைப்பது எவ்வாறு சாத்தியம் என்பது நம் முன்னுள்ள பெரும் கேள்வி? இதேபோல் ஒரு நாட்டில் சோசலிசம் என்பது தொடர்ந்தும் சிதைந்து போகின்ற கனவாகவே இருக்கின்றது. இருப்பினும் நாம் தொடர்ந்தும் ஏகாதிபத்தியங்களும் முதலாளித்துவ அதிகாரங்களும் பரந்திருக்கின்ற, முதலாளித்துவ நாடுகள் நிறைந்திருக்கின்ற இந்த உலகத்தில் ஒரு நாட்டில் சோசலிச சமூகத்தைக் கட்டமைக்கப் போராடிக்கொண்டுதான் இருக்கின்றோம். அல்லது இருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை நம்புகின்றோம் எனின், இவை சாத்தியம் எனின், முதலாளித்து நாடு ஒன்றில் வாழ்ந்து கொண்டு சோசலிச அல்லது கம்யூனிச சமூகம் ஒன்றை அல்லது ஆகக் குறைந்தது கம்யூன் முறைமையிலான கூட்டுறவு வாழ்வு முறைமை ஒன்றை நாம் நமக்குள் (நண்பர்களுக்குள்) கட்டமைத்து வாழ ஏன் முயற்சிக்கக் கூடாது?
நாம் விரும்புகின்ற புதிய சமுதாயம் ஒரு கூட்டுறவூ சமூகமாகவே இருக்கும். இங்கு ஒவ்வொருவரும் அவர்களது ஆற்றலுக்குரிய பங்களிப்பை செய்து வாழ்வார்கள். இதற்கு இவ்வாறன சமூகத்தில் தான் முழுமையான ஆதரவு இருக்கும். எங்கள் முன்னோர்களும் சண்முகதாசன் அவர்களும் போராடியதும் வழிகாட்டியது இதற்காகவே. இவ்வாறன ஒரு சமூகத்தையே நாம் கனவு காண்கின்றோம். அதை நோக்கியே செயற்படுகின்றோம் என்றால் மிகையல்ல. இவ்வாறன ஒரு சமூகத்தை புரட்சி ஒன்றின் மூலமாகத்தான் கட்டமைக்கலாம் என்றே நம்புகின்றோம். ஆனால் கடந்த கால அனுபவங்கள் இந்த முயற்சிகள் மட்டும் போதாது என்பதையே நமக்கு கூறுகின்றன. ஆகவே நாம் வாழ்கின்ற இந்த முதலாளித்துவ சமூகத்திற்குள் அதற்கு மாற்றாக பரிசோதனை முயற்சியாக கம்யூன் வாழ்க்கை முறையை எவ்வாறு கட்டமைத்து வாழ்வது என்பதை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதே என் முன்மொழிவு. இவ்வாறு செய்யும் பொழுது தனியே கலாசார புரட்சிக்கான அவசியம் ஆகக் குறைந்தது ஒரு கட்சிக்குள்ளாவது நடைபெற வேண்டிய அவசியமிருக்காது.
பங்களிப்பும் ஈடுபாடும் தொடர்பாக…..
மேற்குறிப்பிட்ட முன்மொழிவு நாம் விரும்புகின்ற இவ்வாறன வாழ்வு முறைக்கூடாக எங்களுக்கு பல விடயங்களை நடைமுறை அனுபவங்களுக்கு ஊடாக கற்றுக் கொடுக்கும். அதேவேளை நாம் இன்று வாழ்கின்ற முதலாளித்துவ சமூகத்திலிருந்தும் நூகர்வு கலாசாரத்திலிருந்தும் விடுபட்டு புதிய சமூகத்தை கட்டுவதற்கு பல அர்ப்பணிப்புகளை செய்யவேண்டியவர்களாக உள்ளோம். முதலாவது கோட்பாட்டு மற்றும் தத்துவார்த்த ரீதியாக செய்வதற்கு பல வேலைகள் இருக்கின்றன. மார்க்சுக்கு ஒரு ஏங்கள்ஸ் இருந்ததால் தான் அவரால் தன் பணியில் நோக்கத்தில் ஒரளவையாவது நிறைவேற்ற முடிந்தது. லெனினுக்கும் மாவோவுக்கும் கட்சியின் முழுமையான ஆதரவு இருந்தது. இதனால்தான் அவர்களாலும் தமது தேச விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்குமான அவசியமான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் உருவாக்க முடிந்தது. ஆனால் இன்று இவ்வாறான பணிகளில் செயற்படுகின்றவர்களுக்கு ஆதரவளிக்க ஏங்கல்ஸ் போன்ற ஒரு பணக்காரர் இல்லை. புரட்சிகர கட்சிகள் இல்லை. மறுபுறம் இவ்வாறான துறைகளில் செயற்பட ஆர்வமுள்ளவர்களிடமும் பணம் இல்லை. ஒரு சிலருக்குத்தான் முதலாளித்துவ சமூகத்தில் பணம் உழைப்பதற்கான ஆற்றல்கள் இருக்கின்றன. அதேபோல் ஒரு சிலருக்குத்தான் கோட்பாட்டுரீதியாகவும் இதுபோன்ற வேறு தளங்களிலும் பங்களிப்பதற்கான ஆற்றல்கள் இருக்கின்றன. மேலும் ஒரு சிலருக்குத்தான் கலைபூர்வமான படைப்புகளை உருவாக்கின்ற ஆற்றல்கள் இருக்கின்றன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு உறவும் பஸ்பர ஆதரவும் இல்லை. இது மிக தூர்ப்பாக்கியமான ஒரு நிலை.
நாம் உண்மையிலையே புதிய உயர்ந்த புரட்சிகரமான கருத்தாங்களையும் கோட்பாடுகளையும் கலை இலக்கிய படைப்புகளையும் உருவாக்க விரும்புகின்றோம். இதற்கு நாம் திறந்த மனதுடன் இருப்பது மட்டுமல்ல அதில் முழுமையாகவும் முழு நேரமும் ஈடுபட வேண்டும். அவ்வாறுதான் முதலாளிகளும் விஞ்ஞானிகளும் தம் நோக்கங்களை நிறைவேற்ற செயற்படுகின்றனர். அப்பொழுதுதான் குறிப்பிட்ட விடயத்தில் ஆழத்திற்கு செல்வதனுடாக உயர்ந்த படைப்புகளை கொண்டுவரலாம். இதன் மூலம் நாம் விரும்புவதை நிச்சயமாக சாத்தியமானதாக்கலாம்.
ஆனால் இவ்வாறான ஆற்றல்களும் விருப்பமுள்ளவர்கள் தமது நாளாந்தா வாழ்வை கொண்டு செல்வதற்காக தமது ஆற்றல்களை வருமானம் ஈட்டுகின்ற வேலை ஒன்றில் பயன்படுத்த வேண்டியவர்களாக உள்ளார்கள். இதனால் தாம் விரும்புகின்ற கோட்பாட்டுக்கான உழைப்பையோ அல்லது சிறந்த படைப்புகளையோ உருவாக்க முடியாதவர்களாகவும் தம் ஆற்றல்களைப் பயன்படுத்த முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். அல்லது பகுதிநேரமாகவே செய்கின்றனர். இவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் விரும்புவதை அடையவோ மாற்றத்தை ஏற்படுத்தவோ முடியாது. சமூக மாற்றம் மற்றும் விடுதலை நோக்கி செயற்படவேண்டுமாயின் முதலாளிகளை விடவும் விஞ்ஞானிகளை விடவும் பல மடங்கு ஆர்வமாகவும் முழுமையான பங்களிப்புடனும் நாம் செயற்படவேண்டும். ஆகவேதான் மேற்குறிப்பிட்டவாறான கூட்டு சமூக வாழ்வு முறை ஒன்றை புலத்திலும் புலம் பெயர்ந்த சமூகங்களிலும் நாம் உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதன் மூலம் பல தளங்களில் தம் ஆற்றல்களைப் பயன்படுத்த விரும்புகின்றவர்களுக்கு இது ஆதரவாக அமையும். ஆகவே இவ்வாறான ஒரு முயற்சியை நோக்கி செயற்படுவோமா?
ஒரு புறம் முதலாளித்துவத்தை விமர்சிப்பது…. மறுபுறம் முதலாளித்துவ ஊடகங்களுக்கு அடிமையாக இருந்து…. முதலாளித்துவ உற்பத்திகளுக்கு ஆதரவளித்து…. நூகர்வு கலாசாரத்தின் அடிமைகளாக இருக்கின்றோம்…
இவ்வாறு இருந்து கொண்டே முதலாளித்துவத்தை விமர்சிக்கின்றோம்…
ஆகவே புரட்சி மட்டும் சமூக மாற்றத்தை சாத்தியமாக்கப் போவதில்லை….
என்னைப் பொறுத்தவரை சமூகமாற்றம் என்பது…. ஒரு “தவம்”….கூட
அதற்கு நாம் இன்னும் தயார் இல்லயா…?.
10.03.2013
கனடா டொரன்டோவில் இயங்கும் தேடகம் சண்முகதாசன் அவர்கள் மறைந்து 20வது ஆண்டை நினைவு கூறுமுகமாக அவரின் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடாத்தியது. அதில் வாசிக்கப்பட்ட உரையின் திருத்திய வடிவம் இது