என் மனைவியின் முதல் நினைவு நாள்

எழுத்தாளர் பிரபஞ்சன்பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்'[எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய உலகில் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ ஆகிய நாவல்கள் மூலமும், சிறுகதைகள் முலமும்  தனக்கென்றோர் இருப்பிடத்தை நிலைநிறுத்திக்கொண்டவர். ஆர்ப்பாட்டமில்லாமல் செயற்படுபவர். அவரது இணையத்தளத்தை இம்முறை ‘பதிவுகள்’ தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. அவரது தளத்தில் அவர் தனது மனைவி பற்றி எழுதியுள்ள கட்டுரை வாசிப்பவர்களின் நெஞ்சினை உலுக்கிவிடும் தன்மை மிக்கது. நேர்மையாக, உண்மையாகத் தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார். இதனை வாசித்தபொழுது தோன்றிய முதலாவது எண்ணம்.. சினிமா நட்சத்திரங்களின் முதல் காட்சி பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடச் செல்வழிக்கத் தயங்காத மக்கள் வாழும் தமிழகத்தில் , சுமார் 60 மில்லியன்களுக்கும் அதிகமாக மக்கள் வாழும் தமிழகத்தில், இன்றுமோர் எழுத்தாளர், தமிழ் எழுத்தாளர் தன் எழுத்தை நம்பி திருப்தியாக வாழமுடியாத நிலைதான் நிலவுகின்றது. இந்நிலை என்று மாறுதோ அன்றுதான் தமிழகம் பெருமைப்பட முடியும். தமிழக அரசு இந்த விடயத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை ஏற்படுத்தி உதவலாம். உதாரணமாக எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பதிப்பிப்பதற்கு உதவுவதன் மூலமும், அவ்விதத்திட்டத்தின்கீழ் பதிப்பிக்கப்பட்ட நூல்களை நேரடியாக எழுத்தாளர்களிடமிருந்தே  நூலகங்களுக்கு வாங்கும் வகையிலான திட்டங்களை ஏற்படுத்திச் செயற்படுதுவதன் மூலமும் உதவினால் அது எழுத்தையே நம்பி வாழும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாகவிருக்கும். இது போன்ற திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்த எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். எழுப்புவார்களா? – பதிவுகள்]

என் மனைவி திருமதி பிரமிளா ராணி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் கடந்த வாரம் 16ம்தேதி வெள்ளிக்கிழமை என்னாலும் என் பிள்ளைகளாலும் நெருங்கிய உறவினர்களாலும் நினைவு கூரப்பட்டது. சென்ற 2011, மார்ச் மாதம் பிரமிளா ராணி காலமானார். அந்த நாள், நான் கனடாவில் இருந்தேன். இரண்டு நாள் சென்ற பிறகே நான் நாடு திரும்ப முடிந்தது. பிரான்சில் வாழும் என் இரண்டு பிள்ளைகளும் சென்னை விமான நிலையத்தில் எனக்கு முன்பே வந்திருந்து எனக்காகக் காத்திருந்தார்கள். வாழ்வை முடித்துக்கொண்ட என் மனைவியைக் காண நானும், தம் அம்மாவைக் காண என் பிள்ளைகளும் புதுச்சேரி நோக்கிப் புறப்பட்டோம். இரவு இரண்டு மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. தெருவை அடர்ந்திருந்தது இருட்டு. மறுநாள், ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை எடுத்து அன்று மாலையே எரியூட்டினோம். நீரினில் மூழ்கினோம்.ஆனால், நினைப்பை ஒழிக்க முடியவில்லை.

பிரமிளா ராணிக்கும் எனக்கும் 1970ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் புதுச்சேரியில் திருமணம் நடந்தது. பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம். ராணி, எனக்கு ஒரு வகையில் உறவினர். அப்போதுதான் நான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தேன். வேலை இனிதான் தேடவேண்டும், நான். புதுச்சேரியின் புகழ்பெற்ற குடும்பங்களில் ஒன்று, அவருடையது. வேலையற்ற, கீழ் மத்திய தரக் குடும்பம் சார்ந்தவனுக்கு அவர் மனைவியானது ஏன்? என் அப்பாவுக்கு இருந்த நற்பெயர், அவரை எனக்குப் பெற்றுத் தந்தது. திருமணத்துக்கு முந்தின மாலை மணமக்களான நாங்கள், என் வீட்டில் வைத்து என் முன்னோர்க்குப் படையல் போட வந்தோம். மறுநாள் தனிமையில் அவர் என்னிடம் சொன்னார்: ‘மாட்டுக் கொட்டகை என்று நினைத்தேன். இதுதான் உங்கள் வீடா? ஆச்சரியமாக இருந்தது.’ இது கேலி அல்ல. உண்மையை அவர் இயல்பாகச் சொன்னார். உடனடியாக இந்த வாழ்க்கைக்கு அவர் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். இதே ரகமான, மாட்டுக் கொட்டகை வாழ்க்கைக்கு மன ஒப்புதலுடன் எனக்கு அவர் 41 ஆண்டுகள் துணையாக இருந்தார்.

ராணி, பத்து வகுப்பு வரை படித்திருந்தார். மேலும் படிக்க ஆசைப்பட்டவர். அவர் குடும்பத்தில் அவரே மூத்த பெண் குழந்தை. அடுத்து அடுத்து பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு மூத்த பெண்ணின் தலைமேலே விழுந்து, பல பெண்களின் படிப்பைப் பலி கொண்டது தமிழக வரலாறு. பலியானவர்களில் அவரும் ஒருவர். பள்ளியில் விளையாட்டு வீராங்கனையாக இருந்திருக்கிறார். விளையாட்டிலோ, நிர்வாகத் துறையிலோ பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய அவருக்கு அவருடைய 22வயதில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. திருமணம் என்கிற விபத்துதான். இந்தியப் பெண்கள் பெரும்பாலோர் சந்தித்த விபத்து அது. பெண்களில் இருந்து வந்திருக்கவேண்டிய பல அறிவாளிகள், சமூகத்தை முன் நடத்திச் செல்லும் ஆற்றலாளர்கள், குடும்பம் என்கிற இந்த இரண்டாயிரம் ஆண்டுகால நிறுவன இயந்திரத்துக்குச் சின்னச் சின்ன இணைப்பு ஆணிகளாக மாறித் தம்மை இழந்து தம் முகத்தையும் இழந்து போனார்கள். என் அம்மா, கொடுமைக்கார மாமியார் இல்லை. ஆனால் மாமியார். என் அப்பாவோ, மருமகளை மகளாக ஏற்றுக் கொண்ட மனிதர். அவர் வருமானம் தினம் நூறு ருபாய். அதில் தினம் முப்பது ரூபாய்களை என் மனைவியிடம் கொடுத்துவிடுவார். அதில்தான் எங்கள் குடும்பம் நடந்தது. அவர் மறைகிற மட்டும், இந்தப் பணத்தைக் கொடுக்காமல் ஒரு நாளும் இருந்தது இல்லை என் அப்பா.

எனக்குத் திருமணமான 1970 முதல் இரண்டு ஆண்டுகள், ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியனாக வேலை பார்த்தேன். அந்த வேலைக்கு அரசு சம்பளம் சுமார் ஐநூறு. என் சம்பளம் ரூபாய் 99. நூறில் அந்த ஒரு ரூபாய் ஸ்டாம்புக்கு எடுத்துக் கொள்ளும் நிர்வாகம். தமிழ், வரலாறு, சமூகவியல் என்று மூன்று பாடங்கள், ஆறு வகுப்புகள் முதல் பத்து வகுப்பு வரை பாடம் நடத்தினேன்.ஒரு நாளைக்கு ஏழு வகுப்புகள். அதுவுமின்றி, மாலைகளில் தினம் மூன்று மணி நேரம் டியூஷன். பள்ளிக்கூடத்திலேயே அது நடக்கும். நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும். நாங்கள் இலவசமாகப் பணியாற்றவேண்டும்.

1970களில் ‘இல்லஸ்டிரேடட் வீக்லி’ என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, முறம் மாதிரி பெரிய அளவில், மிக அழகான படங்கள், அச்சு நேர்த்தியோடு வந்து கொண்டிருந்தது. அது மாதிரி, ஓர் இலக்கியப் பத்திரிகை தமிழில் நடத்தவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராணி, தான் அணிந்திருந்த நகைகளைத் தந்தார். சுமார் மூவாயிரம் ரூபாய் தயார் செய்தேன். ‘பாரதி அச்சகம்’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றை காந்தி வீதியில், சின்னப்பிள்ளையார் கோயில் பக்கத்தில் தொடங்கினேன். முதன்முதலில் நான் வாங்கின டிரடில் மெஷின் எனக்கு வண்ண வண்ணமான கனவுகளைத் தந்தது. வேலை தெரிந்த ஓர் இளைஞன் எனக்கு உதவ முன் வந்தான். முதல் நாள், இருக்கிற ஈய எழுத்துக்களைக் கொண்டு, பாரதியாரின், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற கவிதையை கம்போஸ் பண்ணி அச்சேற்றினேன். விதி! அச்சு ஒரு பாதி அழகாகவும் ஒரு பாதி எழுத்துக்களே இல்லாமலும் அச்சேறியது. அப்புறம் தெரிந்தது, மெஷின் கை உடைந்து ஒட்ட வைக்கப்பட்ட செய்தி. ‘புது டைப்புகள் வாங்கிக் கோர்த்தால் சரியாகிவிடும்’ என்றார் ஓர் அச்சுத் தொழிலாளி. மீண்டும் ராணியின் நகைகளை விற்றேன். அப்போது (1970)ல்ஒரு பவுன் விலையே இரு நூறுக்கும் குறைவுதான். புது டைப்புகளோடு அச்சேற்றினேன். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன். இந்த மெஷின் வேலை செய்யாது.

அச்சகத்தை விற்று வந்த இரண்டாயிரத்து சொச்ச ரூபாயில், ஒரு ஷீபர்ஸ் பேனா வாங்கினேன். யாரோசொன்னார்கள். புதுமைப்பித்தன் கூட ஷீபர்ஸ் பேனா வைத்திருந்தார் என்று. அன்றைய மாலை, கடற்கரை ஓட்டலில் உணவுக்கு நாங்கள் சென்றோம்.திருமணமான மூன்று ஆண்டுகளில் தன் குடும்பசேகரமான நகைகள் அனைத்தையும் இழந்தது பற்றிய ஒரு சின்ன முக மாற்றம் கூட என்னிடம் ராணி காண்பிக்கவில்லை. மாலை முரசில் நிருபர் வேலை, கொஞ்ச நாட்களைத் தின்றது. அகில இந்திய வானொலி. புதுச்சேரியில் குடும்பக் கட்டுப்பாடு நாடகங்களை ரகம் ரகமாக எழுதித் தள்ளினேன். ‘குடும்பக் கட்டுப்பாடா, கூப்பிடு அவரை’ எனும்படி எட்டுத் திக்கும் பிரகாசமாகச் சுற்றி வந்தேன். ‘இருபது’ அம்சத்தில் இந்த ஓர் அம்சத்துக்கு நான் செய்த அசுரப் பங்களிப்பை பாவம், இந்திரா அறியவில்லை. ஒரு குடும்ப நண்பர், எங்கள் வீட்டுக்கு வந்தவர், அந்த நாடங்கள் பற்றி தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார். என்னை நான் கேலி செய்துகொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் போனபிறகு, அந்த வானொலி நாடகங்கள் இனிமேல் வேண்டாம் என்றார். காரணம் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. அவர் சொல்பவைகளை நான் கேட்டுக் கொள்ள மட்டுமே செய்வேன். அன்று, அந்த மாலையோடு கு.க.நாடகங்களை முற்றாக நிறுத்திக் கொண்டேன். நிறுத்திய பிறகுதான், எவ்வளவு பெரிய அவஸ்தையிலிருந்து நான் மீண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். பொய்யை எழுதுவதுபோலப் பெருந்துன்பம் வேறு ஏதும் இல்லை. அது, எழுதுபவரின் ஆயுளைக் குறைத்துவிடும்.

குமுதத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, சென்னைக்கு அவர் வந்து சேர்ந்தார். திருமணமான பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் ஒன்றாகக் குடும்பம் நடத்தினோம். மிகக் குறுகிய காலமே, இது நீடித்தது என்றாலும், நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் அது. முதலில் சில மாதங்கள், கே.கே.நகரில் குடி இருந்தோம். மிக அருமையான வீட்டு உரிமையாளர் குடும்பம், கீழ் போர்ஷனிலும், நாங்கள் மாடியிலும் குடி இருந்தோம். மொட்டை மாடி எங்களுடையது. அதற்கு மேல் இருக்கும் வானம் எங்களுடையது. நட்சத்திரங்கள் எங்களுடையது. மூன்றாம் பிறை தொடங்கி அது முழுமை பெற்றுப் பவுர்ணமி ஆவதும், பின்னர் தேய்ந்து இருட்டு எனும் குறைந்த வெளிச்சம் தந்து காணாமல் போகிற ஒரு மாத நிகழ்வைத் துல்லியமாக நான் கற்றுக் கொண்டது அப்போதுதான்.

சென்னைக்குக் குடிபெயர்ந்தபோது, ஒரு சின்ன அட்டைப்பெட்டியில் சமையல் பொருள்களோடு வந்தோம். அன்றே திருவல்லிக்கேணி பாத்திரக் கடைகளில் மிகவும் அவசியமானதை மட்டும் வாங்கிக் கொண்டோம்.மாலைகளில் நடந்து சென்று புரசைவாக்கத்தில் காய்கறி வாங்கி வருவோம். அப்பகுதியில், ஈழத்து இளைஞர்கள் வைத்து நடத்திய ஓர் உணவுக் கடையில் வாரம் ஒரு நாள் அசைவம் உண்போம். ‘குமுதம்’ ஆசிரியர், விதிகளைத் தளர்த்தி, ‘குமுதம்’ குவார்ட்டர்சில்வீடு ஒன்றை வெறும் நூறு ரூபாய் வாடகைக்குக் கொடுத்தார். மூன்று அறைகள் கொண்ட பெரிய வீடு அது. அப்போது ரா.கி.ரங்கராஜனும் புனிதனும் பக்கத்து வீடுகளில் இருந்தார்கள். நண்பர்கள் யாரேனும்வீட்டு முகவரி மற்றும் ‘லேண்ட் மார்க்’ கேட்டால் மட்டுமே கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு எதிரே என்று நான் சொல்லும்போது, என்னைப் பார்க்காது பாவனை செய்யும் நண்பர்கள் எனக்குச் சங்கடத்தை உண்டு பண்ணுவார்கள்.

எல்லாம் இரண்டு ஆண்டுகள். எந்த நிறுவனத்திலும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குமேல் நான் நீடிக்க முடியாமல் போவது எனக்கு நேர்ந்த சாபம். அந்த நாளும் வந்தது. கொண்டு வந்த ஓர் அட்டைப் பெட்டியோடு இன்னொரு அட்டைப் பெட்டியும் சேர்த்து, பூக்கடை பேருந்து நிலையத்தில் ராணியைத் திரும்ப புதுச்சேரிக்கே அனுப்பி வைத்தேன். பேருந்து புறப்படும் வரை, அவர் கண்களை நான் பார்க்கவே இல்லை. முடியவில்லை.

யோசிக்கையில், எங்களின் மூன்று குழந்தைகளின் வளர்ச்சியில் எனக்கு எந்தப் பங்குமே இல்லை, என்பது எனக்கு என்றுமே துயரம் தரும் விஷயம். அரவிந்தர் ஆஸ்ரமத்தில் தினம் 18 ரூபாய்க் கூலிக்குப் பத்து மணி நேரம் அவர் உழைத்தது, பின்னால்தான் எனக்குத் தெரியும். வெறும் நூறு பால் வாங்கி, அதை நீர்விட்டு, நீர்விட்டு குழந்தைகளுக்குக் கொடுத்ததும் பிறர் சொல்லியே எனக்குத் தெரியும். என் கைக்குப் பணம் வரும்போது மட்டுமே புதுவைக்குச் செல்வேன். என் அறையில், வளர்ந்த மனிதர்கள் போல் என் குழந்தைகள் தட்டுப் படுவார்கள். என் மனதில் குழந்தைகளாக இருக்கிற என் பிள்ளைகள், அவர்களின் அம்மாவை விடவும், உயரமாக ஒரு நாள் வளர்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்து என் மகன், அப்பா எப்போது புறப்படப் போகிறார் என்று அம்மாவிடம் கேட்பான். என் இருப்பு அவர்களுக்குத் தொந்தரவைக் கொடுத்தது. அவர்களுடைய தனிமையில், நான் இடையூறாக இருந்தேன். சில மணி நேரங்களில் புறப்படும் மனநிலை எனக்கு உண்டாகிவிடும். புறப்பட்டுவிடுவேன்.

என் மூத்த மகன், தான் ஒரு பெண்ணை நேசிப்பதாக அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சென்னைக்கு வந்து என்னிடம் சொன்னான். ‘அம்மாவிடம் சொன்னாயா?’ என்று கேட்டேன்.

‘சொன்னேன்’

‘அம்மா என்ன சொன்னாங்க?’

‘கல்யாணம் நாங்களே பண்ணி வைக்கிறோம்னு சொன்னாங்க’

‘அதையேதான் நானும் சொல்றேன்!’ என்றேன். நான் புதுச்சேரிக்குப் புறப்பட்டுப் போனேன். பெண் வீட்டில் ஏதோ பிரச்சினை. அவர் என் வீட்டுக்கு வந்துவிட்டார். நான் போகும்போது மருமகளுடன் ராணி பேசிக்

கொண்டிருந்தார். அவர் முகத்தில் தோன்றி விளங்கிய மகிழ்ச்சியை அதற்குமுன் நான் கண்டது இல்லை. பிரஞ்ச் குடியுரிமை பெற்றிருந்த அந்தப் பெண் சில மாதங்கள் எங்களுடன் தங்கி இருந்துவிட்டு, கணவனாகிய என் மகனுடன் பிரான்சுக்குப் புறப்பட்டுப் போகும்வரை, ராணி மிகுந்த உற்சாகத்தோடும், பூரண சந்தோஷத்துடனும் இருந்தார். அவருடைய இரு மகன்களும் பிரான்சுக்குச் சென்றுவிட்டபிறகு, தொலைக்காட்சியில் பிரஞ்ச் மொழி சேனலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பார். அவருக்கு பிரஞ்ச் தெரியாது. அது அவருக்கு விஷயம் இல்லை. மகன்கள் இருக்கும் பிரஞ்ச் சூழலில் அவர் இருக்கவேண்டும். அவ்வளவுதான். பிரான்சுக்குச் சென்று தன் பேரன் மற்றும் பேத்தியோடு சில நாட்கள் தங்கி இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நிகழவில்லை.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி, திடீரென்று ஏற்பட்ட சோர்வு, களைப்பு, மயக்கம் காரணமாகத் தன் சகோதரியுடன் சென்று மருத்துவரைப் பார்த்திருக்கிறார். மருத்துவர், சந்தேகப்பட்டு மருத்துவமனையில் சேரச்சொல்லி இருக்கிறார். சேர்ந்திருக்கிறார்.

நான் என் வாழ்க்கையில் மீண்டும் காண விரும்பாத ஒருவரின் அழைப்பை ஏற்று, கனடாவுக்குச் சென்றிருந்தேன்.இலக்கிய நிகழ்ச்சி என்றார்கள். இலக்கியமே இல்லாத நிகழ்ச்சி அது. மூன்றாவது நாளே ராணியின் நிலை எனக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது.

மருத்துவமனையில் சேர்ந்து, ரத்தம் செலுத்தப்பட்டு, சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, அவர் உயிர் பிரிந்துவிட்டது. இரவு இரண்டரை மணிக்கு இறந்திருக்கிறார். நர்சுக்கு, அவர் மரணம் ஆறு மணிக்கே தெரிந்திருக்கிறது. இறக்கும்போது அவர் அருகில் கணவனும் இல்லை. குழந்தைகளும் இல்லை. யாருமே இல்லை. உலகின் கடைசி மனுஷியைப்போல அனாதையாகச் செத்துப் போனார்.

எனக்கு முன் என் துணைவர் இறந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மரணம் எனக்கு நேர்ந்து, அவர் பூமியில் தங்க நேர்ந்திருந்தால், மிகுந்த அவமானங்களைச் சந்தித்து இருப்பார். அவமானத்தின், புறக்கணிப்பின் நிழல் கூடப் படக்கூடாத ஆத்மா அவர். இவை போன்ற சிறுமைகள் எல்லாம் எனக்கே உரியவை.

நட்சத்திரக் கணக்குப்படி, அவர் இறந்து இந்த 16 மார்ச்சோடு சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. அவரது இல்லாமை இப்போதுதான் என்னைத் தாக்கத் தொடங்கி இருக்கிறது. இளமையில் துணை இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான் துணையின் அவசியம் கூடுதலாக உணர முடிகிறது.

நிறைந்த கனவுகளும், லட்சியங்களும் கண்களில் மிதக்க, ஆனந்தமாகப் பறந்து திரிய வேண்டிய, அறிவும் ஞானமும் பொலிந்த, மகத்தான மானுட உணர்வுகள் கொண்ட பெண்மணிகளை மனைவியாகக்கொண்டு, அவர்களைக் கீழிறக்கி, ஒளி இழக்கச் செய்த, செய்து கொண்டிருக்கும் கோடி கோடி ஆண்களின் வரிசையில் நானும் சேர்ந்து இருக்கிறேன்என்கிற குற்றவுணர்வு மட்டும் எப்போதும் என்னுடன் இருந்து தீரும். அதிலிருந்து நான் தப்ப முடியாது.

http://www.prapanchan.in