எளநீர் மனசழகி எதுக்கு இந்த எளஞ்சிரிப்பு! ( கிராமியப் பாடல்)

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

எளநீர் மனசழகி எதுக்கிந்த எளஞ்சிரிப்போ!
வளமான கிராமத்து வனப்பெண்ணிச் சிரிக்கிறியோ!
குளத்தோரக் காற்றின் குளுகுளுப்பில் கும்மாளமோ!
களவான எண்ணத்துக் குறுகுறுப்பில் சிரிக்கிறியோ!
அளந்து வெச்சயிந்த அழகான எளஞ்சிரிப்போ!

எடுத்த வெச்ச மச்சான் வரிக்கு
எசப்பாட்டுத் தேடறியோ!
எகத்தாள வரியெடுத்து ஏளனஞ் செய்வாயோ!
எதிர்காலம் எப்படியோவென்று எண்ணங்கள் தடுமாறுதோ!
எடுத்துச் சொல்லடி ஏனிந்த எளஞ்சிரிப்போ!

தனியே சிரிச்சாக்க தப்பாக நினைப்பாக
குனிந்ததலை நிமிராத குலவிளக்கா இருக்கோணுமடி!
கனிமரம் நீயடி கலகலப்பைக் குறைச்சிடடி!
செனிச்ச பயன் சீராகச் சிறப்பைச் சேரடியோ!
தனிமை எதுக்கடி தண்ணிக்கொடம் நிறைச்சிடடி! தாவணி அணைப்பிலே தகதகக்கும் உன்னழகு
தாய்மாமன் எனக்கென்று தாம்பூலம் மாத்தியாச்சே!
தாமரை முகத்தழகி தாரமாகும் நாளெண்ணி
தாலி வாங்க நாளை போறேன்.
தாழப்பூச் சித்திரமே நேரத்தோடு வீடுசேரடி!

16-7-2017
kovaikkavi@gmail.com