எழுத்தாளர் உதயணன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

எழுத்தாளர் உதயணன்எழுத்தாளர் உதயணன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். அவர் தனது கடைசிக் காலத்தைக் கனடாவில் செலவிட்டபோது தன்னால் இயன்ற அளவு கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்றே குறிப்பிட வேண்டும். கனடா எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போதுதான் உதயணன் என்ற புனைபெயரைக் கொண்ட எழுத்தாளர் சிவலிங்கம் அவர்கள் எனக்கு அறிமுகமானார். பின்லாந்தில் இருந்து கனடாவுக்கு ஒருமுறை அவர் வருகை தந்தபோது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற் கூடாகத் தனது நூல் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அதிக கவனம் செலுத்துவதால், அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது நூலை இங்குள்ள ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். அதன்பின் சமீப காலங்களில் இலக்கிய நிகழ்வுகளிலும், தாய்வீடு பத்திரிகையின் ஒன்றுகூடல்களின் போதும் அடிக்கடி சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன்.

இவரது ஆக்கங்கள் பல இலங்கை, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பத்திரிகைகள், இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது நாவல்களில் ஒன்றான ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவலை வீரகேசரி பிரசுரம் அப்போது வெளியிட்டிருந்தது. 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்து இவர், நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து, பின்லாந்திற்குப் புலம்பெயர்ந்தார். சுமார் 25 வருடங்கள் வரை பின்லாந்தில் வசித்தபோதும் தாய் மொழியை மறக்காது, தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், பகுதி நேர தமிழ்மொழி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர், பின்லாந்தின் தேசிய காவியமான ‘கலேவலா’ என்ற நூலை 1994 ஆம் ஆண்டு பின்னிஷ் மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு  மொழி மாற்றம் செய்திருந்தார்.  இதன்பின் கனடா நாட்டிற்கு வந்து தனது இறுதிக் காலத்தைக் கழித்தார். கடைசி காலத்தைத் தமிழ் இலக்கிய முயற்சிகளிலேயே செலவிட்டார். சமீபத்தில் இவர் ‘பிரிந்தவர் பேசினால்’, ‘உங்கள் தீர்ப்பு என்ன?’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருந்தார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும் என்பதில் ஐயமில்லை.

கனடா, ரொறன்ரோவில் 23-07-2019 அன்று எம்மைவிட்டுப் பிரிந்த இவரது ஆத்மா சாந்தி அடைய கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பிலும், இலக்கிய ஆர்வலர்கள் சார்பிலும் பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருடன் எங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

குரு அரவிந்தன்  ,தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.

kuruaravinthan@hotmail.com
ஜூலை 28, 2019