ழுத்தாளர் அகஸ்தியர் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அதனையொட்டிப் பிரசுரமாகும் கட்டுரை!
இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.
இலக்கியங்கள் ஏதோ ஒரு வகையில் படைப்பாளியின் அடையாளத்தை அவர் யார் என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அரசியல் சாராத, ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வுகளின் பிரபலிப்பான படைப்பாக ஒரு இலக்கியம் கணிக்கப் பட்டாலும் அவனின் வரிகளில் ஒன்றிரண்டு அந்த இலக்கியததைப் படைத்தவனின் சமூகக் கண்ணோட்டதை;தைக் காட்டிக் கொடுத்து விடும்.
இலங்கை எழுத்தாளர்கள் பலர் 40-60ம் ஆண்டுகளில் சமுகத்தின் வேறுபாடுகளால் அடக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுதினார்கள். அவர்களின் சமுதாய வெளியுலகத் தொடர்பால் கண்ட கொடுமைகளையுணர்ந்த உள்ளுணர்வின் கோபப்பொறிகள்,ஆதங்கங்கள், அதிர்வுகள்,என்பன அவர்களின் படைப்புக்களில் பிரதி பலித்தன.
ஒட்டுமொத்தமான மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கு வழிதேடியவர்களில் சமயவாதிகள்,அரசியல்வாதிகள் என்று பலர். அவர்களில் தங்கள் வாழ்க்கையையே ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை மாற்றும் வித்தில் தங்கள் இலக்கியப் படைப்புக்களைச் செய்தவர்களும்; அடங்குவர்.
தமிழ் இலக்கியம் வளர்ந்த தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இலக்கியத்தற் கேட்காமலிருந்த கால கட்டத்தில் அவர்களின் துயரைத் தங்கள் படைப்புக்களில் காட்டியவர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.
அந்த வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான படைப்பாளிகளில் அகஸ்தியரும் ஒருத்தர். இவர், 28.8.1926ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் திருவாளர் சவரிமுத்து-அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் எழுத்தாற்றலை மதித்து இவருடன் எனக்கு ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு ஏற்பட்டதற்கு என் தாயார் மாரிமுத்து பிறந்த அதே 1926ம் ஆண்டு இவரும் பிறந்தது ஒரு காரணமோ எனக்குத் தெரியாது.
பாரிசில் இவர் வாழ்ந்தபோது ஓரிரு நாட்கள் அவருடன் பழகியது எனது அதிர்ஷ்டம் என்று கருதினேன்.தன்னலமற்ற ஒரு சாதாரண தமிழன், தனது சமூகத்தில் படிந்து கிடக்கும் பன்முகக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கம் எப்படி ஏழை மக்களை வதைக்கிறது. வாட்டுகிறது,மனிதராக மதிக்காமல் இழிவுபடுத்துகிறது என்பதைத் தனது படைப்புக்கள் மூலம் உலகுக்குச் சொன்ன முற்போக்கு எழுத்தாளர்களில் திரு அகஸ்தியரும் முன்னிலைப் படுத்தப் படவேண்டியவர்.
சமயத்தை முன்னெடுத்து மனிதத்தைக் கூறுபோட்டு,பெண்ணடிமைத் தனத்தைச் சமுதாயக் கோட்பாடாக முன்னெடுக்கும் பார்ப்பனிய சித்தாந்தம் பற்றிய இவரின் கண்ணோட்டம் இவரின் பல படைப்புக்களலும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
திரு அகஸ்தியர் அவர்களின், ‘எரி நெருப்பில் இடைபாதையில்லை’என்ற நாவலின் முன்னுரையில் அவர் கூறும்போது,’ சுரண்டும் வர்க்கத்தின் எச்ச சொச்சமான,யாழ்ப்பாண சமூக அமைப்பின்,’தாழ்த்தப்பட்ட’,’உயர்த்தப்பட்ட’பிறழ்வுகளை மையப்படுத்தி,ஐம்பது ஆண்டு யாழ்ப்பாணத்துப் பரப்பை இலங்கையில் முதன் முதலில் பிரசவித்த தமிழ் நாலும் இதுவே’ என்கிறார்.
இந்நாவல் 1959ம் ஆண்டு எழுதப் பட்டது. ஐம்பது வருடகால சரித்திரத்தை உள்ளடக்கியிருக்கிறது(1909-59).
20ம் நூற்றண்டின் ஆரம்பத்தில்,உயர்சாதியினரால் ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியுரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையிலுள்ள அத்தனை மக்களுக்கும் கல்வி வசதி பெறவேண்டும் என்ற அரச கொள்கையால் பலர் கல்வியறிவப் பெற்றனர். உலகத்தில் அடக்கு முறைக்காக நடக்கும், நடந்த போராட்டங்களைப் படித்தனர். அந்த படிப்புக்கள் இலங்கையிலுள்ள ஒடுக்கப் பட்ட மக்களின் மேம்பாட்டுக்காகவும் உதவுவதற்கான எழுத்துக்கள் அவர்களிடமிருந்து வந்தன.
1940ம் ஆண்டுகள் தொடக்கக் கட்டத்தில், மார்க்சிய அரசியல்,இலக்கிய ரீதியாகப் பல முற்போககுவாதிகள், சாதி மத பேதமற்று,சாதாரண மக்கள் அத்தனைபேரும் இந்தக் கொடிய சாதி முறையைத் தகர்க்கவேண்டும் என்று பாடாய்ப் பாடுபட்டார்கள். யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம், தொழிலாளர்கள்,ஏழைமக்கள் சாதி மக்கள் தங்களின் அடிமைத் தளையை அறுத் தெறிய மனிதத்திற்கு அப்பாலான அதர்மத்தை அடிப்படையாகக கொண்ட வர்ணாஸ்ரம முறைக் கோட்பாடுகளை அறியவேண்டும் என்று பரப்புரை செய்தார்கள்.
1959ம் ஆண்டு அகஸ்தியர் எழுதிய ‘எரிநெருப்பில் இடைபாதையில்லை’ என்ற நாவல் அக்கால கட்டத்தில் வடக்கில் நடைமுறையிலிருந்த சாதிக்கொடுமையை மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்திய நாவல் என்பது கருத்து.
இந்நாவலைப் பிரசுரிக்க மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது என்பதை அகஸ்தியர், சொல்லும்போது,’1964ல் இந்நாவலை வெளியிட முனைந்த’ தினகரன்’ பத்திரிகை,நாவலுக்கான முன்னுரையைப் பிரசுரித்ததோடு நிறுத்திக் கொண்டது. பின் இது சர்ச்சைக்குரிய நாவலாகி விட்டது’ என்கிறார்.
இந்நாவலின் வருகைக்குப்பின்தான் வடக்கில் சாதிக்கெதிரான் போராட்டங்களும் கோயிற் பிரவேசப்; வலுப்பெற்றன என்றும் சொல்கிறார்.இந்நாவல் 1968ம் ஆண்டு’ஈழமலர்’ பத்திரிகை நடத்திய அகில இலங்கை நாவல் போட்டிpயில் விசேட பரிசு பெற்றது.
இந்நாவலுக்கு அணிந்துரை எழுதிய மலைநாட்டு மன்ற செய்தி நிர்வாக ஆசிரியரான,ரா.மு. நாகலிங்கம் அவர்கள்,
‘வர்ணாசிரமம் என்ற பெயரில் நால்வகைச் சாதி படைத்து,அதன் அடிப்படையில் மனுக்குலத்தைக் கூறுபோட்டது இருக்கு வேதம்.வைசியரும் சூத்திரரும். ஊயர்சாதியினர் அல்லர் என்று இருக்கு வேதத்தில் வலிமை சேர்த்தான் கீதையில் (ராஜவித்யா,ராஜகுஹ்யயாகம்) கண்ணன்.பிராமணர்கள் உயர்சாதி,(அத் 2-100),சூத்திரனும் வைசியனும் குறைந்தசாதி.அதனால் அவர்களை,’தாசன்’,’தாசி’ என்றே அழைக்கவேண்டும் என்று (அத் 2-31,32) கண்ணனுடன் பங்காளிச் சண்டைபோட்டவன் மனு’ என்று விளக்குகிறார்.
திரு அகஸ்தியர் அவர்களின் சில பல படைப்புக்களைப் படித்திருக்கிறேன்.
அன்றைய யாழ்ப்பாணத்து சமுதாயத்தில் ஊறிப் போயிருந்த சாதிக் கொடுமையின் விகார முகத்தை அப்பட்டமான யதார்த்தமாகப் படைத்தவர் எனது மதிப்புக்குரிய திரு அகஸ்தியர் அவர்கள்.
இவரின் எழுத்துக்களில் என்னை மிகவும் ஈடுபடுத்தியது அவரின் கருத்துக்கள் மட்டுமல்ல. கதையை வாசகனின் உணர்வோடு இணைத்துச் செல்லும் பாணியுமட்டுமல்ல, அவரின் எழுத்தில் தவழ்ந்த மண்வாசனை படிந்த சொல் நடைகளுமாகும். இன்றைய நவநாகரிக வாழ்க்கைமுறையில்,பல்விதமான ஊடகங்களின் தாக்குதல்களால், மனிதர்களின் பேச்சுவழக்கு மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. எங்கள் முன்னோர் பேசிய பேச்சு வழக்குமுறை எங்களால் புரிந்து கொள்ளமுடியாதிருக்கிறது.
இன்றோ அல்லது இன்னும் சில வருடங்களிலோ இலங்கைத் தமிழ் நாவல்களின் வார்த்தை வடிவங்களும். அதன் பின்னணியிலுள்ள,சாதி, மத,வர்க்க வாழ்க்கைமுறையும் எனபது பற்றி யாரோ ஆய்வு செய்ய முற்பட்டால், அகஸ்தியர், என்னவென்று, வடபுலத்து பருத்தித் துறையையும், நெல்லியடியையும் தனது படைப்பில் வடித்த எழுத்து நடைமூலம் அழியாத ஆவணமாக்கியிருக்கிறார் என்பது புரியும்.
இவர் ஒரு ஆழ்ந்த பல முற்போக்குக் கருத்தாளமுள்ள இலக்கியக் கலைஞன். கவிதையோடு இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்த இவர் 360 சிறுகதைகள்,40 குட்டிக் கதைகள்,10 குறுநாவல்கள்,9 நாவல்கள்களை எழுதியிருக்கிறார்.
20 வானொலி நாடகங்கள்,நாட்டுக் கூத்து நாடகங்கள்,’உணர்வூற்றுரவகச் சித்திரம்’ என்ற புதிய இலக்கிய வடிவம்- என்றெல்லாத் எழுதியிருக்கிறார்.
கட்டுரை வடிவில் பல விடயங்களையடக்கிய-விமர்சனங்கள்,ஆய்வுகள்,தொடர்பாக 100 கட்டுரைகளைப் படைத்திருக்கிறார்.20 வானொலி நாடகங்கள்,நாட்டுக் கூத்து நாடகங்கள் இவரின் கருத்துக்கருவிலிருந்து உதித்த வேறு பல படைப்புக்களாகும். இலங்கையிலிருந்து அக்காலத்திருந்து வெளிவந்து கொண்டிருந்த பெரும்பாலான பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.
இலங்கையில் மட்டுமல்லாமல் கடல்கடந்த விதத்திலும் இவரின் கருத்துக்கள் பரந்து விரிந்தன என்பதற்கு, இவரின் எழுத்துக்கள், லண்டன் ப.pபி.சி தமிழோசை,இந்தியாவில்,’ தாமரை’,’எழுத்து’,’கலைமகள்’ ‘தீபம்’,’ஜீவா’,’கண்ணதாசன் போன்ற பத்திரிகைகளில் வந்தன என்பதே சான்றாகும்.
தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை அதாவது 45 வருடங்களுக்கு மேலாக இலக்கியத்துடன் இணைந்து எழுதிக் கொண்டிருந்தவர்.அக்கால கட்டத்தில்;,இருபது புனைப் பெயர்களில்; பல பத்திரிகைகளில் எழுதிக் குவித்த ஒரு தமிழ் எழுத்தாளர் என்று இவர் ஒருவதை;தான் இதுவரை கேள்விப் பட்டிருக்கிறேன்.
இவர் ஒரு சாதாரண முறபோக்குத் தமிழ் எழுத்தாளர் மட்டுமல்ல,இவர் கர்நாடக இசையில் பரிட்சயம் பெற்றவர்,மிருதங்கம் வாசித்தவர்.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தவர்.
இவரது படைப்புக்கள் சிங்களம். மலையாளம், ரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன.
உலகம் பரந்திருக்கும் தமிழ் மக்களில் பலர் இன்னும் தங்கள் பெற்றோரின் சிந்தனையான ‘சாதியக்’ கோட்பாடுகளை’ அறிந்து கொள்கிறாhகள்;. அவை மனித வளர்ச்சிக்கு, ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவிருக்கும் என்பது ஜனநாயக நாடுகளில் வாழும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
இலங்கைத் தமிழ் சமூகம் கடந்த முப்பது ஆண்டுகள் நடந்த போரால் சிதறி, சிதைந்து,சிந்தனை மழுங்கிப்போயிருக்கிறது. அவர்களின் ஒற்றுமையைத் திரட்டித் தமிழச் சமுதாயத்தை முன்னேற்றாமல் போலித் தமிழ் தேசியவாதிகள்,பழையபடி சாதிப் பிரிவுகளைச் சமயக் கோயில்கள், பிராந்தியவெறிக் கோட்பாடுகள், தேர் இழுப்புக்கள் மூலம் நிலைநிறுத்திவருகிறார்கள்.
1959ம் ஆண்டில் அகஸ்தியர் எழுதிய,’ எரியும் நெருப்பில் இடைவெளியில்லை’ என்ற நாவலில்,’ஆன்மீகவாதிபோல நடேசபிள்ளைத்; தன்னை வைத்துக்கொண்டல்லவா உலகத்தை எடைபோட்டுக் கொண்டிருக்கிறார்’ (பக்48) என்று குறிப்பிடுவது இன்றிருக்கும்; பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
இன்றைய தலைமுறைக்குப் பழைய இலக்கியங்களை திரும்பவும் அறிமுகப் படுத்தவேண்டியதும் அந்த இலக்கியங்கள் சொல்லும் சரித்திரத்திரத்திலிருந்து பல பாடங்களைப் படிக்கவேண்டும் என்பதை ஊக்குவிப்பதும் முற்போக்குச் சிந்தனை படைத்த புத்திஜீவிகளின் கடமை என நினைக்கிறேன்.
ஒற்றுமையற்ற சமுதாயம்,விடாப்பிடியாக,சாதி சமய,பிராந்திய வேறுபாடுகளைத் தொடர்ந்தால் ஒன்றுபட்டு வேலைசெய்து அந்தச் சமுதாயம் உயர்நிலை அடைவது மிகவும் சிரமம். இன்று அரசில்வாதிகள்,சமயத்தையும், மொழியையும்;,பிராந்திய வேறுபாடுகளையும் தங்கள் சொந்த நலத்திற்காகப் பாவிக்கிறார்கள்,அந்தக் கேவலமான அரசியலால் தமிழ்ச் சமுதாயம் அடையக் கூடிய மேன்மைநிலை மறுக்கப்படுகிறது என்பதை இளம் தலைமுறையுணரவேண்டும். இளம் தலைமுறை உணர்ந்த மாற்றங்கள் நடக்காத வரையில் இலங்கையில் தமிழரின் சரித்திரம் ஒரு இருண்டகாலத்தையே நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் என்பது எனது கருத்து.
அனுப்பியவர்:NavajothyBaylon@hotmail.co.uk