எழுத்தாளர் சுஜாதா பற்றிய நினைவுகள்…

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3!
எழுத்தாளர் சுஜாதாஎழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தின் முக்கிய அம்சங்களாக நான் கருதுவது: ஆழமான விடயங்களை மிகவும் இலகுவான நடையில் சாதாரண வெகுசன வாசகர்களுக்கு வழங்கியது, சிறு சிறு வசனங்களை வாசகர்களைக் கவரும் வகையில் அவற்றில் புதுமைகளைப் புகுத்தி மொழிக்கு வளம் சேர்த்தமை, பல்வேறு அறிவியல் துறைகளையும் சாதாரண வெகுசன ஊடக வாசகர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான , புரிந்துகொள்ளும் நடையில் வழங்கியமை இதன் மூலம் மொழியை வளப்படுத்தியதுடன், ஒரு தலைமுறையை அறிவியல் எழுத்துகளில் ஆர்வம் கொள்ள வைத்தமை ஆகியவற்றைக் கூறுவேன்.


விஞ்ஞானச் சிறுகதைகள், நாவல்கள், மர்ம நாவல்கள், சங்க இலக்கியப் படைப்புகள் இவற்றையெல்லாம் வெகுசன வாசகர்கள் ஆர்வத்துடன் வாசிப்பதற்கு அவரது எழுத்துகள் தூண்டின. அவர் பாதிப்பு எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


என்னைப்பொறுத்த வரையில் வாசிப்பின் வளர்ச்சியில் அவரது எழுத்துகளுக்கும் ஒரு கட்ட முக்கியத்துவமுண்டு. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்று பல்வேறு படிக்கட்டுகளை உள்ளடக்கியதுதான் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியும். அவ்வளர்ச்சியில் சுஜாதாவின் முக்கிய பங்களிப்பாக வெகுசன இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்பைக் குறிக்கலாம். ஒருவர் தீவிர வாசிப்புக்கு எடுத்த எடுப்பில் நுழைந்து விடுவதில்லை. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் , வெகுசன இலக்கியம் என்று பல படிகளைக் கடந்துதான் அந்நிலைக்கு வருகின்றார். அவ்விதம் வருபவர் கூட எப்பொழுதுமே தீவிர வாசிப்புக்குள் மூழ்கிக் கிடப்பதில்லை. அவ்வப்போது அவ்வாசிப்பிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக எளிய, இலேசான வாசிப்பிலும் ஈடுபடுவதுண்டு. அப்பொழுதும் கை கொடுப்பவை இவரைப்போன்றவர்களின் எழுத்துகளே. வாசிப்பின் ஒரு படியில் இன்பம் தந்த படைப்புகள் என்பதால் , பின்னர் அவை அழியாத கோலங்களாக வாசகர்கள்தம் உள்ளங்களில் நிலைத்து நின்று விடுவதால், அந்நினைவுகளுக்காக இத்தகைய படைப்புகளை அவ்வப்போது தட்டிப்பார்ப்பதுமுண்டு. அவ்வகையில் இவ்வகை எழுத்துகள் முக்கிய பங்கினையாற்றுகின்றன.


என் வாசிப்பின் ஆரம்பக்கட்டத்தில் சுஜாதாவின் ‘நைலான கயிறு’, ‘அனிதா இளம் மனைவி ‘, ‘பதினாலு நாட்கள் (குமுதம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தவை), ‘நில் கவனி தாக்கு’ (தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்த தொடர்கதை) ஆகியவற்றை விரும்பி வாசித்துள்ளேன். ஆனந்த விகடனில் வெளியான அவரது ‘பாலங்கள்’ என்னும் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளிலொன்று. ‘நைலான் கயிறு’ பின்னர் குமுதம் சஞ்சிகையில் சித்திரக்கதையாக வெளிவந்ததாகவும் அறிகின்றேன். இந்நாவலிலேயே அவரது புகழ்பெற்ற கதாபாத்திரங்களான வசந்த் / கணேஷ் அறிமுகமாகின்றார்கள். இதுவே அவரது முதல் நாவலும் கூட.


எனக்கு எழுத்தாளர் சுஜாதாவுடன் பெரிதும் தொடர்பு இருந்ததில்லை. அவர் ‘அம்பலம்’ இணைய இதழில் செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஓரிரு தடவைகள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டிருக்கின்றோம். ஒருமுறை அவரிடம் ‘பாலம்’ கதை பற்றிக் குறிப்பிட்டபோது , அதைப் படித்துவிட்டு வாசகரொருவர் தன்னைத்தாக்க வீடு தேடி வந்ததாக வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் என் இலக்கிய வாழ்வில் சுஜாதா அவர்களை மறக்க முடியாத ஒரு விடயம் அவரது மறைவுக்குப் பின்னர் நடந்தது. ஆழி பப்ளிஷர்ஸ் (செந்தில்நாதனின்) மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து சர்வதேசரீதியாக நடத்திய அறிவியல் சிறுகதைப்போட்டியில் எனது அறிவியற் சிறுகதையான ‘நான் அவனில்லை’ என்னும் சிறுகதை வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் விருதுகளைப்பெற்ற சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத்தொகுதி ஆழி பப்ளீஷர்ஸ் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ngiri2704@rogers.com