எழுத்தாளர் தேசபந்து தெ. ஈஸ்வரன்

குரு அரவிந்தன் – சென்ற மாதம் அமரரான திரு. ஈஸ்வரன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுதிய கட்டுரை ஒன்று  அவரது நினைவாக இக்கட்டுரை! –

மதிப்புக்குரிய மனிதர் தெ. ஈஸ்வரன் அவர்கள் கொழும்பில் இருந்து தனது சிறுகதைத் தொகுப்பைத் தனது நண்பர் மூலம் எனக்கு அனுப்பியிருந்தார். அதனால் அவரது சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதற்கதையை வாசித்ததில் ஏற்பட்ட ஆர்வம் எல்லாக் கதைகளையும் வாசிக்கத் தூண்டியது. வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருக்கும் இவரது எழுத்தாற்றல் இவரை ஒரு படைப்பாளியாக இனங்காட்டி என்னை வியக்க வைத்தது. தனது வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியிருக்கும் மனிதாபிமானியின் இந்த நூலைப்பற்றி எழுத வேண்டும், இதைக் கட்டாயம் ஆவணப் படுத்த வேண்டும், இச்சிறுகதைகளை வாசிப்பதால் வாசகர்கள் பலனடைய வேண்டும் என்பதால் இதை எழுதுகின்றேன்.

இந்த நூலுக்கு ‘ஈஸ்வரனின் சிறுகதைகள்’ என்று தலைப்புக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. வானதி பதிப்பகத்தார் அழகாக ஒழுங்கமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். காந்தளகம் நிறுவனத்தினர் இந்த நூலை அச்சேற்றி இருக்கிறார்கள். இதற்கான படங்களை ஓவியர் ராஜே அவர்கள் வரைந்திருக்கிறார்கள். இதற்கான அணிந்துரைகளை சொல்வேந்தர் சுகிசிவம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர் பிரபாகரன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இவர் நல்ல நட்புக்கு முதலிடம் கொடுப்பதால் தனது நண்பர்களாகிய எழுத்தாளர் ஈழத்து சோமு என். சோமகாந்தன், மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். திரு. ஈஸ்வரனின் பதினாறு சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

சின்னச் சின்னச் சம்பவங்கள், சிறிய அதிர்வுகள், வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் பார்வை, மனிதவாழ்வின் தீராத பிரச்சனைகள், சோகம், ஆசை, எதிர்பார்ப்பு இவை எல்லாவற்றையும் ஆசிரியர் ஈஸ்வரன் பதிவு செய்திருப்பதாக சுகி சிவம் அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் கன்னி முயற்சி, இது போன்ற  ஆக்கங்களை அடிக்கடி படைத்து வாசகர் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்று வீரகேசரி வார இதழ் ஆசிரியர் ஆர். பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது இதனைப் பொழுது போக்கிற்கான படிப்பு என்று எண்ணாமல், வாழக்கைக்குப் பாடமாகத் தெரிகின்ற கதைகள் என்று எண்ணிப் படிக்குமாறு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே நூலாசிரியர் பற்றி சிறு குறிப்பு ஒன்றைத் தருகின்றேன்.

எழுத்தாளர் தேசபந்து தெ. ஈஸ்வரன்இச் சிறுகதைத் தெகுப்பின் நூலாசிரியர் தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் அவர்கள் 1942 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் வல்லநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர். 1949 ஆம் ஆண்டு கொழும்புக்குச் சென்ற இவர் புனித பெனடிக்ற் கல்லூரியில் கல்வி கற்றார். அதன்பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கற்றுத்தேர்ந்து இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர். பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பிற்கு வந்த இவர் இவரது தந்தையால் நவம்பர் 1963 ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்ட தேயிலை ஏற்றுமதி நிறுவனமான ‘ஈஸ்வரன் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இன்று சுமார் 50 நாடுகளுடன் ஏற்றுமதி உறவினைக் கொண்டுள்ள வர்த்தக நிறுவனமாக இது திகழ்கின்றது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்த இவரது தந்தையார் பற்றி இச் சந்தர்ப்த்தில் குறிப்பிட வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகப் பிரமுகர்களிடையே பிரபல்யமானவர் வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை. இலங்கை அரசிடமிருந்து தேசபந்து விருதினைப் பெற்ற இவர், தமிழகத்தின் திருச்செந்தூர் மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகில் உள்ள சிற்றூரான பன்னம்பாறை இவரது பிறப்பிடமாகும். 1911 ஆம் ஆண்டு ஒக்ரொபர் 7 திகதி பிறந்த வி.ரி.வி.தெய்வநாயகம் பிள்ளையின் வாழ்வும் உழைப்பும் இன்று வி.ரி.வி. நிறுவனத்தின் உரமாக இருக்கின்றது.

திரு. ஈஸ்வரனின் சிறுகதைகளின் கருப்பொருட்கள் அவரது பல்வேறு அனுபங்களைக் கொண்டதாக இருக்கின்றன. சிறுகதைளின் தளம் இலங்கை, இந்தியா, உலகம் என்று விரிந்து செல்கின்றது. ஆத்மீகத்தில் ஈடுபாடு கொண்ட, மனிதாபிமானியான இவரது இலக்கிய ஆக்கங்களை தினக்குரல், வீரகேசரி, ஞானம், கலைமகள் போன்ற இதழ்களில் நான் வாசித்திருக்கின்றேன். ஈழத்து எழுத்தாளர் பலருக்கு இவர் நூல்கள் வெளியிடுவதற்கு தானாகவே வலிந்து உதவிகள் செய்திருக்கின்றார். கலைமகள் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் எனது குறுநாவலான ‘தாயுமானவர்’ என்ற குறுநாலுக்குப் பரிசு கிடைத்த போது பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் கனடாவில் எனது 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டி விழா எடுத்த போது திரு. ஈஸ்வரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் ‘கனடா தமிழர் இலக்கியம்’ என்ற நூலில் இடம் பெறச் செய்தது எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றேன். இச் சிறுகதைத் தொகுப்புப் போல இன்னும் பல ஆக்கங்கள் அவரிடம் இருந்து வெளிவர வேண்டும் எனத் தமிழ் இலக்கிய ஆர்வர்கள் சார்பாக எதிர்பார்க்கின்றேன்.

kuruaravinthan@hotmail.com