பதிவுகள்: அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’. விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம். தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம். இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம். இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
தேவகாந்தன்: தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோதுதான் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீட்டுவிழா (பெப். 27, 2016ல் என்று ஞாபகம்) காலச்சுவடு பதிப்பகம் சார்பில் சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடந்தது. அந்நிகழ்வுக்குப் போக முடியாதிருந்தபோதும், மறுநாள் மாலைக்குள்ளேயே நூலை நான் வாசித்துவிட்டேன். அதுபற்றிய என் அபிப்பிராயங்களை அன்று பின்மாலையில் சந்தித்த சில நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன்.
ஒரு வாசகனாய் அந்த நூலை வாசித்தபோது என் ரசனையில் அதன் பின்னைய மூன்றில் இரண்டு பகுதியின் உணர்வோட்டத்தில் அது விழுத்தியிருந்த மெல்லிய பிரிநிலை துல்லியமாகவே தெரிந்தது. நீண்ட இடைவெளிவிட்டு எழுதப்படும் ஒரு நூலும் அம்மாதிரி வித்தியாசத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினியின் சுகவீனம் அந்த உணர்வுநிலை மாறுபாட்டின் காரணமோவெனவும் அப்போது நான் யோசித்தேன். அது எது காரணத்தால் நடந்திருந்தாலும் அந்த உணர்வு மாற்றம் அங்கே நிச்சயமாக இருந்தது.
இதற்குமேலே நாமாக யோசித்து எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எழுதியவர் ஜீவியந்தராக இருக்கிறபட்சத்தில் அந்நூல் குறித்து எழக்கூடிய சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் அதுகுறித்த சந்தேகங்களையும், கேள்விகளையும் நூலின் தரவுகள்மூலமாகவேதான் நாம் அடையவேண்டியவர்களாய் உள்ளளோம். ஆசிரியர் அந்நூலை எழுதத் தொடங்கிய காலம், எழுதிமுடித்த காலம், பிரசுரப் பொறுப்பைக் கையேற்றவர் யார், எப்போது என்ற விபரம், பிரசுரத்திற்கு கையளிக்கப்பட்ட காலம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பதிவு பதிப்பினில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது முக்கியமான அம்சம். அதுவும் இல்லாத பட்சத்தில் அப்பிரதி சந்தேகத்திற்கு உரியதுதான். அதற்கும் நியாய வரம்புகள் உள்ளன. அந்த நியாய வரம்புகளை எமது நிலைப்பாட்டினடியாக அல்லாமல் உண்மையின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென்பது இதிலுள்ள முக்கியமான விதி.
இந்நூல்பற்றி சொல்லப்பட்ட பல்வேறு குறைபாடுகளும் இந்த விதிக்குள் அடங்கியிருக்கவில்லை என்றே தெரிகிறது. எழுந்தமானத்தில் குறைகள் சொல்லப்பட்டிருந்தன. என்னளவில் அந்த நூல் உண்மையைக் கூறியுள்ளதா என்பதே முதன்மையான அக்கறையாக இருக்கிறது. கூறியுள்ள முறையிலும் அதே அவதானம் எனக்கு உண்டு. இந்த இரண்டு விஷயங்களிலும் தேறியதாகவே தமிழினியின் இந்த நூலை நான் கொள்கிறேன். சென்ற ஆண்டு இறுதியில் வன்னிப் பகுதியில் ஏறக்குறைய ஒரு அநாமனாகவே நான் அலைந்த ஒரு மாதத்துக்கும் மேலான காலப் பகுதியில் நான் கேட்டு, விசாரித்து அறிந்த உண்மைகளை, ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ ஒரு தடாலடியாக வெளியிட்டிருந்தது என்பதே அதை வாசித்து முடித்த மறுகணத்தில் என்னில் தோன்றிய அபிப்பிராயமாக இருந்தது.
நூலின் உணர்வோட்டத்திலிருந்த மாறுபாடு இடைச் செருகலால் ஏற்பட்டதென்று கூறப்பட்டதை நிச்சயமாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தமிழினி எழுதிய கவிதைகள், சிறுகதைகள் சிலவற்றை வாசித்து அவை வெளிவந்த காலத்தில் நான் வியந்திருக்கிறேன். தமிழினியின் கவிதையொன்று முகநூல் பக்கத்தில் வெளியானபோது அதன் சிறப்புக் குறித்து பின்னூட்டமிட்டேன். ‘போருக்குப் புதல்வரைத் தந்த…’ என்று அந்தக் கவிதை தொடங்கியிருக்கும். ‘அம்பகாமம் காட்டில்…’ என்று தலைப்பிட்டு பதிவுகள் இணையதளத்தில் வந்திருந்தது என்று நினைக்கிறேன். அப்பின்னூடடத்திற்கான மறுமொழியைப் பெற்றபோதுகூட அந்தத் தமிழினிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த தமிழினியென நான் அறிந்திருக்கவில்லை. தமிழினியின் இலக்கிய நடையை அறிந்திருந்த எனக்கு நூலின் இடைச்செருகல் தவறியிருக்கவே முடியாது. மேலும் உணர்வுப் பிரிநிலையின் காரணம்கூட, தமிழினத்தின் பாதுகாப்பென்று நம்பியிருந்த ஓரிடம் அவ்வாறில்லாமலாகிய ஒரு தார்மீகக் கோபத்திலும் ஏற்படமுடியும்.
மேலும் நூலின் முக்கியத்துவம் எங்கே இருக்கிறதென்றால், புலம்பெயர் களத்திலிருந்து அண்மையில் வெளிவந்த நாவல்கள் பலவும் ‘ஏன் எங்களுக்கு இவ்வாறு ஒரு தோல்வி ஏற்பட்ட’தென்ற அதிர்வையும், ‘எப்படி ஏற்பட்ட’தென்ற மலைப்பையும் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில், அதன் காரணங்களை முழுமையுமாக இல்லாவிட்டாலும் மிகத் தெளிவாக தமிழினியின் நூல் வெளியிட்டு இருந்ததிலேயே ஆகும். இது பெரிய அதிர்வுகளை என்னில் நிச்சயமாக ஏற்படுத்தவில்லை. காரணம், இந்த உண்மைகளை கள ஆய்வில் நான் கண்டடைந்திருந்தேன் என்பதோடு, வேறுபிற நூல்களிலும் புலிகளின் தோல்விக்கான காரணங்கள் இவ்வாறே விளக்கப்பட்டிருந்தன என்பதை முக்கியமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
புனைவு நூல்களினால்கூட காட்டியிருக்க முடியாத யதார்த்தத்தை தமிழினியின் நூல் காட்டியிருக்கிறது. உணர்வுரீதியான கால்விலங்குகள் இன்னுமிருந்து அவ்வாறு செய்யவிடாது புனைவுப் படைப்பாளிகளைத் தடுத்திருக்க முடியும். ‘ஈழத்துப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற சி.புஸ்பராசாவினதோ, ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற கணேசன் ஐயரினதோ, ‘மழையைத் தராத வானம்’ என்ற பால நடராச ஐயரினதோ, ‘நான் நடந்து வந்த பாதை’ என்ற பொன்னுத்துரையினதோ நூல்கள் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால நடைமுறைத் தவறுகளை தெளிவாகவே வெளியிட்டிருக்கின்றன. சம்பவங்களின் உண்மை-பொய் பற்றி இங்கே நான் அலச வரவில்லை. அவைபோன்றதே தமிழினியினுடைய வெளிப்படுத்துகையும் இருந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். இதிலுள்ள முக்கியத்துவம் என்னவெனில் ஈழப் போராட்டத்தின் இறுதிவரை யுத்த களத்தில் நின்றிருந்தவரின் நூலாக இது இருக்கின்றதென்பதே ஆகும்.
இதுபோல இயக்கத்தில் நேரடியாகத் தொடர்பற்று தொண்டு நிறுவனமொன்றில் கடமையாற்றிய ந.மாலதி எழுதிய ‘எனது நாட்டில் ஒரு துளி நேரம்’ என்ற நூலும் இறுதி யுத்தத்தையும், அதன் பின் சிறிது காலத்துக்குமான நிகழ்வுகளையும் விளக்குகின்றது. அது சில உண்மைகளை பூடகமாக வெளியிட்டிருந்த நேரத்தில், தமிழினியின் நூல் அவற்றை வெளிவெளியாகச் சொல்லியிருந்தது என்பதைத்தான் இவற்றிற்கிடையேயான பெரிய வித்தியாசமாக நான் பார்க்கிறேன். ந.மாலதியிடத்தில் நிகழ்வுகளை ஒரு ஆய்வு நிலைப்பட்டு வெளியிட்ட தன்மை காணப்பட்டதெனில், தமிழினியிடத்தில் போராட்ட காலத்தின் மொத்த நிகழ்வுகளிலிருந்தும் தன்னை விலக்கி நின்றுகொண்டு புலிகளின் பிழைகளிலும் தவறுகளிலும் காட்டிய கோபத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
இன்னுமொன்று. இந்த இடத்தில் தமிழ்க்கவியின் ‘ஊழிக் காலம்’ நாவலையும் என்னால் நினைத்துக்கொள்ள முடிகிறது. அது இறுதி யுத்த காலத்தின் இறுதிநாள் சம்பவங்கள்வரை மக்கள் பட்ட அவலங்களைத் தொகுத்துத்தந்த நூல் மட்டும்தான். அதை ஒரு அனுபவப் பகிர்வு நூலாக அடையாளப்படுத்தியிருந்தாலோ, வடிவமைத்திருந்தாலோ தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ வெளிவந்தபோது இவ்வளவு உக்கிரமாய்த் தெரிந்திராது என்றே நினைக்கிறேன். மட்டுமல்ல, ‘ஊழிக் கால’மே ஒரு முக்கியமான நூலாகவும் பேசப்பட்டிருக்கும். இவைபோல இன்னும் பல அனுபவப் பகிர்வுகள் வெளிவர வேண்டும். பல பார்வைகளினூடாக வெளிவர வேண்டும். உண்மையை அவ்வளவு சுலபத்தில் யாரும் அடக்கி வைத்துவிடமுடியாது. தேடலில் உள்ளவர்களுக்கு அப்போது அந்த உண்மை அகப்படப் போகிறது. அது வரலாறெழுதியலுக்கும் மிக அவசியமான பங்களிப்பாக இருக்கும்.
பதிவுகள்: அண்மையில் இலண்டனில் விம்பம் அமைப்பினரால் நடாத்தப்பட்ட மூன்று நாவல்கள் அறிமுக விழாவில் உங்களது ‘கனவுச்சிறை’யுடன் ‘விடமேறிய கனவு’ மற்றும் ‘லண்டன்காரர்’ ஆகிய நூல்களும் கவனத்துக்கெடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த நாவல்களைப்பற்றிய உங்கள் கருத்துகளைச்சிறிது கூறுவீர்களா?
பதிவுகள்: விம்பம் அமைப்பினரின் சார்பில் 2015 அக்டோபர் 10ம் தேதி லண்டனில் நிகழ்ந்த மூன்று நாவல்களின் அறிமுகம்-வெளியீடு-கருத்தாடல் நிகழ்வில் ‘கனவுச் சிறை’யோடு ‘விடமேறிய கனவு’ மற்றும் ‘லண்டன்காரர்’ நூல்களும் இடம்பெற்றன. ‘லண்டன்காரர்’பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ‘விடமேறிய கனவு’ நாவலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தேவகாந்தன்: ‘லண்டன்காரர்’ ஒருவகையில் மரபார்ந்த தமிழ் நாவல்களின் போக்குகளையெல்லாம் உடைத்துக்கொண்டு தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்திய நூல். அதன் கட்டமைப்பும், நடையும் எனக்குப் பிடித்தே இருந்தன. ‘விடமேறிய கனவு’ இறுதி யுத்தத்தின் பின்னாக கைதுசெய்யப்பட்டவர்களின் தடுப்பு முகாம் வாழ்க்கை நிலைமைகளையும், சிலர் அங்கிருந்து எவ்வாறு வெளியேறித் தப்பினார்கள் என்பதையும் தெரிவிக்கின்ற நூலாக இருந்தது. ‘நஞ்சுண்ட கா’ட்டினளவுகூட இந்நாவலில் கலையம்சம் காணப்படவில்லை. அதில் வரும் அக்கா பாத்திரம் முக்கியமானவொரு படைப்பு. ஆனால் ‘விடமேறிய கனவு’ வெறும் விபரங்களின் தொகுப்பாக சுருங்கிக் கிடந்தது. மிகவும் தெளிவான நடையும், நிகழ்வுகளின் மேலாக விரிந்த பார்வையும் குணா கவியழகனுக்குச் சொந்தமாக இருக்கின்றன. ஒரு நிகழ்வின் முன்-பின் கண்ணிகளை நாவலோடு இணைக்க அவரால் மிகச் சாதாரணமாக முடிந்துவிடுகிறது. முகாம் கட்டிடத்துக்கு வெளியிலான ரஹீமின் பாலுறவு சார்ந்த நடத்தைகள், நாவலில் இயல்பாக இணையும் விதமாய் குணா கவியழகனால் புனைவுபெற்றிருப்பதை இங்கே சொல்லலாம்.
3.பதிவுகள்: நீங்கள் தொடர்ச்சியாக பல்வகையான இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள். கனடாவில் வெளியாகும் ஊடகங்களில் தொடர்கள் எழுதி வருகின்றீர்கள். தொடர்ச்சியாக நாவல்களை எழுதி வருகின்றீர்கள். இவை தவிர ‘கூர்’ கலை இலக்கிய மலரை ஆண்டுதோறும் வெளியிட்டு வந்திருக்கின்றீர்கள். அண்மையில் தமிழகத்தில் உங்கள் புதிய நாவலும் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளியாகியுள்ளது. ஓரளவு இடையீடற்ற எழுத்து முயற்சிகள் உங்களிடம் இருப்பதாகச் சொல்லலாம். இந்த நிலையில் உங்கள் வாசிப்பு எவ்வாறு தொடர்ந்து செல்கிறது?
தேவகாந்தன்: எப்போதும் எழுத்து முயற்சியின்போது வாசிப்பை நான் மேற்கொள்வதில்லை. படைப்புக் கணமும், வாசிப்பு நிலைமையும் வேறுவேறானவை. இந்த இரண்டு நிலைமைகளுக்குள்ளும் மாறிமாறிக் கூடுபாயும் திறமை எனக்கில்லை. என் தேர்வுகளும் வாசிப்புகளும் வித்தியாசமானவை. காத்திரமான நாவல்களை ஒரு தடவைக்கு மேலேயும் நான் வாசித்திருக்கிறேன். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுர’த்தை மூன்று தடவைகள் வாசித்தேன். அதுபோல் ரசனைக்காக வாசித்தவைகளும் உண்டு. யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ அந்தவகையானது. மொழிபெயர்ப்பு நூல்களை எடுத்துக்கொண்டால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வந்த ஓரன் பாமுக்கின் ‘இஸ்தான்புல்’, யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் வந்த ஓ.வி.விஜயனின் ‘கசாக்கின் கதை’ இரண்டும் அண்மையில் வாசித்தனவற்றுள் மிக முக்கியமானவை. இந்த நூல்களின் வாசிப்புப் பரவசம் தணிந்து தவிர வேறு எந்த நூலுக்குள்ளும் புகுந்துவிட முடியாதளவு தீவிரம் கொண்டவை அவை. அவ்வாறான நூல்களை வாசிக்கும்போது புனைவெழுத்தில் கவனம் செலுத்தமுடியாது. புனைவெழுத்தில் கவனம் குவித்திருக்கும்போது அவ்வாறான நூல்களை வாசித்துவிட முடியாது. வாசிப்பு படைப்பு இரண்டுமே எனக்கு முக்கியமானவை. ஒன்றை விட்டுத்தான் ஒன்றினுள் நான் நுழைகிறேனென்றாலும், ஒன்றின் அவசம் தீர்ந்தவுடன் மற்றதனுள் ஓடிவந்து மறுபடி நுழைந்துவிடுகிறேன் என்பது பெரிய சங்கதியல்லாவா?
4.பதிவுகள்: நல்லது. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என இலக்கியத்தின் பல்வகை வடிவங்களிலும் நிறைய ஆக்கங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அண்மைக்காலமாக உலக இலக்கியங்கள் பலவற்றின் தரமான மொழிபெயர்ப்புகளும் வெளியாவதைப்பார்க்கின்றோம். இவ்விதமானதொரு சூழலில் எவ்விதம் படைப்புகளை உங்கள் வாசிப்புக்காகத்தேர்வு செய்கின்றீர்கள்? அவ்விதம் தேர்வு செய்யப்படும் படைப்புகளை எவ்விதம் வாசிப்பீர்கள்? சிலர் மேலோட்டமாக வாசிப்பார்கள். இன்னும் சிலரோ ஆறுதலாக வரிகளைத் தவிர்த்து விடாமல் வாசிப்பார்கள். நீங்கள் எவ்விதம் வாசிப்பீர்கள்? உங்கள் வாசிப்பின் பழக்கம் எப்படி? தேர்வு எப்படி? மிக விரைவாக வாசிப்பீர்களா?
தேவகாந்தன்: நான் எவ்வாறு வாசிக்கவேண்டுமென்பதை அந்தந்த நூல்களே தீர்மானிக்கின்றன. அட்டைப் படத்தையும், பின்னட்டையின் குறிப்புகளையும், அந்நூலின் மதிப்புரையையும் பார்த்துவிட்டு நூலை விமர்சனம் செய்கிற அல்லது அபிப்பிராயம் சொல்கிறவர்கள் தமிழ்ப் பரப்பில் அதிகம். ஆனால் என் இயல்பின் வேகத்தில் வாசிக்காத எதுபற்றியும் நான் கருத்துச் சொன்னதில்லை. சொல்லாமல் விட்டவையெல்லாம் வாசிக்கப்படாதவை என்றும் அர்த்தமில்லை. படித்தேன், பிடிக்கவில்லை, விட்டுவிட்டேன். அவ்வளவுதான். என் தேர்வில் வரும் நூல்களை ரமணிசந்திரன் அல்லது பட்டுக்கோட்டை பிரபாகர் அல்லது ராஜேஸ்குமார் வகையறாக்களின் கணக்கில் வாசித்துவிட முடியாது. அவை தம்முள் நுழைவதற்கே சில அடிப்படைத் தகைமைகளை வாசகனிடமிருந்து கோரிநிற்பவை. ஆழ்ந்த வாசிப்பனுபவம் இல்லாவிட்டால் அதன் முன்படிகளைக் கடப்பதுகூட அரிதாகவே இருக்கும். கற்களில் இடறிவிடாது நடப்பதுபோல சொற்களில் இடறிவிடாத அவதானம் அங்கே அவசியம். அவதானமாக வாசிப்புள் புகுகின்றபோதுதான் அதன் சுகத்தையே அனுபவிக்க வாசகனால் முடியும். வெகுஜன எழுத்தில் வரும் நல்ல நாவல்களின், உதாரணமாக ஜெகசிற்பியன், பாலகுமாரன் போன்றோரது நூல்களின் வாசிப்பை, ஒரு குதிரையிலேறி ஒரு வட்டம் சுற்றிவந்து சூழலைப் பார்ப்பதுபோன்ற பயண அனுபவத்தைக் கொடுப்பவையெனக் கொள்ளலாம். ஏறிவிட்டால் ஓட்டம்தான். கிர்ரென்று இருக்கும். முடிவு வந்துவிடும். வெறுமை எஞ்சிநிற்கும். காலம் விரயமாகிநின்று கதறும்.
இலக்கிய நூல்களின் வாசிப்பென்பது யானையிலேறி பயணம் செய்வது போன்றது. கோணங்கியின் பிரதி யானையெனில் அது பயணி ஏறுவதற்கு எந்த வகையிலும்கூட பணிந்துகொடுத்துவிடாமலே நிற்கும். ஏற முடிந்த பயணி ஏறிக்கொள்ள வேண்டியதுதான். முயன்றுதான் ஏறவேண்டும். ஏறினால்தான் பயணம் சுகம் செய்யும். ஒரு யானையின் பிரமாண்டத்திலேறி சூழல் பார்த்த இன்பமாயிருக்கும் அது. பாழி, த போன்ற கோணங்கியின் நாவல்கள் அத்தகையவை.
ஜெயமோகனுடைய எழுத்துக்கள் அப்படியானவையல்ல. அவையும் யானைத்தனம் கொண்டவைதான். ஆனாலும் பயணியை இனங்கண்ட யானைபோல, வாசகன் ஏற அவரது படைப்புக்கள் இடங்கொடுக்கும். அவரின் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர் எல்லாம் அப்படியானவை. அவற்றின் மேலான பயணங்கள் வித்தியாசமானவை. சுகமானவை. ஆக, என் வாசிப்புகள் அவசரத்தில் முடித்துவிட முடியாதவை. எந்தப் பிரதியும் என் வாசிப்புக்குச் சவாலாக நிற்கவில்லையாயினும், என் குவிந்த கவனத்தை நிர்ப்பந்தித்த எழுத்துக்கள் தமிழில் இருக்கவே செய்கின்றன. அவற்றையே தேடுகிறேன். அவற்றையே வாசிக்கிறேன்.
5.பதிவுகள்: தாய்த்தமிழகம் என்போம். உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களைப்பொறுத்தவரையில் அவர்களை வாசிப்பு மற்றும் எழுத்தனுபவத்தைப்பொறுத்தவரையில் தமிழத்தில் வெளியாகும் ஊடகங்கள், நூல்கள் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உங்களைக் கவர்ந்த , நீங்கள் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் எனக்கருதுகின்ற தமிழகத்துப்படைப்பாளிகள் பற்றிச்சிறிது கூறுங்களேன். அறிய ஆவலாயுள்ளோம்.
தேவகாந்தன்: இப்போதெல்லாம் அப்படி இவரிவர் சிறந்த நாவலாசிரியர் என்று அறுதியாக எதையும் சொல்லிவிட முடிவதில்லை. இவரிவர் சில நல்ல நாவல்களை எழுதியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லமுடிகிறது. நல்ல நாவல்கள் எனும்போது, என்றைக்குமான நல்ல நாவல்கள் என்றும், காலகட்டங்களுக்கான நல்ல நாவல்களென்றும் வகுத்துக்கொள்ளவேண்டும். என்றென்றைக்குமான நல்ல நாவல்களின் பட்டியலும் காலப்போக்கில் மாறக்கூடுமெனினும் அவ்வாறு ஒரு பகுப்பு இருக்கவே செய்கிறது.
உதாரணமாக தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ சிறந்த நாவலாக இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரும்ப தி.ஜா.வின் நாவல்களை வாசித்தபோது ‘மரப்பசு’ சிறந்ததாகத் தென்பட்டது. சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ சிறந்ததாக இருந்தது ஒரு காலத்தில். பின்னால் ‘ஜேஜே சில குறிப்புகள்’ அந்த இடத்தைப் பிடித்தது. கடைசியாக ஒரு வாசிப்பை முடித்தபோது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ சிறந்ததாக வந்து முன்னிற்கிறது. அந்தப் பட்டியலில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’, யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல்கடிகை’ ஆகிய நாவல்கள் இருக்கின்றன. டானியலின் ‘கோவிந்த’னும் ‘கான’லும் நாவல்கள் சிறந்தனவாக ஒரு காலத்தில் இருந்தன. பின்னால் ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’ நாவல் அவரது சிறந்த நாவலாக ஆனது. அதுபோல் செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று’ ஒருபோது பிடித்திருந்தது. பின்னால் ‘ஜன்மபூமி’ பிடித்துக்கொண்டது. இவ்வாறு வாசிப்பின் வளர்ச்சியினால் தேர்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இளந்தலைமுறை எழுத்தாளர்களில் பலரின் நாவல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எஸ்.செந்தில்குமார், மணிகண்டன், லட்சுமி சரவணகுமார், விநாயகமுருகன், எஸ்.உதயன் என பலபேர் அப்பட்டியலில். எவ்வளவோ உச்சங்களை அடைந்து கடைசியில் ஏமாற்றங்களையே அவை எனக்குத் தந்திருக்கின்றன. ‘லோமியா’ நாவல் எடுத்த களமும், புனைவு தொடங்கிய விதமும் அற்புதமானது. ஆனால் கடைசியில் பாரதிராஜா பாணி சினிமாபோல சரிந்து விழுந்துபோனது. அதனாலேயே சிலவேளைகளில் இளம்தலைமுறை எழுத்தாளர்களது நாவல்கள் அவ்வளவு செறிவானவையாக எனக்குத் தோன்றாதிருக்கின்றன.
நல்ல எழுத்துக்கான தேடல் என்றும் இருந்துகொண்டே இருக்கிறது. படைப்பாளி நிறைய வாசிக்கவேண்டும் எனப்படுகிறது. அது என்னவோ எனக்குத் தெரியாது. தேர்ந்த வாசிப்பிலிருந்து இல்லாமல் சிறந்த படைப்பாளி தோன்றமுடியாது என்பது மட்டும் உண்மை. வாசிப்பு ஒரு உபதொழில் அல்ல. தொழில் என்பதை பாரதி சொன்ன ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற அடியிலுள்ள சொல்லின் அர்த்தத்தில் சொல்லுகிறேன். அதுவே ஒரு தனித் தொழில். வாசிப்பு புணர்ச்சியின் பரவசம் தருவது. அவ்வாறான சிறந்த நூல்கள் தமிழில் ஆண்டுக்கு மூன்று நான்கும் தோன்றுவதில்லை என்ற நிஜம் கசப்பானது.
ஏறக்குறைய அய்ம்பது நூல்களுக்கு மேல் இதுவரை மதிப்புரை, விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றுள் தேர்வுசெய்து நாற்பது நூல்களின் மதிப்புரை, விமர்சனங்ளை ‘என் பார்வை: நூல் மதிப்பீட்டுரைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளேன். சென்ற ஆண்டு மின்னூலாக பிரதிலி அதை வெளியிட்டுள்ளது. அவை மட்டுமே நான் வாசித்த நூல்களல்ல. அவைகளைப்பற்றி மட்டுமே எழுத எனக்கு உந்துதல் ஏற்பட்டது. ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருந்தால் மட்டுமே நான் எழுதினேன். அந்தந்த காலகட்டத்தில் பிடித்திருந்த நூல்கள் இன்றைக்கும் எனக்குப் பிடித்திருக்கின்றன என்று சொல்லமுடியாதுதான். ஆனாலும் அவற்றின் முக்கியத்துவம் ஏதோவொரு வகையில் இன்றும் இருந்துகொண்டிருக்கவே செய்கிறது.
6.பதிவுகள்: உங்கள் அனுபவத்தின்படி, இலங்கையைப்பொறுத்தவரையில் தமிழர்களின் வாசிப்பு எந்த நிலையிலிருப்பதாகக் கருதுகின்றீர்கள். பெருமைப்படத்தக்கதாக உள்ளதெனக் கருதுகின்றீர்களா?
தேவகாந்தன்: சிறப்புற அமைந்துவருவதாகவே தோன்றுகிறது. உணர்ச்சிப் பரவசம் கொடுக்கும் நூல்களை ஒதுக்கி சாஸ்வத இலக்கிய நயமுள்ள எழுத்துக்களைத் தேர இப்போது அங்கே செய்துவருகிறார்கள். பின் அமைப்பியல், பின்நவீனத்துவ எழுத்துக்கள், விமர்சனங்கள்பற்றி இப்போது பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியிலே பிரஸ்தாபம் அதிகமிருப்பதைக் கண்டேன். நான் இதுபற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. நீண்ட கொடிய போரின் பின்னால் எழுந்து வந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள். நிதானமாகத் தொடங்குகிறார்களென நினைக்கிறேன். மேற்குலகிலே அந்த இயங்கள் ஓய்ந்து போயிருக்கிற காலம் இதுவாக இருப்பதால் என்னவாகிவிடப் போகிறது?
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடங்கும் காலத்துக்கு முன்னிருந்த வாசிப்பு நிலைமைகளைவிட யுத்தம் முடிவுற்றுள்ள இக் காலத்தில் அது தலைகீழ் மாற்றம் அடைந்துள்ளதாக நினைக்கிறேன். அதை எலத்திரனியல் வளர்ச்சி பெரும்பாலும் சாத்தியமாக்கியிருக்கிறது. பல்வேறு நூல்களையும் இன்று நூலக இணையதளங்களில் மிகச் சுலபமாக வாசித்துவிட முடிகிறது. இவற்றைப் பாவிக்கின்ற, வாசிக்கின்ற வாசகன் அங்கே நிறையத் தோன்றிக்கொண்டிருக்கிறான். புலம்பெயர் நாடுகளைவிட அங்கே வாசிப்பு தரமாக வந்துகொண்டிருக்கிறது. வாசகன் வளர்கிற அளவுக்கு படைப்பாளி அங்கே வளரவில்லையென்பதுதான் இப்போது அங்கேயுள்ள குறையாக நான் காண்கிறேன். உதாரணமாக செங்கை ஆழியானின் நூல்களை எடுத்துப் பாருங்கள். முதல் நாவலைவிட அண்மையில் வந்த அவரது நாவல் நடை, கட்டுமானம் ஆகியவற்றில் மாற்றமே அற்றிருப்பது தெரியவரும். கே.டானியலின் நூலுக்கும்கூட இந்த நிலைமைதான். இதுவெல்லாம் படைப்பாளியும் சிறந்த வாசகனாய் இருக்கவேண்டிய அவசியத்தையே சொல்லிக்கொண்டு இருக்கின்றன. வாசக வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து படைப்பாளியும் வளர்ந்துதானாகவேண்டும்.
7.பதிவுகள்: நீங்கள் ‘ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையில் வேலை பார்த்ததாகக்கேள்விப்பட்டிருக்கின்றோம். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் ஈழநாடு பத்திரிகை முக்கியமான பத்திரிகைகளிலொன்று. அங்கு நீங்கள் ‘பத்திரிகையாளராக’ வேலை பார்த்திருப்பது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அது பற்றிச்சிறிது கூறுங்களேன். அக்காலகட்டத்தில் உங்களுடன் வேலை பார்த்த சக படைப்பாளிகள் பற்றியும் பல தகவல்கள் உங்களிடமிருக்கும். அவற்றையும் சிறிது பகிர்ந்துகொள்ளுங்களேன்.
தேவகாந்தன்: எனது முதல் வேலையென்ற முக்கியத்துவமும் உடையது அது. பல்கலைக்கழக புகுமுக வகுப்பை முடித்ததும் ‘ஈழநா’ட்டில்தான் சேர்ந்தேன். அந்த வருஷத்தில்தான் ஈழநாட்டின் பத்தாமாண்டு விழா நடந்தது. சிறுகதை, நாவல், கவிதை, காவியம் என போட்டிகள் நடந்தன. ஈழநாடே கலகலப்பில் மிதந்துகொண்டிருந்தது. யாழ் குடாநாட்டின் பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்களை நான் விரைவில் சந்தித்து அறிமுகமாக அந்த விழாதான் முதல் காரணம்.
மற்றும்படி அக்காலத்தில்தான் நான் சிறுகதை எழுத ஆரம்பித்தேன் என்ற வகையிலும் இன்னொரு முக்கியத்துவம் அதற்குண்டு. இருந்தும் என் முதல் சிறுகதையை ஈழநாடு வாரமலருக்கு நான் கொடுக்கவில்லை. அது அனுசரணை காரணமாக வெளிவந்ததாக நண்பர்கள் நினைத்துவிடக்கூடாதென்ற மிக்க தெளிவோடு இருந்தேன் நான். அப்போது கதையெழுத முயன்றுகொண்டிருந்த சிலர் எங்கள் நண்பர்கள் வட்டத்திலே இருந்தார்கள். அவர்களுக்காக ஏற்பட்டதுதான் எனது அந்த விருப்பமின்மை. ஆனால் கதையைக் வாசித்த நண்பர் ‘பாமா’ ராஜகோபால் கதை நன்றாகவிருக்கிறது, ஈழநாட்டுக்கு கொடுக்க விருப்பமில்லையென்றால் வேறு பத்திரிகைக்கு அனுப்பலாமே என்றார். அதனால் கண்டியிலிருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘செய்தி’ வாரப் பத்திரிகைக்கு அனுப்பினேன். கதை சிறிதுநாளில் பிரசுரமானது. அதுதான் எனது முதல் கதை ‘குருடர்கள்’.
ஆசிரியர் குழுவில் வேலைசெய்வதென்பது பெரும்பாலும், ஆசிரியர் மற்றும் செய்திஆசிரியரைத் தவிர்த்து, நிருபர்களிடமிருந்து வரும் செய்திகளிலுள்ள உபரிகளை ஒதுக்கி செம்மையாக்கம் செய்து கொடுப்பதுதான். நிருபர்களிடமிருந்து கடிதங்களிலும் செய்தி வரும். தொலைபேசியிலும் அவசர செய்திகளைச் சொல்வார்கள். வெளிநாட்டுச் செய்திகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருக்கும் பல்வேறு தூதரகங்களிலிருந்தும் வரும் செய்தி வெளியீடுகளும், வொய்ஸ் ஒவ் அமெரிக்காவும், பிபிசியும், இந்திய வானொலியுமே தந்துகொண்டிருந்தன. இது ஈழநாடு பத்திரிகைக்கு மட்டுமல்ல, இலங்கையின் எல்லா செய்திப் பத்திரிகைகளுக்குமான ஒட்டுமொத்த நிலைமைதான். இதை வைத்துப் பார்க்கும்போது எனக்கு ஈழநாடுதான் ஒரு செய்தியைத் தணிக்கைசெய்யும் அல்லது செம்மையாக்கம் செய்யும் கலையை முதன் முதலில் எனக்குக் கற்றுத் தந்தது என்று சொல்லலாம். இதற்காக செய்தி ஆசிரியர் எஸ்.எம்.கோபாலரத்தினம், மூத்த ஆசிரிய குழு உறுப்பினர்களான எஸ்.பெருமாள், கே.கணேசலிங்கமென சிலருக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டவனாகவே இருக்கிறேன்.
நான் ‘ஈழநா’ட்டில் இணைவதற்கு முன்பாக அங்கே ‘ஊர்க்குருவி’ என்ற பெயரில் எழுதிய திரு.வி.என்.பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் தொடர்ந்தும் வாரமலரில் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஈழநாடு அலுவலகம் வந்திருந்து எழுதிக்கொடுப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். மேலும் அ.செ.முருகானந்தம், கவிஞர்கள் அம்பி, எஸ்.என். நாகராஜன், சிலவேளை கனக.செந்திநாதன் போன்றோர் அலுவலகம் வந்து அளவளாவிக்கொண்டிருப்பர். அவர்களுடனான அந்நியோன்யத்தை வளர்க்க பத்திரிகை அலுவலகம் எனக்குப் பேருதவி செய்தது. இன்னும் அச்சாக்கப் பகுதி, மெய்ப்புநோக்குநர் பகுதி, விநியோகப் பகுதிகளிலும் நிறைய நண்பர்கள். இப்போது நினைக்கிறபோதும் இனிக்கக்கூடிய நட்பைக் கொண்டவர்களாயிருந்தார்கள் அவர்கள்.
8. பதிவுகள்: உங்கள் முதல் கதை அனுபவத்தைச்சிறிது கூற முடியுமா? உங்களை அக்கதையினை எழுதத்தூண்டிய காரணிகள் எவை எனக்கூற முடியுமா? அதற்கான பின்புலம் ஏதாவது இருந்ததா?
தேவகாந்தன்: தோன்றிற்று எழுதினேன் என்பதுதான், சரியானதாக இல்லாதபோதும், இதற்கான பதிலாக இருக்கமுடியும். பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுமே பாட்டியிடம், அம்மாவிடம் கதை கேட்டதாகவும் அதிலிருந்து எழுத உந்துதல் பெற்றதாகவும்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையை மறைக்கக் கூடாதென்றால் என் வரையிலும் அப்படித்தான் நடந்ததென்றே சொல்லவேண்டியிருக்கிறது. கதைகள் சிறகுகள் உடையவை. அதனால்தான் அராபியக் கதையும், வடவிந்தியக் கதைகளும் நமது மண்ணையும் மொழிகளையும் வந்தடைந்தன. அவ்வாறே பல கதைகள் நமது நிலங்களிலிருந்தும் அங்கு சென்றடைந்தன. சிறகடித்துப் பறக்கும் பறவைக்கு எங்கோ எப்பவோ ஒரு தங்குமிடம் தேவைப்படுகிறது. கதைகளின் தங்குமிடம் கதைசொல்லிகளாக இருக்கிறார்கள். கதைகள் பறந்துபோன பின் கதைகள் இருந்த இடத்தின் அழுத்தங்கள், அடையாளங்கள், வடுக்களிலிருந்து அவர்கள் அந்தக் கதைகளையும், வேறுவேறு கதைகளையும் உண்டாக்குகிறார்கள். இந்தமாதிரி நான் சொல்வது சரியாக இருக்குமென்றே தோன்றுகிறது.
என் அம்மா மட்டுமே எனக்குக் கதை சொல்பவராக இருந்தார் என் சிறுவயதுக் காலத்தில். இரண்டு பாட்டிகள் இருந்தார்கள். ஒரு தாத்தா உயிரோடிருந்தார். யாருக்கும் கதை சொல்ல வரவில்லை. ஊரிலிருந்து வரும்போது கடலைக்கொட்டை மறக்காமல் வாங்கிவரும் பாட்டிகளிடம் நான் ஆசையோடு எதிர்பார்த்த கதை கிடைக்கவில்லை. கேட்டபோதும் அந்த விஷயத்தை ஒதுக்கும் சாதுர்யம்தான் அவர்களிடம் இருந்தது. ஆனால் அம்மா கதைவளம் கொண்டவராயிருந்தார். கூப்பிட்டு கதைசொல்ல அவாவிக்கொண்டிருந்தார். அதை இப்போது என்னால் புரியமுடிகிறது. ஆயிரத்து தொளாயிரத்து முப்பதுக்களில் அம்மா அய்ந்தாம் வகுப்புவரை படித்திருந்தார். மட்டுமில்லை, பின்னாளிலும் பாரதம், ராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம், மதனமகாராசன், அல்லிராணி, பவளக்கொடி, நல்லதங்காள் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகளெல்லாம் படித்திருந்தார். ஒரு கதைசொல்லியால் கதை சொல்லாமல் இருக்கமுடியாது. அவ்வாறுள்ளவரே ஒரு சிறந்த கதைசொல்லியாகவும் இருக்க முடியும். அம்மா நூறு நூறாகக் கதை சொன்னார். அவரது குடும்ப அடியில் செய்யுளியற்றிய புலவர்கள் இருந்திருந்தார்கள். ஆனால் அது கல்விக்கான பகைப்புலமாக இருக்கலாமே தவிர, கதைசொல்லியாக ஆவதற்கான பின்புலமாக இருக்கவேண்டியதில்லை. கதை சொல்ல வாழ்வுச் சூழல் முக்கியமானது. வாழ்வின் பிரச்னைகளுக்குள்ளும், வறுமைக்குள்ளும் அழுந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலை கதை பிறப்பதற்கு ஏற்றதேயில்லை. அவை தீர்ந்த பின்னால் அந்த அநுபவங்கள் கதைகளாக மாறலாம். ஆனால் கதை சொல்வதற்கு, கேட்பதற்கும்தான், வாழ்வு வசதிகளில்லாவிட்டாலும் அமைதி நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் கதை பிறக்கும். அம்மாவினதும், எங்களினதும் வாழ்வு அமைதியுடையதாய் இருந்தது அப்போது. அதனால்தான் அம்மா கதை சொன்னார், நாங்கள் கதை கேட்டோம். அதுதான் எனக்கு வாசிப்பைத் தந்தது. வாசிப்பே என்னை எழுதவைத்தது.
ஆரம்ப கால கதைசொல்லிகள் தங்கள் வார்த்தைகளை வாயிலிருந்து பிறப்பித்தார்கள். பின்னால் வந்த கதைசொல்லிகள் வார்த்தைகளை தங்கள் எழுதுகோலிலிருந்து பிறப்பித்தார்கள். நானும் ஒரு கதைசொல்லியாக என் வார்த்தைகளை எழுதுகோலிலிருந்தே பிறப்பித்தேன். எழுத ஆரம்பித்த காலத்தில் ஏன் எழுதினேன் என்பதற்குப்போல், எப்படி எழுதினேன் என்பதற்கும் என்னிடத்தில் விடையிருக்கவில்லை. ‘எப்படி எழுதினேன்?’ என பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலையும் வாசித்திருக்கவில்லை. ஆனாலும் எழுதினேன். எழுதி ஒரு படைப்பாளியாக அறிமுகமான பின்தான் என் பாதை அறியப்பட்டது என நினைக்கிறேன்.
பாதை எப்போதும் முக்கியமானதாக இருந்ததில்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படித்தான் இப்போதும். ஆனால் ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்கவேண்டுமென்று இப்போது தெரிகிறது. அப்போதில்லை. அது குறையுமில்லை. எனது முதல் கதை ‘குருடர்கள்’. அப்போது கண்டியிலிருந்து வந்துகொண்டிருந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்தது. இதுபற்றி ஓரளவு நான் குறிப்பிட்டிருக்கிறேன் இந்த நேர்காணலிலேயே. வயலின் வாசித்து பிழைத்துவந்து ஒரு பார்வையற்றவரை அக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருக்க முடியும். அவரது இருப்பிடம் கைதடிப் பகுதியில் இருந்ததென்று நினைக்கிறேன். தினசரி காலையில் பஸ்ஸேறி யாழ்ப்பாணம் வந்து, பெரும்பாலும் ஏழு எட்டு மணியளவில் வீடு திரும்புவார். அதிகமான நாட்களிலும் அவருக்கு தனிப்பயணம்தான். சிலவேளை அவரை கூடவொரு பெண்மணியுடன் கண்டிருக்கிறேன். இனிமையாக வாசிக்கக் கூடியவர். பலரை மெய்ம்மறந்திருந்து ரசிக்க வைத்த இசை அவரது. நானும் நேர அவகாசத்தைப் பொறுத்து நின்று பலமுறைகள் ரசித்திருக்கிறேன்.
ஒருநாள் காலையில் நான் ஈழநாடு அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது யாழ். மணிக்கூட்டு கோபுரத்தின் சங்கிலி வளைய எல்லையில் சந்தடியும், ஆட்கள் சிலர் கூடிநின்று விலகிக்கொண்டிருப்பதும் பஸ்ஸிலிருந்தபடியே கண்டேன். மாலையில் வேலை முடிந்து நூல்நிலையம்நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த வேளையிலும் அவ்வாறான நிலைமை தொடர்ந்திருக்கவே நின்று விசாரித்தேன். வயலின் வாசிக்கும் பார்வையற்றவர் அங்கே இறந்து கிடப்பதாகச் சொன்னார்கள். நான் நொருங்கிப்போனேன். காலையிலிருந்து மாலைவரை அவரது சடலம் அந்த இடத்திலே கிடந்திருந்கிறது. அது முதல்நாள் அவர் வீடு புறப்படுவதற்கு முன்னர் சம்பவித்த மரணமாகவும் இருக்கலாம். அவரது இசையை ரசித்த எத்தனைபேர் அதனைக் கண்டுகொண்டு போயிருக்கமுடியும்? இருந்தும் அவர்களாக வேண்டாம், யாழ். மாநகர சபைக்காவது அறிவித்து அதை அப்புறப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே என மனது குமைந்தது. அப்போது யாழ். மாநகர சபைக் கட்டிடத்து பெரிய மண்டபத்தின் உச்சியில் ஒரு யாழ் அலங்கார விளக்கு எரியும்படி இருந்தது. நான் திரும்பிப் பார்க்கிறேன். அலங்கார விளக்கு அப்போதுதான் மின்னிணைப்பு ஏற்பட்டு ஒளிவிடத் தொடங்குகிறது. எனக்குள் எண்ணம் ஓடியது, ‘அந்த இசைவாணருக்கு யாழ் பாடி பரிசிலாய்ப் பெற்ற அந்த மண்ணில் அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. அவர் அல்ல, அங்கே நின்றுகொண்டிருக்கிற மனிதர்களே குருடர்கள்’ என்பதாக. சிறிதுநேரத்தில் அவரது சடலத்தை மாநகர சபை வந்து அப்புறப்படுத்தியது.
இதற்காக நான் யாரையாவது ஏசிவிட முடியுமா? யாரையாவது தடியெடுத்து அடித்துவிட முடியுமா? முடியாது. எனவே எழுதினேன் என் மனக் கோபத்தை. அது சிறுகதையாக வந்தது. ஏதோவொரு உணர்வின் உந்துதலே படைப்புக்கான உந்துவிசையாக இருக்கிறது. அது எதுவானபோதும்தான்.
9. .பதிவுகள்: உங்கள் எழுத்தைச் சமுதாய அக்கறை, அரசியல் பிரக்ஞை பாதித்ததில்லை என்று கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் உங்கள் அக்கறைகள் தாம் எவை?
தேவகாந்தன்: வாழ்க்கை! சீவியம்! இந்த உலகத்தில் தென்படும் மனித வாழ்க்கை அனைத்தும் ஒரு மேலோட்டமான பார்வையில் ஒன்றுபோலவேதான் தென்படுகின்றது. சமூகமே மனித வாழ்க்கையைப் பாதித்திருந்தாலும், அது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகவும், வெவ்வேறு அளவிலும்தான் பாதிக்கிறது. அந்தவகையில் அவரவர் வாழ்க்கை வித்தியாசமாகவே இருக்க முடியும். சமூக நியதிகளுள் மனிதனை அறிவு அடங்கிநிற்கச் சொல்கிற வேளையில், அதனை மீறும்படி கலவரப்படுத்துகிறது மனம். மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிந்த தத்துவங்களால் மனித மனிதத்தை புரிந்து வரையறைப்படுத்த முடியவில்லை. சொல்லப்பட்டவை உத்தேசங்களாகவே இருந்தன. அதனால்தான் உயிரும், மனமும், கடவுளும் காலகாலமாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மனித கண்ணில் படுவனவெல்லாம் பெரும்பாலும் சந்தேகத்திற்கிடமின்றி விடைகாணப்பட்டுவிட்டன. கண்ணில் படாதனவான மனமும், ஆத்மாவும், கடவுளும் இன்றும் சந்தேகங்களையும், புதிய வினாக்களையும் கிளர்த்தியபடி பதிலை எதிர்பார்த்து நிற்கின்றன. அதன் புதிர்களே புனைவிலக்கியங்களின் மூலப்பொருளாகின்றன. கவிதையும், நாவலும், சிறுகதைகளும் வளம் கொள்ளுமிடம் இதுதான். ஆரம்பத்தில் ஒருபோது, வாழ்க்கை எனக்குத் தந்தவைகளை, துக்கமோ சுகமோ, நான் ஆழ்ந்து அனுபவித்து வாழப் பழகியிருப்பதாகச் சொல்லியிருந்தேன். சமூகத்தின் பசியும் காமமும் வாழ்க்கையை அமைக்கின்றன. பசியின் அவதியை அரசியல் தீர்க்கிறதெனில், காமத்தை இலக்கியமே ஒழுங்கில் ஓடவைக்கிறது. இரண்டுமே மனிதனுக்கு முக்கியமானவை. இந்த அறிதலைத் தந்தது அழுந்தி வாழ்ந்த அந்த என் வாழ்க்கைதான். அப்போதும் புதிர்கள் என்னில் இருந்தன. அதை எழுத்து தீர்த்துவைத்தது. அதுதான் ஒருவன் அடையக்கூடிய ஞானமென நான் நம்புகிறேன். என் எழுத்து… யாரின் எழுத்தும்தான்… இந்த மய்யத்தைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்கிறது. கண்டடையும் ஞானத்தின் அளவுக்கு இலக்கியம் மேன்மை பெறுகிறது.
10. பதிவுகள்: அமைதித்தன்மை வாய்ந்தது உங்கள் தோற்றம். ஆனால் உங்களது பல எழுத்துகள் உங்கள் தோற்றத்தைப்போன்வையல்ல.. உதாரணமாக ‘தாய்வீடு’ பத்திரிகையில் தொடராக வந்த கலாபன் கதை, பதிவுகள் இணையதளத்தில் வந்த ‘நினைவேற்றம்’ போன்றவை. சென்ற ஆண்டு இறுதியில் நீங்கள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செய்த உரையின் தலைப்பும் ‘எழுத்து-கலகம்-இலக்கியம்’ என்பதாகவே இருந்தது. இந்த முரணுக்கு என்ன காரணம்?
தேவகாந்தன்: நல்ல கேள்வி. இவ்வாறான ஒரு கேள்வியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் அம்மாதிரிக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. வாழ்க்கையை எவ்வாறு நாம் வாழவேண்டுமென்று நமது குடும்ப அமைப்புகளும், அறநூல்களும் சொல்லிக்கொண்டே காலகாலமாகவும் இருந்து வருகின்றன. இந்த அற விழுமியங்களுள் வளர்ந்துவரும் ஒருவரும் இதே அற விழுமியங்களில் ஊறி அல்லது அவற்றை உள்வாங்கி இருத்தல் தவிர்க்கமுடியாதபடி நிகழவே செய்யும். இது ஒரு சாதாரண வாழ்க்கைக்குப் போதுமானதுதான். ஆனால் உணர்வெழுச்சி கூடிய கலை இலக்கிய வாழ்க்கைக்கு இவை போதுமானதாக இருப்பதில்லை. ஆனால் சமூக மாற்றத்தை உந்தக்கூடிய புறக் காரணிகள் வீச்சுப் பெறும்போது, அந்தச் சக்திகளை மிக இலகுவாக அடக்கிவிட சமூக சக்திகளால் முடிந்துவிடுகிறது. இன்றைக்கு ஒரு சமூக அமைப்பு இருக்கிறதெனில், இதற்கான அற விழுமியங்களே சமூகத்தில் அதிகாரம் பெற்றவையாய் இருக்குமென்றும் கொண்டுவிட முடியாது. கடந்த சமூகத்தின் எஞ்சிய அம்சங்கள் இன்னும் விடாமல் தொங்கியிருந்து இந்தச் சமூகத்தின் தன்மையையே மாற்றிக்கொண்டிருக்கவும் கூடும். பணபலமும், அதிகார பலமும் கொண்ட சமூக சக்திகளுக்கு முன்னால் தனிமனிதனான கலைஞன் கலகலத்துப் போகிறான். வெறுப்படைந்து வாழ்வின் விரக்திக்கே தள்ளப்பட்டு விடுகிறான். அப்போதுதான் கலைஞன் கலகக்காரனாக மாறுகிறான். மாறவேண்டும்.
கலகமே நியாயம் என்பதில்லை. கலகம் நியாயத்துக்கான ஒரு அழைப்பு மட்டுமே. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பது இதுதான். இந்த கலகப் பார்வையைக் கொண்டிருக்கும் படைப்பாளி அந்தச் சமூகத்திற்கும், அடுத்து வரப்போகும் சமூகத்திற்குமான விழுமியங்களுக்காக எழுத முயல்கிறான். விழுமியங்களையே எழுதுகிறான் என்றும் கூறமுடியாது. அது பரவுவதற்கான தளத்தை அமைக்கிறான். மொழியைப் பதப்படுத்துகிறான். ஒருகால் இந்தச் சமூகமே இந்த கலகக் குரல் காட்டும் படைப்பாளியை உண்டு இல்லையென்று பண்ணிவிடுகிறேன் எனக் கிளம்பும். அந்த யுத்தத்தில் படைப்பாளி தோற்பதற்கான சாத்தியங்களே நிறைய உண்டு. ஏனெனில் சட்டமென்பதும் இந்த விழுமியங்களைச் சார்ந்து அல்லது இந்த விழுமியங்களைக் கொண்டாடுபவர்களால் இயக்கவும் படுவதுதான். சமூகத்துடனான பல போர்களிலும் பெரும்பாலும் நான் தோற்கவே செய்திருக்கிறேன். சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலும், நிலமற்ற கொடுமையால் காடுவெட்ட திரிந்த முயற்சிகளிலெல்லாம் நான் தோற்கவே செய்தேன். அப்போதெல்லாம் இந்தச் சமூகத்தைவிட்டு ஓடவே மனம் தூண்டியிருக்கிறது. என்னைத் தொலைக்கவே மனம் ஏவியிருக்கிறது. ஓடியிருந்த வேளைகளில் ஒரு வாழ்க்கை, அதுவும் இந்தச் சமூகம் ஒத்துக்கொள்ளாத ஒரு வாழ்க்கை, எனக்குச் சித்திப்பாகியிருக்கிறது. இதையே இல்லறத்தில் துறவறத்தையும், வானப்பிரஸ்தத்தில் இல்லறத்தையும் கொண்டாடிய ஒரு தலைகீழ் வாழ்க்கை ஒருகாலத்தில் எனக்கு சித்தியாகியிருந்ததென்று சில இடங்களிலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். மேலோட்டமாகச் சொன்னால் இது ஒரு தறுதலையான வாழ்க்கைதான். இதுவுமே சமூகத்துக்கெதிரான ஒரு கலகம்தான். ஆனாலும் அதைச் செய்வதில் எவ்வளவு சுகமிருக்கிறது. கலகமில்லையேல் இலக்கியமுமில்லை என்பது அதுதான். ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்றது தேவாரம். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்றதும் தேவாரம்தான். சொர்க்கம் தேடும் இறையவர் மத்தியில் இந்தப் பிறப்பையும், இந்த உலகத்தையும் உயர்ந்தேத்தியது கலகமல்லவா?
ஒரு ஊரையல்ல, ஒரு நகரத்தையே தீமூட்டி அழித்தாள் கண்ணகி. குழந்தைகள், பெண்டிர், முதியோர், அறவோர் என புறநிலைப்படுத்தப்பட்டிருந்தாலும், தன் கணவனைக் கொன்றதற்காய் அரசனும் அரசியும் இறந்த பின்னும்கூட மதுரையை எரித்தழித்தல் எவ்வகையில் நியாயம்? ஆனால் கண்ணகி சொல்கிறாள் அது நியாயம்தானென்று. ‘யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்’ என்கிறாள். ஆம், இது மக்கள் நகரல்ல, அரசன் நகர், அதனால்தான் எரித்தேன் என்பது கலகம். இளங்கோ இலக்கியத்தில் செய்த கலகம். அதனாலேயே நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாக அது இன்றளவும் நின்று நிலைத்திருக்கிறது. மக்கள் கதையைச் சொன்னபோதும்கூட அத்தகைய உன்னதத்தை அடைந்தது. இவ்வாறு கலகக் குணம் கொள்ளுதல் பெரும்பாலான இலக்கியங்களின் பண்பாக இருக்கிறது. கருத்தில் கலகத்தை வைத்தால் அது இலக்கியமாக இருக்கும். கலகத்தில் கருத்தை வைத்தால் இது இலக்கியமின்றிக் கெடும். இந்தப் புரிதலே ‘கலாபன் கதை’யை எழுதத் தூண்டியது. ‘நினைவேற்ற’த்தை எழுத இயக்கியது. இந்த ஆக்கங்களில் மொழியின் தளைகளை முடிந்தளவு கழற்றிப்போடும்படி என் எழுத்துக்களைக் கையாண்டேன். அது கலகம், நியாயம் எதுவாயினும் அதைச் சரியாகச் செய்தேன் என்பதே என் எண்ணம். என் அமைதித்தன்மையை என் குடும்பம் தந்ததென்றும், என் கலகத் தன்மையை என் சமூகம் தந்தது என்றும் சொன்னால் சரியாக இருக்குமா? கலகம் சமூகத்துக்கெதிராக இருந்தும், அதையும் சமூகத்திலிருந்தே நான் உறிஞ்சியெடுத்தேன். அந்த வகையில் குரலற்றவர்களின் குரலாகவும், சிந்தனை ஒழுங்கவற்றவரின் சிந்தனையாகவும் என் எழுத்து இருக்கிறதென்றுதானே பொருள்? சமூகத்தில் அடக்கப்பட்டவர்களும், மிதிக்கப்பட்டவர்களும் பெரும்பான்மையாக இருக்கிறவரையில், சமூகத்துக்கெதிரான கலகமும் நியாயமே ஆகும். அல்லாமல் அடக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினராக இருந்தால்கூட என் போராட்டம் அவர்களுக்கானதாகவே இருக்கும்.
11.பதிவுகள்: அண்மைக்காலமாகவே எழுத்தாளர்கள் ஷோபாசக்தி, குணா கவியழகன் மற்றும் சயந்தன் ஆகியோரின் படைப்புகள் பற்றி அதிகமாகப்பேசப்படுவதைக் காண முடிகிறது. இவர்களது படைப்புகளைத்தாங்களும் வாசித்திருப்பீர்கள் என்று கருதுகின்றோம். நீங்கள் அவர்களைபற்றி அதிகம் கூறியுள்ளதாகத்தெரியவில்லையே. ஏன்?
தேவகாந்தன்: ஷோபாசக்தியின் ‘ம்’ நாவலுக்கு மதிப்புரை அது வெளிவந்த காலத்திலேயே எழுதியிருக்கிறேன். சயந்தனின் ‘ஆறாவடு’வுக்கும் அவ்வாறே. குணா கவியழகனின் நாவல்களுக்கு எழுத அமையவில்லை. மேலும் கொரில்லாவுக்குப் பின்னால் பேசப்பட ஷோபாசக்தி நூல் தரவில்லை. அதாவது கொரில்லாவை விஞ்சுகிற நாவலாக அது இருக்கவேண்டும். அதுபோல் ‘நஞ்சுண்ட காடு’போலும்கூட ஒரு நூலை குணா கவியழகன் தரவில்லை. சயந்தனும் ‘ஆறாவடு’ அளவுக்கு ஆதிரையைத் தரமுடியாமல் நின்றுகொண்டிருக்கிறார். நான் எதைப் பேச? தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ சமீபத்தில் வந்திருக்கிறது. அதை இன்னும் நான் வாசிக்கவில்லை. அவரது ‘கானல் வரி’ எனக்குப் பிடித்த நாவல். ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை’ என்று நினைப்பவன் நான். உயர்வான… இன்னும் உயர்வான… நூலென்றே தேடிக்கொண்டு இருக்கின்றேன். ஆங்காங்கேயான சில கண்டடைவுகள் மட்டுமே இப்போது. தேடலில் தொடர்ந்துகொண்டே இருக்கிறேன். பார்க்கலாம்.
12.பதிவுகள்: நல்லது தேவகாந்தன். இதுவரையில் பதிவுகளின் கேள்விகளுக்குப் பொறுமையாகப்பதிலளித்து வந்தீர்கள். அதற்காக எமது நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம். இறுதியாக ஒரு கேள்வி. இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரைகள்தாம் என்ன?
தேவகாந்தன்: அறிவுரையென்பதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும். இளைய தலைமுறையாக இருந்தாலும், இன்றைக்கு எழுதுபவர்கள் பலரும் தக்க தகவல்களோடுதான் வருகிறார்கள். அனுபவம் பெரும்பாலும் ஒருவரை மாற்றவே செய்கிறதெனில் அவர்களும் காலப்போக்கில் மாறவே செய்வார்கள். மாற்றம் என்பதை வளர்ச்சியாகவும் நீங்கள் கொள்ளலாம். இன்று சரியென்றிருப்பது நாளை சரியல்ல என்றோ, இந்தளவு சரியல்லவென்றோ ஆகக்கூடும். இன்று சரியல்ல என்பதும் நாளை அவ்வாறே சரியென ஆகக்கூடும். கீழது மேலாய், மேலது கீழாய் மாறுகின்ற தன்மைத்து இந்த ஞாலம். தீ சுடும் என்பது அறிவெனில், தீ சுட்ட அனுபவமே ஞானமாகிறது. அனுபவம் ஒருவரை மாற்றுகிறது. அதை மறக்காமலிருக்க வேண்டும். மேலும் யாராலும், ஒரு கடிதமெழுத முடிந்தவரால்கூட, ஒரு கதையை எழுதிவிட முடியும். ஆனால் வாழ்க்கையை இறுக்கிவைத்திருக்கும் மரபுகள்மீது, கலாச்சாரங்கள்மீது செய்யும் கலக எழுத்தே மெய்யியலின் தேடலாக விரிகிறபோது சிறந்த இலக்கியமாகிறது. இவற்றையும் கவனத்தில் அவர்கள் கொள்ளவேண்டுமென்பதுதான் நான் இந்த இடத்திலே சொல்லக்கூடியது.
பதிவுகள்: இந்த நீண்ட நேர்காணலுக்காக என் சார்பிலும், பதிவுகள் வாசகர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, தேவகாந்தன்.
தேவகாந்தன்: பதிவுகள் வாசகர்களை அணுக ஒரு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்லிய மட்டுமல்ல, என்னை நானே உரைத்துப் பார்த்த நேர்காணலும்தான் இது. அதற்காக எனது நன்றி உங்களுக்கும், பதிவுகள் இணையதள வாசகர்களுக்கும். நன்றி. வணக்கம்.
(முற்றும்)
தேவகாந்தனுடனா நேர்காணல் பகுதி ஒன்று: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3282;2016-04-15-02-42-23&catid=16;2011-03-03-20-10-49&Itemid=34
தேவகாந்தனுடனான நேர்காணல் பகுதி இரண்டு: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3316;-2-&catid=16;2011-03-03-20-10-49&Itemid=34