எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்குக் கண்டனம்!

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்[எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் உடல்ரீதியான குறைபாட்டை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்த தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீனின் அந்த அறிக்கையினை இணையத்தில் வாசிததோம். மதமொன்றினைப் பிரதிநிதிப்படுத்துபவர் மற்றவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்விதமாக இருக்க வேண்டிய ஒருவரிடமிருந்து இவ்விதமாக ஒருவரின் உடல்ரீதியிலான குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி, வன்முறையினைத் தூண்டும் வகையிலான அறிக்கை வெளிவந்திருப்பது துரதிருஷட்டமானது. மனிதரின் பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட்டங்களைக் கொண்ட மண்ணில் வாழ்ந்துகொண்டு, ஒருவரின் கருத்து தனக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக இவ்விதம் கீழத்தரமாக அறிக்கை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. தர்க்கத்தை தர்க்கரீதியில் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை. இது பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை  மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறிக்கை ஆகியன ஒரு பதிவுக்காக  இங்கு மீள்பிரசுரமாகின்றன.  – பதிவுகள் –

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்!

– ஜெயமோகன் –

இலங்கையைச்சேர்ந்த சிறுமி ரிஷானா நஃபீக் சவூதி அரேபியாவில் முறையான விசாரணை இல்லாமல் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமைக்கு எதிராக மனுஷ்யபுத்திரன் நக்கீரனில் எதிர்வினையாற்றியிருந்தை இப்போதுதான் வாசித்தேன். ரிஷானா சவூதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்துவெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரிஷானா செய்த குற்றம் ஒரு குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக அமைந்தது. அக்குற்றத்துக்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டது அவரே அளித்ததாக முன்வைக்கப்பட்ட ஒரு வாக்குமூலம். அந்த வாக்குமூலம் அவருக்குத் தெரியாத மொழியில் இருந்தது, அவர் அதில் கையெழுத்திடச்செய்யப்பட்டிருக்கிறார். தன்னந்தனியாக சவூதியரேபியா சென்ற ,படிப்பறிவில்லாத முதிரா இளம்பெண்ணான ரிஷானா, அவளுடைய தரப்பை எடுத்துரைக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படாமல் விசாரணைசெய்யப்பட்டுக் கடைசியில் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

உலகமெங்கும் குற்றநடைமுறைச்சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் காவலில் இருக்கையில் அளித்த வாக்குமூலம் ஆதாரமாகக் கருதப்படுவதில்லை. சவூதி அரசின் ஷரியா சட்டம் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. எந்தக் குற்றத்திற்கும் நோக்கம் [மோட்டிவ்] ஒரு முக்கியமான ஆதாரம். ரிஷானா விஷயத்தில் அதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை. மரணதண்டனை அமுலில் உள்ள நாடுகளில் கூடத் திட்டமிட்ட தொழில்முறைக் கொலைக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்படுகிறது. அதாவது அரிதினும் அரிது என்று வகைப்படுத்தப்பட்ட குற்றங்களுக்கு. அதுவும் தெளிவான புறவய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே அது அளிக்கப்படும்.

மரணதண்டனை மிகச் சாதாரணமாக அளிக்கப்படும் நாடுகளில்கூட அது இளம்குற்றவாளிகளுக்கோ பாலூட்டும் அன்னையருக்கோ அளிக்கப்படுவதில்லை. இங்கு அந்த கருணை எதுவும் காட்டப்படவில்லை. உலகமே மனிதாபிமான நோக்கில் மன்றாடியும்கூட சவூதி இணங்கவில்லை. இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு ஒப்பவே தான் செயல்படுவதாகச் சொல்லிவிட்டது

மனுஷ்யபுத்திரன் மிக நிதானமாகவும் கவனமாகவும்தான் எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் இஸ்லாமுக்கோ ஷரியாவுக்கோ எதிராக எதுவும் சொல்லவில்லை. ஷரியா சட்டம் இப்படி இயந்திரத்தனமாகக் கையாளப்படக்கூடாது என்று அவர் சொல்கிறார்.சட்டங்களை சமகால மனிதாபிமானநோக்கு வழிநடத்தவேண்டும் என்று சொல்கிறார். அதற்குத் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீன் அளித்திருக்கும் கீழ்த்தர எதிர்வினை மிகமிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இஸ்லாமின் எதிரிகள் அல்ல, இஸ்லாமைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சவூதி அரேபியா போன்ற அரசுகளும் , எந்தவிதமான மனிதாபிமானமும் இல்லாமல் அவர்களை ஆதரிக்கும் இந்த மதவெறிக்குழுவினரும்தான் இஸ்லாமைக் கேவலப்படுத்துகிறர்கள் என்பதை இஸ்லாமியர் புரிந்துகொள்ளவேண்டும். இந்தத் தருணத்தில் மனுஷ்யபுத்திரன் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்காக, அவரது தன்னம்பிக்கைக்காக அவரைப் பாராட்டுகிறேன். இந்த எதிர்ப்புகளையும் வசைகளையும் தாண்டிச்செல்லும் வல்லமையை அவரது கவிமனம் அவருக்கு அளிக்கட்டும்.

இத்தருணத்தில் தமிழில் கருத்துரிமைக்காகக் குரல்கொடுக்கக்கூடியவர்கள் அனைவரும் கருத்துவேற்றுமைகளைத் தாண்டி மனுஷ்யபுத்திரனுடன் இணைந்திருக்கவேண்டும் என்று கோருகிறேன். இந்தவகை மிரட்டல்கள் வசைகள் மெல்ல மெல்ல ஒரு கருத்துச்சூழலையே அழித்துவிடும் தன்மை கொண்டவை.

மனுஷ்யபுத்திரன் கட்டுரை: http://www.envazhi.com/saudis-cruelty-against-young-rizana-nafeek/

http://www.jeyamohan.in/?p=34193


எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்குக் கண்டனம்!

– இரா.முருகன் –

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த 17 வயது சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்த தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக மதவாதிகள் தாக்குதல் தொடுப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் திங்களன்று (ஜன.28) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

எழுத்தாளரும் அரசியல் – சமூக விமர்சகருமான மனுஷ்யபுத்திரன் மீது மிரட்டல் தாக்குதல் தொடுக்கப்படுவதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவருடனும் கருத்துச் சுதந்திரத்திற்காக நிற்போருடனும் தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ரிசானா நஃபீக் தன் குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் வீட்டு வேலை செய்துவந்தவர். ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுமி அரசின் மரணதண்டனைக்கு உள்ளானார். நீதிமன்றம், மதவாதம் சார்ந்த சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொடுமையான முறையில், பொது இடத்தில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பல இஸ்லாமிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில், ஒரு சிறுமியை இவ்வாறு கொன்றது ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தை, ‘நக்கீரன்’ வார இதழில் மனுஷ்யபுத்திரன் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மரண தண்டனை குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்ற போதிலும், மனுஷ்யபுத்திரனுக்குத் தனது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் உரிமையும் இருக்கிறது. அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும்.

ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மைத் தாமே நியமித்துக்கொண்டு, அவர்களது மார்க்கத்திற்கு எதிரான கருத்தை மனுஷ்யபுத்திரன் கூறிவிட்டார் என்று கூறி அவரையும் அதை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் கோபால் அவர்களையும் கண்டித்து கூட்டம் நடத்தியுள்ளது. எழுத்தாளரின் வாதத்தை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மனுஷ்யபுத்திரனைத் தாக்குகிற கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் கொலைமிரட்டலே கூட விடுத்துள்ளார்.

மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சகிப்பின்மைகள் வளர்வது மக்கள் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். மேலும் இது, முஸ்லிம் மக்கள் அனைவரையுமே தவறான முறையில் சித்தரிக்க முயலும் சக்திகளுக்கே சாதகமானதுமாகும்.

பொதுவான முஸ்லிம் மக்கள் இயக்கங்கள் இப்படிப்பட்ட செயலில் இறங்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். அந்த இயக்கங்கள் இத்தகைய பொறுமையற்ற மிரட்டல்களை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள கலை இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர்கள் – கலைஞர்களும், ஜனநாயக – மதச்சார்பற்ற சக்திகளும் இப்பிரச்சனையில் மனுஷ்புத்திரனோடு தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.eramurukan.in


கண்டிக்கிறேன்!

– எஸ்.ராமகிருஷ்ணன் –

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்எழுத்தாளரும்  சமூக விமர்சகருமான நண்பர் மனுஷ்யபுத்திரன் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததோடு ,அவரது எழுத்துச் செயல்பாடுகளை முடக்குவதற்காக கொலை மிரட்டல் விடுக்கும் மதவாதத் தாக்குதலை  வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த  சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்து நண்பர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அவர் மீது தொடர்ந்த மிரட்டல்களை மதவாத அமைப்புகள் விடுத்துவருகின்றன, இது போன்ற கீழ்தரமான அவதூறுகள், அச்சுறுத்தல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பொறுப்பற்ற இந்தத் தாக்குதலால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு மனஉறுதி தரும்படியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கருத்துரிமையைப் பாதுகாக்க துணைநிற்க வேண்டும்,

மனுஷ்யபுத்திரன் மீது நடைபெற்ற இந்தக் கொடூர த் தாக்குதல் எழுத்தாளரின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் வன்முறையாகும், இத் தாக்குதலை கண்டித்து  அனைவரும் தங்களின் உரத்த கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

http://www.sramakrishnan.com/?p=3239