‘எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்’ என்று கூறும் எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவான tamilwritersathyanandhan என்னும் இணையத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்துகின்றோம். தனது மேற்படி வலைப்பதிவில் தனது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் மற்றும் நாவல் போன்ற பல படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார் சத்யானந்தன். அண்மையில் பதிவு செய்திருந்த ‘அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்’ என்னும் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்திருக்கின்றோம். மேற்படி தளமானது எழுத்தாளர் சத்யானந்தனின் படைப்புலகை அறிந்து கொள்வதற்குரிய நல்லதொரு தளம். இது போல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியமானதாகும். அவரது தளத்தில் அவரது ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.
அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
– சத்யானந்தன் –
30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது:
கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை
கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக்
கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்- உம்முடன்
கூடி இருப்பதுண்டோ?
இந்த பத்தியில் ஜெயகாந்தன் வெகு ஜனத்தின் மனப்பாங்கை சுட்டிக் காட்டி விட்டார். ஒரு மாபெரும் தலைவரை நாம் வழிபடத் தயாராயிருக்கிறோம். அவர் வழி நடக்க நாம் தயாராயில்லை. ராஜா ராம் மோஹன் ராய், காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கர், பெரியார் இவர்கள் மாற்றங்களை, கிட்டத்தட்ட முழுமையான மாற்றத்தை, காலங்காலமாகப் புனிதம் என்று நடந்த மிகப் பெரிய அநீதிகளைக் களைந்து மேலான ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்று பாடுபட்டார்கள். இன்று அவர்களை நாம் வழி படுவதோடு சரி. அவர்களது கொள்கைகளை அவர்களது பூத உடலோடு சேர்த்துப் புதைத்து விட்டு பழமை வாதமே பேசித் திரிகிறோம். இது தான் கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும். இதற்குக் காரணம் என்ன? சமுதாய மாற்றமும் முன்னேற்றமும் சாத்தியம் என்னும் நன்னம்பிக்கை இல்லாதது ஒரு புறம். மறு புறம் இதெல்லாம் தலைவர்கள் வேலை என்னும் மனப்பாங்கு.
தன்னலமிகுதியும் பொறுப்பற்ற தன்மைக்கும் உதாரணம் கண்ணெதிரே உண்டு. சமூகத்தில் மரியாதை, ஏகப்பட்ட பணம் என்று கிடைத்தாலும் மருத்துவர்கள் நோய்க்கு மருந்து தருவதோடு நிறுத்திக் கொள்வார்கள். நோய்க்கான நிவாரணத்தை அதாவது சுகாதாரமான குடிநீர், உணவகங்களில் சுத்தமான உணவு, ரசாயனக் கலப்பு மிகுதியில்லாத ஆயத்த உணவுகள், குழந்தைகளுக்கு சத்தான ஆகாரம் இவற்றைப் பற்றி அரசாங்கத்திடம் வாதாட வேண்டாம். பத்திரிக்கையில் கடிதமோ கட்டுரையோ எழுதும் மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தாம் எந்தத் துறையில் இருக்கிறாரோ அது சம்பந்தப் பட்ட சமூக ஒழுங்குகளில் கூட அக்கறையின்மை , அலட்சியம் இது.
இதே அக்கறையின்மை மற்றும் அலட்சியம் படித்தவர்களில் பெரும்பாலானவரிடம் இருக்கிறது. உறவு, அண்டை அயலார் இவர்களிடம் தன் ஜெம்பத்தை அளக்கும் பேச்சே தென்படுகிறதே தவிர் சமூக அவலங்கள் பற்றியோ சமூகம் ஒட்டுமொத்தமாக மாற வேண்டும் என்பது பற்றியோ யாராவது பேசுகிறாரா? ஊடகங்களா, நித்யானந்தாவை வைத்தே வருடக் கணக்கில் பரபரப்பு ஏற்படுத்தி விடும் அளவு வம்புகளில் காட்டும் அக்கறையை உருப்படியான விஷயங்களில் காட்டுவதில்லை.
இத்தகைய காரிருளில் ஒரு விடி வெள்ளியாக வெளிப்பட்டிருப்பவர் பெரியவர் அன்னா ஹஸாரே. ராணுவத்தில் சிறிய அளவு சேவகராகவே இருந்து, ஓய்வு பெற்ற பின் ரானேஜி காவ் சிந்தி என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம், நீர் சேமிப்பு ஆகியவற்றில் தொடங்கி மகாராஷ்டிர மாநிலத்தில் ஊழல் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்திப் போராடியவர். பின் சமூக ஆர்வலர்களால் இந்தியா முழுமைக்கும் விழிப்புணர்வு ஊட்டும் பணியைத் தொடங்கி உள்ளார். அந்த அமைப்பு ஒரு நன்னம்பிக்கைச் சின்னம். ஒரு அகில இந்திய அரசியல் சார்பற்ற அமைப்பை நடத்துவதில் உள்ள பிரச்சனைகள் அவர்களுக்கும் உண்டு. ஊடகங்களுக்கு அதுவே தீனி. ஏனெனில் மருத்துவர்கள் போலவே ஊடகங்களுக்கும் வரும்படியில் உள்ள ஆர்வம் உருப்படுவதில் கிடையாது.
அவர் ஒரு விடிவெள்ளி. விடிய வேண்டுமென்றால் மக்கள் விழிப்புற வேண்டும். அவர் மந்திரத்தில் மாங்காய் கொண்டு வரப்போகும் மந்திரவாதி என்றெண்ணுவது ஊழல் என்னும் நோய் நம் முன்னேற்றத்தின் ஆகப் பெரிய எதிரி என்பது நமக்கு புரியவில்லை என்பதற்கு அடையாளம். அன்னா ஹஸாரேயைக் கும்பிட்டுப் பயனில்லை. ஊழல் இல்லாத இந்தியா ஏன் வேண்டும்? எதனால் வேண்டும்? அது எப்போது சாத்தியம் என்னும் விவாதங்கள் சிந்தனைகள் தீவீரமடைய வேண்டும். எத்தனை தலைமுறைகள் தலைகுனிந்து வாழ்ந்து மடிந்து விட்டன. இனி வரும் தலைமுறையாவது உருப்படியாக வாழட்டுமே. ஒரு காலத்தில் தலைவர்கள் காமராஜர், கக்கன் போன்றோரும் அரசியலில் இருந்தார்கள். இன்று?