பெண்ணியம் வேரூன்றிய இக்காலகட்டத்தில் பெண் எழுத்து, பெண் மொழி, பெண் உடல் மொழி போன்ற சொல்லாடல்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்கள் இவற்றின் சொற்பொருளுக்கு அப்பால் சென்று பொருள் தந்து நிற்கின்றன. இக்கட்டுரையின் தலைப்பில் கூறப்பட்டுள்ள ‘பெண் உடல்’ என்ற சொல் அதுபோன்ற சொல்லைக் கடந்த பொருளில் இங்கு பயன்படுத்தப்படவில்லை. பௌதீகமான பெண்ணின் உடல் என்ற சாதாரணமான பொருளில்தான் கையாளப்படுகிறது. காலகாலமாக சமூகம் பெண்ணின் உடலை எவ்வாறு கண்டது என்பதையும், இன்றைய பெண்கள் பெண் உடலை எவ்வாறு காண்கிறார்கள் என்பதையும் எழுத்து ஊடகங்கள் வழி இக்கட்டுரை விளக்க முனைகிறது.
மனித உடல் பல பரிணாம வளர்ச்சிக்குப் பின் இன்றைய நிலையை அடைந்தது என்பது நாம் அறிந்ததே. வலிமையான இருகைகள் தான் மனிதனை விலங்குகளில் இருந்து மாறுபடுத்தி உழைக்கவும் செயல்களைச் செயல்படுத்தவும் உதவின என்பர். உடல் உழைப்பில் உணவைச் சேகரித்த காலகட்டத்தில் ஆண் உடல், பெண் உடல் என்று வேற்றுமைகள் இல்லாமல் இருந்தன. காமம் கூட கட்டுப்பாடற்ற ஒரு உடல் தேவையாகவும், ஆண், பெண் உடல் உறவு ஒரு இனக் கவர்ச்சியாக மட்டுமே இருந்தன. காம இச்சையை நிறைவு செய்யும் போது விபத்துக்களாக குழந்தைகள் உருவாயின. தாயின் பாதுகாப்பில் அவை வளர்ந்தன. விலங்குகளின் வாழ்க்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் இக்காரியங்களில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை.
மனிதம் காமத்தை இனக்கவர்ச்சிக்கு அப்பால் ஒரு சுகமாக பொழுது போக்காக, ஒரு போதையாக என்று காணத் தொடங்கியதோ அன்றே மனித உடல் ஆண் உடல், பெண் உடல் என்ற வேறுபாட்டைப் பெற்றது. போதைப் பொருளாக காமத்தை கொள்ளும் ஒரே உயிரினம் மனிதம்தான். பிற அனைத்து உயிரினங்களும் காமம் ஒரு இனக்கவர்ச்சி, உடலின் தேவை, இனப்பெருக்கமுறை அவ்வளவிதான். காம இச்சை ஒரு போதையாக வெறியாக மாறிய போது, பெண் உடல் அதற்கான ஒரு கருவியாக மாறியது.
“கண்டு கேட்டு உற்று உண்டு உயிர்த்தல்
ஒண்டொடி மாட்டே உள”
என ஐம்புலனையும் நிறைவு செய்யும் ஒரே பொருளாக பென் உடல் சமூகத்தால் மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் பெண் ‘சுயம் இழக்கப்பட்டு’ பெண் உடல் என்ற பௌதீஇகப் பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டது.
பெண் உடல் வர்ணனைகள்
சங்க காலம் முதல் நமக்குக் கிடைக்கும் எழுத்திலக்கியங்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் பெண் உடல், பெண் உடல் உறுப்புகள் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளன என்று காணலாம். இதற்கு மாறாக ஆணின் புயம் அல்லது தோள் மட்டுமே வர்ணிக்கப்பட்டுள்ளன. இதற்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்விலக்கியங்கள் ஆண்களால் படைக்கப்பட்டன என்பதும் ஆண்களால் ரசிக்கப்பட்டன என்பதுமாகும் அவை. சமீபத்தில் ஒருவர் சங்க இலக்கிய உடல் வர்ணனைகள் ஒரு வகையான பாலியல் கல்வி என்று தனது மேதாவித் தனத்தை நிறுவியுள்ளார். உண்மையில் இக்காரணங்களுக்கும் இலக்க்கிய பெண் உடல் வருணனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது திண்ணம்.
அழகியல்
வர்ணனைகள் அழகியல் சார்ந்தவை. இன்பமூட்டுபவை. ஒவ்வொரு பண்பாட்டிற்கும் அதற்கான அழகியல் கூறுகள் உள்ளன. இவ்வழகியல் கூறுகள் கூட ஆண் சமூகத்தால் படைத்துப் போற்றப்பட்டவையே. எனவேதான் “அகன்ற அல்குல் (பெண் உறுப்பு) உடைய பெண்” என்றும் “பாம்புப் படம் போன்ற அல்குல் உடையாள்” என்றும் வர்ணிக்கப்பட்டன. “ஏன் நீண்ட ஆண்குறி உடையவனே” என்று வர்ணிக்கவில்லை. உடல் வருணனை அழகியல் சார்ந்தது என்றால் இதுவும் உடல் வருணனை அல்லவா? எனவே காமம் சார்ந்த ஆண் படைப்புக்களே அழகியல் கூறுகள். அதில் பெண் உடல் காம இச்சை தூஉண்டும் ஒரு நுகர்பொருள் மட்டுமே. பெண்ணின் விரல் நகம் முதல் அவளது அந்தரங்க உறுப்புகள் வரை துண்டு துண்டாக வர்ணிக்கப்பட்டு, நுகரப்பட்டு, மகிழப்பட்டது. அங்கு பெண் என்ற சுயல் இல்லை பெண் என்ற உடல் மட்டுமே இருந்தது.
பெண் உடல் பாதுகாப்பு
பெண் உடல் என்று நுகர்பொருளாக்கப்பட்டதோ அன்றே அதை உரிமையாளர்கள் பாதுகாக்கவும் கடமைப்பட்டனர். பெண் என்ற சுயத்திற்கு அவளது உடல் அந்நியப்பட்டு, ஒரு பாரமாக, சுமையாக, அச்சம் தரும் ஒரு சொத்தாகப்பாட்டது. இலக்கியப் பதிவுகளில் பெண் உடல் கொண்டாடப்பட்டது. உடலை உடமையாக்கப் போர்கள் பல நிகழ்ந்தன. பெண்ணும் (உடலும்) பொன்னும் சரிநிகராகக் கொள்ளப்பட்டன. மாதவி விற்கப்பட்டதும் பெண் உடலாகத்தான் என்பதில் ஐயம்மில்லை.
பெண்ணுடல் படிமத்தைச் சிதைத்தல்
பெண்ணுடலுக்கும் பெண் சுயத்திற்கும் போராட்டம் அறிவு பெற்ற பெண்களிடம் நிகழ்ந்திருக்க வேண்டும். பெண் என்றாலே உடல் என்ற கருத்தாக்கத்திலிருந்து ஆண்களாலும் சமூகத்தாலும் வெளி வரமுடியாத நிலையில் தான், பெண் தனது உடல், படிமத்தைச் சிதைத்து பிச்சியாகவும், கிழவியாகவும் மாற்றிக் கொண்டாள். அல்லது மாற்ற நிர்பந்திக்கப்பட்டாள். காரைக்கால் அம்மையார் இயல்பான ‘உடல்’ படிமத்தைக் கடந்த அறிவாளி. அந்த அறிவார்த்தை கணவனாலோ, அக்காலச் சமூகத்தாலோ ஏறுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் தனது பெண் உடல் படிமத்தைச் சிதைத்து, துறவியாக பிச்சியாக, பேயாக அலைந்தார். அறிவார்த்தம் பெண்ணுக்கு அணிகலனன்று, மடமைதான் அணிகலன் அல்லவா? கடவுளின் கடவுச்சீட்டின் உபாயத்தில் பேயாகவாவது மிஞ்சியது அப்பெண்ணின் சுயம். ஔயாருக்கும் இதே போன்ற ஒரு பழமரபுக் கதை கூறுவதைக் கேட்கலாம். இன்றும் அறிவுரை கூறும் பெண் குழந்தைகளைக் கூட பாட்டி என்றும் அவ்வையார் என்றும் கேலி செய்வதைக் காணலாம். எனவே, சுயத்தை நிலைநிறுத்த நிறுவ எண்ணிய பெண்கள் அனைவரும் உடல் படிமத்தைச் சிதைத்துள்ளனர்.
ஒருபுறம் காமம் நுகரும் கருவியாகப் பெண் உடல் போற்றப்பட்டது. மறுபுறம் பாவம் செய்யத்தூண்டும் தீமையின் குறியீடாகப் பெண் உடல் தூற்றப்பட்டது. மதங்கள் சார்ந்த சிந்தனைகள் இந்த வேலையை மிக நேர்த்தியாகச் செய்தன. ஆண் என்ற சமூக மையப்பொருள் வீடுபேறு அடைவதைத் தடை செய்யும் ஒரு தடைக்கல்லாக பெண்ணும் பெண்ணுடலும் சித்தரிக்கப்பட்டனர். இந்திய மற்றும் ஆசிய ஜோதிகளும் பெண்ணை உடல் என்ற நிலையிலும், பாவம் என்ற நிலையிலுமே கண்டனர். நேரடியான வீடுபேறு பெண் உடலுக்கு மறுக்கப்பட்டதும் இதன் காரணமாகத்தான்.
மத ஆசாரானுஷ்டானங்களில் பெண்ணுடல் விலக்கப்பட்டது. சடங்கு, சம்பிரதாயங்களில் பெண்ணுடல் அறுவருக்கத்தக்கதாகக் கொள்ளப்பட்டது. பெண்ணுடலின் உதிரப்போக்கு தீமைகளின் இருப்பிடமாகக் கருதப்பட்டது. அச்சமயங்களில் அவள் ‘கலம்தொடா’ மகள் ஆக்கப்பட்டாள். இவ்வாறு பெண்ணுடல் மீதான வக்கிரங்கள் பல வகையாகத் தொடர்ந்தன.
கற்பெனும் கற்பிதம்
பெண் உடல் குறித்த மூளைச்சலவைகள் பெண்ணைத் தாழ்வு மனப்பான்மையோடு சிந்திக்கவும் செயல்படவும் தூண்டின. பாவக் குறியீடான பெண்ணுடல், வீடுபேறு அடைய ஒரே வழி கற்புக்கொள்கையைக் கடைபிடிப்பதுதான் என்ற அபத்த நாடகம் பெண்களின் மரபணுக்களில் கூட அழப்பதிக்கப்பட்டது. முற்போக்குச் சிந்தனையுடைய பெண்காளால் கூட இக்கற்பிதத்தைக் கடக்க முடியாமையைக் காணலாம். ஆண் மைய சமூக கருத்தாக்கங்களின் உச்சகட்ட கற்பிதம் இக்கற்புக் கோட்பாடு. பெண் உடலின் இயங்கு வெளியை, பயன்பாட்டு தளத்தைச் சுருக்கி, புனித முலாம்கள் பூசப்பட்டதே இக்கற்புக் கொள்கை என்று பிரித்தறியும் விழிப்புணர்வு தற்போது பெண்களில் முகிழ்த்துள்ளது.
பெண்ணியத்தில் பெண் உடல்
20 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலக் அளவில் பரவலாக்கப்பட்ட பெண்ணியச் சிந்தனைகள், நமது மண்ணிலும் செழித்து வளர்ந்தன. தொடக்க நிலையில் சமத்துவம், விடுதலை, சிக்கல் தீர்வு என்ற நிலையில் மட்டுமே மேம்போக்காகப் பேசப்பட்ட பெண்ணியம், அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக பெண்ணின் இன்றைய நிலைக்கான காரணத்தைத் தோண்டத் தொடங்கியது. அப்போதுதான் சுமர்ந்து திரியும் இந்த உடல் தனக்கானதாக இல்லை என்பதையும், தனது தேவைகளை நிறைவு செய்யவோ, தன் விருப்பத்திற்குப் பயன்படுத்தவோ இயலாதவாறு கட்டமைக்கப்பட்டுள்ளமையும், அதன் இயங்கு வெளி கட்டுப்படுத்தப்பட்டுள்ளனையும் தெரிய வந்தன. இதை நன்கு புரிந்து கொண்ட சில பெண்ணியவாதிகல் பெண் உடலைக் கொண்டாடவும், அதன் இழிவுகளாக சுட்டப்பட்ட குணங்களைப் போற்றவும், பெண் உடல் சிறப்பானது என்று உரக்கக் கூறவும் செய்தனர்.
எந்த உடல் நுகர்பொருளாக, காம இச்சையின் கருவியாக, பாவக் குறியீடாக அடையாளப் படுத்தப்பட்டதோ அதே உடலை பெஆண்ணியவாதிகள் தனது ஆயுதமாக முன்னிறுத்தினர். “எனது உடல் என் பலவீனம் அல்ல, அது உன் அவசியம்” என்று ஆணை நோக்கி அறைகூவல் விடுத்தனர். இன்றைய பல பெண் கவிஞர்களின் கவிதைகளில் இக்கருத்தாக்கம் வடிவம் கொண்டுள்ளதைக் காணலாம். “எனது உடல் எனக்கானது, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய அதிகாரம்” என்கிறது இன்றைய எழுத்துக்கள். பெண் எழுத்துக்களில் ஆண் குறிகள் அம்பலப்படுத்தப்படுவதைக் காணலாம். “நீ என்னை உடலாகப் பார்த்தால் நானும் உன்னை உடலாகத்தான் பார்ப்பேன்” என்கின்றன கவிதைகள்.
காட்சி ஊடகங்களில் பெண் உடல் என்பது இக்கட்டுரையில், சங்க கால நிலை சுட்டப்பட்டதிலிருந்த எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடரப்படும் ஒரு நிலைதான். நளினம், அழகு, உறுப்பழகு, வடிவழகு, எனப் பெண்ணுடல் ஒரு காட்சிப் பொருளாக்கப்பட்டு நுகரப்படுகிறது. எழுத்து ஊடகங்களில் ஏற்பட்ட மாறுதல்களை ,மிகச் சில திரைப்படங்கள் உள்வாங்கி இருப்பினும் Mass media – க்களில் எந்தவிதச் சலனத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
எழுத்து ஊடகங்களில் கூட பெண்ணிய எழுத்துகளில்தான் பெண் உடல் ஆயுதமாக்கப்பட்டு பழைய கற்பிதங்களுக்கு அதிரடி கொடுக்கப்பட்டதே ஒழிய, ஜனரஞ்சக மற்றும் ஆண் எழுத்துக்களில் பெரிய மாற்றம் இன்றி பெண் உடல் வெறும் உடலாகத்தான் தொடர்கிறது என்பது கசப்பான ஒரு உண்மையாகும். இருப்பினும் பெண்ணுடலை துண்டுபோட்டு நுகரும் வர்ணனைகளை எழுதும் எந்த ஒரு நபரும் சற்று சிந்தித்து ஒரு தணிக்கை (Censur) செய்த பிறகு எழுதுகிறார் என்பதை மறுக்க முடியாது. பெண்ணிய எழுத்துக்கள் மீட்டெடுத்த பெண் உடலை பிற எழுத்துக்களும், ஊடகங்களும் மீட்டெடுக்கும் நிலை உருவாக விழிப்போடு முயற்சிக்க வேண்டியுள்ளது.
drvijisyam@gmail.com