எழுத மறந்த குறிப்புகள் பயிர் வளர் மண்ணில் உயிர்ப்புடன் வாழும் தம்பதியர் தொடர்பாடல்தான் இயந்திர யுகத்தில் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது.

முருகபூபதிபலரதும்  வாழ்க்கை   ஏதோ   ஒருவகையில்   தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது.   எனது    வாழ்வும்   அப்படியே   சமீபத்தில்   நான்   வெளியிட்ட   எனது   சொல்ல   மறந்த  கதைகள்  நூலை  வெளியிட முன்வந்தபொழுது   அதுதொடர்பாக   நான்   வழங்கிய   வானொலி நேர்காணல்   மற்றும்   வெளியான    விமர்சனங்களையடுத்து   அவற்றை செவிமடுத்த –   கவனித்த   சில  இலக்கியவாதிகள்   எனக்கு   வாழ்த்து தெரிவித்திருந்ததுடன்    நூலின்   பிரதியும்   கேட்டிருந்தார்கள்.    அவர்களில் ஒருவர்    ஜெர்மனியில்   வதியும்   எழுத்தாளர்   ஏலையா  முருகதாசன்   என்ற   அன்பர்.  இவர்  அண்மைக்காலமாகத்தான்   என்னுடன்   மின்னஞ்சல்   தொடர்பில் இருப்பவர்.    ஒரு   நாள்   இரவு   தொலைபேசியிலும்  தொடர்புகொண்டு உரையாடினார். எனது   வானொலி   நேர்காணலில்  குறிப்பிட்ட   அந்த   சொல்ல  மறந்த கதைகளில்   இடம்பெற்ற   முன்னைய   சோவியத்தின் இராஜதந்திரியிடமிருந்த    சங்கத்  தமிழ்  இலக்கியம்  தொடர்பான பார்வையைப்பற்றி   அறிந்ததும்   எனக்கு   பின்வரும்  மின்னஞ்சலை அனுப்பினார்.   அதனை    காலத்தின்   தேவை   உணர்ந்து    வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு   –   இனி    நான்  எழுதப்போகும்    எழுத  மறந்த  குறிப்புகள் தொடருக்குள்    பிரவேசிக்கின்றேன்.

அதற்கு   முன்னர்   மெல்பனில்   வதியும்   இலக்கிய   நண்பர்  டொக்டர் நடேசன்   இங்கு   நடந்த   நூல்  வெளியீட்டு   அரங்கில் –   தமிழர்களாகிய நாம்  எம்மவர்கள்  பற்றிய   வரலாறுகளை    எழுதுவதில்  ஏனோ பின்தங்கியிருக்கின்றோம்   எனவும்  தமது    உறவினர்கள்   மறைந்தவுடன் அவர்களை    நினைவுகூரும்   கல்வெட்டுகளை   எழுதுவதற்கும் மற்றவர்களின்    தயவை   நாடுவதாகவும்   கவலை   தெரிவித்தார்.   அத்துடன்   சமூகத்தில்   முக்கியமான   ஒருவர்    மறைந்தபின்னர்   அவர் பற்றி   எழுதுவதிலும்    பார்க்க   அவர்   வாழும்    காலத்திலேயே எழுதிவிடல்வேண்டும்   என்றும்   வேண்டுகோள்   விடுத்தார்.

முருகதாசனின்   மின்னஞ்சலும்    நடேசனின்   குரலும்   எனக்கு   இந்த   எழுத மறந்த   குறிப்புகள்   தொடரை   எழுதுவதற்கு   தூண்டியிருக்கின்றன என்றே   கருதுகின்றேன். முருகதாசனின்  மின்னஞ்சல் வணக்கம்.  உங்கள்  செய்தியை   படித்தேன்.   புதிய   தகவலை   அறிந்து மகிழ்கிறேன்.   இந்தச் செய்தியை   எனது   முகநூலில்  பதிவு   செய்ய இருக்கிறேன். எமது  வரலாற்றை   நாம்   அறிந்து   கொண்டதைவிட   அந்தந்த   துறைசார் கல்வியியலாளர்களும் – உலக  வரலாற்றாசிரியர்களும்   இராஜதந்திரிகளும்    எம்மைவிட   மிக   அதிகமாகவே   நிரூபணங்களுடன் அறிந்து    வைத்திருக்கிறார்கள்.

எங்களிடம்  எங்கள்   கிராமத்தைப்   பற்றியே   அறிந்து  கொள்ள  விரும்பாத அலட்சியப்  போக்கு  நிறையவே  உண்டு.   எதையும்   ஆர்வத்துடன்   ஊன்றி படிப்பதுமில்லை –  உள்வாங்கிக்   கொள்வதுமில்லை. வரலாறுகள்  சம்பந்தப்பட்டவையை   விடுவோம்.   எமது  அன்றாட வாழ்வோடு   சம்பந்தப்பட்ட   காய்கறிகளையோ   வேலிகளில்   படர்ந்திருந்த    மூலிகைகளான    குறிஞ்சா  –   தூதுவளை   மொசு மொசுக்கை –   கொவ்வை –  முசுட்டை –  முல்லை  போன்றவற்றின் மருத்துவக்குணங்களை   அறிந்து   கொள்வதில்  ஆர்வம் காட்டதாவர்கள்தானே    நாங்கள்.

அதுபற்றி  சொல்பவர்களை  கேலியுடன்  பார்ப்பது  கிண்டலடிப்பதுதான்     எம்மவர்   வேலையாக   இருந்தது.   அவற்றின்   மகத்துவம்  பற்றி  சொன்ன என்னை    என்னூரில்   சிலர்   கேலி  செய்திருக்கிறார்கள். இந்த   விடயத்தில்  சிங்கள  மக்களை  நான்  போற்றுவேன்.    நான் நீர்கொழும்பு  –  கொச்சிக்கடையிலும்  சிலாபத்திலும்   இருந்த போது அவர்களின்   வாழ்க்கையைப்  பார்த்து   மகிழ்ந்திருக்கிறேன்.

எமது   பிரச்சினை  பற்றி    இங்குள்ள  சமூக  அமைப்பினர்   எம்முடன் கலந்துரையாடிய போதெல்லாம்   அவரகள்   எமது   வரலாறு   பற்றிய ஆவணங்களை  உள்ளடக்கிய   கோப்புகளை   கொண்டு   வந்து   மேசையில் வைத்தவுடன்   நான்   அதிர்ந்து  பின் வெட்கிப் போயிருக்கிறேன்.நடைபெறும்   நூல்   வெளியிடு   சிறப்பாக  நடைபெற  எனது   அன்பையும் வாழ்த்தையும்   தெரிவிக்கிறேன்.  தொடர்வோம்………அன்புடன்  ஏலையா க.முருகதாசன்

கடந்த  23  ஆம்  திகதி   அதிகாலை  எழுந்து   இந்த   மின்னஞ்சலைப்பார்த்த பின்னரே   எனது   நூல்   வெளியீட்டு   அரங்கு   நிகழ்வுக்கு  புறப்பட்டேன். வீடு    திரும்பியதும்   எனக்கு   வந்திருந்த   மின்னஞ்சல்களை   பார்த்தபொழுது   அவுஸ்திரேலிய    குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்   வதியும் நண்பர்   தர்மசேகரம்   அவர்கள்   எனக்கு   அனுப்பியிருந்த  படங்கள்  என்னை   வியப்பில்   ஆழ்த்தின.

கடந்த  மார்ச்   மாதம்  இம்மாநிலத்தில்    நடைபெற்ற   கலை – இலக்கிய சந்திப்புக்கு    சென்றிருந்தபொழுது    தர்மசேகரம்   அவர்களின்    இல்லத்தில் தங்கியிருந்தேன்.    அந்த   தம்பதியரின்    அன்பான  உபசரிப்பில்  திழைத்திருந்த  எனக்கு    அவர்களின்  வீட்டு காய்கறித்தோட்டத்தைப்பார்த்தவுடன்   வியப்பும்  சொல்லில் வடிக்கமுடியாத   உணர்வுகளும்   தோன்றின. இயற்கையையும்   பிராணிகளையும்   மரங்கள்  செடி   கொடிகள்  மலர்களையும்   ஆழமாக    நேசிப்பவர்களின்   உலகம்   தனித்துவமானது. அவர்களிடம்   இருக்கும்   அவை   தொடர்பான   நுண்மையான   அறிவு எம்மை    வியக்கவைப்பவை. மனிதர்களுக்கும்   அவர்களின்    குழந்தைகள்  அவர்கள்   வளர்க்கும்  செல்லப்பிராணிகளுக்கும்    அதே வேளை  ஊர்களுக்கும்    நதிகளுக்கும் சமுத்திரங்களுக்கும்   மலைகளுக்கும்   பெயர்வைப்பவர்களைப்பற்றி எப்படியோ    அறிந்துகொள்கின்றோம். ஆனால் –   மரங்கள்   செடி –   கொடிகள்  –  புற்கள் –   தாவரங்கள்  –  காய் கனிகள்  –  மூலிகைகள் –  தானியங்களின்  பெயர்களின் ரிஷி மூலம் எமக்குத் தெரிவதில்லை.

நண்பர்  தர்மசேகரத்தை   நாம்   சுருக்கமாக  தர்மா  என்றே  அழைப்போம். அவரை  நான்  அவுஸ்திரேலியாவில்  1987   இல்   பிரவேசித்த சமயத்தில்தான்    சந்தித்தேன்.    என்னைப்போன்று    இந்தநாட்டில்   அகதி அந்தஸ்து   கோரி   விண்ணப்பித்தவர்களுக்கு   தகவல்    அமர்வு   சந்திப்பு ஒன்றை   இங்கு   பிரபலமான   சட்டத்தரணி   ரவீந்திரன்   அவர்கள்  தமது இல்லத்தில்   குறிப்பிட்ட  1987 ஆம்   ஆண்டு   காலப்பகுதியில் நடத்தியபொழுதுதான்  அங்கு   தர்மாவைக்கண்டேன். அவருக்கும்   என்னைப்போன்ற  பலருக்கும்   இந்நாட்டில்   நிரந்தர  வதிவிட அனுமதி   கிடைப்பதில்   தாமதங்கள்   நீடித்தது.   அதனால்   நாம்  அனைவரும்   இணைந்து   தமிழ்   அகதிகள்   கழகத்தை  உருவாக்கினோம்.
ஏற்கனவே  தொழில்  முறை   விசாவில்  வந்து   குடியுரிமை பெற்றவர்களுக்கும்   எம்மைப்போன்று   அகதிகளாக  வந்து   குடிவரவு குடியகல்வு   திணைக்கள   கலங்கரை   விளக்கத்தின்    பச்சை  நிற  விளக்கு சமிக்ஞைக்காக   காத்திருந்தவர்களுக்கும்   இடையில்  இனம்புரியாத இடைவெளி    நீடித்துக்கொண்டிருந்தது.

letchumananm@gmail.com