எஸ்.பொ. நினைவுகள்……

(எஸ்.பொ. 26-11-2014 இல் மறைந்த வேளையில் நான்கு அங்கங்களில் எழுதிய தொடரின்  இறுதிப்பகுதி)

எஸ்.பொ

அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை – இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 – 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன –  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   – எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர். தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி ஆ. கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி,  ஆன்மீகம், சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம். மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  முருகபூபதி  1972  இல் எழுதத்தொடங்கி  1997  இல்  தனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை  தனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலினதும் ஏற்கனவே   வெளியான  தனது  நூல்கள்  பற்றிய  விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட  முருகபூபதியின்  படைப்புகள்  என்ற   நூலையும் மெல்பன் YWCA மண்டபத்தில்  15-11-1997   ஆம்   திகதி நடத்தியபொழுது   –  குறிப்பிட்ட  நிகழ்வை   வித்தியாசமாகவும் அவுஸ்திரேலியாவில்  வதியும்   முக்கியமான  கலை, இலக்கிய ஆளுமைகள்  நால்வரை  பாராட்டி  கௌரவித்து  விருது வழங்குவதற்கும்  தீர்மானித்து –  அந்த  நிகழ்வில்  நம்மவர் மலரையும்   வெளியிட்டபொழுது,  சிட்னியிலிருந்து  கவிஞர்  அம்பி, எஸ்.பொ.  – மெல்பனிலிருந்து  மூத்த  ஓவியர்  செல்லத்துரை, நாட்டுக்கூத்து   கலைஞர்    அண்ணாவியார்  இளைய  பத்மநாதன் ஆகியோரை    அழைத்தார்.

நம்மவர்   மலரில்  மேற்குறித்த  ஆளுமைகள்  பற்றிய  விரிவான பதிவுகளும்   முருகபூபதியின்  படைப்புகள்   நூலில்  எஸ்.பொ.  எழுதிய முருகபூபதியின்  சமாந்தரங்கள்   கதைக்கோவையின்   விமர்சனமும் இடம்பெற்றன. இந்நிகழ்வுக்கு   சிட்னியிலிருந்து  வருகை  தந்த  பேரசிரியர்  ஆ.சி. கந்தராஜா   தலைமை வகித்தார். மெல்பன்   அன்பர்கள்  இந்த  விழாவுக்கு  முருகபூபதிக்கு  பூரண ஒத்துழைப்பு   வழங்கியமையினால்  அது  சாத்தியமானது. ஆளுமைகளை  வாழும்  காலத்திலேயே   பாராட்டி கௌரவிக்கவேண்டும்   என்ற   மரபு  அவுஸ்திரேலியா   மண்ணிலே தமிழ்    சமூகத்திடம்   அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  அதன்  தேவையும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில்   கலந்துகொண்டு   கௌரவம்  பெற்ற  எஸ்.பொ. அவர்களைப்பற்றிய  சிறப்புரையை  மெல்பனில்  தமிழ்  ஆசிரியராக பணியாற்றும்   இலக்கிய  ஆர்வலர்  திரு. சிவசம்பு  நிகழ்த்தினார்.

மறுநாள்   நவம்பர்  16   ஆம்   திகதி  மெல்பனில் Clarinda  என்னும் இடத்தில்   நடந்த  உதயம்  மாத  இதழ்  நடத்திய  கருத்தரங்கில் பொன்னுத்துரையும்   உரையாற்றினார்.  பொன்னுத்துரைக்கு  உதயம் இதழின்    கருத்துக்கள்   சிலவற்றில்   உடன்பாடுகள் இல்லாதிருந்தமைக்கு  காரணங்கள்   பல  இருந்தாலும்,   உதயம் ஆசிரியர்  டொக்டர்  நடேசனிடத்தில்  அன்பு  பாராட்டினார்.  நடேசனின்  சில  நூல்களையும்  அவர்  செம்மைப்படுத்தி  தமது  மித்ர பதிப்பக   வெளியீடாக  வெளியிட்டார். அவற்றுள்  ஒரு  சிலவற்றுக்கு  பொன்னுத்துரையே  பெயரும்  இட்டார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.  வாழும்  சுவடுகள்  (இரண்டு பாகங்கள்)   வண்ணாத்திக்குளம்,   உனையே  மயல்கொண்டு  (நாவல்கள்) இந்த   இரண்டு    நாவல்களையும் – பின்னர்    ஆங்கிலத்தில் ( Butterfly Lake  —  Lost in You)   கொழும்பில்  பிரபல்யமான  நூல் பதிப்பு நிறுவனம்  விஜித்த   யாப்பா  வெளியிட்டது.

சிட்னியில்  வதியும்  பேராசிரியர்  ஆ.சி. கந்தராஜாவின்  பாவனை பேசலன்றி  என்ற  நூலையும்  மித்ர  வெளியிட்டது.  இந்நூலில் இடம்பெற்ற  சிறுகதைகள்  உட்பட  கந்தராஜாவின்  வேறும்  சில கதைகளும்    2007   இல்  HORIZON   என்ற    பெயரில் வெளியாகியிருக்கிறது.    இந்த  ஆங்கில  நூலையும்    மித்ரவே வெளியிட்டது. இதில்   ஒரு  முக்கியமான  தகவலையும்  இங்கு பதிவுசெய்யவேண்டியிருக்கிறது. பொன்னுத்துரை   இலங்கையிலிருந்தபொழுதும்  அவுஸ்திரேலியா -தமிழகம்  என்று   வாழ்ந்தபொழுதும்  பல  நூல்களை   எழுதினார். ஆனால்,  அவரது  எந்தவொரு  நூலுக்கும்  இலங்கையில்  தேசிய சாகித்திய   விருது   கிடைக்கவில்லை. ஆனால் , அவரால்  படித்துப்பார்த்து  தெரிவுசெய்யப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு   அவரது  மித்ரவினால்   வெளியிடப்பட்ட  கந்தராஜாவின்    பாவனை   பேசலன்றி    சிறுகதைத்தொகுதிக்கு இலங்கையில்    தேசிய  சாகித்திய  விருது  கிடைத்தது. எஸ்.பொ.   மேற்சொன்ன   இருவரதும்   நூல்கள்   தவிர    சிட்னியில் வதியும்    தேவகி   கருணாகரன்,    மெல்பனில்    வதியும்   சுதாகரன் ஆகிய   எழுத்தாளர்களின்  சிறுகதைத்தொகுதிகளையும்  மித்ர பதிப்பகத்தில்  வெளியிட்டிருக்கிறார்.

பொன்னுத்துரை   நாடக  இலக்கியத்திலும்  பரீட்சார்த்தமான முயற்சிகளை  மேற்கொண்டவர்.   அவருடை  பிரதிகள் இலங்கையிலும்    தமிழ்நாடு    சென்னையிலும்   மெல்பனிலும் நாடகமாக   அரங்கேறியிருக்கின்றன. சென்னையில்   மேடையேற்றப்பட்ட  எஸ்.பொ.வின்  நாடகத்தில் அதன்    இயக்குநர்    யுகமாயினி    சித்தன் ,    தமிழச்சி   சுமதி தங்கபாண்டியன்    உட்பட  பலர்  நடித்தனர்.   மெல்பனில் பொன்னுத்துரையின்   வலை   நாடகத்தை   எழுத்தாளர்    பாடும்    மீன் சு. ஸ்ரீகந்தராசா   இயக்கி  மேடையேற்றினார்.  இதில்  அக்கினிக்குஞ்சு ஆசிரியர்  யாழ். பாஸ்கர் –  சாணக்கியன்  வேடத்தில்  திறம்பட நடித்திருந்தார்.   மேடை  அரங்கம் , ஒலி ,  ஒளி  அமைப்புகளில் இந்நாடகம்   குறிப்பிடத்தகுந்தது.

எஸ்.பொ.வின்  தமிழக   நண்பர்  இயக்குநர்  முள்ளும்  மலரும் மகேந்திரன்.  அவர்  முன்னாள்   பத்திரிகையாளர்.  துக்ளக்  உட்பட வேறும்   சில  இதழ்களில்  துணை ஆசிரியராக  பணியாற்றியவர். மகேந்திரனின்  திரையுலக  அனுபவங்கள்   பற்றிய   சினிமாவும் நானும்    என்ற    நூலையும்  எஸ்.பொ.  மித்ரவில்  வெளியிட்டார். மகேந்திரன்   –  நடேசனின்  மித்ர  வெளியீடான  வண்ணாத்திக்குளம் நாவலை  படித்துவிட்டு  அதனை  திரைப்படமாகவும்  எடுப்பதற்கு திட்டமிட்டார்.    ஏற்கனவே    புதுமைப்பித்தனின்    சிற்றன்னை (உதிரிப்பூக்கள்)    பொன்னீலனின்    உறவுகள்    (பூட்டாத   பூட்டுக்கள்) உமாசந்திரனின்   முள்ளும் மலரும்    (  திரைப்படத்திற்கும்  அதே பெயர்)    கந்தர்வனின்   சாசனம்  ( திரைப்படத்திற்கும்   அதே  பெயர்) முதலான    நாவல்களுக்கு    திரைக்கதை  வசனம்  எழுதி இயக்கியிருப்பவர்.      இலங்கையில்    வன்னி    பேரவலத்திற்கு  சில வருடங்களுக்கு    முன்னர்    வன்னி    சென்றும்   ஒரு   குறும்படத்தை இயக்கி    வெளியிட்டார்.    இதில்   ஈழத்துக் கவிஞர்   கருணாகரனின்   மகனும் நடித்திருக்கிறார். மகேந்திரனுக்கு – நடேசனின்    வண்ணாத்திக்குளம்   நாவலும்  நன்கு பிடித்திருந்தமையினால்,   அதனை   திரைப்படமாக்கும்    முயற்சியில் இறங்கி ,  திரைக்கதை , வசனம்  எழுதி  திரைப்படச்சுவடியையும் தயாரித்தார்.   இலங்கையில்  நீடித்த  அரசியல்  நெருக்கடிகளினால் இந்த   முயற்சி  சாதகமாகவில்லை.

பொன்னுத்துரைக்கு   மகேந்திரன் –  பாலு மகேந்திரா – மணிவண்ணன் பாரதி ராஜா   – முதலான  இயக்குநர்களுடனும்  நட்புறவு நீடித்திருக்கிறது.   அவர்களின்  தொடர்பினால்  அவுஸ்திரேலியா அன்பர்   ஒருவர்  ஊடாக  ஒரு  தமிழ்த்திரைப்படம்  எடுக்கவேண்டும் என்ற  எண்ணமும்  அவருக்கு  உதயமாகியது.  ஆனால்,  அந்த எண்ணமும்     சாத்தியமாகவில்லை.

இந்தத் தகவல்களை   இங்கு  நினைவூட்டுவதற்கு  அடிப்படைக்காரணம்   பொன்னுத்துரையின்  தொடர்பாடல்தான். அவரது    தொடர்பாடல்  பல  ஆக்கபூர்வமான  விடயங்களை சாத்தியமாக்கியிருக்கிறது.    அதனால்    பலர்    பயனடைந்துள்ளனர். அவரை    மதிப்பீடு  செய்பவர்கள்  அவரிடமிருந்த  Positive  அம்சங்களையும்   கவனத்தில்  கொள்ளுதல்  வேண்டும்.  Negative  அம்சங்களை  மாத்திரம்  தேடிக்கொண்டிருப்போமேயானால்   நாமும் Negative ஆகிப்போவோம்.

நான்   அறிந்தவரையில்  இலங்கையில்   பொன்னுத்துரையை   மதிப்பீடு   செய்தவர்களில்    மு. தளையசிங்கம்,    ஏ.ஜே. கனகரட்னா, கவிஞர்    ஏ. இக்பால்,    பேராசிரியர்    எம். ஏ. நுஃமான்    ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள்   அனைவருக்கும்  பொன்னுத்துரையின்  படைப்பு  இலக்கிய முயற்சிகள்   மட்டுமல்ல,   அவரது  பல்வேறு  இயல்புகளும்  நன்கு தெரியும்.   ஆனால்,  தமிழ்நாட்டில்  பொன்னுத்துரையின்   நூல்களுக்கு  முன்னுரை  எழுதியிருக்கும்  தமிழக   இலக்கிய ஆளுமைகள்    வெங்கட் சாமிநாதன்,  அசோகமித்திரன்,   நாடகத்துறை பேராசிரியர்    ராமானுஜம்,    சுஜாதா,  கோவை  ஞானி   ஆகியோரும்  ஈழ இலக்கியம்  நூலில் யாழ்ப்பாணத்துப்பாணன்   என்று  எஸ்.பொ. வை விளித்து,  விரிவாக  எழுதியிருக்கும்  ஜெயமோகனுக்கும் பொன்னுத்துரையின்   இதர   பக்கங்கள்  தெரிந்திருக்க  நியாயம் இல்லை.

பொன்னுத்துரையின்   இலக்கிய  வாழ்வையும்  பணிகளையும் மெல்பனில்  1997  இல் முருகபூபதியின்   இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவில்   பாரட்டி  கௌரவித்து  விருது  வழங்கிய  பின்னர் 2007  ஆம்  ஆண்டு   மெல்பனில்  அவுஸ்திரேலியா    தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்  ஏழாவது  எழுத்தாளர்  விழாவிலும்  அவர்   விருது வழங்கி   பாராட்டி  கௌரவிக்கப்பட்டார்.  குறிப்பிட்ட  பாராட்டுரையை அன்றைய   விழாவில்  நிகழ்த்தியவர்  திருமதி  சந்திரலேகா வாமதேவன். யார்  இந்த  சந்திரலேகா…? ஈழத்து   நவீன  தமிழ்  இலக்கிய  வளர்ச்சியில்  மூத்த தலைமுறைப்படைப்பாளியாக    இன்றளவும்  கொண்டாடப்படும் இலங்கையர்கோனின் மகள்தான்  சந்திரலேகா.   அக்காலத்தில் இலங்கையின்    வடபுலத்தில்    பிரதேச   காரியாதிகாரியாக  ( Disrict  Revenue  Officer – DRO)   பணியாற்றியவர்தான்   மூத்த    படைப்பாளி  இலங்கையர்கோன்.    வெள்ளிப்பாதசரம்   முதலான நூல்களை   எழுதியிருப்பவர். அக்காலத்தில்   அவர்  தமக்குக்கீழே   பணியாற்றிய கிராமசேவையாளர்களிடமும்   தமது  சிறுகதைகளை படிக்கக்கொடுத்தமையினால்     அந்தக்காட்சியையும்தான் பொன்னுத்துரை    விட்டு வைக்கவில்iலை.  விதானைமாரினால் இலக்கியப்புகழ்   தேடும்  இலங்கையர்கோன்  என்றும்  வர்ணித்தார்.

மட்டக்களப்பு    பண்டிதர்  வி.சீ. கந்தையா  சுமார்   500  பக்கங்களில் மட்டக்களப்பு    தமிழகம்  என்ற   அரிய  ஆவணநூலை   வெளியிட்ட 1964   காலத்தில்    அதன் கனதியை   எடை  பார்த்து மட்டக்களப்பிலிருந்து    கொழும்பு  செல்லும்  இரவு நேர  தபால் ரயிலில்   பயணம்  செய்பவர்கள்  உறக்கம்  வரும்பொழுது   தலைக்கு வைத்துக்கொண்டு   உறங்கலாம்   என்றவரும்  இதே  எஸ்.பொ.தான்.

பலவருடங்களின்  பின்னர்   எஸ்.பொ.,  2003   இல்   தமது  வரலாற்றில் வாழ்தல்  நூலை  இரண்டு   பாகங்களாக  1924  பக்கங்களில் வெளியிட்டபொழுது   முன்னர்  பண்டிதர்  வி. சீ . கந்தையாவின் நூலை   ஒரு  தலையணைக்கு  ஒப்பிட்டு  கேலி  செய்தீர்களே…. தற்பொழுது    நீங்கள்  இரண்டு  பாகங்களில்  அவரது  நூலைவிட மும்மடங்கு   பெரிய  நூலை   இரண்டு   பாகங்களில் வெளியிட்டிருக்கிறீர்களே….?  என்று  நேரடியாக   கேட்டபொழுது – “ஆம்…..அதற்கென்ன    பண்டிதர்    தலைக்குமாத்திரம்  வைத்துக்கொள்ள நூல்    தந்தார்.   ஆனால்  – நான்   தலைக்கும்  காலுக்கும் வைத்துக்கொள்ள   இரண்டு  பெரிய  நூல்கள்  தந்துள்ளேன்.”  – என்றார்.

எஸ்.பொ.வின்  இதுபோன்ற  கூற்றுக்கள்  சகிக்கமுடியாதவைதான். எனினும்   அவரது  இதுபோன்ற  மேலோட்டமான  கருத்துக்களை அவரது   இயல்பான  நக்கல்  என்று மாத்திரம்  எடுத்துக்கொண்டு நகரவேண்டியதுதான். பண்டிதர் வி.சீ.கந்தையாவின்    மட்டக்களப்பு தமிழகம்  மிகவும்  தரமான    ஆய்வேடு.    அதன்   பெறுமதி  கருதி  அதன்  இரண்டாவது பதிப்பினை   நேர்த்தியாக  அச்சிட்டு  2002   இல்  வெளியிட்டனர் பிரான்ஸ்    எக்ஸில்   அமைப்பினர்.

எஸ்.பொ. வின்  மூத்த  புதல்வர்  Dr. அநுரா ,  எஸ்.பொ.வின் வாழ்விலும்   பணிகளிலும்  இரண்டறக்கலந்திருந்தவர்.    இவர் எழுத்தாளர்   இல்லை.  ஆனால்  எழுத்தாளர்களின்  நண்பர்.  தனது தந்தைக்கு   தக்க  ஆலோசனைகளை    வழங்கியவர். ” எஸ்.பொ.வின்  அனைத்துப்படைப்புகளிலும்  மிகவும்  சிறந்த உன்னதமான   படைப்பு  அவரது  மூத்த  புதல்வன்   அநுரா அவர்கள்தான்”  என்று  எஸ்.பொ.வுடன்  கருத்தியல்  ரீதியில் முரண்படும்   மல்லிகை  ஜீவா   அடிக்கடி  சொல்வார். (இந்தப்பதிவுகளை    எழுதும்  வேளையில்  கொழும்பில்  இருக்கும் மல்லிகை   ஜீவாவுடன்  தொலைபேசியில்  தொடர்புகொண்டு அவருக்கும்   எஸ்.பொ. வின்  மறைவுச்செய்தி  சொன்னேன்.   அவர் உடனே    நினைவுபடுத்தியது  அநுராவைத்தான் )

அநுரா –  சென்னையில்  மித்ர  பதிப்பகத்தின்  முழுநாள்  இலக்கிய விழாவை   வெகு  சிறப்பாக  நடத்தி  முடித்த  பின்னர்  சிட்னியிலும் ஒரு    பெரு விழாவை   28-08-2004   ஆம்   திகதி  சிட்னி   ஹோம்புஷ் ஆண்கள்    உயர்நிலைக்கல்லூரியில்  நடத்தினார். இவ்விழாவில்   மூத்த  கவிஞர்  அம்பியின்  பவள  விழா நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.  அன்றைய  விழாவில்  மித்ர வெளியீடுகளான    ஆசி. கந்தராஜாவின்   உயரப்பறக்கும்   காகங்கள், தமிழச்சி   சுமதி  தங்கபாண்டியனின்  எஞ்சோட்டுப்பெண்,   நடேசனின் வண்ணாத்திக்குளம்,   கவிஞர்  அம்பியின்  அந்தச்சிரிப்பு,  எஸ்.பொ.வின்     சுயசரிதை    வரலாற்றில்    வாழ்தல்  இரண்டு பாகங்கள்,  எஸ்.பொ.    ஒரு  பன்முகப்பார்வை,  மற்றும்  பூ   ஆகியன வெளியிடப்பட்டன. மண்டபம்   நிறைந்த  இலக்கிய  சுவைஞர்கள்  அனைவருக்கும்  அன்று இராப்போசன   விருந்தும்    வழங்கினார்    அநுரா. இந்த   நிகழ்விற்கு  முருகபூபதி  தலைமை   ஏற்க,  ந.கருணகரன் பேராசிரியர்  பொன். பூலோக சிங்கம்,   திருநந்த குமார்,   டொக்டர் ஜெயமோகன்,    மா. அருச்சுணமணி,   தனபால்,  குலம்  சண்முகம் ஆகியோருடன்   இலங்கையிலிருந்து  வருகை  தந்த  ஞானம்  ஆசிரியர் டொக்டர்   தி.ஞானசேகரன்,  தமிழகத்திலிருந்து  வருகை  தந்த  தமிழச்சி  சுமதி  தங்கபாண்டியன்  ஆகியோரும்  உரையாற்றினர் என்பது    குறிப்பிடத்தகுந்தது. இந்நிகழ்வின்   நிகழ்ச்சிகளை   ஒருங்கிணைத்து  அறிவித்தார்  ஓவியர் ஞானத்தின்   புதல்வன்  ஞானசேகரம்  ரங்கன். பொன்னுத்துரையின்   வாழ்வில்  என்றும்  பக்கபலமாக  விளங்கிய திருமதி   பொன்னுத்துரை  அவர்களை   மேடைக்கு  அழைத்து அவருக்கு   பூச்செண்டு  வழங்கினார்  முருகபூபதியின்  மகள் பிரியாதேவி. இந்நிகழ்வில்  நன்றியுரையை   நிகழ்த்தியவர்  மாத்தளை   சோமு அவர்களினால்   எஸ்.பொ.வுக்கு  1989  இல்  சிட்னியில் அறிமுகப்படுத்தப்பட்ட    பத்திரிகையாளர்    சுந்தரதாஸ்.

சிட்னியில்   இதுவரைகாலமும்  நடந்த  இலக்கிய  விழாக்களில் மேற்குறித்த   இந்த  விழா   ஒரு  மைல் கல்  என்று  சொல்வது மிகையான   கூற்று  அல்ல.  இதில்  வேடிக்கை   என்னவென்றால்  இந்த   விழாவில்  நேரம்  பற்றாக்குறையினால்  எஸ்.பொ.  ஒரு நிமிடம்தான்    பேசினார். அவர்   மறைவதற்கு  சில  வருடங்களுக்கு  முன்னர்  அவுஸ்திரேலியா   கம்பன்  கழகம்  அவருக்கு  சான்றோர்  விருது வழங்கி   கௌரவித்திருக்கிறது.   இலக்கியப்படைப்பாளிக்கு  இவ்வாறு விருது  வழங்கியிருப்பதனால்  அந்தப்பெருமை   கம்பன்  கழகத்திற்கும்  கிட்டியிருக்கிறது.

எஸ்.பொ.   குறித்த  மதிப்பீடுகள்  அவர்  வாழ்ந்த  காலத்தில் வந்துள்ளன.   அவற்றில்  சிலவற்றை  அவர்  ஏற்காமல்  கடுமையான தொனிகளில்   எதிர்வினையாற்றினார்.  தமது  நூல்களில் பதிவுசெய்தார்.    இன்று  அவர்    மறைந்துவிட்டார்.   அவரது  மறைவுக்கு  ஊடகங்களிலும்  மின்னஞ்சல்களிலும்  முகநூல்களிலும் அனுதாபம்   தெரிவித்தும்  மதிப்பீடுகளை  முன்வைத்தும்  பலர் எழுதுகிறார்கள்.   பலர்  எழுதுவதற்கு  தயங்குகிறார்கள்.   பலர் தாமதிக்கிறார்கள். பொன்னுத்துரையின்   பார்வையில்  அவர்  மற்றவர்கள்  மீது கொண்டிருந்த   மதிப்பீடுகளுக்கும் —  அவர்  குறித்து  மற்றவர்கள் அவர்   மீது  கொண்டிருக்கும்  மதிப்பீடுகளுக்கும்  இடையேதான் உண்மைகளை  நாம்  தேடவேண்டியிருக்கிறது. அந்த   உண்மைகள்   கசக்கலாம்.   இனிக்கலாம்.   ஆயினும்  உண்மை சுடும்    என்ற  மறைபொருளும்  உண்டு. காலம்   அவரைப்பற்றிய  சரியான  மதிப்பீடுகளை   வெளியிடும்  என நம்பலாம். எனது  எஸ்.பொ.  பற்றிய  இந்தத்தொடரின்  முதலாவது  அங்கத்தை படித்துவிட்டு —  இலங்கை   கண்டியில்  தற்பொழுது  வதியும்  யாழ். பல்கலைக்கழகம் — பேராதனைப்பல்கலைக்கழகம்  ஆகியனவற்றின் தகைமைசார்  பேராசிரியரும்    மூத்த   இலக்கிய    விமர்சகருமான எனது   அருமை  நண்பர்  எம்.ஏ. நுஃமான்  எனது  மின்னஞ்சலுக்கு  தனது   ஆழ்ந்த  அனுதாபங்களையும்  தெரிவித்து,  பின்வரும்  தனது சிறிய   கவிதையையும்  இணைத்திருந்தார்.

” இருந்து  சென்ற   முன்னோரின்
இடத்திலெல்லாம்  நாம்  இன்று
விருந்து   செய்து   மகிழ்கின்றோம்
விகடம்   செய்து    மகிழ்கின்றோம்
இருந்த  இடம்விட்டு நாமும்  இனி
எழுந்து  சென்றால்  இங்கிருந்து
விருந்து  செய்வார்  யார்…  யாரோ…?
விகடம்   செய்வார்  யார்…   யாரோ…? “

letchumananm@gmail.com