ஏங்குகின்ற ஏழைகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அன்று     கப்பலிலே ஏறிவந்து- இலங்கைக்
                 கரைசேர்ந்த முப்பாட்டன் சோற்றுக்காய்
                 காடுவெட்டி தேயிலைநாட்டி-வெள்ளைக்
                 காரனுக்காய் உழைத்தாரே.

எட்டு       அடிகொண்ட லயமென்று -நீண்ட
                அடுத்தடுத்தக் குடிசைக்குள்ளே -கொத்து
                அடிமைபோல் வாழ்ந்தேதான் -சொந்த
                அறிவுமங்கிக் கிடந்தாரே.

 பத்து       மணிநேரம் வேலைசெய்தும்-தினம்
                மடியேந்தி பிச்சைகேட்கும் -வாழ்வின்
                மகிழ்ச்சியினை இழந்தபடி- நித்தம்
                மாடாக உழைத்தாரே.

சிந்தும்   வியர்வைக்குப் பரிசாக-சொற்ப
               வேதனத்தை மட்டுமவன்-பெற்று
               வெள்ளைக்காரன் உயரபாடு பட்டு 
               வேதனையால் உழன்றாரே.

ஓர்நாள் அவன்மாண்ட பின்னாலே-வந்த
                அவன்பிள்ளை பேரப்பிள்ளை-எல்லாம்
                அடுத்தடுத்து அவன்வழியே வாழ்ந்து 
                அடிமாடாய் போனாரே.

அந்த       வெள்ளைக்காரன் போனபின்னே-பெற்ற
                விடுதலைக்கு பின்னாலே-வாழ்வில்
                விடிவெள்ளி தோன்றுமென்று-எண்ணி
                வெறுங்கனவு கண்டாரே.

கண்ட     கனவெல்லாம் பலிக்குமென்று-இன்றும்
               காத்திருந்து காத்திருந்து-கட்டை
               கல்லறைக்கு போகுமட்டும்-இங்கே
               கஷ்டமோன்றே கண்டாரே.

நாடு       சுதந்திரத்தைக் கண்டபின்னும்-வாழ்வில்
              சுதந்திரத்தைக் காணாமல்-வாடி
              சுமைதாங்க முடியாமல்-ஏழ்மை
              சுட்டெரிக்க வீழ்ந்தாரே.

இன்னும்  உழைப்பைமட்டும்சுரண்டுகின்ற-. பேர்கள்
                  உறிஞ்சிட்டார் இவருதிரம்-என்று 
                  உயர்வுக்கு வழிகேட்டுப் -போனால் 
                  உதைக்கின்றார் சொல்லாலே.

எங்கள்   தேசத்தின் பொருளாதாரம்-இவர்கள்
               தேர்தல்வரும் காலங்களில் தெய்வம்
               திருவிழாக்கள் முடிந்திட்டப் -பின்னால்
               தேய்ந்தசெருப் பானாரே.

என்றும் எவன்செத்தால் எனக்கென்ன வென்று
                எமன்போல பகல்வேசம் போட்டு
                இவருயிரை வாங்குகின்றக் கூட்டம் 
                எடுப்பாய்வாழ் கின்றாரே.

இப்படி   வாழுகின்ற கொடுங்கூட்டம் அழிந்து
              வாழாத ஏழைகளும் -வாழ்வில்
              வசந்தத்தை காணுமொரு விடியல்
              வரும்நாளுக் கேங்குகின்றாரே.!

megathoothan001@hotmail.com