எங்கள் வீடு ஒரு செய்தி நிறுவனம் போன்று பல்லாண்டுகள் இயங்கியது. மூத்த சகோதரர் நாவேந்தன் முதல் கடைசிச் சகோதரர் வரை எங்கள் சகோதரர்கள் யாபேருமே சுமார் நாற்பது வருடங்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவரெனக் காலத்துக்காலம் பத்திரிகை, வானொலிச் செய்தியாளர்களாகச் செயற்பட்டோம். நாவேந்தன் பதினாறு வயதில் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகச் சேர்ந்து சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு ஊருக்குத்திரும்பிச் சில வருடங்கள் வீரகேசரியின் நிருபராகச் செயற்பட்டார். துரைசிங்கம் அண்ணர் தினகரன் நிருபராக விளங்கினார். பின்னர் அக்கா ஞானசக்தி, சிவானந்தன் அண்ணர், யான், தங்கை சரோஜினி, தம்பி தமிழ்மாறன் என எல்லோருமே காலத்துக்காலம் இலங்கையிலிருந்து வெளிவந்த சகல பத்திரிகைகளுக்கும் நிருபர்களாகக் கடமையாற்றினோம். வீரகேசரி, தினகரன் குறூப், தினபதி குறூப், டெயிலி மிரர் – ஈழமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாவற்றுக்கும் எமது வீட்டு மேசையிலிருந்து விதம்விதமாகச் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டன.
இந்தியச் சஞ்சிகைகளுக்கும் செய்திகள், கட்டுரைகள் அனுப்பப்பட்டன. அக்காலத்தில் யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் சிறப்புடன் இயங்கியது. சமாச விழாக்கள், யாழ் முற்றவெளியில் சமாசம் நடாத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி, வாணவேடிக்கை என்பன குடாநாட்டு மக்களைக் குதூகலிக்க வைத்த காலம். ‘சமூகஜோதி” கேற் முதலியார் சி. தியாகராசா சமாசத்தின் தலைவராகவும் துரைசிங்கம் அண்ணர் செயலாளராகவும் கடமையாற்றினர். சமாசத்திற்கு இலங்கை வானொலியில் மாதமொருமுறை கிராமசஞ்சிகை நிகழ்ச்சியில் இடம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய அந்நிகழ்ச்சியை மாதமொருமுறை துரைசிங்கம் அண்ணர் தயாரித்தளிப்பார். மாவட்டத்திலுள்ள சனசமூக நிலையங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அந்நிகழ்ச்சியில் பங்குபற்றச் சந்தர்ப்பமளித்து வந்தார்;
அக்காலம் வானொலி கிராமசஞ்சிகை நிகழ்ச்சியின் பொறுப்பாளராக விவியன் நமசிவாயம் அவர்கள் கடமையாற்றி வந்தார். ஒரு தடவை வானொலி நிகழ்ச்சிக்கென அண்ணருடன் கொழும்பு வந்து கோட்டை வை. எம். சி. ஏ. விடுதியில் தங்கியிருந்தோம். வானொலி நிலையத்திற்குச் சென்று கிராமசஞ்சிகை நிகழ்ச்சியில் பங்குபற்றிவிட்டு வந்தோம். பின்னர் அண்ணர் ‘லேக்கவுஸ்” செல்வோம் என அழைத்துச் சென்றார். அங்கு தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் அவர்கள் எம்மை அன்புடன் வரவேற்று உபசரித்தார். சிறுவனான என்னோடும் அன்பாக உரையாடினார். நீயும் பத்திரிகைக்கு எழுதுகிறாயா என ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டுப் பாராட்டினார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே யான் வீரகேசரி நிருபராக (டிசம்பர் 1966) நியமனம் பெற்றேன். எங்கள் வீட்டிலிருந்து சகல பத்திரிகைகளுக்கும் செய்திகள் அவைக்கேற்றவாறு அனுப்பப்படுவது அப்பத்திரிகை ஆசிரியர்களுக்குத் தெரிந்திருந்தது. அக்காலத்தில் ஒரு பத்திரிகையின் நிருபர் மற்றப் பத்திரிகைக்குச் செய்தி அனுப்புவது விரும்பத்தக்கது அல்ல. பத்திரிகை ஆசிரியர்கள் அப்படிச் செயற்படும் நிருபர்களைக் கண்டித்துவிடுவார்கள். ஆனால் அன்று தினகரன் ஆசிரியராக விளங்கிய சிவகுருநாதன் அவர்களோ, வீரகேசரி ஆசிரியராக விளங்கிய சிவப்பிரகாசம் அவர்களோ, அல்லது தினபதி ஆசிரியராக விளங்கிய எஸ். டி. சிவநாயகம் அவர்களோ எமது செயற்பாடுகளைக் கண்டித்ததில்லை. காழ்ப்புணர்வு
கொண்ட ஒரு சிலர், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட எமக்கெதிராக முறைப்பாடுகள், பெட்டிசங்கள் எழுதியனுப்பிய போதிலும் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியப் பெருமக்கள் எமது செய்திகளின் உண்மைத் தன்மை, தரமறிந்து எமது எழுத்துப் பணியை மேலும் ஊக்குவித்தே வந்தார்கள். யான் ‘தினகரன் குறூப்” நிருபராக நியமனம்பெற்ற காலம் முதல் கொழும்பு வரும்போதெல்லாம் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் அவர்களைச் சந்தித்துச் செல்வது வழக்கம். அவர் மூத்த சகோதரர் போன்றே என்னை ‘வா… தம்பி.. வா” என வரவேற்று உபசரிப்பார். வந்ததும் முன்னால் இருக்கவைத்து நீண்ட நேரம் பலதும் பத்துமாக உரையாடுவார். அவரது நகைச்சுவை கலந்த பேச்சு சுவையாகவிருக்கும்.
சகோதரர்களின் உடல்நலம் – சுகம் விசாரிப்பார். இலக்கிய விடயங்கள் – சர்ச்சைகள் குறித்துப் பேசுவார். எனக்கு மிகத் தெரிந்த எழுத்தாளர்களின் நலம் விசாரிப்பார். அவரோடு பேசிக்கொண்டிருப்பது மிக மகிழ்ச்சியைக் கொடுக்கும். ‘தொடர்ந்து உற்சாகமாகச் செயற்படு. செய்திகளை எழுதியனுப்பு. நல்ல வருமானமும் கிடைக்குமல்லவா..” எனக்கூறி அவர் சிரிக்கும் பாணியே தனி அழகு தான்..!தினகரனில் எமது செய்திகள் அதிகமாகப் பிரசுரமாகும். அதிக செய்;திகள் பிரசுரமாகையில், சில செய்திகளின் தலைப்பில் எமது அடையாளமாக ‘புங்குடுதீவு குறூப் நிருபர்” எனப் போடாது, செய்தியின் கீழ் ‘தீவுப்பகுதி நிருபர்” எனப் பொருள்பட ‘தீ. நி.” என அடையாளமிடப்படும். தீவுப்பகுதிச் செய்திகள், யாழ். மாவட்டச் செய்திகள் மாத்திரமல்ல சிலவேளை எமக்குத் தெரிந்த ‘கொழும்புச் செய்திகள்”கூட நாம் எழுதிப் பிரசுரமாகியுள்ளன. ‘செய்திகளில் திருத்தம் செய்யும் வேலை இருக்காது. தரமாக இருக்கும். அவை தெளிவான கையெழுத்தில் இருக்கும். எனவே அவை அப்படியே பிரசுரிக்கத்தக்கன” என உதவி ஆசிரியர்களுக்கும் எமது செய்திகள் குறித்து சிவகுருநாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எனது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் பலவும் புனைபெயர்களில்கூட தினகரனில் பிரசுரமாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அவர் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்கள் சிலவற்றில் எனது உரையை, கவிதையைக் கேட்டபின் மனம்திறந்து அவர் பாராட்டியமை ஞாபகத்திலுள்ளது. அவரது நல்மனது எவராலும் என்றும் மறக்க முடியாதது. அவர் எல்லோருக்கும் நண்பர். யாழ்ப்பாணம் வந்தால் அவர் மக்கள் எழுத்தாளர் கே. டானியலுடன் நட்புரிமையுடன் பேசிக்கொள்வார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடனும் அதே நட்புரிமையுடன் பேசுவார். அண்ணர் நாவேந்தன், துரைசிங்கத்துடனும் சகோதரன் போலப் பேசுவார். எல்லோருக்கும் இனியவராகவே இறுதிவரை வாழ்ந்தார்.
‘பத்திரிகை உலகம்” போட்டி, பொறாமை, காழ்ப்புணர்வு மேலோங்கியது எனப் பலரும் கூறுவர்;. சந்தர்ப்பம் பார்த்துச் சதிசெய்து ஒருவரை வீழ்த்தித் தாம் முன்னேற வேண்டுமெனச் சந்தர்ப்பவாதிகள் காத்திருப்பர் எனக் கூறுவதுண். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பத்திரிகை ஆசிரிய பீடத்தில் சுமார் நாற்பது வருட காலம் பணியாற்றியமை என்பது சாதனைக்குரியது. அந்த வல்லமை, ஆளுமை, எல்லோருடனும் நட்புடன் பழகும் தன்மை என்பன நல்மனிதனான சிவகுருநாதன் அவர்களை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியவாறே பட்ட மேற்படிப்பை மேற்கொண்ட அவர், ‘இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி” என்ற பொருளில் ஆய்வு நூலைச் சமர்ப்பித்து முதுகலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் தமிழ்ப்பணியாற்றியவர். இவரது பணிகளைப் பாராட்டி அரசு ‘கலாசூரி” விருதினை வழங்கிக் கௌரவித்தது.
தினகரன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இரண்டு தலைமுறை எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்தாரென விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
சட்டத்துறையில் நுழைந்து படித்துச் சட்டத்தரணியாகவும், சட்டக்கல்லூரி பகுதிநேர விரிவுரையாளராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றினார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இரு தடவைகள் தெரிவுசெய்யப்பட்டுப் பணிபுரிந்தார். அச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் அவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது. சகல இன மக்களின் நன்மதிப்பையும் பெற்ற பண்பாளராக விளங்கினார்;.அவரது மறைவின்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், கலை இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் பலருட்பட ஏராளமான புத்திஜீவிகள் அஞ்சலி செலுத்தினர் என்பதை அறியும்போது அவர் நற்பண்புகள் புலனாகின்றன. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டதுபோல, சிவகுருநாதன் அவர்களிடம் ஒரு அங்கதச் சாயல் புன்னகையிருந்தது. இதனை யாவரும் அறிவர். அது அவரை எல்லோருடனும் நண்பனாக வாழவைத்தது. அவரது படத்தை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வைத்து மதிப்பளித்துள்ளார்கள். நீண்ட காலம் பத்திரிகை உலகின் மதிப்புப்பெற்ற தலைமகனாக விளங்கிய சிவகுருநாதன் அவர்கள் எம்மக்களின் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார்.