ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள்

- வெங்கட் சாமிநாதன் -க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள்,  2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. கனகரத்னா சட்டநாதன் கதைகளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். சட்ட நாதனின்  புதியவர்கள் என்னும் தொகுப்பு ஒன்றும் நான் பத்து வருடங்களாகத் தங்கியிருந்த சென்னைப் புறநகர் மடிப்பாக்கத்தின் பொன்னி என்னும் பிரசுரம் 2006 – ல் வெளியிட்டுள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரசுரத்தின் இருப்பே தெரிந்திருக்க வில்லை.  சட்டநாதனும் அவர் சிறுகதைத் தொகுப்புகளை அனுப்பி வைத்த பிறகுதான் எனக்கும் சட்டநாதனையே தெரியவந்துள்ளது. சட்ட நாதனின் சமீபத்திய தொகுப்பான முக்கூடலுக்கு குப்பிழான் ஐ சண்முகம் என்னும் இன்னொரு சிறுகதை எழுத்தாளர் சட்டநாதனின் படைப்பு வெளி என்ற தலைப்பில் ஒரு பாராட்டுரையையும் அறிமுகமாகத் தந்திருக்கிறார். குப்பிழான் ஐ சண்முகமும் 1946- பிறந்த, எழுபதுகளிலிருந்து சிறுகதைகள் எழுதிவரும் அறுபத்து ஏழு வயதினர். அவருடைய தொகுப்பு ஒன்றை, ஒரு பாதையின் கதை, காலச்சுவடு வெளியிட்டுள்ளது சில மாதங்கள் முன்பு. சொல்லி வைத்தாற்போல் அதுவும் ஓரிரு மாதங்கள் முன்பு எனக்குக் கிடைத்துள்ளது. நாற்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் இவ்விருவரை பற்றி நான் அறிந்தவனில்லை. நாம் அறிந்தவர் இல்லை என்று என் அறியாமையைப் பொதுமைப் படுத்த முடியுமோ என்னவோ தெரியவில்லை. உலகில் எது ஒன்று பற்றியும் அறியாதவர் களேயாயினும், அறியாதவர்கள் என்று யாரும் சொல்லி விட்டால் நம்மவர்களுக்கு அசாதாரண கோபம் வருமாதலால், இந்த அறியாமையை என்னுடனேயே நிறுத்திக்கொள்கிறேன். இவ்விருவர் பற்றியுமோ, அவர்கள் எழுத்துக்கள் பற்றியுமோ இங்கு எந்த தமிழ் பத்திரிகையிலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. இருந்தாலும். ஒரு பெரும் குற்றச் சாட்டு அறுபதுக்களில் எழுந்ததுண்டு. இலங்கை தமிழ் எழுத்தாளர்களை நாம் அங்கீகரிப்பதில்லை என்று. நியாயமான குற்றச் சாட்டு தான் என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அதற்குப் பதில் சொல்லும் வகையில் தானோ என்னவோ அறுபதுகளிலிருந்து கலாநிதிகள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பின் இவர்களுக்கு எதிர்முனையாக, எஸ் பொன்னுத்துரையும்  ஒரு பெரும் புயலாக நீண்ட காலம் தமிழ் இலக்கிய வெளியில் மிகுந்த  செல்வாக்குடன் பவனி வந்தார்கள்.  அனேகமாக இன்னமும் கூடத்தான்.

இப்போது கடந்த ஐம்பது அறுபது வருட அரசியல் நிகழ்வுகளால் உலகம் முழுதும் பரவியுள்ள இலங்கைத் தமிழர்களின் இலக்கிய பங்களிப்பு நம் அங்கீகாரத்துக்காகக் காத்திருப்பதில்லை. அச்சிலும் சரி, இணையத்திலும் சரி.

அந்தத் தவற்றைத் திரும்பச் செய்யும் எண்ணம் எனக்கில்லை. எனவே இவ்விருவர் எழுத்தையும் நாம் கவனிக்கவேண்டும். குப்பிழான் யாழ்ப்பாண கிராமம் ஒன்றின் பெயர். ஷண்முகம் பிறந்த ஊர். அவர் 1969- லிருந்து எழுதி வருபவர் என்று அ.யேசுராசா தந்துள்ள பின்னிணைப்பில் சொல்கிறார். அலைகள் என்றொரு மாதப்பத்திரிகை எழுபதுகளில் அன்று ஆக்கிரமித்திருந்த இடது சாரி முற்போக்கு எழுத்துக் களுக்கு மாற்றாகச்  செயல்பட்டது. அதில் குப்பிழான் சண்முகத்தின் ஆசிரியத்துவ பங்களிப்பைப் பற்றியும் யேசுராசா குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார்: “சூத்திரப்பாங்கான வரண்ட பார்வைகள் கோலோச்சிய இலக்கியச் சூழலில், பல்துறை ஈடுபாட்டுடனும் நவீனத்துவம் பற்றிய தாகத்துடனும் போலிகளுக்கு எதிராக மாற்று இதழாகக் கலகம் புரிந்து வெளிவந்த அலையில் அவரின் பங்களிப்பு சேர்ந்தே உள்ளது”
.
பூரணி என்றும் ஒரு பத்திரிகை அலைக்கு முன்னரும் பின்னர் தொன்னூறுகளில் சரி நிகர் என்றும் முற்போக்கு கோஷம் இடாத எதிர் நிலை பத்திரிகைகளும் இருந்தன. ஆனால் நமக்கு மல்லிகை என ஒன்றையும் டொமினிக் ஜீவாவையும் தான் தெரியும். தன்னை முன்னிறுத்திக்கொள்வதிலும் ஒரு கெட்டிக்காரத்தனம் வேண்டுமே.

அக்காலத்தில் அவர்கள் ஒன்றாகச் செயல்பட்டது பற்றி பரவசத்துடனேயே அ. யேசுராசா எழுதுகிறார். இன்னொரு பின்னிணைப்பில், இன்னொரு இலங்கைத் தமிழர், மு. ராகவன், “வாய்ப்பாட்டு ரீதியிலான கதைகளை ஷண்முகத்திடமிருந்து எதிர்பார்க்கமுடியாது“ என்றும் எழுதியுள்ளார்.

என்றாலும் கூட, “1966 தொடக்கம் 2004 வரையில் நான் எழுதிய முப்பது கதைகளில் பதினைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்” கொண்டதாக குப்பிழான் சொல்லும் இத்தொகுப்பில் வார்த்தைகளின் அதீதப் பிரவாகமும், அரசியல் கொள்கை பிரகடனங்களும் இல்லாதவை எங்கு இருக்கின்றன என நாம் தேடினால் சில கிடைக்கத் தான் செய்கின்றன.

ஒரு பாதையின் கதை தொகுப்பில் காணும் முதல் கதை தலை மன்னார் ரெயில் கதை நான் இதுகாறும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் கவனம் செலுத்தாத ஒரு நீண்ட துயர வரலாற்றில் ஒரு சிறு நிகழ்ச்சியைச் சொல்கிறது. லால் பகதூர் ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தலைமுறை தலைமுறையாக் வேலை செய்து தம் வாழ்வைக் கழித்த இந்தியக் குடும்பங்களுக்கு இலங்கை குடி உரிமை மறுக்கப்படவே,  அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப, இந்தியா அவர்களைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டது. இதையும் இலங்கை நேர்மையாகச் செயல்படுத்தவில்லை. இந்தியா மறுப்பேதும் சொல்லவில்லை. அது பற்றி இலங்கைத் தமிழ் தலைவர்கள் வாய் திறக்கவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்த் தலைவர்கள். தேயிலைத் தோட்டத்தில் நூற்றாண்டுகளாக வேலை செய்த தமிழர்களைத் தம்மவர்களாக ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை. இப்பெரிய சோகத்தைப் பற்றி அக்காலத்திய இலங்கைத் தமிழ் எழுத்தாளர் யாரும் கூட எழுதியதாக எனக்குத் தெரிவில்லை. ஒரு வேளை என் அறியாமை தான் இங்கும் குடிகொண்டுள்ளதோ என்னவோ.  இது பற்றி நான் படிக்கும் முதல் கதை குப்பிழானின் “தலைமன்னார் ரெயில்” தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்குக் கப்பல் புறப்படும் நாளில் அங்கு தலைமன்னார் ரயிலுக்கு ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதும். அந்நிகழ்வு ஒன்றின் விவரிப்புத்தான் இந்தக் கதை. பிரிந்து செல்லும் உறவுகள், சகஜமான சிங்கள்- தமிழ் உறவாடல்கள், எட்ட நின்று பரிமாறிக்கொள்ளும் கள்ளப் பார்வைகள், நம்பிக்கை உறுதி மொழிகள் வாழ்ந்த மண்ணுடனான உறவு மறுக்கப்பட்டு, தான் காணாத பிறந்த மண்ணுக்குத் துரத்தப்படும் வேதனைகள், நிச்சயமற்ற வரும் நாட்கள் இப்படி எத்தனையோ. ரயிலடிப் பேச்சுக்களில், ஒன்று. பக்கத்தில் இருந்தவனை” “தம்பியும் இந்தியா போகுதோ?” என்று கேட்டதும் தம்பி அடுக்கு வசனத்தில் பொரிந்து தள்ளுகிறான்.”” “நான் வளப்படுத்திய நாட்டில் எமக்கு வாழ உரிமையில்லை. நாங்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. மந்தைகளாக நடத்தப் படுகிறோம்.  நாங்கள் வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறோம்”

அவன் பேச்சில் தென்னிந்திய, ஈழத்து அரசியல் தலைவர்களின் வாடை மணத்தது என்று குப்பிழான் சொல்கிறார். இது 1970-ல் மல்லிகையில் வெளிவந்த கதை.  மல்லிகைக்கதை தான். தாமரை இதழில் வெளிவரும் கதைகளில் தம்பியின் பேச்சில் கட்டாயம் அரசியல் வாடை இருந்தாலும் கொஞ்சம் இயல்பான பேச்சு மொழியில் இருந்திருக்கும்.

இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும் கதையில் கொழும்புவில் வேலை பார்ப்பவன் கிராமத்துக்கு வருகிறான். சின்னத் தங்கை தூங்கும் அண்ணனை எழுப்ப வேண்டியிருக்கிறது. அந்தக் குழந்தையுடனும் சரி, பாட்டியுடனும் சரி, அம்மாவுடனும் சரி, யாருடனும் பேச அன்பு காட்ட ஏதுமில்லை. வெளியே பல காட்சிகள். அவற்றின் பழைய நினைவுகள். எதிலும் மனம் கொள்வதில்லை. வாழ்க்கையின் இட மாற்றம். புதிய அனுபவங்கள். புதிய மனிதர்கள். “ஞானக் குஞ்சியம்மா வீட்டுக்குப் போனா ராணியோட கதைக்கலாம் என்று தோன்று கிறது. “ஞானக் குஞ்சியம்மா வீட்டைப்போட்டு வாறேன்” என்று குரல் கொடுத்து வீட்டை விட்டு வெளிக்கிடுகிறான். வெறும் நிகழ்வின் விவரிப்பு தான் வீர கேசரி 1974 –ல் வெளியான கதை.

இமமாதிரியான விவரிப்புகள். நிகழ்வுகள், காட்சிகள், மனிதர்கள் பற்றி இடையிடையே குப்பிழான் தீட்டும் சித்திரங்கள் நன்றாகவே வந்துள்ளன. ஆனால் அவை ஏதேதோ கதைச் சிக்கல்களில், காதல் மயக்க வார்த்தை பிரவாஹங்களில் அகப்பட்டுத் தவித்துப் போகின்றன. ஒரு இடத்தை மாதிரிக்குப் பார்க்கலாம்:

உன்னை மறந்துவிட்டேனென்ற  நினைவில் நான் வீதியில் நடை போடும்போது, அழகிய றோசாவில் நீ நின்று அழுகிறாய். உன்னைமறந்து விட்டேனென்ற நினைவில் ஏதாவது பாடலை முணுமுணுக்கும்போது, அந்தப்பாடலில் இழையோடும் சுருதியாய் நீ நின்று உன் சோகக் குரலைக் கொடுக்கிறாய். உன்னை மறந்துவிட்டேனென்ற நினைவில் நான் ஆண்டவனை வணங்கும் போது, வரங்கேட்கும் பாவனையில் நீ என்னைப் பார்க்கின்றாய். உன்னை மறந்துவிட்டேனென்ற நினைவில்  நான் ஏதாவது படிக்க முயலும்போது கண்களில் ஏதோ உணார்ச்சி மிளிர்வுடன்  நீ பாடத்தை மறைக்கிறாய்….

இத்தோடு முடிவதில்லை. பாரா பாராக்களாய் பக்கம் பக்கங்களாய் இது போன்ற வார்த்தை அளப்புகள் ஒவ்வொரு கதையிலும் பரந்து கிடக்கும். இதைக் குறித்துத்தான் குப்பிலான் சண்முகம் கதைகள் உணர்ச்சிக்கொந்தளிப்பும், உள்ளக் கிளர்ச்சியும் கருப்பொருளாகக் கொண்டவை, நினைவுகளும், கனவுகளுமே….. என்று இப்படியெல்லாம் பாராட்டத் தூண்டினவோ என்னவோ. “சூத்திரப் பாங்கான வரண்ட பார்வைகள் அற்றவை என்றும் பாராட்டுக்கள் ஒரு புறம். “ஒரு பாதையின் கதை”  யில் 1974- ல் வீரகேசரியில் வெளிவந்த கதை. ஊருக்கு நடுவே ஒரு நீண்ட பாதை அமைத்துக் கொடுக்கப்படுகிறது. அதன் நடுவே ஒரு தபால் பெட்டி, ஆஸ்பத்திரிக்கு அவசரமாக எடுத்துச் செல்ல ஒரு கார் நிற்கும் இடம், இப்படி முன்னர் கருமுள்ளும், புதரும், குண்டும் குழுயுமாக இருந்த இடத்தைச் சீரமைத்துத் தருகிறார் ஒரு தனவந்தர். அவர் ஒரு காலத்தில் இரக்கமற்ற கொடூரனாக இருந்தவர். வீட்டு வேலைக்காரன் ஐயா எனக்கு மகன் பிறந்திருக்கிறான் செய்தி வந்துள்ளது வீட்டுக்குப் போகணும்” என்றவனை “நீ என்ன செய்யப் போகிறாய், வேலையை முடி” என்று சொல்லும் குணத்தவர். இடையில் ஒரு நாள் ஒரு வாலிபன் அவர் முன்னால் அமர்ந்து பேசி அவர் மனத்தை மாற்றி விடுகிறான். ஊரின் வடக்கு தெற்காக ஒரு நல்ல பாதை அவர் செலவில் அமைக்கப்படுகிறது. வாழ்நாள் முழுதும் முரடனாகவும் கஞ்சனாகவும் இருந்த மனிதர் யாரோ ஒரு இளைஞனின் ஒரு நாள் கொஞ்ச நேர பேச்சில் மனம் மாறி கர்ணனாக, தருமனாக அவதாரம் மாறிவிடுகிறார். பாதை திறப்பு நாளில் அவர் தன் மனம் திருந்தியகதையைச் சொல்லும் திறப்பு நாள் விழாப் பேச்சு தன் அந்த ஏழு பக்க கதை, பேச்சுத்தான் கதையாகத் தரப்பட்டுள்ளது. படிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் ஆகவேண்டும். நம் புராணங்களில் இத்தகைய மனமாற்றம் சித்திக்கும். அவதார புருஷன் தோன்றுவார். ராக்ஷஸன் பக்தி மானாகிவிடுவான்.

அடுத்த பழையவர் சட்டநாதன். அவர் தொகுப்புகள் இரண்டைப் பற்றிச் சொல்லலாம். புதியவர்கள் (2006), முக்கூடல் (2010)
சட்டநாதனின் உலகமும் ஆண் பெண் உறவுகளின் மர்மமான முடிச்சுகளைப் பற்றியே பேசுவதாகவும் காதல், காமம், நட்பு, பாசம், பரிவு, பிரிவு என அவர் உலகம் விரிவதாகவும் குப்பிழான் சண்முகம் பாராட்டுரை எழுதியுள்ளார். வாஸ்தவம் தான். ஆண் பெண் உறவுகள் அதன் எல்லா வண்ணங்களிலும். ஆனால் அதை மீறி எழுவதால் இருந்தால் ஒழிய இந்தக் காதல் வண்ணங்கள் அத்தோடு நின்றுவிட்டால், அதுவும் கடந்த அறுபது வருட கால நீட்சியில் வாழும் ஒரு இலங்கைத் தமிழனின் வாழ்வில்… காதல் அதன் எல்லா வண்ணங்களிலும் ஒளிவீசாது தான்.

ஆனால் சட்டநாதன் முக்கூடல் தொகுப்பின் முதல் கதையே இந்தப் பாராட்டை மீறிய ஒன்று தான். நினைவுகளில்  கதையில் கணபதி என்னும் மனிதரை ஒரு பஸ் நிறுத்ததில் சந்திக்கிறோம். சாதாரண மனிதர். ஆனாலும் தன் சாதாரணத்தை அசாதாராணமாக மாற்றி, தம்மையும் மற்றோரையும் வாழ்விப்பவர். அவர் உதவாத, ஒரு காரியம் அங்கு எதுவும் நடப்பதில்லை எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் உதவுகிறவராகவே அவர் வாழ்வு கழிகிறது. மிக அநாயாசமாக வெகு சுவாரஸ்யமாக கணபதியும் அவர் சூழலும் சித்தரிக்கப் பட்டு விடுகிறது. கடைசியில் ஒரு வரவேற்புக்கு அழைக்கப்படுகிறார். வேறு ஒரு வேலையைக் கவனித்துவிட்டு வருவதாகச் சென்றவர் வரவே இல்லை. நேரம் கடந்து செல்ல விசாரிக்கிறார்கள். கடற்படைக்காரர்களையும் கேட்டு விடலாம் என்று விசாரிக்க, “அப்படிப்பட்ட ஆட்களை நாங்கள் பிடிப்பதே இல்லை” என்று அரைகுறைத் தமிழில் அந்த சிங்களவன் சொல்கிறான். ஆனால் கணபதி கிடைக்கவில்லை. எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது அவர் முடிவு என்னவாக இருந்திருக்கும் என. நம்மை உலுக்கி அசைத்துவிடும் நிகழ்வு. இது அங்கு தமிழர்களின் வாழ்க்கை. யார் காணாமற் போவார், எப்படி என்று தெரியாது. புகார் செய்ய இடமில்லை. காணாமற் போய்விட்டார் அவ்வளவே. மறுபடியும் அவரவர் அவரவர் அன்றாட வேலைகளைக் கவனிக்கச் செல்லலாம். 2009-ல் வெளியான கதை.

மனமடிப்புகளில் என்ற கதையில் சில நினைவுகளை அசை போடுகிறார். சாதாரணமாகவே ஆங்காங்கே தம் வாசிப்புகளைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியுமான குறிப்புகள் வரும். அவர் நினைவு கொள்ளும் எழுத்தாளர்களில் தி. ஜானகிராமன், செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம், ராமாமிருதம், எஸ் ராமக்ரிஷ்ணன், சாரு நிவெதிதா, ஜெயமோகன், ஜெயகாந்தன் இப்படி பலர் உண்டு. இதுவே ஒரு அசாதாரண கலவை தான். ஏனோ இவர்களில் எஸ் பொன்னுதுரையோ, அ. முத்துலிங்கமோ, சேரனோ தென் படுவதில்லை. இந்த பழம் நினைவுகளின் மனமடிப்புகளில் அன்று சிவராமூவாகவும் பின்னர் பிரமீளாகவும் தெரிய வந்தவர் மைலாப்பூரில் சட்டநாதன் இருந்த காலத்தில், “நான் திருமலை, பலத்தார் தான். உங்கள் விலாசம் தந்தவர், மைலாப்பூரிலை, தெற்கு மாடவீதியில் இருக்கினம், போய்ப் பாருங்க என்றவர்..” என்று அறிமுகம் செய்து கொண்டவர், இன்னம், “அம்மா வழியில எனது பூர்வீகம் வேலணை தான். நான் பலத்தாருடைய மச்சாளின் மகன், சிவராம்” என்று அறிமுகம் தொடங்கியது.  “முன்பின் பார்த்திராத, பழகியிராத ரத்த பந்தம்”  என்று சட்டநாதன் தன்க்குள் சொல்லிக்கொள்கிறார். பின் சிவராமூ அழைக்க, செல்லப்பாவைப் போய்ப் பார்க்கிறார்கள். ”தமிழ் நாட்டில் தீவிர எழுத்தாளர் நடுவே பெயர் சொல்ல வந்த ஒரு கிறுக்கன் அவர்” என்று பிரமிக்கும் சட்ட நாதன் அவர் 58-வயதில் கரடிக்குடி கிராமத்தில் மறைந்ததை துயருடன் நினைவு கொண்டு, தமிழ் உள்ளவரை அவருக்கு சாவில்லை என்று முடிக்கிறார்.. ஒரு நல்ல தீர்க்கமான, பாராட்டும். நினைவுகொள்ளலும் தான். இதுவும் சட்டநாதன் தான்.

• சட்ட நாதனின் உலகில் மிருகத்தனமான, பெண்வெறி கொண்டவர்களும் உண்டு.  மனைவி சடலமாகிக் கிடக்கும் வேளையில் மச்சாளை நினைத்து அவளைத் தேடி ஓடும் கணவனும் உண்டு.  இப்படி பலர் பல நிற பேதங்களில், குண தோஷங்களில். அதான் முன்னமேயே சொன்னார்களே, காதல் அதன் பல வண்ணக் கோலங்களில் என்று.

ஒரு பெரும் வித்தியாசம். எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்துப் பாங்கு. எந்தக் கதையாக இருந்தாலும், எதைப் பற்றி எழுதினாலும், யாழ்ப்பாண வாழ்க்கை, கிராமங்களின் சூழல் சட்ட நாதனின் எழுத்துக்களில் காண்பது போன்று வேறு யார் எழுத்திலும் அத்தகையை அழகான, மனதில் உடன் பதிந்து ஒரு காட்சியை எழுப்பி விடும் சித்தரிப்பை நான் படித்ததில்லை.

அவர் சித்தரிக்கும் மனிதர்களையும் அவர்கள் வேட்கையையும் தான் மனம் ஒப்புவதாக இருப்பதில்லை. இருக்கக்கூடும் அப்படியும் மனிதர்கள். ஆனால் மைலாப்புரில் இவர் வசித்த காலத்தில் எழுப்பும் சித்திரம், சில நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அது தான் நன்கு அறியாத மண்ணில்,  இவர் உலவ விடும் கற்பனை மனிதர்களும், உறவுகளும் ஒட்டுவதாக இல்லை.

அறியாத மண் கிடக்கட்டும். அவர் நன்கு அறிந்த வாழ்ந்த யாழ்ப்பாண மண்ணிலேயே, உலகறிந்த சாதி மேட்டிமை தான். ஆனாலும் காலங்கள் என்று ஒரு கதை. சட்ட நாதன் அறிந்த உலகம் தான். நான் இன்னும், அறிந்திராத,  கால்பதித்திராத மண் தான். ஆனாலும் காலங்கள் கதையில் தன் மகன், பள்ள சாதியைச் சேர்ந்த மாணவனை வீட்டுக்கு அழைத்து வந்து பழகுவது பிடிக்காத அப்பன், “பள் பொடியன் தானே, அதுக்கு நீ ஏன் குஞ்சங்கட்டிப் பூச்சுடறே பிள்ளை” என்று சத்தம் போடுகிறார்.

ஐயா, சத்தம் போடாதீங்க ரமணனுக்குக் கேட்கப் போவுது, எனக்கு கூச்சமாயிருக்கு” என்கிறான்.

“இதிலே என்ன கூச்ச நாச்சம் பிள்ளை… சாதி கெட்ட பயல்… உவனை இஞ்சை அடுக்காத பிள்ளை…..”

அவர் இன்னம் சாதிப்பெருமையை மறக்காதவராக இருக்கலாம். வீட்டில் அனுமதிக்காதவராக இருக்கலாம். ஆனால் இந்த நாடக மிகையில் நடக்க சாத்தியமில்லை. காலமாற்றத்தையும், மிஞ்சி இருக்கும் சாதிவெறியையும் இன்னும் மிகைப் படுத்தாது நடப்பு உண்மையில் கையாண்டிருக்கலாம்.

புதியவர்கள் என்ற இதற்கு முந்திய தொகுப்பில் “ஒரு அவிழ் கூட..”: என்னும் கதை மனதை மிகவும் உருக்கி உலைக்கும் ஒன்று. வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள ஒரு ஏழைக் குடும்பத்தின் சிறு பெண். உண்ண ஏதும் சரியாகக் கிடைப்பதில்லை. அன்று ஏதும் சாப்பிடவில்லை. ஒரு அவிழ் கூட உள்ளே போகவில்லை. வெறும்  தண்ணியையே குடித்துக் குடித்து, “இந்த அகதிச் சனியன்” என்றே வகுப்பிலிருக்கும் சக மாணவிகளால் வெறுத்து ஒதுக்கப்படுபவள். வாந்தி எடுத்து விடுகிறாள். பள்ளியில் சேர்ந்து சில நாட்களே ஆனதால் அவளுக்கு பள்ளி உணவு கிடைப்பதில்லை. வேண்டுமென்றே விதாரணையார் தாமதப்படுத்துகிறார். வகுப்பு ஆசிரியையும் வெறுப்புடனே தான் பார்க்கிறார். பசி பொறுக்காது வேறு மாணவியின் சாப்பாட்டுப் பொட்டியைத் திறந்து சாப்பிட்டு விடுகிறாள். சாப்பாட்டு மணம் அவளைக் காட்டிக்கொடுத்து விடுகிறது. ”வந்த மூணு நாளிலேயே திருட ஆரம்பித்தாயிற்றா” என்று வசைகள். கழுத்தில் ”சாப்பாடு திருடி” என்று எழுதி அட்டை தொங்கவிடப்பட்டு ஊர்வலம் வரச் செய்து அவமானப் படுத்தப்படும் அந்தச் சிறு பெண் ஏதோ பூச்சி மருந்து சாப்பிட்டு இறந்து விடுகிறாள்.

அகதிகள் வாழ்க்கை கொடுமையானது தான். ஆனால் அகதிச் சனியன் என்று ஒரு குழந்தையை ஒண்ட வந்த இடத்தில், வகுப்புக் குழந்தைகளும், வகுப்பு ஆசிரியையும், பள்ளி நிர்வாகமும் இப்படி அவமானப் படுத்தி, சாவுக்கு விரட்டு மா என்று தெரியவில்லை. ஒட்டுதல் சிலரிடமும், வெறுப்பும் அலட்சியமும் வேறிடத்திலும் கலவையாக எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் இத்தகைய கொடுமை நடக்குமா என்பது தெரியவில்லை.

அடுத்த சின்னத் தேவதைகள் என்ற கதையில் இந்தப் பெண் யசோவை வைத்தே ஒரு மாயா ஜாலக் கதை எழுதப் படுகிறது. அவள் ஒரு பூச்சியாக, பின்னர் ஒரு தேவதையாக ஒரு சுவர்க்க லோகத்துக்கு இட்டுச் செல்லும் மார்க்கம் காட்டுகிறாள். முந்திய கதை மிகைப்படுத்தப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் எழுப்புவதாக இருந்தாலும் மனதைப் பிழியும் ஆனால், இந்த யசோ வுக்கு ஒரு விமோசனம் தரும் பாங்கில் எழுதப்பட்டது எந்த வித எதிர்வினை யையும் எழுப்புவதில்லை.

கதை என்னவாக இருந்தாலும், அவர் சித்தரிக்கும் மனிதர்களும் அவர்கள் சிந்தனைகளும் என்னவாக இருந்தாலும், சட்டநாதன் கதைகளில் அவர் சித்தரிக்கும் சூழலும், வாழ்க்கையும் மிக வசீகரமானவை. அதிலும் கிராமத்து வாழ்க்கையும் கிராமத்து சித்தரிப்பும் மக்கள் பேசும் மொழியும் மிக் ரம்மியமானவை. படிக்க இனிமை தருபவை. அவற்றின் குணமே வேறு தான். இத்தகைய நுணுக்கமான கண்முன் காட்சி எழுப்பும் சித்தரிப்பை வேறு யாரிடமும் கண்டதான நினைப்பு எனக்கில்லை. இதற்காகவாவது, மிஞ்சியிருக்கும் சட்டநாதன் கதைகள் (1996) தொகுப்பை சாவகாசமாகப் படிக்க வேண்டும்.

1. ஒரு பாதையின் கதை: (சிறு கதைகள்) குப்பிழான் ஐ. சண்முகம். காலச்சுவடு பிரசுரம், நாகர் கோயில் ரூ 95
2. முக்கூடல்: (சிறுகதைகள்) க. சட்டநாதன் மீரா பதிப்பகம், 291/6 – 5/3 A Edward Avenue, கொழும்பு 6. விலை ரூ 300
3. புதியவர்கள் ((சிறுகதைகள்) க.சட்டநாதன், பொன்னி, 2/1758, சாரதி நகர், என்ஃபீல்ட் அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91 ரூ 55

vswaminathan.venkat@gmail.com