கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் – ஓர் அறிமுகம்

கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் -  ஓர் அறிமுகம்மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடமாகும். இம்மூன்றில் ஒன்று குறையாக அமைந்துவிட்டால் உயிரினங்கள் வாழும் தகவமைப்பினை  இழந்து விடுவர். அவற்றில், மனிதன் தங்குவதற்கு இருப்பிடம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இத்தகைய இருப்பிடம் மக்களின் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். கற்காலத்தில் மனிதன் நாடோடியாகச் சுற்றித் திரிந்தான். அவன் வாழ்க்கையில் இயற்கை சீற்றத்தில் அவன் தப்பிப் பிழைத்தது அரிது. அக்கால கட்டங்களில் மனிதன் மரங்களின் கிளைகள் மீதும், பாறைக்குகைகளிலும் மறைந்து, விலங்குகளிடமிருந்தும், மழை போன்ற இயற்கைத் தாக்குதலிலும் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். தான் உறங்குவதற்கும் அத்தகைய குகைகளையும் மரங்களையும் பயன்படுத்தினான். புதியகற்காலத்தில் மரங்களின் இலைகள், புல், கோரை இவற்றினை வைத்து கூரைகளை வேய்ந்து, அக்கூரைகளில் வாழ்ந்து வந்தான். புல், கோரை இவற்றினை வைத்து மனிதன் கூரையமைத்து வாழ்ந்தமைக்கானச் சான்று, கலித்தொகை, சிறும்பானாற்றப்படை போன்ற நூல்களிலும் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் குடிசைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு எனப் பலவிதங்களில் அமைக்கின்றனர். இவ்வகையான இருப்பிடம் அமைத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இங்கு கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்களைத் தவிர்த்து தொழில் சார்ந்த கலைச்சொற்களை மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

 ஆய்வு எல்லை
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி பேரூராட்சிப் பகுதிக்குட்பட்ட கட்டுக்குத்தகை கரிசல்குளம் பகுதியில் கட்டிடத்தொழிலாளர் மத்தியில் புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை (Technical terms) மட்டுமே ஆய்வு எல்லையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு நோக்கம்
கட்டுக்குத்தகை கரிசல்குளம் பகுதியில் கட்டிடத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களை அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கலைச்சொல் – வரையறை
கலைச்சொல் என்பது ‘Technic’ எனும் ஆங்கிலச்சொல்லின் மொழிபெயர்ப்பாகும். இது ‘Technicus’ எனும் இலத்தீன் சொல்லிருந்து வந்ததாகும். இந்த இலத்தீன் சொல்லுக்கு கலை என்று பொருள். குறிப்பிட்ட அறிவுத்துறையில் இடம்பெறும், கருத்தமைவுகளை வழங்கும் சொற்கள் கலைச்சொற்கள் ஆகும். இவை அத்துறைக்கு உரிய சொல்லாகக் கருதப்பெறும் இவை சிறப்புச்சொல் என்றும் கூறப்படும்.

கலைச்சொல் பொது விளக்கம்
பாரதியார் பத்திக்கைக்கு கலைச்சொல் குறித்து எழுதும் பொழுது, ‘தமிழில் சாஸ்த்ர பரிபாஷை’ என்ற கட்டுரையில் “ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்திரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கம் இல்லாத சொல்” என்று எழுதுயுள்ளமை கலைச்சொல்லிற்குரிய விளக்கத்தினைத் தெளிவுபடுத்துகின்றது (விசுவனாதன்.சீனி (பதி.),167:2007). இங்கு ஒருகூட்டத்தார் என்றும், பொது வழக்கம் இல்லாத சொல் என்றும் குறிப்பிட்டுள்ளதால் இங்கு கட்டிடத்தொழிலாளர்களை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கி.ஆதிநாராயணன் குறிப்பிடும் பொழுது, “கலைச்சொல் என்று நாம் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட துறையிலுள்ள கருத்துகளுக்குரிய பொருளில் பயன்படுத்தும் சொற்கள். இவை இக்கருத்துகளை விளக்குவதாக ஏற்பட்டவை. பெரும்பான்மையான கலைச்சொற்கள் சதாரண வழக்கிலுள்ள சொற்களே. சாதாரணச் சொற்களுக்கு ஒரு சிறப்புப் பொருள் ஏற்படுவது கலைச்சொற்களின் சிறப்பியல்பு எனலாம்.”  (கி.ஆதிநாராயணன்,10:1990) என்று கண்ணபிரான் கூறுவதாக  குறிப்பிட்டுள்ளார்.

கி.ஆதிநாராயணன் குறிப்பிடும் பொழுது, “கலைச்சொல் என்பது சிறிய வடிவில் நிறைந்த கருத்தைத் தருவதாகும். அறிவியல் கருத்துக்களை நீண்ட தொடர்களால் விளக்காமல் எளிதில் விளக்கும் நோக்கில் சிறுசொற்கள் வடிவில் அமைக்கப்படுவது தான் கலைச்சொல் என்று குறிப்பிடுவர்” (கி.ஆதிநாராயணன்,10:1990) என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிடுவதாக கூறியுள்ளார். மேற்கண்ட கூற்றுகளில் இருந்து மிகச்சிறிய சொல் கூட வளமான செய்திகள் தரும் என்பது புலனாகிறது.

பயன்படுத்தும் சொற்கள்

கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் சொற்களின் அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கலாம். அவையாவன,

1. பொதுச் சொற்கள்
2. சிறப்புச் சொற்கள்

என்பனவாகும். மேலும் இவ்விருவகைச் சொற்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். வையாவன,

i) வேலையாட்களின் தரவரிசை முறையின் அடிப்படையான சொற்கள்
ii) கருவிகளின் அடிப்படையிலான சொற்கள்
iii) அளவையினை மையமிட்ட பெயர்கள்
iv) செயல்முறையின் அடிப்படையிலான சொற்கள்
v) பயன்படுத்தும் பொருட்களின் அடிப்படையிலான சொற்கள் என்று வகைப்படுத்தலாம்.

i ) வேலையாட்களின் தரவரிசை முறையின் அடிப்படையான சொற்கள்
பொறியாளர் (Engineer) என்பவர் தான் கட்டிடத் தொழிலில் மிக உயர்ந்த பதவி என்று குறிப்பிடுவர். பொறியாளரின் கீழாக மேற்பார்வையாளர் (supervisor) இருப்பர். இவர் எப்பொழுதும் வேலை நடக்கும் இடத்தில் இருந்து வேலை வாங்குபவராக இருப்பர். மேற்பார்வையாளரை அடுத்த நிலையில் பெரிய கொத்தனார் (அ) கட்டிடக்கலைஞன் (mason) இருப்பர். இவர் அணுபவம் நிறைந்தவராக இருப்பர். இவரின் ஆலோசனைப்படி மற்ற கொத்தனார் நடப்பர். கொத்தனாருக்கு உதவியாக நிமிர்ந்தாள், சித்தாள் வேலை செய்வர். கட்டிடத் தொழிலைப் பொருத்தவரையில் நிமிர்ந்தாளாக ஆண்கள் மட்டுமே இருப்பர். கடினமான வேலையைச் செய்பவனாக ‘நிமிர்ந்தாள்’ பயன்படுத்துவர். சித்தாள் என்பவள் பெண்ணாக இருப்பர். இவர்கள் நிமிர்ந்தாளின் உதவியுடன் வேலையைச் செய்பவராகவும் இருப்பர். சித்தாளுக்கு நிமிர்ந்தாளைவிட சம்பளம் குறைவாகவே இருக்கும். (ச.செல்லமணி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.53)

i i ) கருவிகளின் அடிப்படையிலான சொற்கள்

அ) மண்வெட்டி
‘மண்வெட்டி’ என்பது மண்ணை வெட்டி அள்ளுவதற்குப் பயன்படுவதாகும். கட்டிடத் தொழிலைப் பொருத்தவரையில் இவ்வகையான கருவியை ‘நிமிர்ந்தாள்’ பயன்படுத்துவர். இது கட்டிடத் தொழிலில் மட்டுமின்றி விவசாயம் போன்ற தொழில்களிலும் மண்ணை வெட்டி அள்ளுவதற்குப் பயன்படும் கருவியாகும்.

ஆ) காரைத்தட்டு
‘காரைத்தட்டு’ என்பது கலவைப் பொருட்களை அள்ளிச் செல்வதற்குப் பயன்படுத்தும் தட்டாகும். இங்கு, பெரும்பாலும் காரையை அள்ளி வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்துவதால் இப்பெயர் பெறுகிறது. இக்கருவியினை ‘சித்தாள்’ பயன்படுத்துவர்.
இ) கரண்டியும் வகைகளும்

கொத்தனார் சாந்தினை அள்ளிச் செலுத்துவதற்காகவும், பூசுவதற்காகவும் பயன்படுத்தும் கரண்டியினை அவற்றின் அளவின் அடிப்படையில் முழுக்கரண்டி, அரைக்கரண்டி, காக்கரண்டி, காம்புக்கரண்டி என வகைப்படுத்துவர். அளவு குறைந்த கரண்டியினை நுட்பமான வேலையின் பொழுது பயன்படுத்துவர். இவ்வகையான கரண்டியினை கரணை என்று கும்பகோணம் பகுதியில் வழங்கி வருகின்றனர். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)

ஈ) மணியாசு ‘மணியாசு’ என்பது ஆசினை சரி செய்வதற்குப் பயன்படுத்தும் மரத்தால் ஆன பொருளாகும். இது கைபிடியுடன் கூடிய பலகையாகும். தளத்தினைச் சரி செய்வதற்குப் பயன்படுத்துவர். இவ்வகையான கருவி பெரும்பாலும் பூச்சு வேலையின் பொழுது பயன்படுகின்றது. (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)
உ) தூக்குக்குண்டு: தூக்குக்குண்டு என்பது பம்பரம் போன்ற வடிவம் பெற்று நூல் கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும். இது அளவு செங்குத்தாக இருக்கின்றதா என்பதனைப் பார்ப்பதற்குப் பயன்படுத்தும் கருவியாகும். (இரா.சதீஷ்குமார், கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.23)
ஊ) குருமாத்தகடு: பூச்சு வேலையின் பொழுது பூசப்பட்ட பகுதியினை வழவழப்பாக மாற்றுவதற்குப் பயன்படும் சில்வர் தகட்டிற்கு ‘குருமாத்தகடு’ என்று கூறுவர். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)
எ) பார்டர் சக்கை: பார்டர்சக்கையை நுட்பமான வேலைப்பாடுகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இது சிறியதாக இருப்பதால் எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது. (இரா.சதீஷ்குமார், கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.23)
ஏ) பைப்பு உருட்டு: சுவர்களின் வெளிப்புறப் பகுதியின் முனைப்பகுதிகளிலும், படிகளின் கைபிடிப் பகுதியிலும்  உருளை போன்று அமைப்பதற்கு மூன்று இஞ்ச், இரண்டு இஞ்ச்,  ஒரு இஞ்ச்,  அரை இஞ்ச் அளவுகளில் தேவையான பைப்புகளை மட்டும் பார்டர் வேலைப்பாடுகளின் பொழுது  பயன்படுத்துகின்றனர். இதனை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியை பைப்பு உருட்டு என்பர். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)

i i i ) அளவையினை மையமிட்ட பெயர்கள்

அ) டேப்
டேப் என்பது அளவினைக் குறிப்பதற்குப் பயன்படும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாகும்.

ஆ) மட்டக் கம்பும் வகைகளும்
அளவு என்பது எந்தவொரு பொருட்தயாரிப்பிலும் தொழிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையில், மட்டத்தினை சரி செய்வதற்கென்று நேராக செய்யப் பெற்றக் கம்பினைப் பயன்படுத்துவர். இதனை மட்டக்கம்பு என்று கூறுவர். இவற்றினை அடிகளின் அளவு அடிப்படையில் ஓரடி, இரண்டடி, மூன்றடி, நான்கடி, ஐந்தடி, ஆறடி, ஏழடி, எட்டடி மட்டக்கம்பு என வகைப்படுத்துவர். இம்மட்டக்கம்பினை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ‘மட்டப்பலகை’ என்றும் குறிப்பிடுவர். (ச.செல்லமணி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.53)

இ) குத்தானக்குச்சி
மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கு அளவினைக் குறித்துக் கொள்வதற்கு வெலக்கமாத்துக் (பெறுக்கமாற்று) குச்சியைப் பயன்படுத்துவர். இதனை அளவு குச்சி என்றும் குத்தானக்குச்சி என்றும் கூறுவர். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)

ஈ) லெவல் ட்யூப்
‘லெவல் ட்யூப்’ தூரமான இரு சுவர்களின் உயரத்தினை ஒரே அளவையில் அமைப்பதற்குப் பயன்படும் கருவியாகும். இது ட்யூப்பால் ஆனது. இதனுள் தண்ணீர் நிரப்பி நீரின் அளவினை வைத்து மட்டத்தினை சரிசெய்வர். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது ட்யூப்பினுள் நீர்க் குமிழ்கள் இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் தவறான அளவையினைக் காண்பிக்கும். (இரா.சதீஷ்குமார், கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.23)

உ) அளவு ஓடு
என்பது பூச்சு வேலையின் பொழுது அளவு ஒரே அளவாக இருப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருளாகும். இதனைப்பதிப்பதற்கு சிமிண்டால் ஆன நைஸ்ஸினைப் பயன்படுத்துகின்றனர். இதனைப்பயன்படுத்துவதால் அளவு மாறாமல் ஒரே மட்டமாக இருக்கும். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)

ஊ) மூலைமட்டம்
இரு சுவர்கள் இணையும் பகுதிகளின் கோணங்களின் அளவு (தொன்னூறு) 90 டிகிரியில் அமைப்பதற்குப் பயன்படுத்தும் கருவிக்கு ‘மூலைமட்டம்’ என்று பெயர்.

i v) செயல்முறையின் அடிப்படையிலான சொற்கள்

அ) செங்கற்களும் வகைப்பாடும்
வேலையைச் செய்கின்ற பொழுது பயன்படுத்தும் வேலை நுணுக்கங்களை மையமாக வைத்து இவ்வகையான கலைச்சொல் உருவாக்கம் பெறுகின்றன. உதாரணமாக, செங்கற்களைப் பயன்படுத்தும் விதங்களின் அடிப்படையாக வைத்து அவற்றிற்குப் பெயர் வழங்கி வருகின்றனர். செங்கலைக் கிடைமட்டமாக வைத்துப்பயன்படுத்தினால் ‘படுக்கைக்கல்’ என்றும் குத்து வசமாகப் பயன்படுத்தினால் குத்துக்கல் என்றும் வழங்குவர். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)

ஆ) ஆசு பார்த்தல்
‘ஆசுபார்த்தல்’ என்பது அளவினை மட்டம்பார்த்தலைக் குறிப்பதாகும். இது தளம் போடும் பொழுதினில் பயன்படுத்துவர். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)

இ) கொன்றை போடுதல்
சுவர் எழுப்பும் பொழுது ஒவ்வொரு கற்களுக்கும் ஒருமுறை அளவு பார்த்துக்கொண்டிருந்தால் வேலையில் காலதாமதம் ஏற்படும். இத்தகையதனைத் தடுப்பதற்காக சுவர் எழுப்பும் பொழுது முதலில் இருபுறங்களின் சிறுபகுதியில் மட்டம் பார்த்து சுவர் எழுப்புவதற்கு கொன்றை போடுதல் என்று பெயர் கூறுவர். இதன் பின்பு நூல் கயிற்றால் கட்டிவிடுவர். இதன் மூலம் மட்டத்தினை சரிசெய்யலாம். (ச.செல்லமணி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.53)

ஈ) அருகு பார்த்தல்
இரு சுவற்றின் வெளிப்புறப்பகுதி சந்திக்கும் இடத்தினை பூச்சு வேலை பார்ப்பதற்கு ‘அருகு பார்த்தல்’ என்று கூறுவர். இவ்வேலைப்பாடு மிகக்கடினமானதாகும். இதனைக் ‘கோடிபார்த்தல்’ என்றும் கூறுவர். (ச.சங்கிலிப்பிரபு, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.32)

உ) கரவு பார்த்தல்
கரவு பார்த்தல் என்பது வீட்டிற்கு முக்கியமானதாகும். ஏனென்றால், தளப்பகுதி ஒருபுறம் கரவாக இருந்தால் தான் வீட்டை அலசும் (சுத்தம் செய்தல்) பொழுது தண்ணீர் எளிதில் வெளியே செல்லும். இவ்வாறு அமைப்பதற்கு கரவு பார்த்தல் என்று பொருள். (ச.சங்கிலிப்பிரபு, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.32)

ஊ) கப்பியடித்தல்
கப்பியடித்தல் என்பது செங்கல்லை கண்டிக்கல் அளவினில் இருந்து மிகவும் சிறியதாக்கி, அதனுடன் சுண்ணாம்பு கலந்து வீட்டின் மெத்தில் தட்டோடு பதிப்பதற்கு முன் கப்பியடிப்பர். இதனால் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்கும். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)

v) பயன்படுத்தும் பொருட்களின் அடிப்படையிலான சொற்கள்

அ) கலவையும் வகைகளும்
கலவை என்பது இரண்டும், இரண்டுக்கும் அதிகமானப் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப் பெறுவதாகும். கட்டிடத் தொழிலுக்கென சிமிண்ட், மணல், நீர் ஆகியவற்றினைப் பயன்படுத்தி கலவையை உருவாக்கம் செய்கின்றனர். இதனைச் ‘சாந்து’ என்றும் கூறுவர். இவற்றின் ஈரத்தன்மையை மையமாக வைத்து வகைப்படுத்துவர். சிமிண்ட் மற்றும் மணல் மட்டும் கலந்து உருவாக்கம் பெறுவதற்கு ‘உதிரிக்கலவை’ என்றும்; தண்ணீர் குறைவாகப்பயன்படுத்தி புட்டு போன்று பயன்படுத்துவது ‘புட்டுக்கலவை’ என்றும்; புட்டுக்கலவையினுள் ஈரம் லேசாக இருக்குமாறு தயார் செய்யப்படும் கலவையினை ‘ஈரப்புட்டு’ என்றும்; தண்ணீரை விட்டு இலகுவாக நன்றாக புரட்டிய கலவையினைக் ‘கொளச்ச கலவை’ (குளைத்தல்) என்றும் கூறுவர். (இரா.சதீஷ்குமார், கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.23)

ஆ) கற்களும் வகைப்பாடுகளும்
கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுத்தும் பொருட்களில் கற்கள் முக்கிய இடம் பெறுகின்றது. கல் என்பது பொதுப்பெயராக அமைந்துள்ளது. இவ்வகைக்கற்களை அவற்றின் தன்மையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

a)முண்டுக்கல்
பாறைகளை வெட்டி எடுக்கப்பட்ட கற்களுக்கு முண்டுக்கல் என்பர். முண்டுக்கல் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் அமைந்திருக்கும். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)
b)பாண்டுகால்
என்பது முண்டுக்கற்களின் வகைகளில் ஒன்றாகும். ஒன்றரை அடிநீளமும் 10 (அ) 11இஞ்ச் உயரமும் கொண்டதாகக் காணப்படும். இவ்வகையான கற்களை கட்டிடங்களின் மூலைப்பகுதியில் விரிசல் ஏற்படாமல் இருப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். (ச.செல்லமணி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.53)
c)ஆலங்கல்
ஆலங்கல் என்பது காரை வீட்டின் முன்பகுதியில் தாழ்வாரம் அமைப்பதற்கு சுவற்றின் வெளிப்புறம் நீட்டியவாறு சொருகுவதற்குப் பயன்படுத்தப்படும் கல்லாகும். இது முண்டுக்கல்லினால் ஆனது. இதனுள் மரங்களை வைப்பதற்கு ஏதுவான காடி (பள்ளம்) போன்ற அமைப்பு காணப்படும். இது கொக்கி போன்று காணப்படுவதால் இதனைக் கொக்கிக்கல் என்றும் அழைப்பர் என்று அழகர்சாமி கூறுகின்றார். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)
d)சல்லி
என்பது கற்களை மிகச்சிறிய அளவில் உடைத்து செய்யப்படும் கல் வகையாகும். இதனை, அவற்றின் அளவின் அடிப்படையில் ஒன்றரை இஞ்ச் சல்லி, அரை இஞ்ச் சல்லி, முக்கால் இஞ்ச் சல்லி என்றும் வகைப்படுத்துவர். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)
e)செங்கல்
என்பது மண்ணால் செய்யப்பட்டு சுடப்பட்ட கல்லாகும். இக்கல்லினை மூன்று, இரண்டு, ஒரு இஞ்ச்களில் தயார்செய்கின்றனர். இச்செங்கல்லினை உடைக்காமல் அப்படியே பயன்படுத்துவதனை முழுக்கல் என்றும், அச்செங்கல்லினை இரண்டாக உடைத்துப் பயன்படுத்தினால் அரைக்கல் என்றும், இச்செங்கல்லினை சிறுசிறு துகள்களாகப் உடைத்து பயன்படுத்தினால் கண்டிக்கல் என்று இரா.சதீஷ்குமார் குறிப்பிடுகிறார். (இரா.சதீஷ்குமார், கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.23)
 f)சித்துக்கல்
செங்கல்லில் சிறிய அளவில் காணப்படும் கல்லிற்கு சித்துக்கல் என்று பெயர். நுட்பமான வேலைப்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் செங்கற்களாகும். இவற்றில் இரண்டு இஞ்ச் கற்கள் படியின் கைபிடிப் பகுதிகளுக்குப் பயன்படுத்துவர். ஒரு இஞ்ச் கற்கள் வீட்டின் முன் புறம் கூரை வேலைகளுக்கும், வீட்டின் உட்புறத்தில் பொருள் வைப்பதற்குப் பயன்படும் அலமாரி (கபோர்டு) அமைக்கும் வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். (இரா.சதீஷ்குமார், கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.23)

g)ஆலபிளாக்கல்
சிமிண்ட் மற்றும் சிப்ஸ் (சல்லித்துகள்கள்) மணல், கிரசர் தூசி கொண்டு மையப்பகுதியில் துளையுடையது போன்று தயாரிக்கப்பட்ட கற்களாகும். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)

h)பிஸ்கட்கல்
என்பது கிரசர் தூசி கொண்டு ஆலபிளாக் கல் போன்றே தயாரிக்கப்படுகிறார்கள். இதனுள் மணல் சல்லி பயன்படுத்தப்படாததால் கனமில்லாமல் லேசாகக் காணப்படும். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)

i)சிமிண்ட்கல்
செங்கற்களுக்குப் பதிலாக சிமிண்ட்டினால் கற்கள் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் கற்களுக்கு சிமிண்ட் கல் என்று பெயர். (மு.பழனிச்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.26)
இ) தட்டோடு
என்பது வீட்டின் மேற்பகுதியில் கசிவு ஏற்படாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒருவகையான ஓடாகும். இவ்வகையான ஓடுகளை தட்டோடு என்பர். இதனை எட்டு, ஒன்பது  இஞ்ச்களில்  சதுர வடிவில் தயார்செய்கின்றனர்.  ஒன்பது இஞ்ச் ஓடுகள் கேரளாவில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)
ஈ)டிசைனிங் ஓடு
கூரை பகுதி, முகப்புப் பகுதியினை அழகாக அமைப்பதற்குப்பயன்படும் ஓட்டிற்கு டிசைனிங் ஓடு என்று பெயர். இவ்வகையான ஓடு கேரளாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)
உ) சுவரும் வகைகளும்
சுவற்றினை அவற்றின் அளவின் அடிப்படையில் நாலரை அங்குலம், முக்கால் அடிச்சுவர், ஒன்னேகால்,  ஒன்றரை அடிச்சுவர் என வகைப்படுத்தலாம். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)

ஊ) சிமிண்ட் பால்
சிமிண்ட் பால் என்பது சிமிண்ட்டினை பால் போன்று கரைத்து காங்கிரீட் போட்ட பகுதியினைப் பூசுவதற்குப் பயன்படுத்துவர். பின்னர் கலவையை வைத்துப் பூசுவர். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)
எ) பாஞ்ச்
என்பது பஞ்சினால் ஆனது. இது சுவர்கள் பூச்சு வேலையின் பொழுது சுவற்றில் விரிசல் ஏற்படாமல் இருப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். (பி.அழகர்சாமி, கட்டுக்குத்தகை கரிசல்குளம், வயது.33)
நிறைவாக,
கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற சொற்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையான சொற்களாலும் குறிப்பிடுகின்றனர்.  இவ்வகையான சொற்கள் ஒரு பொதுச்சொல்லினை மையமிட்டதாகச் சிறப்புச் சொற்கள் தோன்றுவதனை அறியமுடிகிறது. இவற்றில் பெரும்பாலான சொற்கள் காரணப் பெயர்களாக இடம்பெறுகின்றன என்பதனை அறியமுடிகிறது.

பின்னிணைப்பு
வ.எண்: 1.
வேலையாட்களின் தரவரிசை முறையின் அடிப்படையான சொற்கள்:
பொறியாளர் (Engineer) , மேற்பார்வையாளர் (supervisor) , பெரிய கொத்தனார் (அ)  கட்டிடக்கலைஞன் (mason) , நிமிர்ந்தாள், சித்தாள்

வ.எண்: 1
கருவியின் அடிப்படையிலான பெயர்கள்: lost his ability to do well  

வ.எண்: 1
அளவையினை மையமிட்ட பெயர்கள்: டேப் மட்டக் கம்பும் வகைகளும்
1 அடி மட்டக்கம்பு
2 அடி மட்டக்கம்பு
3 அடி மட்டக்கம்பு
4 அடி மட்டக்கம்பு
5 அடி மட்டக்கம்பு
6 அடி மட்டக்கம்பு
7 அடி மட்டக்கம்பு
 8 அடி மட்டக்கம்பு
குத்தானக்குச்சி
லெவல் ட்யூப்
அளவு ஓடு

வ.எண்: 1
செயல்முறையின் அடிப்படையிலான சொற்கள்
படுக்கைக்கல்
 குத்துக்கல்
ஆசு பார்த்தல்
கொன்றை போடுதல்
அருகு பார்த்தல்
கோடிபார்த்தல்
கரவு பார்த்தல்

வ.எண் 
பயன்படுத்தும் பொருட்களின் அடிப்படையிலான சொற்கள்:

சிமின்ட்
மணல்
நீர்

கலவையும் வகைகளும் (சாந்து)
உதிரிக்கலவை
புட்டுக்கலவை
ஈரப்புட்டு
கொளச்ச கலவை (குளைத்தல்).

கற்களும் வகைப்பாடுகளும்
முண்டுக்கல்
பாண்டுகால்
ஆலங்கல்
கொக்கிக்கல்

செங்கல்
முழுக்கல்
அரைக்கல்
கண்டிக்கல்
சித்துக்கல்

ஆலபிளாக்கல்
சிப்ஸ் (சல்லித்துகள்கள்) மணல், கிரசர் தூசி
பிஸ்கட்கல்
சிமின்ட்கல்

சல்லி
ஒன்றரை இஞ்ச் சல்லி,
அரை இஞ்ச் சல்லி
முக்கால் இஞ்ச் சல்லி

தட்டோடு
8 இஞ்ச் தட்டோடு
 9 இஞ்ச் தட்டோடு

டிசனிங் ஓடு

சுவரும் வகைகளும்
நாலரை அங்குலம்,
முக்கால் அடிச்சுவர்,
ஒன்னேகால் அடிச்சுவர்
ஒன்றரை அடிச்சுவர்

சிமிண்ட்பால்
பாஞ்ச்

தகவலாளர் பட்டியல்
வ.எண் பெயர்             ஊர்                    வயது ஆ/பெ
1. அழகர்சாமி.பி  கட்டுக்குத்தகை கரிசல்குளம், 33 ஆ
2. சங்கிலிப்பிரபு.ச கட்டுக்குத்தகை கரிசல்குளம் 32 ஆ
3. சதீஷ்குமார்.இரா  கட்டுக்குத்தகை கரிசல்குளம் 23 ஆ
4. செல்லமணி.ச கட்டுக்குத்தகை கரிசல்குளம் 53 ஆ
5. பழனிச்சாமி.மு கட்டுக்குத்தகை கரிசல்குளம் 26 ஆ

துணைநூற்பட்டியல்

1. ஆதிநாராயணன்.கி – கலைச்சொல்கோட்பாடுகள் சைவசித்தாந்தக் கலைச்சொற்கள், பயோனியர் புக் சர்வீஸ், 47, நல்லதம்பிதெரு, பதி.1990, திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
2. கோபாலன்.ப- தமிழிலக்கியக் கலைச்சொல்லகராதி, ஐந்திணைப்பதிப்பகம், பதி.1989, 279,பைக்ராப்ட்(பாரதிசாலை), திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
3. நுஃமான். எம்.ஏ – பாரதியின் மொழியியல் சிந்தனைகள், (மொழியியல் நோக்கு),தேசிய இல்லக்கியப் பேரவை, சவுத்விஷன், பதி.1999, 6,தாயார்சாகிப், 2வதுசந்து,சென்னை-600 002.
4. விசுவனாதன். சீனி(பதி.)- காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் எட்டாம் தொகுதி), விசுவனாதன் வெளியீடு,பதி.2007,  2, மாடல் ஹவுஸ்லேன், சி.ஐ.டி.நகர்,சென்னை-600 035.

muthuselvam8122@gmail.com