கணங்களைக் கைதுசெய்தல் [ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை]!

கணங்களைக் கைதுசெய்தல்! (ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை).க. நவம்நவீனத் தமிழிலக்கியச் சூழலில் சிறுகதை இன்னமும் தனது செழிப்பையும் செல்வாக்கையும் இழந்துவிடவில்லை. ‘சிறுகதை எனப்படுவது ஒரு சிறிய கதை’ என்ற சௌகரியம் அதற்கான ஒரு புறவயமான காரணம். எனினும் அதற்கும் அப்பால், சிறந்த சிறுகதை ஒன்றினுள் அடங்கியிருக்கும் அளவிறந்த ஆற்றலே அல்லது உள்ளார்ந்த வீரியமே அதன் சிறப்பின் மூலாதாரம். ‘அணுவைத் துளைத்தலும், ஏழு கடலைப் புகுத்தலும்’ சிறுகதைக்குள்ளும் நிகழ்த்தப்படக்கூடிய சித்து வித்தைகள்தான் என்பதற்குச் சாட்சியங்கள் நிறையவுண்டு. தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்முறைமையிலும் காலநகர்வுக்கேற்ப அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அதற்கான தேவையிலும் தேடலிலும் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் இதுவரை தென்படவில்லை!

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு, கடந்த நூற்றாண்டின் நடுக்கூறான ஐம்பதுக்கு முற்பட்ட, பொழுதுபோக்குக் கதைக் காலத்துடன் ஆரம்பமானது. ஐம்பதுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது, மறுமலர்ச்சிக் காலமாகும். இதனைத் தொடர்ந்து அறுபதுகளின் ஆரம்பத்தில் தேசிய இலக்கியக் காலம் மூன்றாவது காலகட்டமாக முகிழ்த்தது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களைத் துணிச்சலுடன் முரசறைந்து பிரகடனஞ்செய்த இக்காலகட்டத்தில் முளைதள்ளிச் செழித்து வளர்ந்து, பல நல்ல கதைகளை எமக்களித்த ஒரு மூத்த படைப்பாளி, அன்பு நண்பர் ப. ஆப்டீன் அவர்கள். ‘கொங்காணி’ எனும் இத்திரட்டு, நண்பர் ஆப்டீன் அவர்களது 12 கதைகளைக் கொண்டது. இவற்றுள் அநேகமானவை பல்வேறு சஞ்சிகைகளில் நான் ஏற்கனவே உதிரிகளாகப் படித்தவை. ஆயினும் இவ்வாறு ஒரு திரட்டாகப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது; அது ஒட்டுமொத்த அபிப்பிராயம் சொல்ல வசதியானது. மேலும், நண்பர் ஆப்டீன் அவர்களது படைப்பாளுமையின் அடையாளம் எனும் வகையில் இத்திரட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நண்பர் ஆப்டீன் அவர்கள் மிகவும் மென்மையான மனம் படைத்த ஒரு படைப்பாளி; பழகுவதற்கு இனிமையானவர்; பண்பானவர். எனது சுமார் ஒருவருடகால நட்புறவாடலின் கண்டுபிடிப்புக்கள் இவை. ‘இவைதவிர்ந்த அவரது இன்னொரு முகத்தை, இப்பன்னிரண்டு கதைகளூடாகக் கண்டேன்’ என்பது பச்சைப் பொய்! அவருக்குள் உள்ளது ஒரேயொரு முகம் மட்டுந்தான். அந்த முகத்தையே இக்கதைகள் பூராவும் நான் காண்கிறேன். ஆக, தம்மைச் சூழ்ந்து வாழும் மக்களது அன்றாட வாழ்வின் அவலங்களையும், அற்புதங்களையும் கண்டு சிலிர்க்கும் தமது சொந்த முகத்தையே இக்கதைகள் வழியாக அவர் காண்பித்திருக்கின்றார்.

இஸ்லாமியரைப் பிளவுபடுத்தும் கொள்கையாளர்களுக்கு எதிராகக் குரலெழுப்பிக் கல்லெறிபட்ட ஜொஹரான் மௌலவியைத் ‘தழும்பு’ என்ற கதையிலும், தேயிலைத் தோட்டத்து அப்பாவி மக்களின் மனங்களில் ‘முனிப்’ புரளியைக் கிளறிவிட்டுக் களவாடும் அலுவலரை ‘ரோதைமுனி’ என்ற கதையிலும், மலையகச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்கெனத் தமது வாணாளை அர்ப்பணித்து, வெறுங்கையோடு வெளியேறும் இராஜநாயகம் மாஸ்டரை ‘இராஜநாயகம் மாஸ்டரின் இலட்சியம்’ எனும் கதையிலும், சுனாமிக் கொடூரத்திற்குத் தனது காலையும் குடும்பத்தையும் பறிகொடுத்து, அலைந்துழலும் ஆதம்பாவாவை ‘மொட்டைப்பனை’ எனும் கதையிலும், இன-மத வேறுபாட்டினைக் கடந்து, தன் கணவனோடு மனதால் ஒன்றித்து, மனைவியாக வாழவிழையும் சுமணாவை ‘மனச்சங்கமம்’ எனும் கதையிலும், ஆங்கில மோகத்தால், தனது மகனுக்குகந்த மொழிக் கல்வியை வழங்கத் தவறியதை எண்ணி வருந்தும் குமலாவை ‘தெரிவு’ எனும் கதையிலும், கடமையுணர்வுடன் பணியாற்ற முற்படும் போதெல்லாம் தீய சக்திகளால் அலைக்கழிக்கப்படும் மர்ஜான் மாஸ்டரை ‘சிதைவுகள்’ எனும் கதையிலும், முன்பின் தெரியாத முதியவர் ஒருவரது முறுவலின் ஆகர்ஷிப்புக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மாணவனான முவாத்தை ‘மையத்து முகம்’ எனும் கதையிலும், திறமைக்கேற்ற கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் தமது பேரனுக்குத் துணையாயிருந்த பாட்டனார் ரபாய்டீனை ‘ஊக்குவிப்புக்கள்’ எனும் கதையிலும், பணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சகல ஜீவராசிகளுக்கும் உணவளிப்பவன் ‘அவன் தானே’ எனும் உண்மையைத் தொட்டுக்காட்டும் சலாமை ‘ஒரு வேளை சோறு’ எனும் கதையிலும், ‘தகுதியான கலைஞர் தற்குறிகளுக்குத் தெரியமாட்டார்’ எனும் யதார்த்தத்தை எண்பிக்கும் முத்துச்செல்வனை அதே தலைப்பிலான கதையிலும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகள் எவ்வாறு கல்வி வாய்ப்புக்களைக் காவுகொடுக்கின்றனர் என்பதை உணர்த்தும் சிறுமியான வடிவை ‘கொங்காணி’ எனும் கதையிலும் காணலாம்.

ஆப்டின்இப்பன்னிரண்டு கதைகளில் ஐந்து கதைகள் கல்வி பற்றிக் கதைக்கின்றன, ஆசிரியரின் நீண்டகால ஆசிரியப்பணி தரும் அனுபவங்களின் அடையாளமாக. அவரது இளமைக் கால வாழ்விடமான மலையகம், ஐந்து கதைகளின் பிரதான நிகழ்தளம். இனம், மதம், இயற்கை அனர்த்தம் என்பன ஏனைய கதைகளின் ஆடுகளம். தமக்குப் பரிச்சயமற்ற கற்பனானுபவப் புடவைகளை இரவல் வாங்கியுடுத்தி, ‘இது நல்ல கொய்யகமோ’ என வியக்கவைக்கும் செப்படி வித்தையை இவர் செய்ய முற்படவில்லை. சொந்தமற்ற – செயற்கையான – மிகைப்படுத்தப்பட்ட சிந்தனைகள், செழிப்பான கலைப் படைப்புக்களாக ஒருபோதும் சித்திப்பதில்லை. உண்மையைச் சுடச்சுட அள்ளிச் சுமந்து வந்து உயிர்த்துடிப்பு மிக்க உணர்வுப் பொறியாய்த் தெறிக்க வைக்கும் படைப்புக்களே எம்மை ஆட்கொள்ள வல்லன. நண்பர் ஆப்டீன் அவர்களின் கதைகளும் அவ்வகைப்பட்டவையே! ‘தழும்பு’ என்ற கதையின் நாயகனான ஜொஹரான் மௌலவி, இஸ்லாம் வலியுறுத்தும் முக்கிய கடமைகளைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றார். தூய மார்க்கத்திற்கு மாறான கொள்கைகள் விளைவிக்கக்கூடிய தீங்குகளை மறுதலித்தும், பிரிவினைகளின்றி, ஒன்றுபட்டு வாழ்தலின் அவசியத்தை வலியுறுத்தியும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார். நெற்றியில் கல்லெறிபட்ட காயத்தினால் ஏற்பட்ட தழும்பு ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. ஆயினும் மௌலவி மனம் தளரவில்லை. ஓட்டமும் நடையுமாகத் தமது பாதையில் விரைந்த ஒருசமயம், கால்கள் இடறிக் குப்புற விழப்போனவரை, இளைஞர்கள் இருவர் கைகொடுத்துக் காப்பாற்றுகின்றனர். இளம் தலைமுறையினரது ஆதரவின் அடையாளமாக அதனைக் காணும் அவர், ‘நல்லதைச் செய்ய நினைப்பவர் வாழ்வில் ஏற்படும் வடுக்களும் தழும்புகளும் ஒருவகையிலான பரிசில்கள்தான்’ என நம்பிக்கை கொள்ளும் செய்தியினைக் கதாசிரியர் சத்தமின்றிச் சொல்லிச் செல்கின்றார்.

பிள்ளை ஒன்று எதிர்காலத்தில் சகல சௌபாக்கியங்களுடனும் வாழவேண்டும் என்று பெற்றோர் விரும்புவதில் வியப்பில்லை. ஆனால் இதன்பொருட்டு எமது பிள்ளை ஒரு வைத்தியராகவோ, ஒரு பொறியியலாளராகவோ, கணக்கியலாளராகவோ அல்லது ஒரு தகவல் தொழில்நுட்பத் துறையாளராகவோதான் வந்தாக வேண்டும் என எதிர்பார்க்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களான நாம், இதற்கான அடித்தளத்தைப் பிள்ளையின் பிஞ்சுப் பருவத்திலிருந்தே இடத் துவங்கிவிடுகின்றோம். பிள்ளையின் திறமையை, ஆர்வத்தை, விருப்பத்தைக் கணக்கில் எடுப்பதில்லை. இதனால் பிள்ளைக்கு ஏற்படக்கூடிய உளவியற் சிக்கல்களையும் அதன் பக்க விளைவுகளையும் கருத்தில் கொள்வதில்லை. இத்தகைய குடும்பச் சூழலுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் சப்வானை மீட்டெடுத்து, அவனது ஓவியத் திறனை இனங்கண்டு, ஒரு சாதனையாளனாக ஆக்கிக் காட்டுகிறார், ‘ஊக்குவிப்புக்கள்’ எனும் கதையில் வரும் அவனது பாட்டனாரான ரபாய்டீன். ‘கவிதை என்பது குரலுள்ள ஓவியம்; ஓவியம் என்பது மௌனமான கவிதை’ என்பதை அவர் மனதார நம்புபவர். சமூகத்தில் நிகழும் அவலங்களை இலக்கியங்களூடாக மட்டுமன்றி ஓவியங்களூடாகவும் மக்கள் மனங்களில் உணர்த்திக் காட்டலாம் என்ற அவரது கருத்துநிலையை, கதாமாந்தரின் இயல்பான நகர்வுகளூடாக ஆசிரியர் வெளிக் கொணர்கின்றார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளுக்குக் கல்வி என்பது ஒரு காலத்தில் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. சாதாரணமாக ஐந்து வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைக்கு, ஒரேயொரு ஆசிரியர்; தலைமையாசிரியரும் அவர்தான்; உதவியாசிரியரும் அவர்தான். அடிப்படை வசதிகளற்ற அப்பாடசாலையில் சகல பாடங்களையும் – சகல வகுப்புக்களிலும் ஏககாலத்தில் கற்பிப்பவரும் அவரேதான். எண்ணிலடங்கா இன்னல்களையும் இடையூறுகளையும் கடந்து, தலைதூக்கும் பிள்ளைகள் தமது கல்வியைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் பணமென்றும், நோய்நொடியென்றும், பெற்றோரின் ஆர்வமின்மையென்றும், அதிகாரிகளின் கெடுபிடிகளென்றும் சங்கிலித் தொடராகச் சவால்கள் வந்து சேர்கின்றன. இவ்வாறாக, வடிவு என்ற பெயருடைய பிள்ளை ஒருத்தியின் திறமை கண்டு, கல்வியில் அவளுக்கு உதவுவதற்கெனத் தலைமையாசிரியர் நாயகம் மாஸ்டர் எடுக்கும் முயற்சிகள் யாவும் வீண் விரையமாகிப் போய்விடும் சோகத்தைச் சொல்லும் உருக்கமான கதை ‘கொங்காணி.’ ஆசிரியரின் படைப்பாளுமையின் சிறப்பைக் காட்டும் இன்னொரு நல்ல கதை!

முதலாளி – தொழிலாளி என்ற மாமூலான வர்க்க வேறுபாட்டுச் சுலோக உச்சாடனம் ஏதுமின்றி, மேட்டுக்குடி அகம்பாவத்தை ‘ஒருவேளை சோறு’ என்ற கதையில் ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார். மனைவி, மக்கள் வீட்டில் இல்லாத ஒருநாள், தூரதேச வியாபாரப் பிரயாணமொன்றை முடித்துக்கொண்டு திடீரென இரவுநேரம் வீடுவந்து சேர்கிறார், பாஹிம் ஹாஜியார். வீட்டில் இராச் சாப்பாடு இல்லை என்ற செய்தியை அவரது வேலையாளான அப்துல் சலாம் அவரிடம் சொல்கிறான். அண்டை அயலிலுள்ள சாப்பாட்டுக் கடையெங்கும் தேடி அலைந்து வெறுங்கையோடு திரும்பும் அவன், ‘விருந்தினர்க்கெனத் தனது வீட்டில் சமைத்த உணவைக் கொண்டுவரவா?’ எனத் தயக்கத்துடன் வினவுகிறான். ‘வேலையாள் வீட்டு உணவைச் சாப்பிடுவதா?’ – ஹாஜியார் தந்திரமாக மறுத்துவிடுகிறார். முன்னர் தேடத் தவறிய கடையொன்றில் போய் வாங்கிவருவதாகச் சொல்லி, சலாம் ஒரு பார்சலைக் கொண்டுவந்து கொடுக்கிறான். ‘பெருநாள் சாப்பாடு போன்றதொரு விசேட சாப்பாடு’ என வியந்து மகிழ்ந்து உண்ட களிப்புடன் பாஹிம் ஹாஜியார் உறங்கப் போகிறார். ‘உண்மையில் அந்த உணவுப் பார்சல் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?’ என்ற வினாவை வாசகர் மனதில் பூடகமாக எழுப்பிவிட்டுச் சட்டென விலகிச் செல்கிறார், கதாசிரியர். 

இதேபோன்று, இலங்கையின் சக இனங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மையை – சௌஜன்யத்தை வலியுறுத்தும் செய்தியினை ‘மனச்சங்கமம்’ எனும் கதையில், வாசகர்களே ஊகித்தறிந்துகொள்ளவென, பேசாமொழியுடன் வழிவிட்டு நகரும் ஆசிரியரது சாதுரியமான உத்திமுறையை இத்திரட்டிலுள்ள வேறுசில கதைகளிலும் காணலாம். மேலும் ‘ரோதைமுனி,’ ‘சிதைவுகள்,’ ‘தகுதியான கலைஞர் தற்குறிக்குத் தெரியமாட்டார்’ ஆகிய கதைகளும் அவற்றின் அழகுணர்வு, தார்மீகப் பொறுப்பு என்பவற்றின் அடிப்படையில் சிறந்த கதைகளாக விளங்குகின்றன.

இவையொத்த பல நல்லம்சங்களுக்கு நடுவிலும், ஆப்டீன் அவர்களது படைப்புக்களை நீண்ட காலமாகப் படித்து வருபவன் எனும் வகையில், இத்திரட்டுக் குறித்த சில மறுபக்க வினாக்களும் என்னிடமுண்டு. ஏற்கனவே பல நல்ல சிறுகதைகளை எழுதிப் பெயர்பெற்ற இவர், கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்வதில் நாட்டமற்றவராகக் காணப்படுகின்றார். கலை இலக்கியங்களில் காலவோட்டத்திற்கேற்ற புதுமை நாட்டமும் இன்றியமையாதது. புதிய விடயங்கள், புதிய வடிவங்களில் சொல்லப்படவேண்டும். அல்லாத படைப்புக்கள் காலநதியில் அள்ளுண்டு காணாமற் போக வாய்ப்புண்டு அல்லவா?

எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து சுமார் 25 வருடங்கள், இனப் பகையின் உச்சத்தில் இலங்கை எரிந்த காலம். இலங்கை வரலாற்றில் இருண்ட காலம். போர் கக்கிய தீச்சுவாலை அடங்கி 5 வருடங்கள் கடந்துவிட்டன. துன்பச் சூறாவளியில் சிக்குண்ட மக்கள் மனங்களில் இன்னமும் போரின் ஆறா வடுக்கள் அமுங்கிக் கிடக்கின்றன. ‘மனச்சங்கமம்’ என்ற கதையில் உள்ள ஒரு சிறிய மெல்லிய ‘அரூபமான சுவடு’ தவிர, இப்போர்க்காலத் துயரம் இரத்தமும் சதையுமாக இத்திரட்டில் பதிவாகவேயில்லை. ‘பிறர் துன்பத்தைக் கண்டு துக்கப்படும் படைப்பாளி ஒருவரால் எப்படிச் சமகால உணர்வு (contemporary consciousness) அற்றவராக இருக்க முடிந்தது?’ என்று ஒரு சமூக இலக்கிய வரலாற்றியலாளர் வினாவெழுப்பும் பட்சத்தில் இவர் என்ன பதிலளிப்பார்?

மேலும், ‘மையத்து முகம்,’ ‘மொட்டைப்பனை’ ஆகிய கதைகளில் யதார்த்தத்தின் எல்லைகளைத் தாண்டிய படைப்பாக்க எத்தனங்கள் இடம்பெற்றிருக்கின்றனவோ என எண்ணத் தூண்டும் வகையிலான சில பகுதிகளில் கூடுதலான கவனம் செலுத்திச் செப்பனிட்டிருக்கலாமல்லவா? இவை தவிர, நண்பர் ஆப்டீன் அவர்களது கதைகள்மீது எனக்கு எப்போதும் ஒருவித மதிப்புண்டு. வாசகர்கள் மத்தியில் அவற்றிற்கு மிகுந்த வரவேற்புண்டு. மனிதநேயப் பண்பு வழிந்தோடும் அவரது கதைகளில் இழையோடி நிற்கும் சமூக அக்கறைதான் அதற்கான முக்கிய காரணம். தாம் வாழும் சமூகத்து மக்களது வாழ்க்கையில் எழுகின்ற பன்முகப் பிரச்சினைகளை அவர் கூர்ந்து அவதானிக்கின்றார். அவற்றிற்கு முகம் கொடுக்கும் மனிதர்களின் மனநிலைகளை அலசி ஆராய்கின்றார். உணர்ச்சிச் செறிவுடன் அவற்றைக் கதைகளாக்குகின்றார்.

அவர் தமது கதைகளூடாக வழிகாட்டவில்லை; உபதேசிக்கவில்லை; உத்தரவிடவில்லை; கோஷம் எழுப்பிப் பிரச்சாரம் செய்யவுமில்லை. பதிலாக, ஒரு நல்ல நண்பனாயிருந்து தம்மைச் சூழவுள்ள சாதாரண மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளின் அநுபவ நிலைகளையும், உணர்வுக் கோலங்களையும் தமக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்குகின்றார். மனித ஆத்மாவுக்குள் நம்பிக்கையை விதைக்கின்றார். ஏழை எளிய மக்களது வாழ்வின் சில கணங்களைக் கைதுசெய்து சிறைப்பிடித்துக் காட்டுகின்றார். அதன் வழியாக முழு வாழ்க்கையையும் விளங்கிக்கொள்ளவல்ல வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றார். அக்கலையில் நன்கு கைதேர்ந்தவராகவும் விளங்குகின்றார்! அன்பு நண்பர் ஆப்டீன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

[ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை. ]

knavam27@hotmail.com