கண்ணீர்த்தீவின் எதிர்காலம்?

இலங்கைத்தீவுபுதிய ஜனாதிபதியாக நந்தசேன கோத்தபாயா ராஜபக்‌ஷ இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து நடைபெறும் செயல்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய பல்வகை வினாக்களை எழுப்புகின்றன. நாட்டின் எதிர்காலம் பற்றிய முதலாவது அச்சம் நாடு எவ்வகையான ஆட்சியமைப்பை நோக்கிச் செல்கின்றது என்பதையிட்டுத்தான். 2015இல் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சியின்போது எதிர்பாராதவிதமாக மகிந்த ராஜபக்‌ஷா தேர்தலில் தோல்வியுற்றபின்னர் தன் தம்பியான கோத்தபாயா ராஜபக்சவுடன் இணைந்து நாட்டின் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு ஆட்சியில் நீடிக்கச் செய்த சதி வெற்றியளிக்கவில்லை. முப்படைத்தளபதிகளும், காவல்துறைத் தலைவரும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அச்சமுற்ற மகிந்த ராஜபக்‌ச அவசர அவசரமாக, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடமுன்னரே, ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து அவருடன் பாதுகாப்பாக வெளியேறியதாக ஒரு செய்தி இலங்கை அரசியலில் அடிபடுகின்றது. அதில் பாடம் படித்த மகிந்தவும், கோதபாயாவும் எதிர்காலத்தில் அவ்விதமானதொரு நிலை தோன்றக்கூடாது என்பதில் உறுதியான நோக்கில் இருப்பதுபோல் தெரிகின்றது.

தற்போதுள்ள அரசியல் சூழலில் இன்னும் நீண்ட காலம் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக் கட்டில் இருக்கப்போகின்றனர். அவ்விதமிருந்து இவர்கள்மீது அதிருப்தியுற்று மக்கள் முன்புபோல் தேர்தலில் தோல்வியுற வைத்தாலும் கோத்தபாயா ஆட்சியிலிருந்து இறங்கப்போவதில்லை போல்தான் தோன்றுகின்றது. அடிப்படையில் அவர் அரசியல் தலைவரல்லர்.இராணுவத்தளபதி. அதனால்தான் பதவிக்கு வந்தவுடனேயே இராணுவத்தினரின் கைகளில் பாதுகாப்பைக் கொடுத்திருக்கின்றார். இதனால் ஏற்படும் முக்கிய நன்மைகள்: காவல்துறையினரின் முக்கியத்துவம் குறைகின்றது. காவல்துறையின் புலனாய்வுப்பிரிவின் படையினர் மீது புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை. ஏற்கனவே அவ்விதம் விசாரணைகளை முன்னெடுத்தவர் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த நன்மை எதிர்காலத்தில் தேர்தலொன்றில் தோற்கும் நிலை ஏற்படின் உடனடியாகத் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு இராணுவ ஆட்சியை அமுலுக்குக் கொண்டுவருவது இலகுவாகவிருக்கும். நாட்டின் பாதுகாப்புக்கும், அபிவிருத்திக்கும் இராணுவ ஆட்சி சிறிது காலத்துக்கு அவசியம் என்று அப்பொழுது கோத்தபாயா மக்களுக்கு மூளைச் சலவை செய்யலாம். இனவாத அரசியலைக் கட்டவிழ்த்து விட்டு சிங்கள பெளத்த மக்களைத் தன் பக்கம் இழுப்பதில் வெற்றியடையலாம்.

அத்துடன் பாராளுமன்றத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட்டால் சட்டங்களை மாற்றி ஜனாதிபதிப் பதவிக்கு ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேலும் போட்டியிடலாம் என்று புதிய சட்டம் கொண்டுவரலாம். மேலும் பல புதிய சட்டங்களைக் கொண்டுவரலாம்.

இவையெல்லாம் என் ஊகங்கள். ஆனால் இவ்விதம் நடக்காமல் கடந்த காலத்தவறுகளிலிருந்து பாடங்கள் படித்துத் திருந்தி நடப்பார்கள் புதிய ஜனாதிபதியும், புதிய பிரதமரும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் போர்க்குற்றங்களிலிருந்து குற்றமிழைத்த இராணுவத்தளபதிகள் ஒருபோதுமே தப்பமுடியாது. நீதி ஒருபோதுமே நீண்ட காலம் தூங்குவதில்லை.

ngiri2704@rogers.com