கதை கண்டே காப்பியங்கள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)‘கதை’ என்ற  சொல்லுக்கு  சிறுகதை,  குறுங்கதை,  தொடர்கதை,  பெரியசரித்திரம்,   காப்பியம், சிறு காப்பியம், சென்றகால  வரலாறு, கட்டுக்கதை,  உரையாடல், மனத்தை   நெகிழ வைக்கும் கதை, நிகழ்வொன்றினைக் கற்பனை கலந்து சுவைபடக் கூறுவது, நிகழ்ச்சி, செய்தி, கட்டுரை, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், நொடிக்கதை,  உபகதை, சாட்டுரை, புனைவுரை, பழங்கதை, புனைகதை,  அருங்கதை ஆகியவற்றைப்  பொருளாகக் கூறுவர்.  மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு நூல்களும் பாரதநாட்டின் இரு கண்கள். இவ்விரு நூல்களும் உலகம் போற்றும் ஒப்பற்ற இதிகாசங்கள். இதிகாசம் என்பது பழங்காலச் சரித்திரம். இதிகாசம் என்பதின் பொருளே ‘இவ்வாறு நடந்தது’ என்பதாகும். மகாபாரதம், இராமாயணத்தை விடப் பெரியது. இதில் ஓர் இலட்சம் சுலோகங்கள் உள்ளன. ஆனால் இராமாயணம் காலத்தால் முந்தியது. மனிதகுல தர்மங்களை, வாழ்வியல் நீதிகளை, அறநெறிகளை வியாச பகவான் மகாபாரதம் வாயிலாகவும், வால்மீகி இராமாயணம் வாயிலாகவும் வழங்கியுள்ளனர்.

இன்னும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அதுபோலவே சங்கமருவிய காலத்திலெழுந்த திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னிலை (இதைச் சிலர் சேர்ப்பதில்லை) ஆகிய பதினெட்டு நூல்கள் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று. இவைகளும் சங்க இலக்கியங்களே. இவ்வாறான முப்பத்தாறு (36) நூல்களையும் சங்க இலக்கியங்கள் என்று கூறிப் பெருமைப்படுபவன் தமிழனே. இவற்றையடுத்து எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,  குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்து பெரும் நூல்களையும் ஐம்பெரும் காப்பியங்கள் என்றழைத்தனர். மேலும், சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயகுமார காவியம் ஆகிய ஐந்து சிறு நூல்களையும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அழைத்தனர்.

இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், வேறுபட்ட நூல்கள் அத்தனைக்கும் ஆணிவேர் கதைகளே. கதையை முன்னிலைப்படுத்திப் பாடல் வடிவுடன் எழுந்த இந்நூல்கள் காலகட்டத்தில் இதிகாசங்களாகவும், சங்க இலக்கியங்களாகவும், காப்பியங்களாகவும், உயிர்த் துடிப்புடன் காலங்கடந்து நம் மத்தியில் உலாவருகின்றன. இந்நூல்கள் மனித சமுதாயத்துக்கு ஏற்ற செய்திகளைத் தாங்கி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம்முடன் உறவாடி நிலைத்து நிற்கின்றன. கருத்தற்ற கதையுள்ள நூல்களின் ஆயுள் நிலைத்து நீடிக்காது அழிந்தொழிந்து போவது நம் கண்கூடு.

கதை படிக்கவும், கேட்கவும் யாவரும் விரும்புவர். பாட்டி சொல்லும் கதைகளைப் பிள்ளைகள் விரும்பிக் கேட்பர். ஏனெனில், பாட்டி கதை சொல்லும் விதம் ஒரு தனி ரகம். கதை கேட்டுக் குழந்தைகள் சாப்பிடுவர், நித்திரை கொள்வர், குழப்படி செய்யார்.                

இராசா, இராணிக் கதைகளைப் பிள்ளைகள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வர். சண்டைக் கட்டங்கள் வந்தால், அவர்களும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு சண்டைக்கு வெளிக்கிடுவர். இடைக்கிடை திக்கு முக்கான கேள்விகளும் கேட்டுத் திணற வைத்து விடுவர். அவர்கள் உலகம் வேறு.

‘வடை சுடும் பாட்டி’, ‘காகமும் நரியும்’, ‘ஆமையும் முயலும்’, ‘காகமும் தண்ணீர்க் குடமும்’, ‘குரங்கும் தொப்பியும்’, ‘சிங்கமும் முயலும்’, ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’, ‘சிங்கமும் சுண்டெலியும்’, போன்ற சிறு கதைகளில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் மிக ஆழமானவை. அதனால் அவை அழியாச் செல்வங்களாய் நிலைத்து நிற்கின்றன.                                            

இதிகாசம், இலக்கியம், காப்பியம், நாடகம், கூத்து, பரத நாட்டியம், நடனம், பேச்சு, கதாப் பிரசங்கம், வில்லுப் பாட்டு, சொற்பொழிவு, கதை, கவிதை போன்றன எழுவதற்குக் கதையே கருப்பொருளாம். ஒரு கதைப் பொருளை நீட்டி நெடிய நடைமுறையில் எழுதினால் அது கதையாகி விடும். அதே பொருளைப் பாவில் அமைத்தால் அது கவிதையாகி விடும். கவிதை துள்ளு நடையில் அடுக்கு மொழியில் கருத்தோடு கூடிய குறள்வரிகளில் அமைந்து சிறப்பினைத் தருகின்றது. கதையோ, கவிதையோ ஒரு நற்செய்தியை மக்கள் மத்தியில் கூறி நிற்கவேண்டும்.. அஃதிலேல் அவை வேண்டாப் பொருளாகிவிடும்.

பின்வரும் விடயங்கள் அடங்கிய கதைகள், கவிதைகள் மீண்டும் மீண்டும் மக்களைப் போய்ச்சேர்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தி அவர் மத்தியில் குதூகலம் நிறைந்த வாழ்வை ஏற்படுத்துவது நம் கதைஞர், கவிஞர் பெறுப்பாகும்.

• சாதிக் கொடுமை அழித்தொழிக்கப்படல் வேண்டும். தாழ்ந்த சாதி, தீண்டாச் சாதி என்று ஒரு சில வகுப்பினரை ஒதுக்கித் தள்ளி வைத்தல் மகா பெரும் கொடுமையாகும்.

• ஒரு குளத்தில் மேற்குப் பக்கம் உயர்ந்த சாதியினருக்கும், கிழக்குப் பக்கம் தாழ்ந்த சாதியினருக்கும் என்று உயர்சாதியினரால் ஒதுக்கி விடப்பட்டு, இரு சாதியினரும் ஒரே நீரில் குளித்து, முழுகி நீராடும் விந்தைதான் என்னே?

• குடும்ப வாழ்வு சீர்பெற்றமைய மக்கள் மத்தியில் புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல் ஆகிய சிற்றருவிகள் ஊற்றெடுக்க வேண்டும்.

• குடும்பங்களிடையே ஏற்படும் பிரிவினை மிகக் கொடுமையான விளைவுகளைத் தந்துவிடும். அதில் ஆன்றோரும், சான்றோரும் தலையிட்டுச் செயலாற்ற வேண்டும்.

• ஆண்கள் பிறன்மனை, பரத்தமை நாடாதிருத்தல் வேண்டும். அதன் பின்விளைவுகளை எடுத்திடித்துரைக்க வேண்டும்.

• கணவன் மனைவிக்கிடையே விரிசல் ஏற்பட்டு, மணமுறிவுவரை போவது இந்நாளிள் சகசமாகி விட்டது. பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தாயிருந்த தொல்காப்பியர் காலத்தில்கூட மணமுறிவு ஏற்பட்டதாகச் செய்தி இல்லை. இது இடையிட்டு வந்த ஒரு கொடிய நோய்.

• கணவனை இழந்த மனைவி கைம்பெண்ணாய் பொட்டு இழந்து, பூ இழந்து, தாலி இழந்து, வளையல் இழந்து, வண்ணச் சேலை இழந்து, ஆபரணம் இழந்து, ஊண் இழந்து, அரை உயிர் இழந்து, உறவு இழந்து, வாழ்வு இழந்து, பொலிவு இழந்து ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டவளாய்ப் படும் துயர் துடைக்க யார் உளர்?

• ஆண் வர்க்கம் யாத்த மனு நீதிநெறிச் சட்டம், தர்மசாத்திரம் போன்றவை பெண்களை அடக்கி ஒடுக்கிச் சிறைப்படுத்தி வருத்துகின்றன. இவை திருத்தப்பட வேண்டும்.

• கைம்பெண் மறுமணம் புரியக் கூடாது – இது சட்ட, சாத்திர, மரபுக் கூற்று. ஆனால் ஆணுக்கு இது விதிவிலக்கு. கைம்பெண் விரும்பினால் மறுமணம் புரியும் உரிமை கொடுக்கப்படல் வேண்டும். இதில் சில சங்கங்களோ, நிறுவனங்களோ முன்னின்று செயலாற்ற வேண்டும்.

• திருமண காலங்களில் சீதனம் கொடுப்பதும், வாங்குவதும் ஏலம் கூறி விற்பதுபோல் நடைமுறையில் உள்ளன. இதனால் பொருளற்ற வறிய பெண்கள் திருமணமின்றி வாடி வதங்குகின்றனர். இக் கொடுக்கல் வாங்கல் நிறுத்தப்பட்டுப் பாதிப்புக்கான பெண்களும் இல்வாழ்க்கையில் ஈடுபடுத்தப்படல் வேண்டும்.

• ஆழ்ந்த கருத்துள்ள சிறந்த கதைகள் திரைப்படத்துக்கு ஏற்கப்படுவதில்லை. தற்போதைய திரைப்படங்களைப் பார்த்தால் இது புரியும். உண்மையில் திரைப்படங்கள் மக்களைத் திருத்தலாம். ஆனால் அவை மாறுபட்ட கருத்தினை மக்களுக்கு ஊட்டுகின்றன. வங்கியில் எப்படிக் கொள்ளையடிப்பது? வாளெடுத்து எவ்வாறு தலைகள் உருண்டோடச்; சீவுவது? கத்தியால் எவ்வண்ணம் குடலைக் குத்திக் கொல்வது? எப்படிக் களவெடுப்பது? பிறன் மனையில் புகும் முறை, பெண்ணைக் கற்பழிக்கும் புதுமுறைக் காட்சி, பெண்ணைக் கடத்திச் செல்லல், ஆடை குறைத்து அவயவம் காட்டி ஆடல் போன்றன மக்களுக்குத் தேவைதானா? இவை சீர்படுத்தப்படல் வேண்டாமா?

கதைஞரும், கவிஞரும் மேற்போந்த விடயங்களில் ஆர்வம் காட்டித் தம் ஆக்கங்களை மக்கள் மனைகளை நோக்கி உருள விடின,; காலகட்டத்தில் மக்கள் மனதில் புத்துணர்சியெனும் பச்சிலம் புதுக்கொடி பற்றிப் படர்ந்து பிணைந்து நாம் எதிர் பார்க்கும் விளைவுகள் சீக்கிரமே கிட்டுமென்பதில் ஐயமில்லை எனலாம்.

wijey@talktalk.net