கதை பிறந்த கதை: வீடற்றவன் சிறுகதை பிறந்த கதை!

Kevin   Clarkeஇச்சிறுகதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான சிறுகதை. ஒரு முறை வீடற்ற வீதி மனிதர் ஒருவரை ‘டொராண்டோ’ நகரின் வீதியொன்றில் சந்தித்தேன். அவருடனான எனது அனுபவத்தை மையமாக வைத்து உருவான கதையிது. கதையில் அம்மனிதரின் உண்மைப்பெயரை , உரையாடலின்போது அவர் கூறிய பெயரை, பாவித்துள்ளேன். பின்னரே அறிந்துகொண்டேன் அவ்வீதி மனிதர் உரையாடலின்போது கூறிய தகவல்கள் பொய்யல்ல என்பதை. அம்மனிதரின் முழுப்பெயர்ட் கெவின் கிளார்க் (Kevin Clarke). இவரைப்பற்றிய விக்கிபீடியாத் தகவல்களைப் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://en.wikipedia.org/wiki/Kevin_Clarke_(politician)

இவருடன் உரையாடியபோது இவர் தான் ‘டொரோண்டோ நகரின் முதல்வர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகக் கூறியபோது நான் அதனை உளவளர்ச்சி பாதிப்புற்ற வீதி மனிதர் ஒருவரின் கூற்றாகவே எண்ணியிருந்தேன். இருந்தாலும் நடந்த சம்பவத்தை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுமென எண்ணி அதனை ஒரு சிறுகதையாக எழுதினேன். அவ்விதம் எழுதுகையில் அம்மனிதர் தெரிவித்த பெயரினையே பாவித்தேன். இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பின்னர் பத்திரிகைச் செய்தியொன்றில் பே வீதியும் , அடிலெய்ட் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையில் வீடற்ற மனிதர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மீது வழக்குப் பதிவான விடயத்துடன் அம்மனிதரே ‘டொராண்டோ மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்னும் விபரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுதே அறிந்து கொண்டேன் அம்மனிதரும் நான் சந்தித்த வீதி மனிதரும் ஒருவரென்பதை. அவர் கூறியவை பொய்யல்ல என்பதை. அம்மனிதருடனான உரையாடலின்போது அம்மனிதர் எனக்குக் கூறியவற்றை வைத்தே கதையின் உரையாடலினைப் பின்னியுள்ளேன். விக்கிபீடியாவிலுள்ள இவரைப் பற்றிய குறிப்புகள் இவர் ஒரு காலத்தில் ஸ்கார்பரோ பகுதியில் ஆசிரியராகவிருந்ததைத் தெரிவிக்கின்றன.

‘டொரோண்டோ’ அனுபவங்களை மையமாக வைத்துப் பல சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவ்வகையில் அவ்வனுபவங்கள் மறக்க முடியாதவை; முக்கியமானவை. –


சிறுகதை முழுமையாகக் கீழே:

சிறுகதை: வீடற்றவன்… வ.ந.கிரிதரன் –

சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. ‘ஹாட் டாக் ‘ நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தெரு மூலைகளில் இத்தனைக் களேபரத்திற்குமிடையில் வீடற்றவர்கள் ‘மான் ஹால் ‘ மூடிகளைக் கணப்பாக்கி உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். நான் இரவு வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்தபடி சென்று கொண்டிருந்தேன். மனிதரைச் சூழலை அவதானித்தல் எனக்குப் பிடித்தொரு பிரியமான பொழுது போக்கு. வீதியில் ‘சிக்னல் ‘ விளக்கு மாறுவதற்காகக் காத்து நின்ற பொழுது ‘சில்லறை ஏதாவது தரமுடியுமா நண்பனே ‘ என்ற குரல் கேட்கத் திரும்பினேன். அருகில் அந்தக் கறுப்பின நடுத்தர வயது மனிதன் நின்றிருந்தான். இலேசான நரையுடன் கூடிய தாடி. அடர்த்தியான மீசை. ஆனந்தமான இளநகையுடன் கூடிய முகம். கையில் ஒரு பிளாஸ்திக்காலுருவாக்கப்பட்ட கொள்கலனொன்று வைத்திருந்தான். அதில் Clarke for Toronto Mayor ‘ என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. இதற்கும் மேலாக எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தவிடயமென்னவென்றால்..அவன் ‘கோர்ட்டும் சூட்டும் டையு ‘மாக ஒரு கனவானைப் போன்றதொரு தோற்றத்திலிருந்தது தான். அவன் நீட்டிய பிளாஸ்திக் கொள்கலனில் இரண்டு ரூபாக் குத்தியொன்றினைப் போட்டு வைத்தேன். அதற்கவன் ‘நன்றி ‘ என்று நன்றி தெரிவித்தான். இந்த மாநகர் ஒவ்வொரு நாளும் இத்தனை வருடங்கள் கழிந்த நிலையிலும் எனக்குப் புதுப் புது அனுபவங்களைத் தர மறந்ததேயில்லை. இதனை அறிதலென்பது முடியாத செயல் போன்று பட்டது. கடலின் ஆழத்தை விட இதன் ஆழம் அதிகமாகவிருக்கலாமென்று புதியதொரு பழமொழியினை உருவாக்கும் அளவுக்கு ஆழமானதாக எனக்குப் பட்டது.

அந்த மனிதனே தொடர்ந்தான். என் கைகளைப் பிடித்துக் குலுக்கியவன் ‘நண்பனே! என் பெயர் கிளார்க். டொரோண்டோ மேயர் பதவிக்காகப் போட்டியிட இருப்பவன். நானொரு வீடற்றவன் ‘ என்ற அவனது கூற்று எனக்கு ஆச்சர்யத்தை அதிகம் விளைவித்தது. விரைவில் நடைபெறவிருந்த டொரோண்டோ மாநகர மேயர் பதவுக்கான தேர்தலில் பலர் போட்டியிடவிருப்பது நான் ஏற்கனவே அறிந்ததொன்று தான். ஆனால் இவ்விதம் ஒரு வீடற்ற நடைபாதை மனிதனும் போட்டியிடவிருப்பதாக நான் அறிந்திருக்காததால் சிறிது வியப்புற்றேன். அந்த வியப்புடன் ‘நான் அறியாத செய்தி ‘ என்றேன். அதற்கவன் ‘அதிலேதும் ஆச்சர்யமெதுவுமில்லை. இங்குள்ள பத்திரிகைகள் ஏன் என்னைப் போன்ற ஒருவனைப் பற்றித் தமது நேரத்தை விரயமாக்கவேண்டுமென்று நினைத்திருக்கலாம் ‘ என்றான். எனக்கு சிறுவயதில் கேட்டதொரு கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு முறை அங்கொடைக்கு சிறிலங்காவின் அனறைய ஜனாதிபதியான ஜே.ஆர். விஜயம் செய்திருந்தார். அங்கொடை இலங்கையின் புகழ் பெற்ற மனோவியாதிக்காரருக்கான ஆஸ்பத்திரி. அவ்விதம் விஜயம் செய்தவரை அங்கு சிகிச்சைக்காகத் தங்கியிருந்த நோயாளிகளிலொருவர் பின்வருமாறு வரவேற்றார்.

‘வணக்கம். ஐயா யாரோ ? ‘

அதற்கு ஜே.ஆர் ஒரு புன்சிரிப்புடன் ‘நான் தான் இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய தார்மீக ஜனாதிபதி ‘ என்றார். இதனைக் கேட்டதும் கேள்வி கேட்ட நோயாளி பலமாகச் சிரித்து விட்டு ஜே.ஆருக்குப் பினவருமாறு அறிவுரை கூறினான்: ‘ஐயா. நானும் இப்படிச் சொல்லித் தான் இங்கு வந்து மாட்டிக் கொண்டேன். என்னிடம் கூறிய மாதிரி வேறு யாரிடமும் இவ்விதம் கூறாதீர்கள். அப்புறம் உங்கள் பாடும் என் பாடு தான். ‘ எனக்கொரு யோசனை. இவனும் தான் மேயர் தேர்தலுக்கு நிற்பதாகக் கூறுகின்றானே. வீடற்றவனாகவிருக்கின்றான். கோர்ட்டும் சூட்டும் டையுமாக ஒரு கனவானைப் போல் விளங்குகின்றான். ஒரு வேளை இவனும் அந்த ஜே.ஆரை வரவேற்ற நோயாளியைப் போன்றவனோ ? இல்லாவிட்டால் தானொரு வீடற்றவனென்றும், மேயர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் இவ்வளவு தீவிரமாகக் கூறுவானா ? அவனது குரலில் எந்தவிதத் தயக்கமும், கலக்கமும் தெரியவில்லை. அக்குரலிலிருந்து ஒருவரும் அவனது மனநிலையினைச் சிறிதளவாவது சந்தேகிக்கமாட்டார்கள். அவ்வளவுக்குத் தெளிவாக அறிவு பூர்வமாக உரையாடினான்.

‘நண்பனே! உன்னிடம் ஒன்று கேட்கலாமா ? ‘ என்றேன். ‘நிச்சயமாக ‘ என்று என் கேள்விகளுக்காகக் காத்திருந்தான். [ இங்கு ஒருவரையொருவர் ‘ஹாய் மான் ‘ (Hey Man!), ‘எனது நண்பனே ‘ (My Friend) என்று அழைப்பதென்பது சர்வசாதாரணமானது.]

‘உன்னைப் பார்த்தால் ஒரு கனவானைப் போல் தென்படுகிறாய். அதே சமயம் வீடற்றவனென்றும் கூறுகின்றாய். இந்த உடைகளையெல்லாம் உனக்கு யார் தந்தது ? ‘ ஆச்சர்யம் தழும்பும் குரலில் கேட்டேன்.

அதற்கு அவன் கூறினான்: ‘நண்பனே! உண்மையைக் கூறினால்.. இவையெல்லாம் தானாகவே என் நலனில் அக்கறையுள்ளவர்களால் கொண்டு வந்து தரப்பட்டது… ‘அடிலயிற்று ‘ம் , ‘பே ‘யும் சந்திக்குமிடத்திலுள்ள நடைபாதை தான் என் விலாசம். எப்பொழுதாவது உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமென்றால் அங்கு வந்து பார். ‘

இலேசானதொரு புன்சிரிப்புடன் ‘நீயொரு புதிரான மனிதன் ‘ என்றேன்.

அதற்கு அவனும் இலேசாகச் சிரித்தான்.

மேலும் தொடர்ந்தேன்: ‘உனக்கு இவ்விதம் மேயர் தேர்தலில் நிற்க வேண்டுமென்று எவ்விதம் ஆர்வம் வந்தது ? ஆட்சேபனயேதுமில்லையென்றால் கூறலாம்.. ‘.

சிறிது மெளனத்தின் பின் அவன் கூறினான்: ‘உனக்குத் தெரியாது என் கடந்த கால வாழ்க்கை பற்றி. தெரிந்தால் அதிர்ந்து போவாய் ? ‘.

என் ஆர்வம் அதிகரித்தது. ‘நீ உன் கடந்த கால வாழ்வு பற்றிக் கூறாவிட்டால் என் மண்டை உடைந்து விடும் சுக்கு நூறாகி..வேதாளம் விக்கிரமன் கதையில் வருவதைப் போல் ‘ என்றேன்.

அதற்கு அவன் ‘வேதாளம்..யாரது.. ? ‘ என்றான். ‘அதொன்றும் அவ்வளவு முக்கியமான விடயமில்லை. நீ உன் கதையினைக் கூறத் தொடங்கலாம். ‘ என்றேன்.

அதற்கு அவன் பின்வருமாறு தொடர்ந்தான்: ‘ நான் ஒரு காலத்தில் மில்லியன் டாலர்கள் வரையில் உழைத்தேன். ….அதன் பின் தான் உணர்ந்தேன்..காசு தான் வாழ்க்கை அல்லவென்று..தற்போது என்னுடைய நோக்கமெல்லாம் மக்கள் அனைவரையும் நேசிப்பது தான்..உண்மையாக நேசிப்பது தான்….உனக்குத் தெரியாது….மேலும்… ‘ என்று நிறுத்தினான்.

‘என்ன நிறுத்தி விட்டாய்… ? ‘ ஆர்வம் ததும்பக் கேட்டேன்.

‘நான் இந்த சிக்னலில் பிழையாகக் கடந்தால் நிறுத்தப் படுவேன். அறிவுரைகள் கூறப்படுவேன். காவல் துறையினர் கண்டால் என்னை விடமாட்டார்கள். உன்னையும் தான்..ஆனால் ஒரு வெள்ளையினத்தவருக்கு இவ்விதமானதொரு நிலை ஏற்படுமென்று நீ நினைக்கின்றாயா ? வந்தேறு குடிகள், சிறுபான்மையினர் அனைவரும் நன்கு பாதிக்கப் படுகின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் உதவ வேண்டும். அதற்காகத் தான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்…. ‘ என்று அதற்கவன் பதிலிறுத்தான்.

இறுதியில் கதை வேறு வழிக்குத் திரும்பியது.. ‘ நண்பனே! நான் ஒரு எழுத்தாளன்..ஒரு மாதாந்த சஞ்சிகை நடத்துபவன்..அதற்காக உன்னைப் பேட்டி காண்பதென்றால்ல் என்ன செய்யலாம்.. ? ‘ என்றேன்.

அதற்கவன் ‘ தாராளமாக நீ என்னை என்னுடைய இருப்பிடத்தில், அது தான் அடிலையிற்/பே சந்திப்பில் சந்திக்கலாம்…. ‘ என்றவன் ‘உனக்குக் குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா ? ‘ என்றான்.

‘ஆம். இரு அழகான நல்ல குணமான பெண் குழந்தைகள் ‘ என்றேன்.

அதைக் கேட்டதும் அவன் இரு இருபத்து ஐந்து சத நாணயங்களை எடுத்துத் தந்தான்..அத்துடன் பின்வருமாறு அறிவுரையொன்றினையும் தந்தான். ‘எப்பொழுதாவது உன் குழந்தைகள் வெளியே சென்றால்..அவர்களிடம் இந்த நாணயங்களைக் கொடு..எங்கிருந்தாலும் உனக்கு அழைத்துத் தெரிவிக்கக் கூறு.. ‘ அதன் பிறகு விடைபெற்றுச் சென்று விட்டான். அவன் செல்வதையே , கண்ணிலிருந்து மறையும் வரையில், சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த புதிரான மாநகரைப் போலவே புதிரான மனிதனிவனெனப் பட்டது.

நன்றி: பதிவுகள், திண்ணை