கனடாத் தமிழர்தம் வரலாறும் , ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளையின் அனுபவமும்!

ஆனந்தன் கிருஷ்ணபிள்ளைஎனது ‘அஞ்சலி: மறக்க முடியாத ‘ராஜு அங்கிள்’ (1946 -2019)’ பதிவினைப்பார்த்துவிட்டு நண்பர் ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளை (Ananthan Krishnapillai) என்னைத்தொலைபேசி மூலம் அழைத்து தனது ராஜு அங்கிள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனந்தன் பகிர்ந்து கொண்ட எண்ணப்பதிவுகள் முக்கியமாவையாகப் படுவதால் அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆனந்தன் அவர்கள் நாமெல்லாரும் இங்கு வருவதற்கு முன்பே வந்தவர். ஐரோப்பாவிலிருந்து வந்தவர் சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்த குற்றத்துக்காக, நாடு கடத்தப்படுவதற்காக, நாடு கடத்தும் பத்திரங்களிலும் அவரது கையெழுத்தைப்பெற்ற பின்னர் அவரைத் தடுப்பு முகாமில் தடுதது வைத்திருந்தார்கள். ராஜு அங்கிளின் மூத்த அண்ணர் ராமநாதன் முத்துச்சாமிப்பிள்ளையின் மனைவியார் அக்காலகட்டத்தில் யாழ் பொது வைத்தியசாலையில் ‘மேற்ரன்’ ஆகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்குதான் ஆனந்தன் அவர்களின் அன்னையாரும் நீண்ட காலமாகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். தனது தாயாரிடம் தனது இக்கட்டான நிலையினைக் கூறியிருக்கின்றார் ஆனந்தன். பதிலுக்கு அவரது தாயார் ‘மேற்ரனா’கப் பணிபுரிந்து கொண்டிருந்த ராஜு அங்கிளின் அண்ணியாரிடம் விடயத்தைக் கூறியிருக்கின்றார். மூத்த அண்ணர் உடனடியாகவே கனடாவிலுள்ள ராஜு அங்கிளுடன் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.

இதற்கிடையில் நண்பர் ஆனந்தன் கனடாவில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் ஈழம் சமூக அமைப்பினை நாடியிருந்திருக்கின்றார். அவ்வமைப்பும் உதவ முடியாதென்று தன் கைகளை வீரித்துள்ள நிலையில் அவருக்குத் தெரிந்த சிலரும் உதவ முடியாதென்று கை விரித்த நிலையில் , ‘ராஜு அங்கிள்’ அங்கு சென்று , ஆனந்தன் அவர்களுக்குப் பிணையாக நின்று , ஆனந்தன் அவர்களை வெளியே கொண்டுவந்திருக்கின்றார். இவ்வளவுக்கும் ‘ராஜு அங்கிளு’க்கு ஆனந்தன் யாரென்றே , முன்பின் தெரியாத ஒருவர். இந்நிலையில் தன் அண்ணர் கூறியதற்காக ஆனந்தன் தங்கியுருந்த தடுப்ப முகாமுக்குச் சென்று, அங்கிருந்த ஆனந்தனுக்குப் பிணையாக நின்று அவரை வெளியே கொண்டுவந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் வேறு சிலரும் அவரைப்போல் நாடு கடத்தப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விபரம் வருமாறு: கந்தரட்னம் (அளவெட்டி), இந்திரகுமார் (உரும்பிராய்), சேயோன் (யாழ்ப்பாணம்), ஈஸ்வரமூர்த்தி கிருஷ்ணபிள்ளை, ஈசன் கிருஷ்ணா (உரும்பிராய்) , குணரஞ்சன் (கொக்குவில்) மற்றும் செல்வநந்தன் (சாவகச்சேரி) . இவர்களில் கந்தரட்னம், இந்திரகுமார் மற்றும் சேயோன் ஆகியோர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் எஞ்சியவர்களில் கலாநிதி இளகுப்பிள்ளை செல்வநந்தனையும், சாம் தம்பிமுத்து அவர்கள்     குணரஞ்சனையும், மற்றும் ஶ்ரீதரன் அவர்கள் ஈஸ்வரமூர்த்தியையும் பிணையிலெடுத்து உதவியிருக்கின்றார்கள். இவர்கள் காலமறிந்து செய்த உதவி முக்கியத்துவம் மிக்கது. பதிவு செய்யப்பட வேண்டியது. கனடாத்தமிழர் வரலாறு எழுதும் எவரும் ஆனந்தன் போன்றவர்களின் அனுபவங்களையும் உள்ளடக்குவது முக்கியமானது; சரியானது. அதுவே வரலாற்றின் உண்மைக்கும் முக்கியமானது.

இது என்னைப்போறுத்தவரையில் மிகவும் முக்கியமான தகவல் என்பேன். ராஜு அங்கிள் செய்த உதவியை இன்றும் மறக்காமல் நினைவு கூரும் நண்பர் ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளைக்கு இத்தகவலை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்காக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ngiri2704@rogers.com