சென்ற வாரம் 03-11-2011 ரொறன்ரோ பின்ச் அவனியூவில் உள்ள ஜோர்க்வூட் அரங்கத்தில் சிறார்களின் இசை அர்ப்பணமும், சலங்கைப் பூசையும் ஒரே மேடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. பிரபல பாடகியான இசைக்கலா வித்தகர் கலைமணி பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவனான ஆகாஷ் கதிர்காமனின் இசை அர்ப்பணமும், பிரபல நாட்டிய தாரகையான லலிதா கதிர்காமனின் மாணவியான அஸ்வினி கதிர்காமனின் சலங்கைப்பூசையும் ஒரே மேடையில் இடம் பெற்றன. ரொறன்ரோவின் பிரபல நடன, சங்கீத, இசைக் கலைஞர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.
சதா கான நிலையத்தின் அதிபர் பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவனான சிறுவன் ஆகாஷ் கதிர்காமன் மிகவும் திறமையாகக் கீர்த்தனங்களைப் பாடிச் சபையினரின் பாராட்டைப் பெற்றார். இவர் பாடிய தமிழ் பாடல்கள் குறிப்பாகப் பாரதியார் பாடல்கள் சபையோரை மிகவும் கவர்ந்தன. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்கள். தனது தாயாரையே குருவாகக் கொண்டு, ஸ்ரீமதி லலிதா கதிர்காமனின் மகளான சிறுமி அஸ்வினி கதிர்காமன் அதே மேடையில் மிகவும் சிறப்பாக நடனமாடி பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். திரு. திருமதி கதிர்காமனின் பிள்ளைகளான இருவரும், வாய்பாட்டு, நடனம் போன்றவற்றில் மட்டுமல்ல, வீணை இசையிலும் தமது திறமையைக் காட்டினார்கள். மூத்த மகனான ஆகாஸ் மிருதங்க இசையிலும் அதே மேடையில் தனது திறமையைக் காட்டினார். இவர் ஸ்ரீ கனகேந்திரம் குகேந்திரனிடம் மிருதங்கம் கற்கின்றார். வீணை இசையை ஸ்ரீமதி தயாளினி ரவிச்சந்திரனிடம் இருவரும் கற்கின்றனர்.
இந்த நிகழ்விற்கு எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன், திருமதி கோதை அமுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாககக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். திருமதி கோதை அமுதனின் உரையைத் தொடர்ந்து, குரு அரவிந்தன் தனது உரையில் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் தெய்வீக அம்சம் கொண்ட பரதக்கலையும், சங்கீதமும் இன்று தமிழர் வாழ்வியல் பண்பாட்டை வளர்த்து வரும் கலையாகத் திகழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியதே என்று குறிப்பிட்டு, இந்த மண்ணில் எமது பாரம்பரிய கலை, பண்பாடு போன்றவற்றைப் பேணிக்காக்க இத்தகைய நிகழ்வுகள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்றும், கலை பண்பாட்டை வளர்த்தெடுக்கும் அதே சமயம் எனது தாய் மொழியையும் மறந்திடாது வளர்க்க வேண்டும் என்பதையும் அங்கே அரங்கத்தில் நிறைந்திருந்த பெற்றோருக்கு வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து அமிர்தாலயா நுண்கலைக் கல்லூரியின் சாரபில் குரு அரவிந்தனால் ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் அவர்கள் இன்னிசைவாணி என்ற பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு ஸ்ரீ கனகேந்திரம் குகேந்திரன், இளம் கலைஞர்களான ஐஸ்வரியா சந்துரு, அபிநயா சந்துரு, சௌமியா சந்துரு, ஹரிஸ் சிவரூபன், சஞ்ஜீவன் செல்வநாதன் ஆகியோர் பக்கவாத்திய இசை வழங்கினர்.
மேலும் சில காட்சிகள் …