“நான் தமிழ்நாட்டில் இருந்த காலப் பகுதியில்தான் இராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை ஈழத் தமிழர்கள் செய்தார்கள் என்பதை ஏற்க மறுக்கிறேன். திரு பழ. நெடுமாறன் கூறுவதைப் போல இந்தக் கொலையைச் செய்தவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நீதி, நேர்மை முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்டன. இராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப் பட்ட விதமும் தண்டனை வழங்கப்பட்ட விதமும் பல அய்யங்களை எழுப்புகின்றன. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். எஞ்சிய 13 பேர் ஈழத்தமிழர்கள். சரி சமமான எண்ணிக்கை என்பது தற்செயலான செயல் அல்ல. ஆழமான உள்நோக்குடன் செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ் தேசிய உணர்வை சிதைப்பதற்காக இந்த சதி வகுக்கப்பட்டு சிபிஅய் என்ற புலனாய்வு அமைப்பு தனது புலன் விசாரணையை நடாத்தியது என நூலாசிரியர் திருச்சி வேலுசாமி சொல்லுகிறார்” என இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நூல் பற்றி ஆய்வுரை ஆற்றிய முன்னாள் நா. உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் குறிப்பிட்டார்.
இந்த நூல் வெளியீட்டு விழா கடந்த பெப்ரவரி 16 அன்று மாலை ஸ்காபரோ பொதுமக்கள் மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ் மொழி வாழ்த்தை வினோதாரணி தயாளன் பாடினார். விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள், இனம் வாழ தங்கள் இன்னுயிரை ஈகை செய்த உணர்வாளர்கள், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் ஆகியோருக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் மனித உரிமைக்கான மையத்தின் தலைவர் (Centre for War Victims and Human Rights (CWVHR) திரு அன்டன் பிலிப் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார்.
அடுத்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு நக்கீரன் “திருச்சி வேலுசாமியின் இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நூலை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இப்போதெல்லாம் நான் ஒரு நூலை முழுக்கப் படித்து முடிப்பது கிடையாது. காரணம் நேரம் இல்லாமை. ஆனால் இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நுலைப்படித்த போது ஒரு புலனாய்வு நாவலை அதாவது ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பது போன்றிருந்தது. இராஜீவ் காந்தியை கொலை செய்வித்தவர்கள் தப்பிவிட்டார்கள். நிராபராதிகள்தான் அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள் என்பது திருச்சி வேலுசாமி இந்த நூல் வாயிலாக வைக்கும் குற்றச்சாட்டு ஆகும். நூலின் தலைப்பு ‘தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்பது அந்த உண்மையைத்தான் சொல்கிறது. இந்த நூல் வெளியீட்டை நடத்துவதற்கு பாபு உணவகத்தின் உரிமையாளர் தம்பி இராஜகுலசிங்கம் அவர்களே முக்கிய காரணகர்த்தா ஆவார்” எனத் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய நக்கீரன் ” 1991 மே 21 ஆம் நாள் இரவு 10.10 மணிபோல் சிறீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பரப்புரைக்கு வந்த இராஜீவ் காந்தி தனு என்ற தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்படுகிறார். அதே நேரம் திருச்சி வேலுசாமி மத்திய அரசின் சட்ட அமைச்சரும் ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியன் சாமியை தொலைபேசியில் அழைக்கிறார். அடுத்த நாள் 22 இல் திருச்சியில் கூட்டம். சாமி வரும் நேரத்தை அறிந்து கொள்வதே தொலைபேசி அழைப்பின் நோக்கம். அடுத்த முனையில் சாமியின் குரல் “என்ன? இராஜீவ் செத்துட்டார். அதானே சொல்ல வரேள்” என்கிறார். உடலில் மின்னல் தாக்கியது போன்ற உணர்ச்சி வேலுசாமிக்கு. அப்போது சுவர் மணிக்கூடு நேரம் 10.25 எனக் காட்டியது. மறுபடியும் சாமி “ஆமாம் நீ அதைத்தானே சொல்ல வர்றேள். அதான் அவர் செத்திட்டார். குண்டு வெடிச்சதுல இறந்திட்டார்” உறுதி செய்கிறார். குண்டு வெடிப்பு 10.10 அல்லது 10.15 க்கு நடந்திருக்கிறது. அதன் பின் 30 நிமிடங்கள் கழித்துத்தான் இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பது ஜெயந்தி நடராசனால் உறுதி செய்யப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் குறைந்த பட்சம் 10.50 அளவிலேதான் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி தில்லி மேலிடத்துக்குச் சென்றிருக்கும். ஆனால் சாமியோ 10.25 க்கு “”என்ன? இராஜீவ் செத்துட்டார். அதானே சொல்ல வர்றேள்” என்று கேட்கிறார். அது எப்படிச் சாத்தியம்? என்பதுதான் திருச்சி வேலுசாமியின் கேள்வியாகும். இதை வைத்து இராஜீவ் கொலைக்குப் பின்னால் சுப்பிரமணியன் சாமி இருந்திருக்கிறார் அந்தக் கொலையில் அவருக்கும் பங்கு இருக்கிறது, காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்திக்கும் பங்கு இருக்கிறது, இன்னொரு சாமியான சந்திரசாமிக்கும் பங்கு இருக்கிறது என்ற முடிவுக்கு வேலுசாமி வருகிறார். இராஜீவ் கொலையில் தூக்கில் போட வேண்டியது பிரபாகரனை அல்ல. சதித் திட்டத்தை தீட்டி முடித்த சுப்பிரமணியன் சாமியையும் வாழப்பாடி இராமமூர்த்தியையுந்தான் தொங்கவிட வேண்டும் என்கிறார். இந்த முடிவைச் சுற்றியே நூல் நகருகிறது” எனக் குறிப்பிட்டார்.
அடுத்து ஆய்வுரை ஆற்றிய தகவல் ஆசிரியர் திரு திருச்செல்வம் “இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவர் அந்த தண்டனைக்காக காத்திருக்கிறார்கள். அண்மையில் இந்திய நாட்டின் சனாதிபதி தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கருணை மனுக்களை விசாரித்து தீர்ப்புக் கூறும் அதிகாரம் அகற்றப்பட்டுள்ளது. அதன் பொருள் இனிமேல் தூக்குத் தண்டனை என்றால் தூக்குத் தண்டனைதான். இப்படியான ஒரு சூழலில் திருச்சி வேலுசாமி எழுதிய இந்த நூல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான செவ்விகள் அடங்கிய இன்னொரு தொகுப்பு நூலை அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒரு நண்பரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். அதைப் படித்தபோது அந்த நூல் அங்குமிங்குமாக சில கருத்துக்களைச் சொல்லுகிறதே ஒழிய கட்டுக் கோப்பாக முழு உண்மைகளையும் தெரிவிக்கும் விதத்தில் அந்த நூல் இருக்கவில்லை. அப்போது நான் யோசித்தேன் ஏன் விரிவான ஒரு நூலை திருச்சி வேலுசாமி எழுதவில்லை என்று. இப்போது இந்த நூல் மூலம் அந்தக் குறையை அவர் போக்கியுள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
இராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவராக இருந்திருந்தால் அவர் மீதான கொலை முயற்சி முதலில் மேற்கொள்ளப்பட்டது கொழும்பில்தான். 1987 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எழுதிவிட்டு இராஜீவ் காந்தி இந்தியா திரும்பும் போதுதான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு அளித்த வரவேற்பின் போது விஜயமுனி என்ற சிப்பாய் தனது துப்பாக்கியின் அடிப்பாகத்தால் இராஜீவ் காந்தியை அடித்தான். ஆனால் இராஜீவ் காந்தி லாவகமாக தலையைக் குனிந்து தப்பித்துக் கொண்டார். சிறையில் அடைக்கப்பட்ட விஜயமுனியை பிரேமதாசா சனாதிபதியாக வந்த போது விடுதலை செய்து விட்டார். இதனால் சுப்பிரமணியன் சாமி ஏன் இலங்கையின் ஒரு ஏஜன்டாக இருந்திருக்கக் கூடாது?” என்ற கேள்வி இந்த நூலில் எழுப்பப்படுகிறது எனக் கூறிய திரு திருச்செல்வம் டாக்டர் சுப்பிரமணியன் சாமி நடத்திய “பிரமஹத்தி யாகம்” பற்றி வேலுசாமி எழுதியிருப்பதைப் பற்றியும் பேசினார்.
“இராஜீவ் காந்தி இறந்த ஒரு மாதம் கழித்து டாக்டர் சுப்பிரமணியன் சாமியிடம் இருந்து திருச்சி வேலுசாமிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. தான் சென்னை வருவதாகவும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறு கேட்கிறார். திருச்சியில் இருந்து பேருந்தில் புறப்பட்டு சென்னை போகிறார். பின்னர் இருவருமாக காஞ்சி போகிறார்கள். அங்கொரு திருமண மண்டபத்தில் காலை முதல் மாலைவரை யாகம் நடக்கிறது. அந்தணர்கள் மாறுகிறார்களே ஒழிய மந்திரம் சொல்வது நிறுத்தப்படவில்லை. இந்த யாகத்துக்கு ரூபா 5 இலட்சம் செலவழிக்கப் பட்டிருக்கும். எதற்காக இந்த யாகம் என்பது வேலுசாமிக்குப் புரியவில்லை. யாகம் முடிந்ததும் சாமியிடம் பேச்சு வாக்கில் இது எதற்கான யாகம் எனக் கேட்கிறார். “பிரமஹத்தி தோஷ யாகம்” என்கிறார் சாமி. நாங்கள் கூட திட்டும் போது பிரமஹத்தி என்று திட்டுவது உண்டு. சென்னை திரும்பிய வேலுசாமி பிரமஹத்தி என்றால் என்ன அர்த்தம் எனத் தனக்குத் தெரிந்த பிராமண நண்பர்களிடம் கேட்கிறார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு பிராமணனைக் கொலை செய்து விட்டால் அந்தப் பாவத்தைப் போக்குவதற்கு நடத்தப்படும் யாகத்தை பிரமஹத்தி யாகம் என அழைப்பார்கள். இது வேலுசாமியின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. காரணம் இராஜீவ் காந்தி கஷ்மீர பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரைக் கொலைசெய்த பாவம் தன்னைப் பீடிக்கக் கூடாது என்பதற்காகவே சாமி அந்த யாக பூசையைச் செய்தார் என்கிறார் வேலுசாமி.”
அடுத்து நவம் ஆசிரியர் ஆய்வுரை வழங்கினார். (அதன் பதிவு பின்னர் வெளிவரும்.)
ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் .நிஜம் என்று நூலை திரு இராசரத்தினம் குணநாதன், தலைவர், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளியிட்டு வைத்தார். அதன் முதற்படியை திருமதி இரேவதி குணநாதன் பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏனைய தமிழ் உணர்வாளர்கள் வரிசையாக வந்து பெற்றுக் கொண்டார்கள்.
நூல் வெளியீடு மூலம் 5,000 வெள்ளிகள் கிடைத்தன.
நிகழ்ச்சியை திரு. குயின்ரஸ் துரைசிங்கம் அழகாகத் தொகுத்து வழங்கினார்.
athangav@sympatico.ca