கனடா: வேம்படி மகளிர் கல்லூரியின் நுண்கலையை வளர்க்கத்துடிக்கும் கனேடிய இளம் தாரகை !!

கனடா: வேம்படி   மகளிர் கல்லூரியின் நுண்கலையை வளர்க்கத்துடிக்கும் கனேடிய  இளம் தாரகை !!அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?? என்று பெண்களை இழிவு  படுத்தி இருட்டடிப்புச் செய்த காலத்தில் பெண்களுக்கான மூலாதாரமாக முதன்மைப்பாடசாலையாக பிரித்தானியரால் 1834 அளவில் நிறுவப்பட்டதுதான் வேம்படி மகளிர் கல்லூரி. ‘கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால்  வையம் பேதமை யற்றிடும் காணீர்”என்கின்ற பெரும் புத்துணர்விற்கு பெண்களை இட்டுச் சென்றது இக்கல்லூரியின் தோற்றம். அதி வணக்கத்திற்குரிய குருமார்கள்  பீற்றர் பார்ச்சிவல், ஜேம்சு லிஞ்ச்,தோமஸ் ஸ்குவான்சு ஆகியோரின் பெருமுயற்சியால்  உருவாக்கப்பட்ட வேம்படி மகளிர் கல்லூரியானது  ஈழத்து தமிழ்  மாதர்களின் கல்வியை, அறிவை, கலாச்சாரத்தை,வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பி நிற்கின்ற    மாபெரும் கலைக் கோவிலாகும்.  யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாக இன்று மிளிர்கின்றது. . இந்த  ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் சாதனையாக  யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் என்கின்றது கல்வித்   திணைக்களத்தின் புள்ளி விபரம் . இத்தகு வரலாற்றுப்  புராதனமும்,பெருமையுமிக்க  வேம்படி மகளிர் கல்லூரியில் கவின் கலைகளை வளர்ப்பதற்கான அரும் பெரும் முயற்சிக்கான அடித்தளமாக டொரோண்டோவில் பிறந்து வளர்ந்து நாட்டியக்கலையில் சாதனை படைத்து நிற்கும் செல்வி ஐஸ்வர்யா சந்துரு அவர்கள் நாட்டிய தர்ப்பணம் எனும் அற்புத நிகழ்வை 16 ந்திகதி ஜூலை அன்று  நடாத்தி  எம்மை எல்லாம் அதிர வைத்தார். மண்டபம் நிறைந்த மக்கள் சூழ அவரின் அற்புதமான  நாட்டிய தர்ப்பணம் கலை மன்றம் ஆதரவில்  “தோர்ன்கில்” நகர கவின் கலைப் பெருஅரங்கில் வெற்றிகரமாக நடந்தேறியது.   நடனம் என்பது அழகுற ஆடுதல் என அர்த்தம் கொள்வர். அது நூற்றெட்டு உடற் கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் செயற்பாட்டோடும் கூடியது பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்தே “பரதம்’ பிறந்தது..    நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் என்று மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது பரதம். பரத முனிவரின்  நாட்டிய சாஸ்திரம், நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணம் போன்ற வடமொழிப் பனுவல்கள்  பரத நாட்டிய நுட்பங்களை விதந்துரைப்பவை. ஆனாலும் கால மாற்றம் பல பரிணாம வளர்ச்சிகளை பரதத்தில்  ஏற்படுத்திப் புதுமையை உள்வாங்கியுள்ளது. இதற்கு முதன் முதலில் வித்திட்ட பெருமை நாட்டிய கலாகேசரி  வழுவூர் இராமையாபிள்ளை அவர்களையே சாரும். யாவரும் இரசிக்கத்  தக்கதாய் புதிய வகைப்பதங்களை உருவாக்கிய மகா கலைஞன் அவர். அவரின் வழிவந்த ஆடற்கலையை டொரொன்றோவில் அற்புதமாகக் கற்பித்துக் கொடுப்பது கலைமன்றம் நாட்டிய அகாடமி.

“ஆடற்கலை மனிதனுடன் தோன்றியது. அது அழியப்போவதொன்றல்ல.சமுதாய  நிலைக்கேற்ப வளைந்து கொடுத்துப் பரிணமித்துக் கொண்டு செல்வதை எவரும் தடுத்து நிறுத்தமுடியாது”. என்பதை எப்போதும் வலியுறுத்தும் குருவாகவிளங்குபவர் கலைமன்றத்தின் அதிபர்  நாட்டிய தாரகை திருமதி நிரஞ்சனா சந்துரு அவர்கள். அவரின் அருமை மகளே ஐஸ்வர்யா அவர்கள்.  இளமையிலேயே நாட்டியத்தை கற்ற அவர் கர்நாடக சங்கீதம்  பாடுவதிலும் மிக வல்லவர். யோர்க் பல்கலைக்கழகத்தில்   நாட்டியக்கலைப்பிரிவில்  தன்கற்கை நெறியைத் தொடரும் ஐஸ்வர்யா  முதன்முதலாய் கனேடிய மேடைகளில் தானே பாடிய படி பரதநாட்டியத்தை ஆடுகின்ற அற்புதத்தை நிகழ்த்தியவர். இந்நிகழ்விலும்  அவர் அவ்வாறு  பாடி ஆடி பார்வையாளர்களை அசத்தினார்.  நிகழ்வில் பங்கேற்ற பக்கவாத்தியங்களான  மிருதங்கம்,வயலின்,புல்லாங்குழல் கலைஞர்கள் யாவருமே இங்கிலாந்திலிருந்து வந்து இந்நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.  பரதநாட்டிய நுட்பங்கள் அறிந்த சுதர்சன் அவர்கள் அறிவிப்பாளராக இருந்தமை  மேலும் இந்த நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தது. கனடாவின் முன்னணிப் பாடகி “சாய்ப்பிருந்தா” அவர்களின் கணீரென்ற குரலும் அவரின் தேர்ந்த கர்நாடக சங்கீத ஞானமும்    அவரோடு இணைந்து பாடிய இளம் பாடகி அபிநயா அவர்களின்  இனிய குரலும் கலையரங்கத்தை மேலும் மெருகு படுத்தின கனடாவின் முக்கிய ஊடகங்கள் இந்தச் சிறப்பு நிகழ்விற்கு ஆதரவு நல்கியிருந்தார்கள்.  புலம் பெயர்ந்தாலும் தாயக மண்ணை  மறக்காமல் அதன்  வளர்ச்சிக்கு இளம் கலைஞர்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கு  இந்நிகழ்வு ஓர் நல்ல உதாரணம் என அந்த நிகழ்வில் பேசிய விருந்தினர்கள் பெருமையோடு குறிப்பிட்டார்கள்.  

வழிகாட்டுதலும், நெறிப்படுத்தும் தன்மையும், நேர்மைத் தன்மையும் இருக்குமாயின் எவரையும்  உயர்ந்தவராக்கி விட முடியும். இந்த வகையில் ஐஸ்வர்யாவின் இந்த முயற்சி வேம்படி  மகளிர்  உயர் கல்லூரியின் நுண்கலைத்துறையை நிச்சயம் மேம்படுத்தும் என்று நம்பலாம் என்று கருத்து தெரிவித்தார் வேம்படி பழைய மாணவியும் சமூக ஆர்வலருமான திருமதி ஜெயஸ்ரீ கணபதிப்பிள்ளை அவர்கள்.

இந்த உலகம் ஒரு ஓட்டப்பந்தய மைதானம்.  அதில் வேகமாக ஓடுபவர்களே வெற்றியையும், புகழையும் அடைகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியைப் பெற பல மாணவிகள் தயாராயிருக்கின்றார்கள் , தன்னம்பிக்கைகொண்டிருக்கின்றார்கள் அற்புதமான திறமைகளோடு   இருக்கின்றார்கள்  ஆனாலும் பொருளாதார நெருக்கடியால் பல மாணவிகளின் அத்தனை கனவுகளும்  சிதைந்து பலவேளைகளில் சின்னாபின்னமாகிப் போகின்றது.  வாழ்வு திசைமாறிப்போயிருக்கின்றது. இத்தகைய மாணவிகளை மனதில்  கொண்டு அவர்களின் அவலநிலை போக்கி வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளுக்காக அருகி வரும் நுண் கலையை ஊக்குவிக்க நிதி சேகரித்து வழங்க முனைந்திருக்கும் “கலைமன்றம்” மிகவும் பாராட்டிற்குரியது. வேம்படி மகளிர் கல்லூரியின் கவின் கலைகள் வளர்ச்சி நிதிக்காக தன்னார்வமாக இந்த நிகழ்வை திறம் பட நடத்தி முடித்திருக்கின்றது கலைமன்றம் அகாடமி. எம்மண்ணையும், எம்  மண்ணின்  புனிதத்தையும் காப்பாற்ற ஐஸ்வர்யா போன்ற ஆயிரமாயிரம் கலைகளில்  கீர்த்தி பெற்ற இளையவர்கள்   கனடாவில் இருக்கின்றார்கள்.  அவர்களை சமூகமும் பெற்றோர்களும்  ஊக்குவிக்கவேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்தி  சக மானிடரையும் தன்னைப்  போல் வாழவைக்கத் துடிக்கின்ற   இளம் நர்த்தகி “ஐஸ்வர்யா” அவர்களுக்கு  எம் வாழ்த்துக்கள்

elamraji@yahoo.ca