கறுப்பர் நகரம் – கரன் கார்க்கி

கரன் கார்க்கியின் 'கறுப்பு நகரம்'

சென்னை என்றதுமே நம் நினைவில் வருவது நீண்ட கடற்கரை, துறைமுகம், பழங்காலக் கட்டடங்கள், சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், நினைவு இல்லங்கள், கோட்டைகள், கூவம் நதி என விரியும். ஆனால், கூவம் நதிக்கரை ஓரமாகவிருக்கும் ஆயிரக்கணக்கான குடிசைகளும், அவற்றுக்குள் வாழும் மனிதர்களையும் யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்நாவல். அதிலும் குறிப்பாக வட சென்னை மக்களைப் பற்றிய பதிவாக இது அமைந்துள்ளது. முதலாளி தொழிலாளி வர்க்கத்தின் முரண்பாடும்,  அதன் விளைவாக எழுந்த புரட்சியும் பற்றி இந்நாவல் பேசுகிறது. இவற்றுக்கிடையில் செங்கேணி – ஆராயி இவர்களின் காதல் வாழ்வும், அவர்கள் குடும்பத்தோடு இணைந்த மற்றவர்களின் பிணைப்புமாக நாவல் விரிகிறது. அடிமை வாழ்வில் இருந்து கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் அவர்களைக் குறிப்பிட்ட சில வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நபர்கள் குறித்து விரிவாகப் பேசுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுகிறது. இளமையில் கல்வி கற்க வாய்ப்பிருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் இருந்தமையால் உருவான வெறுமையைப் பதிவு செய்கிறது. ஆற்றோரத்தில் வசிக்கும் மனிதர்கள் அரசு வேலைக்குச் சென்ற பிறகு அதனை மறந்து சென்றுவிடும் நிலையில், அரசுப்பணியில் இருக்கும் சிலரின் உதவியோடு அங்கு படிப்பு மையம் திறக்கப்பட்டு தினக்கூலிகளின் இரவுப்பொழுதைப் பயனுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் போக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நடத்தப்படும் இரவுப்பள்ளி சிறப்புடன் செயல்படும் விதத்தினையும், அதில் பணிபுரிந்த வேலுவுக்கு அரசுப்பணி கிடைத்ததையும் நாவல் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

சாதாரண மனிதர்களைப் பீடித்து அழிக்கும் கள்ளச் சாராய விற்பனையும், அதன்மூலம் சீரழியும் பல்வேறு குடும்பங்களையும் நாவலில் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர்.  காவலர்களின் ஒழுக்கக்கேடும், அவர்கள் தங்கள் பணியைச் செய்வதில் காட்டும் தொய்வும் கூட சாதாரண மனிதர்களை எந்த அளவு பாதிக்கின்றன என்பதையும் காட்டியுள்ளார். நகரமயமாதல் சூழலில் நடக்கும் அசாதாரண வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் சிதையும் குடும்ப அமைப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபமும், இயலாமையும், காமமும், தனிமையும், அரசியலும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு இட்டுச்செல்லும் என்பதனை ‘கறுப்பர் நகரம்‘ நாவல் மூலம் கட்டியமைத்துள்ளார் கரன் கார்க்கி. இந்நாவல் சென்னையின் அசுர வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் வரலாற்றுச் சரித்திரம் என்பதில் ஐயமில்லை.

- முனைவர் பி.ஜோன்சன் -

– முனைவர் பி.ஜோன்சன் –

johnsonn1988@gmail.com