கலைஞர் இரகுநாதனுக்கு இதய அஞ்சலி ! என்னை வாழ்த்திய எந்தன் இரகு, இன்று நினைவாகிப்போனார்!

“ சிறு நண்டு மணல்மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை அலை வந்து
அதுகொண்டு போகும்….”

கவிஞர் அம்பிகடல் ஓரத்திலே கடற்கரை மணலிலே படம் வரையும் சிறு நண்டுகளின் அற்புதமான கற்பனைப் படங்களை, கடற்கரையின் குளிர் காற்றை அனுபவிக்கச் சென்றவர் பலரும் பார்த்து மகிழ்ந்திருப்பர். அந்தப் படம் வரையும் சிறு சிறு நண்டுகள் தமது உள்ளத்து எண்ணங்களை ஓவியமாக மணலிலே அழகாக வரைகின்றன. ஆனால் சில வேளைகளில்…….!? கடல் அலைகள் பெருமூச்சுடன் கரையில் வந்து மோதி, சிறு நண்டுகளின் மாதிரிப் படங்களை மட்டும் அல்ல, அந்த நண்டுகளையுமே அடித்துச் சென்றுவிடும். இதை தமது கவித்திறனால் அன்று தமிழ் செய்தவர் அன்று வாழ்ந்த கவிஞர் (இன்று அமரர்) மஹாகவி உருத்திரமூர்த்தி. அவரின் பாடலடிகளை நான் ஏன் தற்போது நினைவுட்டுகிறேன் தெரியுமா.. ? ஆமாம்…. முன்பு, ஈழத்திரு நாட்டில் வாழ்ந்து பின்பு பிரான்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எனது நீண்ட கால நண்பரும் கலை ஆசனுமாகிய இரகுநாதனுக்கும் அப்பாடல் அடிகள் மிகவும் பொருத்தமாக உள்ளன.

ஓர்கால் நான் அரசியலில் ஊன்றி நின்ற காலம். 1950 களில் சிறுகதை எழுதுவதுடன் எழுத்துலகில் அடி எடுத்து வைத்த நான், பின்பு விஞ்ஞானக் கட்டுரை, கவிதை என விரிவாக்கம் செய்து, ஈழத்து பேனா மன்னன் எனவும் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களால் விதந்துரைக்கப்பட்டேன். அதுமட்டுமல்ல. 1968 ஆம் ஆண்டு, புகாரில் ஒரு நாள் என்ற நான் எழுதிய கவிதைக்கு தமிழ்நாட்டிலே அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியில் இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கையால் தங்கப் பதக்கம் பரிசும் பெற்றேன். அப்போதுதான், அன்பர் இரகுவுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. நிழல் நாடக மன்றத்தின் ஸ்தாபகராகிய அவர், கவிதை நாடகம் ஒன்றை மேடையேற்றுதற்கு என்னிடம் வந்தார். அத்தொடர்பால் “வேதாளம் சொன்ன கதை” என்ற எனது கவிதை நாடகத்தின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். நிழல் நாடக மன்றம் அதனைத்தயாரித்து 1970 இல் மேடையேற்றியது. நானும் நாடகத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். பின்னாளில் அவர் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற திரைப்படத்தை எடுத்தபோதும் என்னிடமிருந்தும் ஒரு பாடலைப் பெற்றுக்கொண்டார். காலத்தின் கோலத்தில், வீடு, ஊர், சொந்தம், சுற்றம், உறவு, விளைநிலம் எல்லாம் விட்டு ஏதிலிகளாக, புலம் பெயர்ந்த அவர், பிரான்ஸ் நாட்டிலே தஞ்சம் புகுந்தார். நான் அவுஸ்திரேலியாவின் கரையேறினேன். அதேசமயம் எமது உறவு நீடித்து நிலைத்தது. அவர் புகலிடத்திலும் தன் கலைப் பணிகளைத் தொடர்ந்தார். காலஞ் சுழன்றது காட்சிகள் மாறின.

கடந்த 2019 ஆம் ஆண்டு நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் எனது நேசர்கள் எனது 90 ஆவது அகவையை பெருவிழாவாகக் கொண்டாடியபோது கவிஞர் அம்பி அகவை 90 மலரும் வெளியிட்டனர். அன்பர்கள் அதற்கு அனுப்பிய கட்டுரைகள் பல கதைகளைச் சொல்கிறது. நண்பர் ரகுநாதனும் அதில் எழுதியிருக்கிறார். இதனை அவர் எழுதி அனுப்பும்போது அவருக்கு 84 வயது. எனினும் அவரது நினைவாற்றலைப்பாருங்கள். இப்போது அவர் எனது நினைவாகிப்போனார். படித்துப் பாருங்கள்.

அண்மையில் மறைந்த கலைஞர் அமரர் ரகுநாதன்

என் அம்பித் தம்பிக்கு அகவை 90 வாழ்த்துகள் – அ. இரகுநாதன், ”தமிழாள் கூத்தவை”

வேதாளம் சொன்ன அம்பி 1970 களின் ஆரம்ப காலம். வானொலி மாமா அரச பாடநூல் பதிப்பகப் பொறுப்பாளர், கவிஞர், பேராசிரியர், மற்றும் பற்பல) அம்பி அவர்களுடன் பேசும், பழகும் வாய்ப்புகள் 25, பசஸ் லேன் கொழும்பில் வசித்த எனக்கும், மனிங் பிளேசில் வசித்த அம்பிக்கும் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள் என நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்தது. கவிஞர் மகாகவி எழுதிய “கோடை” நாடகம் ஈழத்தின் முப்பெரும் நாடக இயக்குநர்கள் என, அக்காலத்தில் பாராட்டப் பெற்ற தாசீசியஸ் – சுஹேர் ஹமீட் – சுந்தரலிங்கம் மூவரில் ஒருவராகிய தாசீசியசின் நெறியாள்கையில் அரங்கேறியது. “கோடை” கவிதை நாடகம் பார்த்துப் பரவசமாகிய நாள் முதல் அதைப் பற்றியே பேசி, நாங்களும் ஒரு நாடகம் அப்படிச் செய்ய வேண்டும் என்று, பெரும்பான்மையான என் நாடங்களை நெறிப்படுத்திய சுஹேர் ஹமீட்டும் நானும் எண்ணினோம்.

என் மனைவி ஊருக்குச் சென்ற சமயம் என் வீட்டில் யாழ்ப்பாணக் கூழ் காய்ச்சி சாப்பிடத் திட்டமிட்டோம். கூழ் காய்ச்சுவதில் அனுபவம் வாய்ந்த நான்தான் சமையல்காரன். அடுப்பில் கூழ் கொதித்துக்கொண்டிருந்தது. நாடகத்தை யார் எழுதுவது? என்று கேள்வி வந்தது. அம்பி இதைச் செய்தால் என்ன என்று ஒருவர் முன் மொழிய, சுஹேர் ஹமீட் வழிமொழிய, தயாரிப்பாளரான நான் பெரு மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன். அந்தக் கூழ் குடித்த களிப்புடன், குஷியில், உற்சாகமாக வீடு திரும்பிய அம்பி, தன் மனைவியிடம் என் கூழின் பெருமையைப் புலம்ப, அவர் வாய் சிலம்பாடியது. அது ஒரு தனிக் கதை.

அடிக்கடி சந்தித்தோம். வேதாளம் சொன்ன கதை என்ற கவிதை நாடகப் பிரதி தயாராகியது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அரங்கேற்றம். ஈழத்தைச் சேர்ந்த பல பகுதி நடிகர்களை ஒன்றிணைத்து, குறிப்பாக யாழ்ப்பாணம் பிரான்ஸிஸ் ஜனம் வேதாளமாக, மக்கள் குரல் புனிதலிங்கம் விக்கிரமாதித்தனாக, முனிவராகவும் புலவராகவும் இரட்டை வேடத்தில் நான், பெண் பேயாக ஈழத்தின் மாபெரும் கலைஞராகிய லடீஸ் வீரமணியும், இளவரசனாக கே. ஏ. ஜவாகரும், ஏழைப் பிராமணனாக கண்டி விஸ்வநாதராஜாவும், இளவரசியாக செல்வி ஜெயந்தியும், பிராமணப் பையனாக ஜெயதேவனும் நடிக்க – ஈழத்தின் மிகப் பெரும் இசை வல்லுனர்களில் ஒருவராகிய திலகநாயகம் போல் இசையமைக்க, ஒப்பனைக்கு சுப்புவும் ஒன்று சேர்ந்து அந்த நாடகத்தை அரங்கேற்றினோம்.

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கண்டி, மாத்தளை, கொழும்பு என பல நகரங்களிலும் அரங்கேற்றப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்ற இந்த நாடகம் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் அரங்கேறிய போது “கோடை” நாடகத்தை எழுதிய மஹாகவி உருத்திரமூர்த்தியும் வந்திருந்தார். வாசலில் எங்களுக்காகக் காத்திருந்த உருத்திரமூர்த்தி என் கைகளைப் பற்றியபடியே, “ ரகு! என்னுடைய நாடகமொன்றையும் நீங்கள் அரங்கேற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து போன நான் அவர் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன். என் துரதிஸ்டம், அடுத்த வாரம் மஹாகவி இதய நோயினால் காலமாகிவிட்டார். அமரராகிவிட்ட அப்பெரும் கலைஞருக்காக மனம் வேதனையில் நெகிழ்ந்தாலும், அந்த மஹாகவி எங்களுக்குத் தந்த பாராட்டுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. அந்த நாடகத்தைப் பின்னர் வானொலியிலும் ஒலிபரப்பினோம். அதைத் தொடர்ந்து புலவர் தட்சணாமூர்த்தியின் சம்பூர்ண ராமாயணம் நாடகத்தை ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பெயரில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரங்கேற்றினோம்.

பெரும் காப்பியமான கம்பராமாயணத்தைக் குறுகத் தொகுப்பதற்காக தங்கச் சங்கிலி போல் அறுபது பாடல்களாக அமைத்திருந்தோம். அந்தப் பாடல்களை எழுதுவதற்கு நானும் அம்பியும் சுஹேர் ஹமீட்டும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சரக்கு வண்டியில் (குட்ஸ் றெயின்) ஏறி யாழ்ப்பாணம் நோக்கிப் போவதாகத் திட்டம். அதிகாலையில் எழுந்து பழக்கமில்லாத சுஹேர் ஹமீட் நேரத்துக்கு வரத் தவறிவிட்டார். நானும் அம்பியும் வண்டியில் ஏறிக்கொண்டோம். பாடல் வரும் இடத்தை நான் வாசிக்க அம்பி பாடல் எழுத ஆரம்பித்தார். உலகத்தில் எவருக்குமே இல்லாத பாக்கியம் எனக்கு உண்டு. இரண்டு நிமிட நேரத்திலேயே எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் உடனே நித்திரையாகிவிடுவேன். அப்படியே பாடலும், நித்திரையும் கவிதையும் அறுபது எண்களைத் தொட்டுவிட அநுராதபுரம் வந்துவிட்டது.

பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாற்றம். வவுனியா மகா வித்தியாலயத்தில் பணியில் இருந்த இசைக்கலைஞர் திலகநாயகம் போலிடம் அந்தக் கவிதைகளைக் கொடுத்துவிட்டு, நான் கொழும்புக்குத் திரும்புவதாகவும். அம்பி யாழ்ப்பாணத்துக்குப் போவதாகவும் திட்டம். அப்படியே நடைபெற நான் கொழும்பு திரும்பும் வண்டியில் ஏறிக்கொண்டேன்.

அம்பியின் கவித்துவத்தையும், செழுமையையும், புலமையையும் அவர் பேனாவின் புனிதத்தையும் எண்ணி பிரமித்தபடியே அவர் வேதாளம் சொன்ன கதையில் எழுதிய நெஞ்சை உருக்கும் ஒரு கவிதைநடை வசனத்தைச் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

“ ஏழைப்பிராமணத்தி: “ கைக்குழந்தை பாலன் கசக்கிப் பிழிந்து எடுத்தும், நக்கி உறிஞ்சியும், நா வரண்டும், ஓர் தனத்தில் கூட ஒரு துளியும் ஊறவில்லை”

பிற்பாடு, ரகுபதி ராகவ ராஜாராம் நாடகத்தில் குத்துவிளக்கு ஆனந்தன் ராமராக, நான் ராவணனாக, இமானுவல் பெஞ்சமின் கும்பகர்ணனாக, கே. எஸ். பாலச்சந்திரன் பரதனாக – தர்மலிங்கம் மாஸ்டர் விபீஷணனாக, தம்பிராசா மாஸ்டர் அனுமாராக, லடீஸ் வீரமணி தசரதனாக, பிரான்சிஸ் ஜனம் கைகேயியாக ஈழத்தில் மிகச்சிறந்த நடிகர்கள் இணைந்து நடித்தார்கள்.

1977 – அட்டன் பொன்னுச்சாமி தயாரிப்பில் ஈழத்தில் தயாராகிய ஒரே ஒரு தமிழ் சினிமாஸ்கோப் படம் “தெய்வம் தந்த வீடு” என்ற பெயரில் படமாகியது. எம்.ஏ. கபூர் ஒளிப்பதிவு செய்து அபிமான் எடிட்டிங் செய்ய ஈழத்தின் இசைவல்லூனர்களாகிய யாழ்ப்பாணத்து கண்ணன், நேசன், கொழும்பு ரொக்சாமி இணைந்து இசையமைத்த பாடலுக்கும் அம்பி எழுதிய பாடல் பதிவாகியது. ”மணமேடையில் ஒரு நாடகம் உருவானதே அரங்கேறுமா வாழ்விலே” என்று கலாவதி சின்னச்சாமி பாடிய இந்தப்பாடல் அருமையாக அமைந்திருந்தது. இப்படிப் பலப்பல பள, பழ.

அமைதியான பேச்சு, சிரித்த முகம், அறிவியல் சார்ந்த வார்த்தைகள், யாருடனும் நேசமாகவும், அன்பாகவும், பண்பாகவும் நடந்துகொள்ளும் அம்பி , ஒரு சிறந்த கவிஞர் – சிறந்த மனிதர் -சிறந்த பேராசிரியர் – சிறந்த பண்பாளர். இன்னும் அந்தச் சிரித்த முகம் கண் முன் தெரிகிறது. நீண்ட இடைவெளி. எட்டு வருடங்களுக்கு முன் ஈழன் இளங்கோவின் ”இனியவளே காத்திருப்பேன்” படத்துக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த போது என் அன்பு நண்பர் நடாவின் மூத்த மகன் கருணாவின் உதவியுடன் மீண்டும் அம்பியைச் சந்தித்தேன். அவரை நடக்கமுடியாத கோலத்தில் பார்த்தேன்.

பார்த்தோம் – மகிழ்ந்தோம் – பேசினோம் – இரைமீட்டோம் – சிறிது நேரம் பார்த்து பேசாமலும் இருந்தோம். இன்று அவருக்கு 90 வயது. அவரை வாழ்த்தி எழுத என் கைகளால் முடியவில்லை. என் மனைவி சந்திராதேவி துணைகொண்டுதான் இதை எழுதுகின்றேன். நான் கணிதத்தில் கொஞ்சம் சக்கட்டை. நான் 1935ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி மலேசியாவில் பிறந்தவன். எனக்கு இப்போ வயது 84. “நான் உயிருடன் இருந்தால் என் அன்புக் கவிஞர், நண்பர், பேராசிரியர் அம்பிகைபாகன் அவர்களின் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொண்டு அவரின் சிறப்புகளைப் பேசுவேன்” என்று உங்கள் முன் உறுதி எடுத்துக்கொண்டு “வாழ்க அம்பி” என்று நெஞ்சார வாழ்த்தி அவரை வணங்குகிறேன்.

வாழ்க வளமுடன்
என்றும் அன்பன்
கலை ஆர்வலன் அப்புத்துரை இரகுநாதன்

 

* பதிவுகளுக்கு அனுப்பியவர்: எழுத்தாளர் முருகபூபதி