கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!

கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!கலைஞர் கருணாநிதி  அவர்களின் மறைவுச்செய்தியினை முகநூல் நண்பர்களின் பதிவுகளின் மூலமே முதலில் அறிந்துகொண்டேன். கலைஞர் தமிழக , இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல்வாதி. தமிழ்க் கலை, இலக்கிய உலகிலும் தவிர்க்க முடியாதவர்களிலொருவர்தான்.  அவரது கலை, இலக்கிய உலகத்துப் பங்களிப்பின் மூலம்தான் அவரைப்பற்றி முதலில் அறிந்துகொண்டேன். அவற்றின் மூலமே திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசியலில் வலுவாகக் காலூன்றியது. வெற்றியையும் அடைந்தது.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் எப்பொழுதுமே மனிதர் ஒருவருக்கும் இரு பக்கங்கள் இருக்கும். நேர்மறையான , எதிர்மறையான பக்கங்களிலிருக்கும். கலைஞரும் விதிவிலக்கானவர் அல்லர். ஜெயலலிதா என்றால் பெண் குழந்தைகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘தொட்டில் சிசு’த்திட்டம் நினைவுக்கு வருவதைப்போல், எம்ஜிஆர் என்றால் ‘சத்துணவுத்திட்டம்’ நினைவுக்கு வருவதைப்போல், கலைஞர் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது ‘சமத்துவப்புர’த்திட்டம். சாதிப்பிரிவுகளற்று அனைவரும் வாழும் குடியேற்றத்திட்டம் அது. சாதிப்பிரிவுகளால் பிளவுண்டிருக்குமொரு சமுதாயத்தில் மிகவும் முக்கியமானதொரு திட்டமாக அதனை நான் கருதுகின்றேன்.

கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் இவரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும் ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. அண்ணாவின் வசனங்கள் மாற்றியமைத்தன. சமுதாயத்தில் நிலவிய சீரழிவுகளுக்கெதிராக, மூட நம்பிக்கைகளுக்கெதிராக அடுக்குமொழிகளில் எழுதப்பட்ட கனல் பறக்கும் வசனங்களை , தர்க்கரீதியிலான வசனங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.  கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

கலைஞரின் குறளோவியம், சங்கத்தமிழ் போன்ற தொகுதிகள் முக்கியமானவை.

என்னைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றிய முதன் முதலில் அறிந்துகொண்டது 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்த் மகாநாட்டு மலர் மூலமேதான். அப்பா திமுகவினர் மேல் மதிப்பு மைத்திருப்பவர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர் மீது மதிப்பு வைத்திருந்தவர். அதன் காரணமாகவே அம்மாநாட்டு மலரையும் வாங்கியிருந்தார். மிகவும் சிறப்பாக வடிவமைக்கட்டிருந்த மலர் அது. இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மலர்களில் மிகவும் சிறப்பான மலராக அம்மலரே கணிப்பிடப்படும் என்று கருதுகின்றேன். அம்மலரில் கலைஞரின் ‘பூம்புகார்’ நாடகமிருந்தது. அதன் மூலமே அவரைப்பற்றி முதலில் அறிந்து கொண்டதாக நினைவு. அதன் பின் அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து அவர் பாடிய இரங்கற்பா மூலம் என்னை அவர் மீண்டும் கவனிக்க வைத்தார். கேட்பவர் நெஞ்சங்களை உருக்கும் இரங்கற்பா அது. அவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரங்கற்பாவாக அவ்விரங்கற்பா அமைந்து விட்டது.

அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது குமுதம் சஞ்சிகையில் ஆரம்பமான அவரது ‘ரோமாபுரிப்பாண்டியன்’ தொடர் நாவல். வரலாற்று நாவல். அத்தொடரை அக்காலகட்டத்தில் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் வெளியான ஆரம்ப அத்தியாயங்கள் என்னை அவ்வயதில் கவர்ந்தன. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான தொடர் அது. அக்காலகட்டத்தில் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான அவரது நாவலான ‘வெள்ளிக்கிழமை’யும் என் கவனத்தைச் சற்றே அவர்பால் ஈர்த்த படைப்புகளிலொன்றே.

அவரது கலை, இலக்கியப்படைப்புகளுடன் அவர் என்னை இன்னுமொரு விடயத்துக்காகவும் ஈர்த்தார். அவரது அந்தக் குரலும், அழகான உருவமும்தாம் அவை. மீசையும், புன்னகையும் நிறைந்த அம்முகம் மக்களைக் காந்தம் போல் வசீகரிக்கும் வல்லமை பெற்றிருந்தது. அவரது அரசியல் வெற்றிக்கு அவ்வசீகர முகமும் ஒரு காரணம்.

கலைஞர்மேல் ஈழத்தமிழர்கள் பலருக்கு இறுதி யுத்தக்காலச் செயற்பாடுகளுக்காக மனத்தாங்கலுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் .. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. கலைஞர் தன் சக்திக்குகந்த அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

இப்போதும் கலைஞர் தமிழக மக்களின் ஆதரவுமிக்க முக்கியமான தலைவர். அவர் தன் இறுதி யாத்திரைக்காகப் படுத்துக்கிடக்கும் இந்நிலையில் அவர் மேல் கீழ்த்தரமாக வசை பாடுவதன் மூலம் மீண்டும் இலங்கைத்தமிழர்களில் சிலர் தவறு செய்கின்றார்கள். அதனால் மீண்டும் தமிழக மக்களுக்கும் , இலங்கைத் தமிழர்களுக்குமிடையில் பலமாகத் தொடர வேண்டிய உறவினைச் சீர்குலைக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் அவரை எதிர்ப்பவர்கள் எதையாவது கூறிச் செல்லட்டும். அது அவர்களது உள் வீட்டுப் பிரச்சினை. அது அவர்களது அரசியல்.

கலைஞரைப்பொறுத்தவரையில் அவரது குறை, நிறைகளுடன் அவரது வரலாற்றுப் பங்களிப்புகளுக்காக எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். என்னைப்பொறுத்தவரையில் திமுகவின் ஆரம்பகால வரலாற்றுக்காலகட்டத்தில் அவரது பங்களிப்பு, தமிழ்ச்சினிமாவின் வசனங்கள் கோலோச்சிய காலகட்டப்பங்களிப்பு, கலை, இலக்கியங்கள் மூலம் சமூகத்தில் நிலவிய சமூகச்சீர்கேடுகள், மத ஆதிக்கம் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கெதிராகக் குரலெழுப்பிய மற்றும் சுவையான மொழியில் பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மக்கள் மத்தியிலும் எடுத்துச்சென்றஅவரது எழுத்துப் பங்களிப்பு இவற்றை யாராலும் மறைத்துவிட முடியாது. தமிழ் மக்கள் எப்பொழுதும் இவற்றுக்காக அவரை நினைவு கூர்வார்கள்.

இந்திய வெளியுறவுக் கொள்கையைப்பொறுத்த அளவில் அதிகாரமற்ற மாநில அரசொன்றின் முதல்வரான அவரை இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளுக்காகக் குற்றஞ்சாட்டுவது கேலிக்குரியது. அவர் தன்னால் முடிந்ததைச்செய்தார். அவற்றைக் கேலி செய்வது சரியான செயற்பாடல்ல.

உண்மையில் ஈழத்தமிழர்களின் இறுதியுத்த முடிவுகளுக்குக் குற்றஞ்சாட்டப்பட வேண்டியது இந்திய மத்திய அரசையே தவிர கலைஞரின் அன்றைய தமிழக அரசை அல்ல.


கலைஞரின் வசனங்கள்:

ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த ராஜாராணி திரைப்படத்தில் சோக்கிரடிசாக நடித்திருக்கும் நடிகர் திலகம் பேசும் கலைஞரின் வசனங்கள்:

“உன்னையே நீ அறிவாய்! உன்னையே நீ அறிவாய்! கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல. அதற்காக இங்கே விழுந்திருக்கும் தீரர்களை வளைத்திட முயல்வது புண்ணுக்குப் புனுகு தடவுவது வேலையைப் போன்றது. அதனால்தான் தோழர்களே! சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள்  சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கின்றேன். அறிவு அகிலத்தின் எந்த மூலையிலிருந்தாலும் அதைத்தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கின்றேன். உன்னையே நீ அறிவாய். இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதற்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கின்றேன்.

ஏற்றமிகு ஏதென்சு நகரத்து எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் கமழ்விக்க இதோ சாக்கிரடீஸ் அழைக்கின்றேன். ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது. விவேகம் துணைக்கு வராவிட்டால்,.  நீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே! இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி!”

அறிஞர் அண்ணாவின் மறைவையடுத்துக் கலைஞர் ஆற்றிய இரங்கற்பாவில் வரும் மூன்றெழுத்து பற்றிய வரிகள் என்னைக் கவர்ந்தவை:

“மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு-அதில்
முத்தமிழ் மணமுண்டு
மூவேந்தர்,முக்கொடி,முக்கனி-என
மும்முரசு ஆர்த்தவர் தமிழர்
அவர் வாழ்ந்த -தமிழ்
வாழ்வுக்கு மூன்றெழுத்து-அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம்
அன்புக்கு மூன்றெழுத்து-அந்த
அன்புக்கு துணைநிற்கும்
அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையில் எழும்
காதலுக்கு மூன்றெழுத்து
காதலர்கள் போற்றி நின்ற கடும்
வீரமோ மூன்றெழுத்து
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து
களம் சென்று காண்கின்ற
வெற்றிக்கு மூன்றெழுத்து-வெற்றிக்கு
ஊக்குவின்ற அமைதிமிகு
அண்ணா மூன்றெழுத்து “

இத்தருணத்தில் மேலும் சில அவரது வசனங்கள் சிலவற்றை நினைவு கூர்கின்றேன்:

“வீரன் சாவதே இல்லை….கோழை வாழ்வதே இல்லை”

“மனச்சாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!”

” தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்”

“வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்”

பராசக்தி திரைப்பட வசனங்கள் அப்படத்தில் குணசேகரனாக நடித்த நடிகர் திலகத்தின் வெற்றிக்கும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தன:

குணசேகரன்: “இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக. உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன். காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.

கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது? பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?”

அரசு வக்கீல்: “குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்”

குணசேகரன்: “யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்”

*******************************

மனோகரா திரைப்பட வசனங்கள். இதிலும் மனோகரனாக நடிகர் திலகமே நடித்திருப்பார் :

“அமைதியாகத்தான் வருகிறான் மனோகரன்..எரிமலை குமறுவதற்கு முன் எச்சரிக்கை தருவதில்லை”

“அழைத்து வரவில்லை. இழுத்துவரச் செய்தீர்கள்.”

” குற்றம் என செய்தேன் கொற்றவனே குற்றம் என்ன செய்தேன்?”

” பொறுத்தது போதும் மனோகரா! பொங்கியெழு!

**********

பூம்புகார் திரைப்பட வசனங்கள்:

“கண்ணகி..கையில் தனிச் சிலம்புடன் வந்திருக்கும் கண்ணகி”

“எதற்குப் பெயர் நீதி? நல்லான் வகுத்ததா நீதி? அல்ல அல்ல வல்லான் வகுத்ததே இங்கு நீதி!”

” ஆனை தேனை ஆயிரம் எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து தலைகுனியாமல் வழி நடத்தும் உனது வீரம் எங்கே? கம்பீரம் எங்கே?  வெற்றித் திருப்பார்வை எங்கே? எங்கே? எங்கே”

” மன்னா!! மாசுபடரவும் மானிலம் நிகழ்வும் நீதி வழங்கிய உனக்கு செங்கோல் எதற்காக?”

” மாபாதகம் புரிந்த உனக்கு மணிமுடி எதற்காக? வேந்தர் குலத்திற்கு இழிவு கற்பிக்க வந்த உனக்கு வெண்கொற்றக் கொடை எதற்காக?”

” என் நெஞ்சில் நீண்ட நெருப்பெ நீதி தவறிய மதுரையை எரித்துவிடு”


ngiri2704@rogers.com