கவிக்கோ அப்துல்ரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற 26 & 27 ஆம் தேதிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க
நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அரசியல், இலக்கியம், சினிமா, கலை, இசை, சமயம், இயல், பத்திரிக்கை & ஊடகம் என அனைத்து துறைகளையும் சார்ந்த தலைவர்கள், பிரபலங்கள், படைப்பாளிகள், கலைஞர்கள். அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குனர்கள், திரைத்துறை படைபாளிகள் மற்றும் கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாசிரியர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், பிரபலங்கள் (இலங்கை முதல் அமெரிக்கவரை , மஸ்கட்டிலிருந்து நான்) என அனைவரும் ஓரு குடையின்கீழ் வந்து பங்கேற்று சிறப்பித்த நிகழ்வு என அனைவரும் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.
மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து மதங்களின் பிரபலங்கள் ஆகியோரை ஒரேமடையில் அடுத்தடுத்து அமரவைக்க முடியும் என்கிற கற்பனைகெட்டாத சாதனையை நமது ‘தமிழ்’ அதாவது கவிக்கோ எனும் ‘கவிதைத் தமிழ்’ சாதித்திருக்கிறது.
கலைஞர், வீரமணி, வைகோ, தமிழிசை, காதர்முகைதீன், திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், நல்லகண்ணு, பழகருப்பையா, டி.கே.ரங்கராஜன் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வந்து கலந்து சிறப்பித்த காட்சி உண்மையில் ஒரு அதிசயமும், அற்புதம் தான். அதேபோல் சுகி.சிவம், பாலமுருகனடிமை சுவாமிகள், கஸ்பர், தேங்கை ஷர்புதீன் என மும்மதத்தைச் சார்ந்த மதப்பெரியவர்களும் மேடைய அலங்கரித்து கவிக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மற்றொரு அருமையான பதிவு,
கவிக்கோ கருவூலம் நூலை கலைஞர் வெளியிட்டு வாழ்த்திப்பேசி கவிக்கோவின் பெருமைகளையும், எளிய பண்பினையும், அவருடன் கலைக்னரின் நட்பினையும் பாராட்டினார், கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோவின் கவி ஆளுமை மற்றும் திறன் பற்றிய உள்ளார்ந்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.உலகம் பாராட்டும் அமர்வில் நான் கவிக்கோவின் சிறப்புகள் பற்றிப் பேசி ஒரு கவிதையும் வாசித்தேன். என்னுடன், சிங்கப்பூர், மலேசியா, பங்காக், அமெரிக்கா, இலங்கை, துபாய், சவூதி அரேபியா எனப் பன்னாட்டு தலைவர்களும் பேசினர். முன்னதாக மலேசியா மற்றும் இலங்கை அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
ஒரு தமிழ்க்கவியால் அனைத்து தமிழர்களையும் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைக்க முடியும் என்கிற மாபெரும் சக்தி தமிழுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகும் எனச் சொல்வேன். என்னைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு எனக்கு கிடைத்த ஒரு ‘விருது’ ஆகும்’. வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் ! இன்னும் பதிவு செய்கிறேன் நிகழ்ச்சி பற்றி!
அனுப்பியவர்: muduvaihidayath@gmail.com