காலம் கழியும் வேகத்தில் நாம் பலவற்றையும் இலகுவில் மறந்து கடந்துசென்று விடுகின்றோம். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு பொறி முன்னர் கவனிக்காது கடந்துசென்றுவிட்ட ஒரு தனி மனிதஉறவை மீண்டும் எம்மனதில்; நினைவுத்தட்டின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்து விடுகின்றது.
என்னுள் முகிழ்ந்த கவிஞர் ‘பாவலவன்” பா.சத்தியசீலனின் நினைவும் அவ்வாறானதே. அண்மையில் லண்டனில் ‘புத்தகப்பிரியர்” ஒருவரின் வீட்டு புத்தக அலுமாரியைக் குடைந்துகொண்டிருந்தேன். அதில் இருந்த தடித்த தமிழ் நூலொன்றை எடுத்து விரித்தபோது அதனுள் சிக்கியிருந்த மிகப்பழைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதமொன்று பொத்தென நிலத்தில் வீழ்ந்தது. வாழ்த்து மட்டையின் தடிப்பு அதனை விரிக்கத் தூண்டியது. அது ஒரு கையடக்கக் கவிதை நூல். அதன் தலைப்பு ‘நத்தார் வாழ்த்து”. அந்தச் சிறிய பிரசுரம் பா.சத்தியசீலனின் சிறிய கவிதைநூல். முன்னாளில் ‘மில்க்வைற்” கனகராசா அவர்கள் ஏராளமான இலவசப் பிரசுரங்களை அமரர் க.சி.குலரத்தினம் அவர்களின் துணையோடு மில்க்வைற் விளம்பரங்களாக வெளியிட்டு விநியோகித்ததை எம்மால் மறக்கமுடியாது. பாவலவன் சத்தியசீலனின் ‘நத்தார் வாழ்த்து”க் கவிதையும் அப்படியாதொரு சிறு கவிதைநூல் தான். நத்தார் வாழ்த்துக் கவிதையை வாழ்த்து அட்டைபோன்று வடிவமைத்து சிறு பிரசுரமாக அந்நாட்களில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறு பிரசுரமே இலக்கிய நண்பர் பா.சத்தியசீலன் பற்றிய மனப்பதிவுகளை இன்று இரைமீட்க வைத்துள்ளது.
பா.சத்தியசீலன் தனது நத்தார் வாழ்த்து கவிதைப் பிரசுரத்துடன் 1970களின் இறுதிக்கட்டத்தில் ஒருநாள் என்னை வந்து புங்குடுதீவு சர்வோதய நூலகத்தில் சந்தித்தார். வெறும் அட்டைவழி வாழ்த்து மரபை உடைத்து இப்படியான தூய தமிழ் வாழ்த்து நூல்களை வாங்கி எமது சமூகம் பரிமாறிக்கொண்டால் என்ன என்ற பெரிய புரட்சிகரமான சிந்தனையுடன் தான் அவர் அன்று என்னை அணுகியிருந்தார். அவரது கைகளில் அவர் எழுதிய மேலும் பல நூல்கள். அனைத்தும் சிறு பக்க எணணிக்கையுடன் கூடியவை. அதனைத் தொடர்ந்து பொங்கல் வாழ்த்தையும் இவ்வாறு வெளியிட அவர் முனைந்ததாக எனக்குள் ஒரு நினைவு.
பா.சத்தியசீலனின் பூர்வீகம் அல்லைப்பிட்டி. யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தின் நுழைவாயில் கிராமம் அது. அவர் மணம்புரிந்தது நவாலியில். ‘கலைவண்ணம்” என்பது அவரது நவாலி இல்லத்தின் பெயர். மானிப்பாய், நவாலி தெற்கில் சின்னப்பா வீதியில் அவரது புகுந்த வீடு அமைந்திருந்ததாக நினைவு. நான் ஆனைக்கோட்டை- அயல் கிராமத்தைத் தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்டதாலும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அடிக்கடி நவாலியூடாகப் பயணிப்பதாலும் 70களின் இறுதிப்பகுதியில் சத்தியசீலன் எனக்குப் பரிச்சயமான ஒரு இலக்கியவாதியாக மாறிவிட்டார்.
அல்லைப்பிட்டியில் பாவிலுப்பிள்ளை-விக்ரோரியா தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் சத்தியசீலன் (15.6.1938-30.6.2001). கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியரான சத்தியசீலன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (டீ.யு ர்ழளெ) மேற்கொண்டவர். கவிஞர், பண்டிதர் பட்டங்களைப் பெற்ற இவருக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் வழங்கிய ‘பாவலவன்” என்ற சிறப்புப் பட்டமே அவரது புனைபெயருமாயிற்று. 21.8.1970இல் நவாலியூர் நல்லையா-தங்கம்மா தம்பதியினரின் மகளான கலாதேவியை திருமணம் செய்திருந்த பா.சத்தியசீலனுக்கு அமிழ்தினி, மேரி மகிழ்மலர், அன்ரன் அருள்வண்ணன், அமிர்தவர்ஷினி என நான்கு பிள்ளைகள் உள்ளனர். தொழில்ரீதியாக ஆசிரியராகப் பணியாற்றிய போதிலும் பா.சத்தியசீலன் ஒரு குழந்தைக் கவிஞராகவே எம் மனதில் இடம்கொண்டுள்ளார்.
புதிய கருத்துக்களை குழந்தைகளிடையே விதைப்பதையும், பதிப்புத் துறையில் புதுப் பக்கங்களையும் புரட்டிப் பார்ப்பதிலும்; அலாதியான ஆர்வம் மிக்கவரான சத்தியசீலன் எனக்கு சமகாலத்தில் இயங்கிய பிற குழந்தைக் கவிஞர்களிடமிருந்து வித்தியாசமான ஒருவராகத் தோற்;றினார். அவரது பாரிய குறைபாடு அவரது பெரும்பாலான நூல்கள் பக்க எண்ணிக்கையில் சிறியவையாக 8 இலிருந்து 32 பக்கங்களுக்குள் அடங்கிவிடக்கூடியவையாக இருந்தமையாகும்.
இலங்கையில் ஒரு சராசரி நூலகம் 25 பக்கங்களுக்குட்பட்ட நூல்களை (Pயஅphடநவள) சிறுபிரசுரங்களாகக் கருதி நூலகத் தட்டுகளில் வைக்கவிரும்புவதில்லை என்ற இரகசியத்தை அவரிடம் பல தடவைகளில் எடுத்துரைத்தாலும் ஒரு ஆசிரிய வெளியீட்டாளனாக அவர் இயங்கியமையால் பொருளாதார ரீதியில் பெரிய நூல்களை வெளியிடுவதில் அச்சம் கொண்டவராகத் தயங்கிவந்தார். சிறிய உள்@ர்ப் பதிப்பகங்களில் சிறிய முதலீட்டுடன் அவற்றை அச்சிட்டுப் பெற்றுக்கொண்டார். அதனாலோ என்னவோ இன்று அவரைப் பற்றிய செய்திகளைப்பெற இணையங்களைத் துழாவியபொழுது அவரது வரலாற்றைக் கூறும்வகையில் ஒரு கட்டுரைகூட இன்றளவில் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை.
என்னவொரு திறiயான கவிஞர்; அவர். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான விறுவிறுப்பான கவிதை இலக்கியங்களை ஆக்குவதில் சிறந்து விளங்கிய அவர், மேலைத்தேய பாணியில்; விடுகதைப் பாக்களையும் மிகுந்த ஓசை நயமும் நடிப்புணர்ச்சியும் கூடிய வகையில் சந்தப் பொலிவுடன் சரளமாக ஆக்கித்தந்தவர். இலங்கையின் கவியரங்குகளில் சொற்சிலம்பமாடுவதில் மகா சமத்தரான இவரது மேடைப்பாக்கள் வழியாக சபையினரின் கைதட்டுதலை அடிக்கடி பெறும் வண்ணப் பாக்கவிஞர் இவர். வானொலி, பத்திரிகை, பாவரங்குகள் என்பவற்றின் மூலம் ஈழத்து இலக்கியப் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்த இக்கவிஞரின் கைவண்ணத்தில் முகிழ்ந்து வானொலியில் ஒலிபரப்பாகிய பா நாடகங்களான இளங்கோத் துறவி, வள்ளுவம் ஆகிய இரண்டுடன், பாரதி விழாப் பாவரங்கில் பாடப்பட்ட கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ என்ற நெடுங்கவிதையும், மாதவி மகளின் காதல், இராவணன், விழி திறப்பு ஆகிய நெடுங்கவிதைகளும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ‘பா” என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதியிலிருந்து ஆசிரியர் த.பிரான்சிஸ் அவர்கள் மார்கழி 1968 இல் 116 பக்கங்களில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். (ஆர்வமுள்ளவர்கள் நூலகம் இணையத்தில் இந்நூலைத் தரவிரக்கி வாசிக்கலாம். பதிவிலக்கம் 31146).
ஆசிரியர் த.பிரான்சிஸ் அவர்கள் 1968களில் ‘அஞ்சற் புத்தக சேவை” என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் ஒரு வெளியீட்டு விநியோகத் திட்டத்தை பரீட்சார்த்தமாக நடத்தியவர். மாணவர்களுக்கான விஞ்ஞான, கணித நூல்களை யாழ். வஸ்தியான் அச்சகத்தினூடாகத் தயாரித்து தபால்மூலம் விநியோகித்து வந்த ஆசிரியர் த.பிரான்சிஸ் அவர்களது திட்டத்தின் படிமுறை வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பாடநூல்கள் அல்லாத பிற நூல்களையும் அச்சிட்டு விநியாகிக்கும் முயற்சி அமைந்திருந்தது. அவ்வகையில் முதலாவது கவிதை நூலாக பா.சத்தியசீலனின் ‘பா” என்ற நூல் அமைந்திருந்தது.
முதல் நூலிலேயே நன்றியுரையில் இவர் தன் வளர்ச்சிக்குப் பாத்திரமானவர்களைக் குறிப்பிட்டு கவிவரிகளால் நன்றி நவில்கிறார். நாவற்குழியூர் நடராசன், மஹாகவி உருத்திரமூர்த்தி, கவிஞர் நீர்வை முருகையன் ஆகியோரின் நினைவுகளைப் பின்வரும் வரிகளில் பதிவுசெய்கின்றார்.
கீழ்மாகா ணத்து விழாவொன்றிற் கண்டெடுத்து
ஈழத்து வானொலியில் இந்நாள் வரையெனது
நாவின் தமிழ்கள் ஒலிக்க-
பாவின் வகைகள் பலிக்க-
காலானவரே
பாவரங்கம் ஆளும் பதி, அப் பெருங்கவிஞன்
‘நாவற் குழியூர் நடராசன்” அன்னார்க்கு
நன்றிக் கடனுடையேன் நான்.
அந்நாளில் என்பா பலவற்றின் தந்தை இவர்.
இந்நாளில் நான்சுவைக்கும் ஒற்றைப் பெருங்கவிஞன்.
இன்றியலும் ஈழத்து எழுச்சிக் கவிதைக்கு
முன்னோடி யான முனைவன்; வலுப்பாய்ந்த
மின்போன்ற வீச்சு, மெழுகு மொழியாளன்
என்போல் இளைஞர்க்கு எதுகையாய் வாய்த்துள்ள
அன்னான் ‘மகாகவி” என் ஆக்கத்தின் அச்சுநிலை.
பேனாப் பிடித்த பெரிய ‘முருகையன்”
தானாக வந்தொருநாட் தண்ணந் தமிழ்தந்தான்!
ஊனா முதலான ஓசை ஒடிவுகளை
நானகற்ற யாப்பு மரபும் புகட்டியவன்!
பா நாடகத்தைப் படிப்பித்த ஆசிரியன்!
மோனை எனக்கு முருகு.
கவிஞர் பா.சத்தியசீலனின் மற்றுமொரு நூல் பத்தாண்டுகளின் பின்னர் ‘மழலைத் தமிழ் அமிழ்தம்” என்ற தலைப்பில் ஜனவரி 1978இல் யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா புத்தகசாலையினால் 20 பக்கங்களில் சித்திரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஓவியர் ரமணியின் ஓவியங்கள் பாடல்களுக்கு அணிசேர்த்துள்ளன. யாழ்ப்பாணம் லயன்ஸ் கழகத்தின் ஆதரவுடன் இது வெளியிடப்பட்டது. கவிஞர்; பா.சத்தியசீலனின் நான்காவது சிறுவர் பாடல் தொகுப்பு இது என்ற குறிப்பு அந்நூலில் காணப்பட்ட போதிலும், அதற்கு முன்னர் வெளிவந்த மூன்று சிறுவர் பாடல் தொகுப்புகள் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.
டிசம்பர் 1979இல் 12 பக்கங்களில் இவரது மற்றொரு சிறுவர் கதைப் பாடலான ‘சந்தனப் பொட்டுச் சுந்தரம்பிள்ளை” வெளிவந்தது. இது சிறுவர்களுக்கானதொரு வேடிக்கைக் கதைப்பாடல். ரமணி என அழைக்கப்படும் ஓவியர் வை.சிவசுப்பிரமணியத்தினதும், க.இராசரெத்தினம் அவர்களதும் கைவண்ணத்தில் அமைந்த சித்திரங்களுடன் இந்நூல் வெளிவந்தது. நகைச்சுவை உணர்வுமிக்கதும் குழந்தைகளின் சிந்தனை வெளிப்பாட்டுக்கு ஊக்கசக்தியாகவும் களமாகவும் அமையத்தக்க பாடல்வரிகளை எளிய நடையில் இந்நூலில் காணமுடிகின்றது.
மார்ச் 1985இல் ‘தலை காத்த தலைமயிர்” என்ற தலைப்பில் மற்றொரு நூலை 8 பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இது சிறுவர்க்கானதொரு கதைப் பாடல். தனது ஓவியத் திறமையால் உயிர்தப்பிய ஒரு எலிக்குஞ்சின் கதையிது. சந்தம் மிகு சிறந்த சிறுவர் பாடல்களை யாத்த சத்தியசீலனின் சிறப்பியல்புகளில் ஒன்று, சிறுவர்களின் வாசிப்பினை சுவைமிகுந்ததாக மாற்றுவதற்குத் தன் வாழ்நாளில் பெரும்பங்கைச் செலவிட்டவர் என்பதாகும். புதிர்ப் பாட்டு, படம் சொல்லும் பாட்டு, குழந்தைகளே எதுகை மோனைகளை உருவாக்க வழியமைக்கும் சிறுவர் பாட்டுப் புதிர்கள் என சத்தியசீலனின் சிந்தையில் மலர்ந்த சிறுவர் இலக்கியங்களில் ஒருசிலவே நூலுருக் கண்டுள்ளமை வேதனையானது.
1985இல் இவரது மற்றுமொரு சிறுவர் பாடல் ‘கப்பல்” என்ற தலைப்பில் நூலுருவாயிற்று. சிறுவர்க்கான புதிர்ப்பாட்டுக்கள், அவற்றுக்கான விடைகளுடன் 32 பக்கங்களில் இந்நூல் வெளியானது. புதிர்களுக்கான விடைகளும்; கவிதைவரிகளிலேயே அமைந்திருந்தமை சிறப்பு. கவிதையினைப் பாடி இரசிக்கும் அதேவேளை சிறுவர்கள் தம் சிந்தனை வளத்தைப் பெருக்கும் விடுகதைகளுக்கு விடைநாடும் ஆர்வத்தினையும் அவரது பாடல்கள் ஏற்படுத்தியிருந்தன.
1989இல் இவர் மூன்று நூல்களை வெளியிட்டிருந்தார். ‘பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா” 32 பக்கங்களில் வண்ணப்படங்களுடன் வெளியாயிற்று. சிறுவர்களுக்கேற்ற எளிய நடையில், அந்த அதிசயமான பாத அணிகள், பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா, உயிர் காத்த ஓவியம், குழப்படியும் குளப்படியும் ஆகிய சிறுவர் கதைகளை கவிதையுருவில் ஆக்கியிருந்தார். இவற்றில் உயிர் காத்த ஓவியம் என்ற பாடல் ஒரு பாட்டுக்கூத்து உருவில் ஆக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
இவ்வாண்டில்(1989) வெளிவந்த இவரது இரண்டாவது சிறுவர் இலக்கியம்
‘பாட்டு விளையாட்டு” என்பதாகும். தனித்துவமானதோர் எழுத்துப்பாணியின் மூலமும், நேர்த்தியான நூலாக்கங்களின் மூலமும் ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தில் தனியிடம் பெற்ற பாவலவன், 24 பக்கங்களில் சித்திரங்களுடன் கூடியதாக இந்நூலை ஆக்கியிருந்தார். 1988 சித்திரை மாதத்தில் ரூபவாகினியில் ஒளிபரப்பாகிய ‘பாப்பா புதிர்ப்பா” நிகழ்ச்சியிலே சிறுவர்களோடு சேர்ந்து தாம் வழங்கிய பாடல்கள் பலவற்றைச் சேர்த்து இந்நூலை அவர் வெளியிட்டிருந்தார். நகைச்சுவையும் புதிர்ச் சுவையும் பொருந்த அழகிய சந்தங்களுடன் அமைந்துள்ள பாடல்கள் இவை. ஆமை, யானை யார், வண்ணத்துப்பூச்சி, நத்தையார், பலூன், பாட்டை விடையுடன் இணையுங்கள், நிரையாய் வருகிற பூ, பூட்டாத பூட்டு, பாவைப்பிள்ளை, நடைவண்டி, ஆமையார், சீட்டாட்டம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டிருந்தன.
1989இல் மூன்றாவதாக இவரது முக்கியமான மற்றொரு நூலும்; வெளிவந்தது.
‘அல்லைப்பிட்டிப் பதி அருளப்பர் அம்மானை” என்ற நூலே அதுவாகும். 82 பக்கங்களில் வெளிவந்த இந்நூல் அண்ணல் யேசுவிற்கு அருள்முழுக்குத் தந்தவரான அருளப்பரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட அம்மானைவடிவமாகும். அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் என்ற வகையில் கவிஞர் பா.சத்தியசீலன் ஊர்ப்பற்றுடன் இயற்றிய இவ்வம்மானை, இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டதுடன், பத்திரிகைகளிலும் தொடராக பிரசுரிக்கப்பட்டுப் பிரபல்யமானது. அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை கத்தோலிக்க சமூகத்தினரதும், நற்புலமை வாய்ந்தோரதும் பாராட்டையும் புகழினையும் பெற்று குழந்தை இலக்கிய கர்த்தா என்பதற்கும் அப்பால் நல்லதொரு ‘கிறிஸ்தவ கவிஞராகவும்” இவரை அடையாளம் காட்டியது.
இதனைத்தொடர்ந்து சத்தியசீலன் கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைப்பதில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். அடுத்த ஆண்டு 1990இல் ‘உலகினார்க்கு ஓர் உடன்பிறப்பு: சார்ள்ஸ் டிஃபுக்கோ” என்ற இவரது மற்றொரு கிறிஸ்தவ இலக்கியம் 32 பக்கங்களில் வெளிவந்தது. இதனை யாழ்ப்பாணம் Pயஒஊhசளைவi, அமைதி அருள் மையம் அமைப்பின் வண.ஜே.இ.ஜெயசீலன் அவர்கள் வெளியிட்டிருந்தார். சார்ள்ஸ் டிஃபுக்கோ அடிகளின் (டீசழவாநச ஊhயசடநள) வாழ்க்கை வரலாறு பாவடிவில் எளிய முறையில் இதில் கூறப்பட்டிருந்தது.
1991இல் யாழ்;ப்பாணம், பாக்ஸ் கிறிஸ்ரி அமைதி அருள் மையம், பாவலவன் சத்தியசீலனின் மறறுமொரு சிறுவர்ஃகிறிஸ்தவ நூலை 32 பக்கங்களில் வெளியிட்டது. ‘பைபிள் கதைகள்” என்ற செய்யுள் வடிவிலான சிறுவர் நூல் அதுவாகும். இனிதாய் அமைந்தது எம் இறைவனின் படைப்பே, ஆதாம் இனிமேல் இப்பூமி அழகாய் இருக்காது உனக்கு, கனியும் நெஞ்சம் இல்லாமல் கனியைப் படைத்துப் பயன் என்ன?, பெட்டகம் ஒன்றைச் செய் நோவா பிரளயம் ஒன்று வருகிறது, பழியால் கட்ட நினைத்திட்ட பாபெல் கோபுரம் ஆகிய ஐந்து தலைப்புகளின் கீழ் பைபிள் கதைகள் செய்யுள் உருவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கேற்ற சந்தப் பிரிப்புடன் எளிய நடையில் பா. சத்தியசீலன் இச்செய்யுள்களை இயற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட இக்காலப்பகுதியில் பாவலவனின் மற்றொரு நூல் ‘பாட்டு” என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து (அல்லைப்பிட்டி) அவரது சகோதரரான பா.சிலுவைராஜா அவர்களால், வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 13, வூல்பெண்டால் வீதி, ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள இந்நூலின் பதிப்பு ஆண்டைக் பதிப்பாளர்கள் குறிப்பிடத் தவறியுள்ளதால் அதனைக் கண்டறிய முடியவில்லை. 42 பக்கம் கொண்ட இந்நூலில் 34 சிறுவர் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அழகான உலகு, அழகான நிலவு, அழகான பொழுது, அழகான நிகழ்வு, விலங்குத் தோழன், விலங்குக் காட்சியகம், பச்சைத் தமிழ், வண்டிகள், தொழில், வானியல், மாணவர் நாங்கள், கல்வியகங்கள், கற்பூரமும் கடலையும், பூங்காற்று, இயற்கை எழில், பூங்காவின் பாங்கர், ஆறு, தமிழ்செய்தோர், பிறந்த நாள், தமிழ்ச்சங்கக் கலைவிழா, கொடை, அப்பலோ, அருளாளர், விழாத்தமிழ், ஒளிவிழா, அருள்பாலா, பொங்கல், வாணிவிழா, செங்குட்டுவன் சீர், வாழ்க, ஈழம் எங்கள் நாடடா, மொழி, மொழி வாழ்த்து, வாணி வரம் ஆகிய தலைப்புகளில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் சேர்க்கையில் 1991இல் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளதை (சேர்க்கை இலக்கம் 275604) கருத்திற்கொண்டு இந்நூல் 1991இற்கு முன்னரே வெளிவந்திருக்கலாம் என்று கருதுகின்றேன்.
ஜுன் 1991இல் சத்தியசீலனின் ‘உயிர் காத்த ஓவியம்” என்ற சிறுவர் பாடல் நூல் வெளிவந்துள்ளது. 32 பக்கங்களில் சித்திரங்களுடன் கூடியதாக, இவர் அவ்வப்போது எழுதியிருந்த புதிர்ப் பாடல்கள், கதைப்பாடல்கள் என்பனவற்றின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. 13 தனிப்பாடல்கள், 12 புதிர்ப் பாடல்கள், பன்றியாரை வென்றுவிட்ட பாட்டி அம்மா, அந்த அதிசயமான பாத அணிகள், உயிர்காத்த ஓவியம், கெட்டிக்காரன் என்றாலும், குழப்படியும் குளப்படியும் முதலிய பிற கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கியிருந்தது. தனித்தனியாக முன்னர் வெளிவந்து தமிழ்ச் சிறார்களை இன்புறுத்திய இப்புதிர்ப் பாடல்களும், பாட்டுக் கூத்துகளும் கவிஞர் சத்தியசீலனின் எழுத்துலக வெள்ளிவிழாவை முன்னிட்டு சிறப்புத் தொகுதியாக 7.6.1991அன்று வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பாவலவன் நூல்கள் எதையும் பிரசுரித்ததாகத் தகவல் இல்லை.
கவிஞர் சத்தியசீலனின் சில படைப்புக்கள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் தொகுத்த ‘கவிதைச் செல்வம்” என்ற நூல் 1970 வாக்கில் வெளிவந்திருந்தது. கந்தரோடையிலிருந்து ‘கலைச்செல்வி” ஆசிரியர் சிற்பி சி.சரவணபவன் இதனை சுன்னாகத்தில், கலாதேவி அச்சகத்தின் வாயிலாக அச்சிட்டு வெளியிட்டிருந்தார். கவிஞர் இ.முருகையனின் முன்னுரையுடன் கூடிய இக்கவிதைத் தொகுப்பில் இலங்கையின் இருபத்தொன்பது இளம் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அதில் திமிலைக்கண்ணன், ஆ.லோகேஸ்வரன், பசீல் காரியப்பர், முகிலன், துரைசிங்கம், ஆரையூர் அமரன், ஆடலிறை, ஆ.காமாட்சி, மு.பொன்னம்பலம், ஆ.ச.கண்ணன், சபா.ஜெயராசா, கரவைக் கபிலன், திமிலை மகாலிங்கம், புரட்சிமாறன், வ.கோவிந்தபிள்ளை, இளங்குமரன், ஏ.இக்பால், செ.து.தெட்சிணாமூர்த்தி, முத்து சிவஞானம், மு.சுந்தரம், வெ.இராமநாதன், ஜீவா, ச.வே.பஞ்சாட்சரம், குமரன், ஐயன்னா, மணியம், க.உமாமகேஸ்வரன், சோ.பரமசாமி ஆகியயோருடன் கவிஞர் பா.சத்தியசீலனின் கவிதையொன்றும் இடம்பெற்றிருந்தது.
ஜுலை 1987இல் ‘நித்தியானந்தம்” என்ற தலைப்பில் வெளிவந்திருந்த அமரர் பரமலிங்கம் நித்தியானந்தன் நினைவு மலரில் ஈழத்துக் கவிஞர் ஐவரது எழுபத்தியேழு கவிதைகள் இடம்பெற்றிருந்தன. வ.இராசையா, யாழ்.ஜெயம், வளவை வளவன், த.துரைசிங்கம் ஆகியோருடன் கவிஞர் சத்தியசீலனின் கவிதைகள் சிலவும் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன.
சித்திரை 1989இல் யாழ். இலக்கிய வட்ட வெளியீடாக ‘மதுர கவிதைகள்” என்ற தலைப்பில்; யாழ்ப்பாணம் பிரவுண் வீதி 82ஆம் இலக்க முகவரியிலிருந்து மற்றுமொரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரகவி இ.நாகராஜன் நினைவாக யாழ். இலக்கிய வட்டம் நடத்திய சிறுவர் கவிதை புனைதல் போட்டியில் பரிசுபெற்ற 5 கவிஞர்களின் கவிதைகள் என்ற குறிப்புடன் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வ.இராசையா, யாழ்.ஜெயம், வளவை வளவன், த.துரைசிங்கம் ஆகியோருடன் கவிஞர் சத்தியசீலனின் பரிசுக் கவிதைகளும் இதில் அடங்கியிருந்தன. இரு நூல்களும் அதே கவிஞர்களின் தேர்ந்த கவிதைகள், இரண்டம் 80 பக்கங்களைக் கொண்டவை. இதனால் நித்தியானந்தம் நினைவுக் கவிதைகளும் மதுர கவிதைகள் கவிதைகளும் தலைப்பு மாற்றம்பெற்ற ஒரே தொகுப்பாக இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூற்றினை யாழ் இலக்கிய வட்டத்தினர் அறியக்கூடும்.
மே 2010இல், ‘இனிக்கும் பாடல்கள் படைத்த இருபது கவிஞர்கள்” என்ற நூலினை கவிஞர் த.துரைசிங்கம் அவர்கள் தனது உமா பதிப்பகத்தின் வாயிலாக கொழும்பில் வெளியிட்டிருந்தார். சிறுவர்களுக்கான கவிதைத் துறையில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் இருபது தமிழக ஃ இலங்கைக் கவிஞர்களது பாடல்களை இந்நூலில் தரிசிக்கமுடிகின்றது. ஈழத்துக் கவிஞர்களான நவாலியூர் சோமசுந்தரப் புலவர், யாழ்ப்பாணன்-வே.சிவக்கொழுந்து, மு.நல்லதம்பி, க.வேந்தனார், இ.நாகராசன், எம்.சி.எம்.சுபைர், இ.அம்பிகைபாகன், வ.இராசையா, சாரணா கையூம், திமிலைத் துமிலன் (சி.கிருஷ்ணபிள்ளை), வாகரைவாணன் (ச.அரியரத்தினம்) ஆகியோருடன் பாவலவன் பா.சத்தியசீலனின் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன.
பாவலவன் சத்தியசீலன் எமமிடையே வாழ்ந்து ஜொலித்து மறைந்த ஒரு கவிஞன். அவரது ஆரம்பகாலப் படைப்புகள், நான் முன்னர் குறிப்பிட்டது போன்று சிறு நூல்களாக அமைந்து அவை பாதுகாக்கப்படாமல் விரைவில் மறைந்துவிட்டன. பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளும் பத்திரிகைக் கட்டுகளுக்கிடையில் எங்கெங்கோ சிறைப்பட்டுவிட்டன. சத்தியசீலன் தனது காலத்தில் உள்@ர்ப் பதிப்பகங்களையே நாடிச்சென்று தனது நூல்களை அச்சிட்டுவந்துள்ளார் என்பதை அவதானிக்க முடிகின்றது. விதிவிலக்காக கொழும்பு ஆனந்தா அச்சகத்தைத் தவிர்த்தால் அவரது நூல்கள் அனைத்தும் யாழ்ப்பாணம் ஸ்ரீலட்சுமி அச்சகம், மானிப்பாய் வீ.ஜே.அச்சகம், ஆனைக்கோட்டை மஞ்சரி பதிப்பகம், யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம் வஸ்தியான் அச்சகம், யாழ்ப்பாணம் யுனைற்றெற் அச்சகம், யாழ்ப்பாணம் விக்கினேஸ்வரா அச்சகம், யாழ்ப்பாணம் மேர்க்குரி அச்சகம் ஆகியவற்றிலேயே அச்சிடப்பட்டுள்ளன. அதனால் விரிவான விநியோகத் திட்டம் எதிலும் அவர் அக்கறை கொள்ள முடியாதிருந்துள்ளது. தனது சுயமுயற்சியினாலேயே தனது நூல்களைத் தன் கைக்கெட்டிய வசதிளைப் பயன்படுத்தி சிறு வட்டத்திற்குள் விநியோகித்துவந்துள்ளார். இக்காரணங்களால் இன்றளவில் பாவலவன் பா.சத்தியசீலனின் இலக்கிய ஆளுமையை ஒருங்குசேரப் பார்த்துப் பயில எம்மால் முடியாதுள்ளது. 2001இல் அவர் மறைந்த பின்னர் இதற்கான முயற்சிகள் எவையும் ஈழத்துப் படைப்பிலக்கிய உலகில் எடுக்கப்பட்டதாகவும்; தகவல் இல்லை.
இன்றைய நிலையில் நூலுருவில் வெளிவந்துள்ள சத்தியசீலனின் படைப்பாக்கங்களைத் தேடித் தொகுத்துத் தனிநூலாகக் கொண்டுவருவதுடன், சிற்றூடகங்களில் வெளிவந்த அவரது உதிரிப் படைப்புக்களையும், பிரசுரம் காணப்பெறாதுள்ள கவிதைகளையும், தொகுத்து தனி நூலாகப்; படைத்தளிக்கும் எண்ணத்தைக் கொண்டுள்ளேன். கவிஞரின் உடன்பிறப்புக்களான சலோமை செல்லையாம்மா, பொன்னுத்துரை, சின்னத்துரை, சிலுவைராசா ஆகியோர் அல்லது அவர்களின் நண்பர்கள், மற்றும் பா.சத்தியசீலனை நன்கறிந்தவர்களான யாழ்ப்பாணம் Pயஒஊhசளைவi, அமைதி அருள் மையத்துடன் தொடர்புற்றவர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள் என்போர் அவரது படைப்புக்களை தமது குடும்ப நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கக்கூடும். அல்லையூர் இணையம் அவரது படைப்பாக்கங்களைத் தேடிப் பதிவிடும் பணியை மேற்கொள்ள முயலலாம். பாவலவன் சத்தியசீலனின் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் எனக்குக் கைகொடுக்கத் தயாரான உள்ள இலக்கிய ஆர்வலர்களின் தொடர்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
noolthettam.ns@gmail.com