கவிதைகள்: தமிழ், கிரிகாசன் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!தமிழ்

– இரா.சி. சுந்தரமயில் (கோவை) –

ஈராயிரம் வயதைக்
கடந்த பின்னும்
வலியது

நரை, மூப்பை எதிர்க்கும்
வாலிபமுடையது

தமிழகத்தாரின் தாய் என்றாலும்
சேய் போல
உலகத்தாரின் நாவிலும்
தவழ்வது

துறைகள் தோறும்
ஏற்றம் காண்பது

அற்புத நோக்குடைய
இலக்கியங்களைத் தருவது

கால வேகத்தின் கட்டாயத்தில்
நோக்காய்க் கொண்டதையே
சமூகப்போக்குக்கிணங்க
மாற்றிக்கொள்வது.

சமூகத்தைக்காட்டும்
ஆடிப்பாவையது

ஈடு இணை இல்லாதது.
என்னை ஏற்றமுறச் செய்ததும்
இதுவே!

அது தான்
செம்மொழியாம்
தமிழே! தமிழே!

rssmdr@gmail.com


கவிதை வாசிப்போம் வாருங்கள்!கிரிகாசன் கவிதைகள்!

1.மீண்டும் குளிர்ந்தது காலை

மழைபொழியுது இடியிடிக்குது
மனங் களிக்குதடி – இது
மாரி காலம் போலத் தூறி
மலர் உதிர்க்குதடி
குழை பறிக்குது குருத்து டைக்குது
குருவி கத்துதடி .- மெய்
கூதல் ஆக்கி ஊதுங் காற்று
கோணச் செய்யுதடி
பழைய சாளரக் கதவு காற்றில்
படப டக்குதடி – அதைப்
பார்த்துப் பூனை பயந்து நடுங்கிப்
பதுங்கிச் செல்லுதடி
குழைந் துருட்டிய மணலை நீரும்
கொண்டு போகுதடி – பின்
குறையில் விட்டுதன் கோலம் மாறிக்
குதித்துப் பாயுதடி

தூறல் கொட்டுது தூர மின்னுது
தொலைவிற் சத்தமடி – இது
தூக்கி வாரிப் போட்டு மனமும்
துடிக்கச் செய்யுதடி
மாற லற்றது மலையில் நீரும்
மீள்பெருக் கமடி – அது
மளம ளென்றிடை ஓடிப் பாறை
மறைவில் துள்ளுதடி
கூற லென்னது குரங்கு மனதும்
குறுகுறுக் குதடி – இந்தக்
கொட்டும் மழையில் குதித்தே யாடக்
கொள்ளு தாசையடி
மீறல்கொண்டொரு காற்று வந்திடை
மரம் உலுப்புதடி – அது
மிரள வைத்தொரு மனதி லச்சமும்
மேவச் செய்யுதடி

சோலை மரங்கள் சிலுசி லிர்த்திடச்
சொட்டும் நீரையடி -அவை
தோளிற் பட்டதும் சிறுவர் கூட்டம்
துள்ளும் மான்களடி
காலைச் சுற்றிய சேலை பற்றிடும்
கன்னிப் பெண்ணொ ருத்தி – அவள்
கவனம் நீரில் கால் சறுக்கிடாக்
காக்கும் எண்ணமடி
நூலைப் போன்றிடை  வெள்ளிக் கம்பியின்
நீளத் தூறலடி – அது
நெஞ்சிலாக்கிய இன்ப மென்னது
நினைவுச் சாரலடி
காலை பூவெனக் காணும் மனதில்
களிப்பை ஊட்டுதடி – மெல்லக்
காற்ற டித்திடக் கன்னம் சில்லெனக்
காணும் முத்தமடி

வேலை செய்திடப் போகும் மனிதர்
வியர்வை போனதடி – அவர்
வேகும்மனதில் விடியல் பூக்கள்
விருப்ப மூட்டுதடி
சாலை பக்கத்தி லாடும் மரங்கள் 
சற்று லுப்புதடி – துளி
சேர்ந்து வீழ்ந்திடப் பறவைகூட்டம்
சீற்றம் கொள்ளுதடி
நாலை மூன்றொடு கூட்டிப் பார்த்திட 
ஏழு வந்ததடி – இந்த
நாளில் மீண்டுயிர் கொண்டு வாழெனும்
நேரம் வந்ததடி
பாலை வெம்மணல் நீர்பொழிந் தெனப்
பார்க்க இன்பமடி – இந்தப்
பாவி யுள்ளமும் பாட்டெ ழுதிடப்
பார்த்துக் கொட்டுதடி

2. சேர்ந்து நில் விடிவு வரும்

மலர் தூங்கும் பனி மண்ணில் வீழும் – பூ
மணம் ஏந்தி இளந்தென்றல் அலைந்தோடக் காணும்
புலர்கின்ற பொழுதான யாவும் – நம்
பொன்னான தாய்மண்ணின் புதுமை என்றாகும்
சிலர்வந்து தாய்நிலம் பற்றி – எம்மைச்
செல்லென்று காட்டிடை சிறையிட்டு வைத்தால்
இலதென்று ஆகுமோ வீரம் – நாமும்
இருந்தழும்  நிலை  காண மீளுமோ தேசம்

கலை ஒன்றித் தமிழ் இன்பம் காணும் –  நற்
கனி போலும் சுவை எங்கள் தமிழீழ வாழ்வும்
உலைபொங்கும் வயல்கொண்ட நெல்லும்  – விதை
உழவர்தம் வியர்வையும் உதிர்கின்ற மண்ணும்
நிலை கொண்ட  எம் தேசம் வேண்டும் –  அதை
நீர்வார்த்து தருமமென் றளிக்கவா நானும்
மலைபோன்று இடர் வந்தபோதும்-  நாமும்
மறுபடி கொள்வோமோ எமதன்னை நாடும்

சிலபூக்கள் குளம் தன்னில் ஆடும் – அதில்
சிந்தாமல் வண்டொன்று தேனுண்டே ஓடும்
வலைதன்னில் மீன்வந்து வீழும் -அதை
வாரிக் கரைபோட்டு விலைகூறு வோரும்
தலைசீவிப் பூச் சூட அன்னை – அவர்
தாயாம் என் பாட்டியின் கதை சொல்லும் தன்மை
நிலைகொண்ட நாம் வாழ்ந்த  மண்ணை –  இன்று
நீசர்தம் கைவிட்டு மீட்பதே வேலை

தொலை என்று வந்தாளும் பகைவன் – அவன்
துண்டுதுண்டாய் ஆக்கத்  துணைநின்ற உலகம்
மலை போலும் தமிழ் வீர மாந்தர் – இவர்
மாளென நஞ்சிட்டுக் கொன்றதோர் கோலம்
குலைகுலை யாகவே வெட்டி – அவன்
கும்மாளம் போட்டாடக் குவலயம்சுற்றித்
தலை கீழென் றுருண்டோடும் பூமி  – நாமும்
தருமத்தைக் கேட்டிடிட எவருண்டு மீதி

மொழி ஒன்று தமிழ் எங்கள் அன்னை – இதை
மறப்பதோ ஒன்றாகு,  மதியூகம் கொண்டே
வழி கண்டு சென்றிட வாழ்வாம் -நூறு
வகையான வழிகாணில் பிரிவொன்றே மீதாம்
தெளிகின்ற மனதோடு உறுதி – அதை
தேர்ந்து நீ சரியான திசைகண்டு சென்றால்
பழி வென்று தீர்வாகி விடியும் – நீயும்
பயமின்றி வாழ ஓர் விடியலும் தோன்றும்.

kanagalingamm@hotmail.com