இது கவிஞர் தமிழ் உதயாவின் கவிதை:
வீடு மயானமான தினம்
தெருவோ ஊரோ அன்றி நாடோ
தேவையாய் இருக்கக்கூடும்
வெளியேறும் அறையின்
ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும்
நிசப்தத்தின்
சப்த அடையாளம் கதவு
தாவிப்பறக்கும் மின்மினிகள் அக்கதவு நீக்கில் நசிபட்டு
மாசற்று ஒளிர்கிறது
அது மனிதத் துயரை முகவரியிட்டு மூடி மூடித் திறக்கிறது
கண்ணீர் ததும்பாத மனித சஞ்சாரம் ஓர் அமரகானத்தை இசைத்து விடலாம்
வீணையின் அடிநாதம் அறுந்திராத கணமொன்று
துடித்துக் கொண்டிருக்கையில்
தந்தியில் இளையோடும் உயிருக்கு துருவேறுவதில்லை தோழா
ஒரு கவிதையில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதுதான் ஒரு கவிதை நமக்குப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் முதற்காரணம் என்று தோன்றுகிறது. முழுமுதற் காரணம் என்று சொல்லலாமா, தெரியவில்லை. ஒரு கவிதையின் அனைத்துவரிகளும் நமக்குப் புரிவதால் மட்டுமே அந்தக் கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடும் என்று சொல்லவியலாது. அதேபோல், சிலவரிகள் புரியாமலிருந்தாலும் ஒரு கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடுவதும் உண்டு.
நாம் தினசரி பார்க்கும் ஒன்றை – ஒரு பொருளையோ, இடத்தையோ, மனிதரையோ, நிகழ்வையோ வேறொரு கோணத்தில் பார்க்கும் கவிதை – வாழ்க்கை குறித்த ஒரு புதுப்பார்வையையே நமக்கு ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. கவிதையின் வரிகளில் காட்சிப்படுத்தப்படும் சில நமக்குப் பிடிபடாமல் இருக்கலாம். இதனாலேயே சிலருக்கு ஒரு கவிதை பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம்.
ஒரு முழுக்கவிதையும் திட்டவட்டமாக ஒரு அர்த்தத்தை நமக்குத் தரவில்லை யாயினும் கூட (நமக்கு என்ற வார்த்தை அடிக்கோடிடப்பட வேண்டியது) அதில் சில வரிகள், சில படிமங்கள், காட்சியுருவாக்கங்கள் நம்மை ஈர்க்கலாம்; நெகிழ வைக்கலாம்.
ஒரு கவிஞர் தன் மனதை உறுத்தும், அலைக்கழிக்கும், அல்லது ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயத்தைப் பற்றி கவிதையாக எழுதும்போது பிரக்ஞாபூர்வமாகவோ, தன்னையுமறியாமலேயோ சிலவற்றை வெளிப்படையாகப் பேசாது குறிப்புணர்த்தலாகத் தருகிறார்; சில இடங்களில் மௌனமாகிவிடுகிறார்.
ஒரு கவிதையின் ஒரு சில வரிகளுக்காகவே அதன் மற்ற வரிகள் யாவும் எழுதப்படுகின்றன என்று சொல்வதுண்டு. அந்த ஆதார வரிகள் கவிதையின் முடிவு வரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்வதும் உண்டு.
ஒரு கவிதையை நாம் வாசிக்கும்போது இந்தவித மான ‘துப்புதுலக்கும்’ பாவத்தோடு செயல்படுவதில்லை. அந்தக் கவிதை இயல்பாய் நம்மைத் தனக்குள் உள்வாங்கிக்கொள்கிறது.
மீண்டும் சொல்லத் தோன்றுகிறது:ஒரு கவிதையின் அனைத்துவரிகளும் நமக்குப் புரிவதால் மட்டுமே அந்தக் கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடும் என்று சொல்லவியலாது. அதேபோல், சிலவரிகள் புரியாமலிருந்தாலும் ஒரு கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடுவதும் உண்டு.
பிரக்ஞாபூர்வமாக மொழிரீதியான பரிசோதனை செய்துபார்க்கும் நோக்கோடு கவிதையில் மொழியைக் கையாள்பவர்கள் உண்டு. ஆனாலும், அவர்கள் கவிதைகளில் அடிப்படையான கவிமனம் இயங்கிக்கொண்டேயிருந்தால் அதன் ஆழமும் அகலமும் விரிவும் ஈரமும் எரிமலையும் வாசகனை எங்காவது ஒரு வரியில் தொட்டு தான் வாசிப்பது கவிதை என்று உணர்த்திவிடும். எளிய கவிதையோ, இறுக்கமான கவிதையோ, வெளிப்படையான கவிதையோ, பூடகமான கவிதையோ இந்தக் கவிநயம் இல்லாத வரிகளை, பாசாங்கான எழுத்தை வாசகர் கண்டுகொள்ள முடியும்.
இதைச் சொல்லும் போது பாசாங்கான வாசகர்களும், மேம்போக்கான வாசகர்களும், பீடாதிபதி வாசகர்களும், தம் புரிதலையே அளவுகோலாகக் கொண்டு கவிஞர்களை எடைநிறுத்தி மதிப்பழிக்கும் வாசக-விமர்சகர்களும் அல்லது விமர்சன- வாசகர்களும் உண்டு என்பதையும் சுட்டவேண்டியது அவசியம்.
தமிழ் உதயாவின் கவிதை ‘வீடு மயானமான தினம்’ என்று தொடங்குகிறது. பொதுவாக வீட்டில் இறப்பு நேரும், மயானத்திற்குப் போவார்கள். ஆனால், இங்கே வீடே மயானமாகிறது ஒரு நாளில்’ என்பதன் கூடுதல் கனம் கவிதையை வாசிக்கும் என்னை அழுத்த ஆரம்பிக்கிறது. வீட்டின் ஒரு முக்கிய உறுப்பினரின் மரணத்திற்குக்கூட மயானம் என்ற வார்த்தையைக் கவிஞர் பயன்படுத்தியிருக்க வழியுண்டு. ஆனால், அடுத்த இரு வரிகள் – ‘தெருவோ ஊரோ அன்றி நாடோ தேவையாய் இருக்கக்கூடும்’ என்ற இருவரிகளிலுள்ள வார்த்தைச்சேர்க்கைகள் மரணம், வீடு, மயானம் ஆகிய வார்த்தைகளுக்குக் கூடுதல் அர்த்தம் தருகின்றன. கவிஞர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருக்கும் தமிழ்க்கவிஞர் என்ற நினைப்பு தன்னிச்சையாக மனதில் எழுகிறது. அதன் தொடர்ச்சியாய் சில காட்சிகள், நினைவுகள், அவை தரும் அலைக்கழிப்பு….
வலியை, இழப்பைச் சொல்வதால் மட்டும் ஒரு கவிதை கவிதையாகிவிடுவதில்லை. அதை எப்படிச் சொல்கிறது? என்பது முக்கியம். தமிழ் உதயாவினுடைய கவிதையின் அடுத்த பத்தி – வெளியேறும் அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் நிசப்தத்தின் சப்த அடையாளம் கதவு. வெளியேறும் அறை – இந்தச் சொற்றொடரை ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தில் உள்வாங்கிக்கொள்ளலாம். வழக்கமான அளவில் ‘வீட்டின் முன்புற அறை’ அல்லது, இறந்தவர் வாழ்ந்த அறை என்பதால் அவர் இழப்போடு தானும் வெளியேறும் அறை…. கவிஞர் சாதாரணமாகச் சொன்னதற்கெல்லாம் உங்களுக்குத் தோன்றிய அர்த்தத்தையெல்லாம் தருகிறீர்களே என்று சிலர் கூறுவதுண்டு. கவிஞர் ஆகச் சிறந்த வார்த்தைகளைத் தேடியெடுத் துத்தான் கையாண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது நமக்குள் ஏற்பட்டுவிடும். அதன் அடிப்படையில் கிடைக்கக் கூடிய அர்த்தசாத்தியப்பாடுகள் அவற்றை எண்ணித்தான் கவிஞர் அந்த வார்த்தை களைப் பயன்படுத்தினாரோ இல்லையோ – வாசிப்பாளரால் பொருட்படுத்தப்பட வேண்டியவை.
நிசப்தத்தின் சப்த அடையாளம் கதவு – எத்தனை கவிநயம் மிக்க விவரிப்பு! ஒருவரிக் கவிதையாகக் கூடக் கொள்ளத்தக்கது!
தாவிப்பறக்கும் மின்மினிகள் அக்கதவு நீக்கில் நசிபட்டு
மாசற்று ஒளிர்கிறது
அது மனிதத் துயரை முகவரியிட்டு மூடி மூடித் திறக்கிறது
கதவுநீக்கில் நசிபட்ட மின்மினிகள் மாசற்று ஒளிர்கிறதென்றால்…? அது மனிதத்துயரை முகவரியிட்டு மூடி மூடித் திறக்கிறதென்றால் …. மின்மினிகள் மின்மினிகள் தானா? நீக்கிய கதவுக்கப்பால் என்ன ? மரணத்திற்கப்பாலானதா? மனிதத்துயர் – மரணம், வாழ்க்கை, இழப்பு, பிரிவு…. இன்னும்….. இங்கே பொதுவான அந்த மனிதத்துயர் பேசப்படுகிறதா? அல்லது குறிப்பான ஒரு மனிதக் குழுவின் துயர் பேசப்படுகிறதா? அப்படி தனித் தனியாகப் பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை யிருக்கிறதா என்ன? தனிமனித அக-புற நெருக்கடிகள், அவர் சார்ந்த சமூகச்சூழல் சார் நெருக்கடிகள், இந்தப் பலவகையான நெருக்கடிகளின் ஊடாட்டங்கள் – இவையெல்லாமும் இந்த வரிகளின் வழியே என்னை அலைக்கழிக்கின்றன.
பதிலறியா கேள்விகள், பதிலை எதிர்பாராத கேள்வி கள், பதில் வேண்டா கேள்விகள், பதில் இல்லாத கேள்விகள், பதிலாகும் கேள்விகள் என கவிதையின் வரிகள் விரிகின்றன.
பொதுவாக, sweetest songs are those that tell of saddest thought என்ற கவி ஷெல்லியின் வரிகளைத்தான் கவிஞர்கள் அதிகமாகக் கடைப்பிடிப்பதுண்டு; எடுத்துரைப்பதுண்டு. ஆனால் இங்கே கண்ணீர் ததும்பாத மனித சஞ்சாரம் ஓர் அமர கானத்தை இசைத்து விடலாம் என்கிறார் கவிஞர். துயரம் இல்லாத மனிதரேயில்லை என்ற தத்துவார்த்தப் பார்வையா இது? அல்லது துயரம் இல்லா வாழ்க்கை அமரத்துவம் வாய்ந்தது, அதுவும் அமர கானமாகி விடுவது என்கிறாரா?
சஞ்சாரம் என்ற வார்த்தை வாழ்க்கையைக் குறிக்கிறதா? அல்லது வாழ்க்கையிலான அக-புற அலைச்சல்களைப் பேசுகின்றதா? இந்த வரிக்கு முடிந்த முடிவாக ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டுவிட முடியுமா? அப்படிச் செய்ய இயலாது என்பது தான் இந்தக் கவிதையை மனதுக்கு நெருக்க மாக்குகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆனால், கவிதை முழுநிறைவான கவிதையாவது அதன் இறுதிவரிகளில்தான் – என்னளவில்.
வீணையின் அடிநாதம் அறுந்திராத கணமொன்று
துடித்துக் கொண்டிருக்கையில்
தந்தியில் இளையோடும் உயிருக்கு துருவேறுவதில்லை தோழா
வெளியே கேட்கவில்லையாயினும் வீணைக்கென்று ஒரு அடிநாதம் உண்டு. ஒலித்தால் தானா வீணையில் நாதம்? வீணையைப் பார்த்தாலே கூட நாதத்தைக் கேட்கமுடியும்தானே! அதுவும் மீட்டாத வீணைக்குள் எத்தனை ராகங்கள், பாடல்கள்! வீணை வாழ்வென்றால் அதன் அடிநாதம் நம்பிக்கை? வருடங்கள் கூட அறுந்துபோயிருக்கலாம் – ஆனால் அறுந்திராத கணமொன்று நம்முள் வீணையின் அடிநாதமாய் ஒலித்துக்கொண்டிருக்குமெனில் நம் வாழ்க்கை வீணாகிவிடாது; மக்கிப்போய்விடாது.
அறுந்திராத கணம் துடித்துக்கொண்டிருக்கையில் என்கிறார் கவிஞர் – தந்தியின் அதிர்வு – உயிரின் துடிப்பு, நம்பிக்கையின் உயிர்ப்பு …. தந்தியில் இழையோடும் உயிருக்குத் துருவேறுவதில்லை தோழா’ என்ற வரி அதில் இடம்பெறும் வார்த்தைகளின் இணைவுப் பொருத்தத்தால் கவித்துவமும் சகோதரத்துவமும் மனிதநேயமும், வாழ்வீர்ப்பும் கொண்டு என் வாசிக்கும் மனதை ஆக்கிரமித்துக்கொண்டுவிடுகிறது. இந்தப் பரிவதிர்வும்கூட கவிதையைக் கவிதையாக்கும் அம்சம்.
’உயிருக்குத் துருவேறுவதில்லை’ எத்தனை கவிநயம் மிக்க, உயிர்ப்பு மிக்க சொற்றொடர்! இந்த துரு என்ற வார்த்தை எத்தனையெத்தனை சொல்கிறது! இந்த வார்த்தையைத் தேர்ந்தெடுப்பதற்கு கவி எத்தனை வார்த்தைகளை நினைவில் சேகரித்து பின் நிராகரித்திருப்பார்!
இந்த இறுதி மூன்று வரிகளின் அர்த்தசாத்தியப் பாடுகள் குறித்து இன்னும் பத்து பக்கங்களுக்குக் குறையாமல் எழுதமுடியும். அவற்றையெல்லாம் நினைத்துத்தான் கவிஞர் எழுதினாரா என்ற கேள்வி ஒருவகையில் அபத்தம்; ஒருவகையில் அநாவசியம்.
ஏன் அபத்தம் ? வாசிக்கும் எனக்கே இத்தனை அர்த்தங்கள் கிடைக்கையில் தேர்ந்த வாசகராகவும் இருப்பதே முதல் தகுதியாக உள்ள கவிஞர் அவற்றை எண்ணிப்பார்க்காமலிருந்திருப்பாரா?
ஏன் அநாவசியம்? கவிஞர் அத்தனை அர்த்தங்களையும் சிந்தித்துப் பார்த்து எழுதினாரோ இல்லையோ – அவருடைய வரிகளின் மூலம் எனக்கு அவை கிடைக்கின்றன. ஒரு கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது அது இன்னின்ன அர்த்தங்களைத் தரப்போகிறது என்ற முன்முடி வோடு யாரும் வாசிக்க ஆரம்பிப்பதில்லை. கவிதையை வாசிக்க வாசிக்க அந்த அர்த்தங்கள், அர்த்தசாத்தியப்பாடுகள் வாசிப்பாளரை வந்தடைகின்றன. அதுதான் வாசிப்பாளருக்கு முக்கியம்.
அப்படிப் புரிவன, புரிந்தும்புரியாமலிருப்பன வாசிப்பாளரை அந்தக் கவிதையின் தடங்களை – அவை கல்லாலானவையோ, காற்றாலானவையோ மேலும் மேலும் கண்டறிய, பின் தொடர்ந்து செல்லத் தூண்டுகின்றன. நிறைவான வாசிப்பனுபவத்தை வரவாக்குகின்றன.
ramakrishnanlatha@yahoo.com