கவிதை: ஆட்டுக்குட்டிகளின் தேவதை

கவிதை வாசிப்போமா?

ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது
பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன
விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்
வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன
புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்
மந்தைகளின் தேவதை
முடங்கிப் போயிருக்கிறாள்
உஷ்ணப் பிரம்பினைக் காட்டி
அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்
கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை

பயணப் பாதைகளிலெல்லாம்
ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்
இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்
பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்
மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்
புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்
அவளுக்கு எப்போதும்
ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்

வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு
தொலைவில் அவள் கண்டாள்
யானையாய்க் கறுத்த மேகங்கள்
வானெங்கும் நகர்வதை

இனி அவள் எழுவாள்
எல்லா இடர்களைத் தாண்டியும்
துயருற்ற அவளது பாடலோடு
விழித்திருக்கும் இசை
ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்
ஆக்ரோஷமாக… ஆரவாரமாக…
ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி…

mrishanshareef@gmail.com