அடிவானணைக்கும்
நீள் வெளி, நீல வெளி.
விரையும் வெண் மேகம்,
என்னகம் கவர்ந்தன;
கவர்வன.
எப்பொழுதும்!
எப்பொழுதும்!
பதின்மப்பொழுதுகளில்
கல்லுண்டாய் வெளிதனில்
நடாத்திய
நீண்ட பயணங்கள்!
அடிவானணைக்கும் கடல் நங்கை
ஒருபுறம்.
விரியும் விரிவெளி
மறுபுறம்.
காற்றிலாடும் வயல்வெளிகள்,
ஆங்கு சிறகடிக்கும் கிளிக்கூட்டம்,
தூரத்தில் தவமியற்றும்
நவாலி மண்மேடுத்துறவிகள்,
நெஞ்சினில் களியேற்ற,
தண்தென்றல்
மேனி வருடிச்செல்லும்.
இன்பத்திற்குண்டோ
இணை.
வன்னிமண் வாழ்வு:
வனங்கள், வானரங்கள்,
வான் பாயும் வளம்மிகு குளங்கள்
சிறகடிக்கும் பட்சிகள்,
பல்வகை உயிர்கள்,
விருட்சங்கள்
மலிந்த வாழ்வு.
அவை என்றும்
கவர்ந்தன; கவர்வன.
காலவெளி கடந்து
குளத்து நீர், நீந்தும் நண்பர்,
கொடியிடை வெண், செம் பெண்கள்
நினைவுக்குருவிகளின் சிறகடிப்பில்
நிலவிடுமின்பத்திற்குண்டோ
இணை.
வயற்புறக் கிராமத்து
இரவுகள்!
பொழியும் மழைத்தாரை!
பட்டோடு சடசடக்கும்
இன்னொலி!
வயற்புறத்து மண்டுகங்களின்
வாய்ப்பாட்டின்னிசை!,
இடையில் வெட்டி
இடித்தொளிரும்
இடி மின்னல்!,
இதைமீறியோரின்பமுண்டோ
இந்நிலத்தில்.
நெடுவிருட்சத்தோழர்தம்
ஒற்றுமை கண்ட வியத்தலுடன்,
ஊடறுக்குமொரு பாதை
ஊடே பயணித்தல்,
இலைவெளியூடு
இடையிடையே தலைகாட்டும்\
இளவெயிற்கதிர்கள்.
அவைதம் இதமிகு
இளஞ்சூடு,!
அப்பயண அடிமையெனவே
ஆனேன்; ஆகின்றேன்
நான்.